என் மலர்
உலகம்
டிரம்ப் பதவி ஏற்பு விழாவை 2½ கோடி பேர் மட்டுமே நேரலையில் பார்த்தனர்
- கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர்.
- டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றார். வழக்கமாக ஜனாதிபதி பதவி ஏற்பு விழா என்பது வாஷிங்டன் நகரில் உள்ள கேபிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பார்வையிடலாம்.
ஆனால் இந்த முறை கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜனாதிபதி பதவி ஏற்பு விழா பாராளுமன்ற கட்டிட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை நேரலையில் பார்க்குமாறு டிரம்ப் கூறியிருந்தார்.
அதன்படி பதவியேற்பு நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை அமெரிக்காவில் 2 கோடியே 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும், 2017-ம் ஆண்டு டிரம்ப் முதன் முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியை 3 கோடியே 6 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும் நீல்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிற முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்த எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதில், போதைப்பொருள் விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, ரகசிய வலைத்தளமான சில்க் ரோட்டின் நிறுவனர் ரோஸ் உல்ப்ரிசட்டுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ரோஸுக்கு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்குவதில் கையெழுத்திட்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று ரோசின் தாயாரிடம் கூறினேன். அவரை குற்றவாளியாக்க வேலை செய்தவர்கள், எனக்கு எதிராக வேலை செய்தவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அனைத்து கூட்டாட்சி பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பவும், அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான திட்டங்களை உருவாக்கவும் டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் ஆரக்கிள், சாப்ட் பேங்க் மற்றும் ஓபன் ஏ.ஐ. ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்படும் ஒரு புதிய நிறுவனத்தின் மூலம் செயற்கை தொழில் நுட்ப உள்கட்டமைப்பில் 50 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரத்தில், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பு நீக்கப்பட்டது.
இதுபற்றி வெள்ளை மாளிகையின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் ஹாரிசன் பீல்ட்ஸ் கூறுகையில், வலைதளத்தின் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்புப் பகுதியை மீண்டும் ஆன்லைனில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சில மாற்றங்களுக்கு பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார். கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோல் ஸ்பானிஷ் பதிப்பை டிரம்ப் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.