என் மலர்
உலகம்

பாலஸ்தீனுக்கு ஆதரவாக போராடிய இந்திய மாணவி.. துரத்தியடித்த அமெரிக்கா - யார் இந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன்?

- ஹார்வர்டில் முதுகலைப் பட்டம் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடல் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
- கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார்.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதாவது தன்னை சுயமாக அவர் நாடு கடத்திக்கொண்டார். இதற்கு அர்த்தம், அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பூட்டி நாடு கடத்துவதற்கு முன்பாக அவரே அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவரின் பெயர் ரஞ்சனி ஸ்ரீனிவாசன். செய்த குற்றம், பால்ஸ்தீனதுக்கு ஆதரவாக போராடியது. விளைவு, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அவரது மாணவர் விசா ரத்து. இதன் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள CEPT பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், ஃபுல்பிரைட், நேரு மற்றும் இன்லாக்ஸ் உதவித்தொகைகளுடன் ஹார்வர்டில் முதுகலைப் பட்டமும் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
இதற்கிடையே கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாகி பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 56,000 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய குண்டுகளால் மொத்த நகரமும் நிர்மூலம் ஆக்கப்பட்டது. இதை இனப்படுகொலை என குற்றம்சாட்டி உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நியூ யார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்களில் ரஞ்சினி ஸ்ரீனிவாசனும் ஒருவர்.
பல்கலைக்கழக கட்டடம் ஒன்றை போராட்டக்குழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரச்சனை தீவிரமானது. பின் பேச்சுவார்த்தை மூலம் இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்பின் அரசு, பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாட தொடங்கியது.
கொலம்பியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்ட பல வேற்று நாட்டு மாணவர்கள் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர். கடந்த வாரம், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த கொலம்பியா முன்னாள் மாணவர் மஹ்மூத் கலீல் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் தற்போது ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இந்த நாடுகடத்தலுக்கு இரையாகி உள்ளார்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 5, 2025 அன்று, வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்தது.
இந்நிலையில் மார்ச் 11 அன்று சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CPB) அமைப்பு செயலியைப் பயன்படுத்தி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் சுயமாக நாடு கடத்தப்பட்ட வீடியோவை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் பகிர்ந்துள்ளார்.
It is a privilege to be granted a visa to live & study in the United States of America. When you advocate for violence and terrorism that privilege should be revoked and you should not be in this country. I'm glad to see one of the Columbia University terrorist sympathizers… pic.twitter.com/jR2uVVKGCM
— Secretary Kristi Noem (@Sec_Noem) March 14, 2025
அந்த பதிவில் அவர் கூறியதாவது, "அமெரிக்காவில் படிப்பது ஒரு "பாக்கியம்", ஆனால் நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை பறிக்கப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
ரஞ்சனி ஸ்ரீனிவாசன் தற்போது இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அரசு அவர் குறித்தும், இந்த விசா ரத்து குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.