search icon
என் மலர்tooltip icon

    கத்தார்

    • 8 பேரின் குடும்பத்தினர் பிரதமர், உள்துறை அமைச்சர் தலையீட்டை கோரினர்
    • புதிய தண்டனையின் விவரம் குறித்து இரு அரசுகளும் தகவல் தெரிவிக்கவில்லை

    அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் (Qatar) அல் தஹ்ரா (Al Dahra) எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இந்திய கப்பற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 8 பேர் அந்நாட்டில் பணியாற்றி கொண்டே இஸ்ரேல் நாட்டிற்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    அதிகாரிகளின் குடும்பத்தினரும், உறவினரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கடிதங்கள் எழுதினர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் கண்ணீர் மல்க பலமுறை கோரிக்கை வைத்தனர். அவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பலர் இத்தீர்ப்பை கத்தார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

    இம்மாத தொடக்கத்தில் கத்தாருக்கான இந்திய தூதர் சிறையில் அடைக்கப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

    கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது தூதரும், அதிகாரிகளின் குடும்பத்தினரும் நேரில் அங்கு சென்றிருந்தனர்.

    இந்நிலையில் இன்று, கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதாகவும், குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

    புதிய தண்டனையின் விவரம் குறித்து இதுவரை இரு நாட்டு அரசாங்கங்களும் தெரிவிக்கவில்லை.

    • பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தே ஆக வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியது
    • மீண்டும் ஒரு இடைநிறுத்தத்திற்கு அமெரிக்கா முயன்று வருகிறது என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இடைநிறுத்தம் ஏற்பட அரபு நாடான கத்தார் அரசு முயன்று வருகிறது. இதை தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைக்காக இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொஸாட் (Mossad) அதிகாரிகள் கத்தார் சென்றிருந்தனர்.

    இதையடுத்து ஒரு வார போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தது. இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பயங்கரவாதிகளையும், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளையும் பரஸ்பரம் இரு தரப்பினரும் விடுவித்தனர்.

    ஆனால், இஸ்ரேலிலிருந்து அக்டோபர் 7 அன்று கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக கொண்டு சென்ற இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் கோரிக்கையில் இஸ்ரேல் பின்வாங்க மறுத்தது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளை ஹமாஸ் விடுவிக்க முதலில் ஒப்பு கொண்டு பிறகு பின்வாங்கி விட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இதனால் இந்த போர் இடைநிறுத்தத்தை கடந்த வெள்ளியன்று இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வந்தது.

    இதை தொடர்ந்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. மீண்டும் தொடங்கிய போரில் 24 மணி நேரத்தில் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரையும் இஸ்லாமிய ஜிஹாத் எனும் அமைப்பினரையும் குறி வைத்து 400க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவ படை அறிவித்தது.

    ஆண்களை விடுவிக்க வேறுவிதமான நிபந்தனைகளை ஹமாஸ் முன்வைத்ததாகவும், ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்காத வரை எந்தவித பேச்சு வார்த்தைக்கும் ஒப்பு கொள்ள முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கத்தார் முன்னெடுத்த போர் இடைநிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், அங்கு பேச்சுவார்த்தைக்காக சென்றிருந்த இஸ்ரேல் நாட்டின் மொஸாட் உளவு (Mossad Intelligence) அமைப்பினரை இஸ்ரேல் திரும்ப அழைத்து கொண்டு விட்டது.

    இந்நிலையில் போர் மீண்டும் தீவிரமடைவதை தடுக்க கத்தாருடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி வருகிறது.

    "ஏதேனும் உறுதியான வழிகளில் மீண்டும் போர் இடைநிறுத்தம் நடைபெற நாங்கள் முயன்று வருகிறோம். காசா பகுதியில் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்கவும், ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படவும், அதே சமயம் அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழப்பதை தடுக்கவும் ஒரு வழிமுறையை ஆலோசித்து வருகிறோம்." என அமெரிக்காவின் நிலை குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    போர் மீண்டும் தொடங்கியுள்ளதால், இனி நீண்ட நாட்களுக்கு தொடரலாம் என்றும் உயிரிழப்புகள் இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 8 அதிகாரிகளும் பல போர் கப்பல்களுக்கு தலைமை தாங்கியவர்கள்
    • பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டது

    இந்திய கடற்படை போர்கப்பல்களுக்கு தலைமை தாங்கி, உயர் பதவி வகித்த, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் புமேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் அதிகாரி ராகேஷ் எனும் 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள், அரபு நாடான கத்தாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணியாற்ற சென்றனர்.

    இவர்கள் 8 பேரும் இத்தாலிய தொழில்நுட்பத்தில் உருவாகும், மறைந்திருந்து தாக்க கூடிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாடுகள் குறித்த செயல்பாட்டில் அந்நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வந்தனர்.

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், கத்தார் அரசாங்கம் இவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து சரிவர தகவல்கள் இல்லாமலிருந்தது. இவர்களின் ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது.

    கடந்த மார்ச் 2023ல் இவர்கள் மீதான வழக்கு விசாரணை துவங்கியது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளது.

    இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    அதில் அத்துறை தெரிவித்திருப்பதாவது:

    நாங்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். தீர்ப்பின் முழு விவரங்களும் கிடைத்ததும் கத்தார் அதிகாரிகளுடன் இது குறித்து பேச உள்ளோம். இந்த வழக்கிற்கு தீவிர முக்கியத்துவம் வழங்கியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். சட்டதிட்டங்களின்படி அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்த்து வருகிறோம்.

    இவ்வாறு வெளியுறவு துறை தெரிவித்திருக்கிறது.

    கடந்த ஜூன் 8 அன்றே இந்த 8 பேரில் ஒரு அதிகாரியின் சகோதரி, இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அவசர தலையீட்டை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    • அவர்கள் கத்தார் தலைநகர் டோகாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்

    டோகா:

    அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் தென்கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரூ.49,138 கோடியை ஈரானுக்கு கிடைக்க செய்யாமல் முடக்கினார்.

    இதற்கிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பேரில் அமெரிக்காவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு ஈரானில் சிறை தண்டனை அனுபவிக்கும் 5 அமெரிக்கர்களை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் பொருளாதார தடையால் முடக்கப்பட்டிருந்த ரூ.49,138 கோடியை அமெரிக்கா விடுவித்தது. மேலும் அமெரிக்க சிறையில் உள்ள ஈரானியர்கள் 5 பேரை விடுவிக்கவும் ஆலோசனை நடக்கிறது.

    இந்நிலையில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட அவர்கள் கத்தார் தலைநகர் டோகாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை கத்தாருக்கான அமெரிக்க தூதர் டேவிஸ் நேரில் சென்று வரவேற்றார்.

    • எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை
    • மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை விளக்கினர்

    2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டது.

    இதனையடுத்து மத அடிப்படைவாத தலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிலிருந்தே தலிபான் அரசாங்கம் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

    குறிப்பாக மத ரீதியான காரணங்களை வலியுறுத்தி பெண்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தடை செய்திருக்கிறது. இதுவரை எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆட்சியமைத்த 2 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க பிரதிநிதிகள், தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களை கத்தார் நாட்டில் சந்தித்தனர்.

    தலிபான் தரப்பில் இருந்து அவர்கள் நாட்டிற்கு அமெரிக்கர்கள் வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள சுற்றுபயண தடை உட்பட பல தடைகளை நீக்குவது குறித்தும், வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப பெறுவது குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    அமெரிக்க தரப்பில் ஆப்கானிஸ்தானில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து முக்கியமாக அலசப்பட்டது.

    இந்த சந்திப்பில் சிறப்பு அமெரிக்க பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான தூதர் ரீனா அமிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தலிபானின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டை விளக்கினர். ஆப்கானிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக வேண்டிய உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    பெண் குழந்தைகளின் கல்வி தடை, பெண்கள் வேலைக்கு செல்வதற்கான தடை, ஊடகங்களுக்கான தடை மற்றும் பிற மத வழிபாட்டு தடை உட்பட தாலிபான் விதித்திருக்கும் பல தடைகளை நீக்க கோரும் அமெரிக்க நிலைப்பாடு விளக்கப்பட்டது.

    உலகின் மிகப்பெரிய ஓபியம் பயிரிடும் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்ததும், ஓபியம் பயிரிடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.

    தலிபான் அரசு ஆட்சியை கைப்பற்றிய உடன் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு மத்திய வங்கியின் பணம் ரூ.57 ஆயிரம் கோடியை ($7 பில்லியன்) நியூயார்க் வங்கியில் முடக்கி வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
    • 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார்.

    கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார். அதனால், இந்த முறையும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    • மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார்
    • சில நேரங்களில் இருவரும் மோசமாக விளையாடியதாக மெத்வதேவ் கூறினார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    இதுபற்றி மெத்வதேவ் கூறுகையில், 'இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது, ஏனெனில் காற்று அதிகம் வீசியது. இன்று கடுமையான போராட்டமாக இருந்தது. சில நேரங்களில் நாங்கள் இருவரும் மோசமாக விளையாடினோம், சில சமயங்களில் இருவரும் நன்றாக விளையாடினோம்' என்றார்.

    • போபண்ணா ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
    • போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    தோகா:

    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.

    இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது.

    பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர்.
    • முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

    நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.

    நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக கிடக்க கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்புகிறது. உலககோப்பை கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுசூழல் மாசுபடாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை உருவாக்கியிருந்தது.

    இப்போது, முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது

    • கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
    • என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.

    கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ,  ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×