என் மலர்
உலகம்

தகவல் தொடர்பு கோளாறு- இங்கிலாந்தில் ரெயில் சேவைகள் பாதிப்பு

- ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
- காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
லண்டன்:
உலகம் முழுவதிலும் உள்ள பொது போக்குவரத்தில் ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாதது, குறைந்த செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரெயிலில் பயணம் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இங்கிலாந்து முழுவதும் ஜி.எஸ்.எம்.ஆர். எனப்படும் ரேடியோ அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இது ஓட்டுனர்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் இடையே பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகும்.
இதில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல ரெயில்கள் தாமதமாக சென்று சேர்ந்தன. குறிப்பாக தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் செல்லும் எலிசபெத் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். பரபரப்பாக இயங்கும் காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் தொழில்நுட்ப குழுவினர் அங்கு விரைந்து ரேடியோ அமைப்பில் ஏற்படும் கோளாறை சரிசெய்தனர். அதன்பிறகே ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.