என் மலர்
உலகம்
தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் யாரும் பிரதமர் மோடியை கண்டு பயப்படுவதில்லை - ராகுல்காந்தி
- பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், உணவு சமைக்க வேண்டும் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது.
- பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி டல்லாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்தியா ஒரே சிந்தனையை கொண்டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது. இந்தியா பல சிந்தனைகளை கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் எங்களுக்குள் இருக்கும் சண்டை.
பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், உணவு சமைக்க வேண்டும், அவர்கள் அதிகம் பேசக்கூடாது என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
மக்களவை தேர்தல் முடிவு வந்த பிறகு பாஜக மற்றும் பிரதமரைக் கண்டு இந்திய மக்கள் பயப்படவில்லை என்பது தெரிந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தாக்குகிறார் என்பதை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் புரிந்து கொண்டனர்.
எங்கள் அரசியல் அமைப்புகளிலும், கட்சிகளிலும் அன்பு, மரியாதை மற்றும் பணிவு ஆகியவை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு மதம், ஒரு சமூகம், ஒரு சாதி , ஒரு மாநிலம் அல்லது ஒரு மொழி பேசுபவர்கள் மீது மட்டும் அன்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து மனிதர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
எல்லோரும் கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவர்களின் சாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளது. ஆனால் உலகில் பல நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. சீனாவில் நிச்சயமாக வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. வியட்நாமில் வேலை வாய்ப்பு பிரச்சனை இல்லை. எனவே வேலையின்மை இல்லாத நாடுகளும் பூமியில் உள்ளன. இன்று உலக உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ராகுலின் பேச்சு பாரதத்திற்கு எதிரானது. இந்தியப் பெண்களுக்கு எதிரானது. அதனால்தான் இந்திய மக்கள் 2014 முதல் 2024 வரை ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் நிராகரித்தனர். 2029 ஆம் ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.