என் மலர்
உலகம்
டொனால்டு டிரம்புடன் முகேஷ் அம்பானி தம்பதியினர் சந்திப்பு
- அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
- இதில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி பங்கேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.
இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அம்பானி தம்பதியினர் நேற்று அமெரிக்கா சென்றனர்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர். அப்போது டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது டிரம்புக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தியா-அமெரிக்கா உறவு இன்னும் ஆழமாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அம்பானி தெரிவித்தார்.