என் மலர்
உலகம்

டமாஸ்கஸ்-க்குள் நுழைய தொடங்கிய கிளர்ச்சியாளர்கள் - சிரியாவில் பதற்றம்

- சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.
ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.
இந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததாக சிரிய கிளிர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இது குறித்து அந்நாட்டின் ஷாம் எப்.எம். ரேடியோ வெளியிட்ட தகவல்களில் டமாஸ்கஸ் விமான நிலையம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய தலைநகர் வடக்கில் உள்ள சயித்நயா ராணுவ சிறைக்குள் நுழைந்து தங்களது குழுவை சேர்ந்த சிறைவாசிகளை விடுவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ்-ஐ அரசாங்கப் படைகள் கைவிட்டதைத் தொடர்ந்து முந்தைய நாள் இரவு, எதிர்க்கட்சிப் படைகள் அதைக் கைப்பற்றின. ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.