என் மலர்
உலகம்
பாலஸ்தீனர்களை ஜோர்டான், எகிப்திற்கு குடியமர்த்த வேண்டும்: டிரம்ப் ஆலோசனையை புறக்கணித்த அரபு நாடுகள்
- காசா இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன.
- அவர்களுக்கு வேறு இடத்தில் (ஜோர்டான், எகிப்து) வீடுகளை அமைத்துத் தர வேண்டும்.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர்- இஸ்ரேல் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. போரில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "காசா இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அங்கிருந்து வெளியேறும் 15 லட்சம் மக்களின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.
காசாவை நாம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் ஒரே வழி. அங்கே எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். எனவே நான் சில அரபு நாடுகளுடன் இணைந்து, அவர்களுக்கு வேறு இடத்தில் (ஜோர்டான், எகிப்து) வீடுகளை அமைத்துத் தர வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழலாம்.
பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான் இப்போதே ஏற்று வருகிறது. கூடுதலாக இன்னும் அவர்கள் காசா அகதிகளை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதனால் சூழ்நிலையை சாதமாக பயன்படுத்தி டிரம்ப் மறைமுகமாக காசாவை காலி செய்து இஸ்ரேலிடம் கொடுக்க உள்ளாரா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் ஆலோசனையை சக்தி வாய்ந்த அரபு நாடுகள் நிராகரித்துள்ளன.