என் மலர்
உலகம்
இங்கிலாந்தின் புதிய பிரதமர் பதவிக்கு கடும் போட்டி- ரிஷி சுனக்குக்கு அதிகரிக்கும் ஆதரவு
- இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
- இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
லண்டன்:
ஆளுங்கட்சியில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தான் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் கட்சி தலைமைக்கு கடும் போட்டி வலுத்து வருகிறது.
இதில் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக இருந்தவரும், இந்திய வம்சாவளி எம்.பி.யுமான ரிஷி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்த சூவெல்லா பிரேவர்மன், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாவித் ஜாவித், ஈராக் வம்சாவளியை சேர்ந்த நாதிம் சாகவி உள்பட 10 பேர் போட்டியில் உள்ளனர்.
இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
ரிஷி சுனக் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாம் அனைவரும் இணைந்து நம்பிக்கையை மீட்டெடுப்போம். பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைப்போம். நாட்டை ஒற்றுமைப்படுத்துவோம். இந்த தருணத்தில் சரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த வீடியோ 3 நிமிடங்கள் வரை ஓடுகிறது. அதில் ரிஷி சுனக் தனது பெற்றோர், குடும்ப பாரம்பரியம் பற்றி கூறி உள்ளார். அதோடு தனது பெற்றோர் எப்படி போராடினார்கள்? அவர்களுக்கு பிரிட்டன் எப்படி சிறந்த எதிர்காலத்தை அளித்தது என்பது பற்றியும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா காலத்தில் தான் மேற்கொண்ட பணிகள் பற்றியும் ரிஷி சுனக் பேசி உள்ளார்.
தற்போதைய தகவல்படி ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் மொத்தம் உள்ள 358 எம்.பி.க்களில் 8 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுதவிர பென்னி மார்டன்டுக்கு 6 சதவீத ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார மற்றும் சமூக நலக்குழு தலைவர் ஜெரிமி ஹன்டுக்கு 6 சதவீத ஆதரவும் உள்ளது. அதிக எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால் ரிஷி சுனக் பிரதமராக தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.