என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![காசா அமெரிக்காவுக்கு சொந்தமாகும்.. விலைக்கு வாங்க டிரம்ப் திட்டம் - மக்களை வெளியேற்ற தீவிரம் காசா அமெரிக்காவுக்கு சொந்தமாகும்.. விலைக்கு வாங்க டிரம்ப் திட்டம் - மக்களை வெளியேற்ற தீவிரம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9151159-mm8-removebg-preview.webp)
'காசா' அமெரிக்காவுக்கு சொந்தமாகும்.. விலைக்கு வாங்க டிரம்ப் திட்டம் - மக்களை வெளியேற்ற தீவிரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்
- அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்ட படைகளை இஸ்ரேல் திரும்பப்பெற்றுள்ளது.
இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். நேற்று ஏர் போர்ஸ் 1 விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும்.
அந்த பொறுப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு நாங்கள் கொடுக்கலாம். எங்கள் அனுமதியுடன் தான் செய்லபட முடியும். காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . மக்கள் மீண்டும் உள்ளே செல்ல காசாவில் எதுவும் இல்லை. அந்த இடம் ஒரு இடிபாடு தளம். மீதமுள்ளவையும் இடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், "அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் பேசியுள்ளார்.
அரபு நாடுகள் தன்னுடன் பேசிய பிறகு பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ளும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் வழங்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். "அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும்.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டும்" என்று கூறினார்
சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் காசாவை பாலஸ்தீனத்திடம் இருந்து முற்றிலுமாக பறிக்க திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிரம்ப்பின் திட்டம் அப்பட்டமான மோசடி என ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.