search icon
என் மலர்tooltip icon

    மெக்சிகோ

    • லூசியானா கடற்கரையில் அரிய வகையான இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் நீந்தி உள்ளது.
    • அல்பினோ என்ற நிறமி குறைபாடு காரணமாக இவை இந்த நிறத்தில் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

    மெக்சிகோ வளைகுடாவுக்கு அருகில் உள்ள கேமருன் பாரீஸ் பகுதியில் லூசியானா கடற்கரையில் அரிய வகையான இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் நீந்தி உள்ளது. இதனை அந்த கடற்கரையில் சுமார் 20 ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் துர்மன் கஸ்டின் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த வகை டால்பின்கள் மிகவும் அரிதானவை. பொதுவாக மிருகங்களிடம் காணப்படும் அல்பினோ என்ற நிறமி குறைபாடு காரணமாக இவை இந்த நிறத்தில் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அரிய வகை டால்பின்கள் குறித்து துர்மன் கஸ்டின் கூறுகையில், நான் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடற்கரையில் இந்த டால்பின்களை பார்த்தேன். உடனே கேமராவில் படம் எடுக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அந்த டால்பின்கள் எனது படகுக்கு அருகில் வந்தது. அதில் ஒன்று பெரியது. மற்றொன்று சிறியது. அவை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

    • படகு சேதம் அடைந்ததால் தனது நாயுடன் நடுக்கடலில் தத்தளிப்பு
    • ஹெலிகாப்டர் அந்த பகுதியில் சென்றபோது, ஆஸ்திரேலியரை கண்டுபிடித்துள்ளது

    டாம் ஹான்ங்ஸ் கதாநாயகனாக நடித்து 2000-த்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் "காஸ்ட் அவே" (Cast Away). இத்திரைப்படத்தில் அவர் செல்லும் விமானம் விபத்தில் சிக்கி அவர் ஒரு ஆளில்லா தீவில் தனியாக மன உறுதியுடன் பல நாட்கள் தாக்கு பிடித்து கடைசியில் மீட்கப்படுவார்.

    அதே போன்றதொரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் 51-வயதான டிம் ஷேட்டாக். பெல்லா எனும் தனது நாயுடன் டிம், மெக்சிகோவின் லா பாஸ் பகுதியிலிருந்து பிரென்ச் பாலினேசியா பகுதிக்கு ஒரு படகில் கடற்பயணம் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் படகு புயலால் சேதமடைந்தது.

    இதனால் பல நாட்கள் அவரும், பெல்லாவும் கடலில், பச்சை மீனை உண்டும், மழை நீரை குடித்தும் தன்னந்தனியே பல நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கின்றனர்.

    டியூனா எனப்படும் பெரிய மீனை பிடிக்கும் ஒரு இழுவை படகோடு இணைந்து ஒரு ஹெலிகாப்டர் சென்றிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அதில் உள்ளவர்கள் இவர்களை காண, உடனே மீட்புக்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிம் மற்றும் பெல்லா நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் இருவரின் உடல் இயக்கங்கள் சீராக இருப்பதாகவும், அவர்களை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

    தனியாக கடலில் பல நாட்கள் இருந்ததால் தற்போது நல்ல உணவும், ஓய்வும் மட்டுமே தான் பெற விரும்புவதாக டிம் கூறியுள்ளார்.

    கடலில் தனித்து வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சிகளில் வல்லுனரான பேரா. மைக் டிப்டன் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-

    வைக்கோல்போரில் ஊசியை தேடுவது போன்ற ஒரு அரிய சம்பவம் இது. டிம்மிற்கு அதிர்ஷ்டம் மட்டுமே உதவவில்லை. அவர் திறமையையும், மனோதிடத்தையும் நாம் பாராட்ட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீர் வறட்சியால் உடல் பாதிக்காமல் இருக்க உடலிலிருந்து மிகக் குறைந்த அளவே வியர்வை வெளியேறும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

    பசிபிக் பெருங்கடலில் டிம் சென்ற மிக சிறிய படகை கண்டுபிடிப்பதே கடினம். கிடைப்பதை உண்டு நேர்மறை சிந்தனையோடு இரவில் பெருங்கடலில் தனியாக உயிர் வாழ்வதற்கு கற்பனை செய்ய முடியாத மன உறுதியும் துணிச்சலும் வேண்டும். டிம் மட்டுமன்றி அவரின் நாய் பெல்லாவும் பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது டிம் ஷேட்டாக்கையும் பெல்லாவையும் அழைத்து கொண்டு மெக்ஸிகோவிற்கு இழுவை படகு வந்து கொண்டிருக்கிறது. அங்கு வந்ததும் தேவைப்பட்டால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படலாம்.

    • குண்டு வெடித்ததில் ஊழியர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
    • போலீஸ் விசாரணையில் முன் விரோதம் காரணமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள மொத்த உணவு வினியோக நிறுவனத்துக்குள் புகுந்து மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினர். இதில் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர். இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார். போலீஸ் விசாரணையில் முன் விரோதம் காரணமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    • ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்துள்ளார்
    • கொலை செய்தபின் உடலை சாக்குப்பையில் வைத்து மகளுக்கு தகவல்

    மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட மிருக மனிதன்மெக்சிகோவில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்த அல்வாரோ (32) என்பவர், ஜூன் 29 அன்று தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருளின் மயக்கத்தில் தனது மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

    மெக்சிகோவின் கிழக்கு-மத்திய பகுதியில் உள்ள பியூப்லா (Puebla) நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்ட அல்வாரோ, தனது மனைவியை கொலை செய்தது மட்டுமல்லாமல், அவரது மூளையை டாக்கோ எனப்படும் மெக்சிகோ நாட்டு உணவில் வைத்து சாப்பிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

    பிசாசு அவரை இக்குற்றத்தை செய்யும்படி கட்டளையிட்டதாக காவல்துறையிடம் அல்வாரோ கூறியதாக கூறப்படுகிறது.

    மரியா மாண்ட்செராட் (38) என்பவரை அல்வாரோ ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார். அவருக்கு 12 முதல் 23 வயது வரையிலான 5 மகள்கள் இருந்தனர்.

    அல்வாரோ தனது மனைவியின் மூளையின் ஒரு பகுதியை டாக்கோவில் வைத்து சாப்பிட்டதாகவும், மரியாவின் உடைந்த மண்டையோட்டை சிகரெட் சாம்பலிடும் தட்டாக பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு மரியாவின் உடலை துண்டாக்கி பிளாஸ்டிக் பையில் வைத்துள்ளார்.

    கொலை நடந்த 2 நாட்களுக்கு பிறகு, அல்வாரோ தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள அவரது வளர்ப்பு மகள்களில் ஒருவரை அழைத்ததாக கூறப்படுகிறது.

    "நான் ஏற்கனவே அவளைக் கொன்று பைகளில் வைத்திருக்கிறேன். நீ வந்து உன் தாயாரை எடுத்து செல்" என அவர் தனது மகள்களில் ஒருவரை அழைத்து கூறினார் என மரியாவின் தாய் மரியா அலிசியா மான்டியேல் செரான் தெரிவித்தார்.

    மேலும் அவர் இதுகுறித்து கூறியதாவது:-

    ஒரு கத்தி, உளி மற்றும் சுத்தியலால் மரியாவின் உடலை அவர் வெட்டியுள்ளார். கோகைன் உட்பட போதை மருந்துகள் எடுத்துக் கொள்வார். அவருக்கு மனநல பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

    இவ்வாறு மரியாவின் தாயார் கூறியிருக்கிறார்.

    மேலும் அல்வாரோ, வளர்ப்பு மகள்களை உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக மரியாவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    போலீசார் விசாரணையில் வீட்டில் மந்திர பீடம் ஒன்றையும் கண்டுபிடித்திருப்பதாக தெரிகிறது.

    இந்த கொலையும், அதனை தொடர்ந்து அல்வாரோ செய்திருக்கும் கொடூரங்களும் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

    • விபத்தில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். அப்போது, செங்குத்தான குன்றின் அடிப்பகுதியில் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிவித்துள்னர்.

    "முதற்கட்ட எண்ணிக்கையின்படி, 27 பேர் இறந்தனர் மற்றும் 17 காயமடைந்தவர்கள் மருத்துவ கவனிப்புக்காக பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஒசாகா மாநில வழக்கறிஞர் பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா தெரிவித்தார்.

    மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • திருமணம் முடிந்ததும் மேயர், அந்த முதலைக்கு முத்தமிட்டார்.
    • பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

    மெக்சிகோ நாட்டில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயராக இருந்து வருபவர் ஹியூகோ சாசா. இந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் மேயர் ஹியூகோ சாசா முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டது போல காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த திருமணத்தில் முதலைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருமணம் முடிந்ததும் மேயர், அந்த முதலைக்கு முத்தமிட்டார். பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது இயற்கை வளத்தையும், மழை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேயர் முதலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
    • அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றி உள்ளார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பூங்கா ஊழியர்களை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
    • வடக்கு மாகாண பகுதிகள் தான் கடும் வெயிலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    மெக்சிகோ:

    மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது.

    கடந்த 3 வாரங்களாக உடலில் நெருப்பை அள்ளி போட்டது போல வெயில் வாட்டிவதைப்பதால் பொதுமக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இருந்த போதிலும் கடும் புழுக்கத்தால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கொளுத்தும் வெயிலுக்கு வெப்பம் தாங்காமல் பலர் மயக்கம் போட்டு விழுந்தனர். வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை இறந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பல நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. வடக்கு மாகாண பகுதிகள் தான் இந்த கடும் வெயிலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    • மெக்சிகோவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • மெக்சிகோவின் சென் வென்சிட்டி பகுதியில் கார் பந்தயம் நடைபெற்றது.
    • அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.

    இந்நிலையில், கார் பந்தயத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த ஒரு கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் பந்தய வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மெக்சிகோ நாட்டில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    குவாத்தமாலா:

    வடமேற்கு நியூ மெக்சி கோவில் சம்பவத்தன்று 18 வயது மர்ம வாலிபர் ஒருவர் தேவாலயம் முன்பு நின்று கொண்டு கண்ணில் தென் பட்டவர்களை எல்லாம் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

    இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். அந்த வழியாக சென்று கொண்டு இருந்த 97 வயதுடைய ஸ்கோபீல்ட் மற்றும் அவரது 73 வயது மகள் மெலடி ஆகியோர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஷெர்லி என்ற 79 வயது பெண்ணும் பலியானார். இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற ஒருவரும் குண்டுகாயம் அடைந்தார்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம வாலிபர் எங்கும் தப்பி ஓடாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தான். போலீசாரை பார்த்தும் அருகில் வந்து என்னை சுட்டுக்கொல்லுங்கள் என உரத்த குரல் எழுப்பினான். அவனை சரண் அடையுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவன் வெறித் தனத்துடன் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தான்.

    பின்னர் அவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவனை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.இந்த துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்கோபீல்ட் என்ற பெண் பல ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றிவர். அவரது மகள் மெலடி பாலர் பள்ளி நடத்தி வந்தார். தாய்- மகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மெக்சிகோ நாட்டில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
    • விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தமவுலிபாஸ்:

    வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வேனும், டிரய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது.

    விபத்தில் சிக்கிய வேனில் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். வேன் தீப்பிடித்து எரிந்தததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதனால் 26 பேர் வேனுக்குள் கருகி இறந்தனர். லாரி டிரைவரும் பலியானார். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ×