என் மலர்
உலகம்
வங்காளதேசத்தின் அடுத்த அதிபர் ஷஹாபுதீன் போட்டியின்றி தேர்வாகிறார்
- வங்காளதேச தேசியவாத கட்சி, அதிபர் பதவிக்கு கட்சியின் சார்பில் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை.
- ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவராக பணியாற்றினார்.
டாக்கா :
வங்காளதேசத்தின் அதிபராக இருந்து வரும் முகமது அப்துல் ஹமீதுவின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து, நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்த நிலையில் அதிபர் பதவிக்கான ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதி முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தார்.
இதனிடையே வங்காளதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி, அதிபர் பதவிக்கு கட்சியின் சார்பில் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. இதன் மூலம் முகமது ஷஹாபுதீன் வங்காளதேசத்தின் 22-வது அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு அவர், ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவராக பணியாற்றினார்.
பின்னர் அரசியலில் குதித்த அவர், அவாமி லீக் கட்சியில் இணைந்து, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினரானார். எனினும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும்போது கட்சி பதவியை துறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.