என் மலர்
பிரிட்டன்
- 78-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.
- இதில் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு செய்யப்பட்டார்.
லண்டன்:
சர்வதேச அளவில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க விருதாகக் கருதப்படுவது பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) ஆகும்.
இந்நிலையில், 78-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு செய்யபட்டார். தி புரூடலிஸ்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
ஏற்கனவே இம்மாதம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது மற்றும் கிரிட்டிக் சாய்ஸ் விருதிலும் புரூடலிஸ்ட் படம் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஒரு மாதமாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
- பூங்கா விரிவாக்க பணியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒரு சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக கடந்த மாதம் பூங்காவில் பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து போலீசில் தகவல் அளித்தனர். அதன்பேரில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அந்த வெடிகுண்டுகள் இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டவை என்பது உறுதியானது. இதனால் பூங்காவின் மற்ற இடங்களையும் தோண்டி பார்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஒரு மாதமாக அங்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மொத்த எடை சுமார் 500 கிலோ ஆகும்.
இதனையடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர் பூங்காவில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பூங்கா விரிவாக்க பணியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
- ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.
- ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.
இங்கிலாந்து:
1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்பு புத்தகம் சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.
ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.
500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது.
- இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
- இத்திட்டம் ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் என நிறுவனங்கள் கூறியுள்ளது.
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அவ்வகையில், இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பிரிட்டனை சேர்ந்த 200 நிறுவனங்கள் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன. இந்த 200 நிறுவனங்களில் மொத்தமாக 5000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.
- கொண்டாட்ட நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
- கருவின் பாலினத்தை அறிவிப்பதற்காக கலர் வண்ணப்பொடிகளால் ஆன உலர்பனிக்கட்டி (டிரை ஐஸ்) பயன்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் உலகில் வளைகாப்பு விழாவும் பரிணாமம் அடைந்து அதனை விளம்பரத்திற்காக நடத்தும் அளவிற்கு வந்துவிட்டனர். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வளைகாப்பு நிகழ்வுக்கு மாற்றாக நடத்தப்படும் விழாவில் சூட்டோடு சூடாக கருவின் பாலினத்தை அறிந்து கொள்ளும் வகையில் விளையாட்டு அல்லது வேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
அத்தகைய கொண்டாட்ட நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இங்கிலந்தை சேர்ந்தவர் ஏமி. பெண் தொழிலதிபரும் கோடீஸ்வரருமான இவா், காதலர் பிராட் என்பவரை கரம்பிடித்தார். தொடர்ந்து கர்ப்பம் அடைந்த நிகழ்வை கொண்டாடுவதற்காக பங்களா வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கருவின் பாலினத்தை அறிவிப்பதற்காக கலர் வண்ணப்பொடிகளால் ஆன உலர்பனிக்கட்டி (டிரை ஐஸ்) பயன்படுத்தப்பட்டது.
அப்போது அந்த அடர் பனிப்புகை வீடு முழுவதும் பரவியது. இதில் ஏமி உள்பட அறையில் இருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
- இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியின் ராக்கி பிளின்டாப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
லண்டன்:
இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியும், ஆஸ்திரேலியா லெவன் அணியும் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ராக்கி பிளின்டாப்
பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ பிளின்டாப்பின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக முதல் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆன்ட்ரூ பிளின்டாப் 20 வயது மற்றும் 28 நாளில் சதமடித்திருந்தார். அதை 16 வயது 291 நாளில் கடந்து சாதனை படைத்துள்ளார் ராக்கி பிளின்டாப்.
- 2025-ம் ஆண்டுக்கான கவுரவ விருதை பெறுபவர்களின் பட்டியலை இங்கிலாந்து மந்திரிசபை வெளியிட்டுள்ளது.
- பல்வேறு துறைகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி விளையாட்டு, சுகாதாரம், கல்வித்துறை மற்றும் தன்னார்வ சேவை ஆகியவற்றில் முன்மாதிரியாக இருப்பவர்களுக்கு கவுரவ விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான கவுரவ விருதை பெறுபவர்களின் பட்டியலை இங்கிலாந்து மந்திரிசபை வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய வம்சாவளியினர் 30 பேருக்கு இந்த கவுர விருது வழங்கப்பட உள்ளது. பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மன்னர் சார்லஸ் விருது வழங்கி கவுரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விமான கதவை திறந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.
- ஏணிப்படி இல்லாததை கவனிக்காமல் கால் எடுத்து வைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
TUI-க்கு சொந்தமான விமானம் இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் ஏறுவதற்காக ஏணிப்படி வைக்கப்பட்டிருக்கும். விமானம் புறப்படும் முன் கதவு அடைக்கப்பட்டு, அந்த ஏணிப்படிகள் அகற்றப்படும். அதன்பின் விமானம் புறப்படும்.
அந்த வகையில் ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் கதவை திறந்து கீழே இறங்க முயன்றார். ஆனால் படிக்கட்டு விமானத்துடன் இணையாமல் தனியாக இருந்துள்ளது. விமானம்தான் புறப்படவில்லையே என அந்த பணிப்பெண் கதவை திறந்தது படிக்கட்டில் கால் வைப்பது போல் வைக்க, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். விமான ஓடுதளத்தில் விழுந்த பணிப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் அழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான பணிப்பெண் கீழே விழுந்தது எப்படி என விசாரணை நடத்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான பணிப்பெண் கதவை திறந்து, ஏணிப்படி இருக்கும் என காலை எடுத்து வைத்தார். ஆனால் அங்கே இருக்க வேண்டிய ஏணிப்படி இருக்கவில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. அதனால் கீழே விழுந்தார். அவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டது என விமான நிலையத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
- கடற்கரையில் இரவில் முழு நிலவின் கீழ் நெருப்பில் குளிர்காய்ந்தபடி இரண்டு பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்
- வேறு ஒரு ஊரில் கொலை செய்தால் கொலையாளியை பிடிப்பது ஏன் கடினமாக உள்ளது
இங்கிலாந்தை சேர்ந்த கிரிமினாலஜி [ குற்றவியல் ] பட்டப்படிப்பு மாணவன் கொலை செய்வது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள நிஜமாகவே கொலைகளை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதான நசென் சாடி லண்டனில் உள்ள க்ரீன்விச் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி பயின்று வந்த மாணவர். படிப்பு சம்பந்தமாக கொலைகளை பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். எனவே "ஒரு உயிரைப் பறித்தால் எப்படி இருக்கும்" என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த மே 24 ஆம் தேதி, இங்கிலாந்தில் தெற்கு கரையில் உள்ள போர்ன்மவுத்[ Bournemouth] கடற்கரையில் இரவில் முழு நிலவின் கீழ் நெருப்பில் குளிர்காய்ந்தபடி அரட்டை அடித்துக் கொண்டு ஏமி கிரே [34 வயது], லீன் மைல்ஸ் [38 வயது] ஆகிய இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.

போர்ன்மவுத் கடற்கரை
அவர்களை கத்தியுடன் நெருங்கிய நசென் சாடி, இருவரையும் கடற்கரையில் துரத்தித் துரத்தி சாராமரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஏமி கிரே உயிரிழந்தார். மைல்ஸ் பலத்த காயங்களுடன் அங்கிருந்து ஓடிச்சென்று உயிர் தப்பியுள்ளார்.
தாக்குதலுக்கு முன்னதாக, சாடி தெற்கு இங்கிலாந்து முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்தார், இறுதியில் போர்ன்மவுத்தை தேர்ந்தெடுத்து கொலைக்காக பல வாரமாக திட்டமிட்டு வந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியதற்கு முந்தைய நாள் இரவு ஹோட்டல் அறையில் கத்தியை பயன்படுத்தி கொலைகளை செய்யும் காட்சிகள் அதிகம் உள்ள SLASHER வகை படங்களை பார்த்துள்ளார்.

ஏமி கிரே
இவர் பல்கலைக்கழகத்தில் கொலை தொடர்பான பாடப்பிரிவில் காட்டிய ஆர்வத்தை பார்த்து நீ ஒன்றும் கொலை செய்ய முயற்சிக்க வில்லையே என ஆசிரியரே கிண்டலாக கேட்டுள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையின்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு ஒரு ஊரில் கொலை செய்தால் கொலையாளியை பிடிப்பது ஏன் கடினமாக உள்ளது என்றும் கத்திகள் மற்றும் அவற்றின் வகைகள் குறித்தும் ஆன்லைனில் அவர் தேடியதும் அவரது வீட்டின் கம்பியூட்டரை ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சாடி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

விசாரணையில் நசென் சாடி - Portrait
- இவர்கள் 4 பேரும் சேர்ந்து கைகோர்த்தப்படி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த தோழிகள் 4 பேர் நீண்டநாள் நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளனர். பள்ளி பருவம் தொடங்கி தங்களுடைய 17 வயதில் இருந்தே இணைபிரியா தோழிகளாக அவர்கள் இருந்து உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 1972-ம் ஆண்டின்போது அங்குள்ள கடற்கரை நகரான டேவோசுக்கு அவர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது இவர்கள் 4 பேரும் சேர்ந்து கைகோர்த்தப்படி புகைப்படம் எடுத்து கொண்டனர். தங்களுடைய 70-ம் வயதில் இதே இடத்துக்கு மீண்டும் வந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என தமாஷாக பேசி கொண்டனர்.
இந்தநிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னரும் அவர்கள் இடையேயான நட்பு தொடர்ந்தது. இதனால் குறிப்பிட்ட அந்த கடற்கரை நகருக்கு தோழிகள் 4 பேரும் சென்றனர். பள்ளி பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை மறுஉருவாக்கம் செய்தனர். அதாவது, அப்போது அணிந்திருந்த அதே நிறத்திலான ஆடைகளை உடுத்தி போட்டோ எடுத்து கொண்டனர். இந்த படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதத்திற்கு 200 ஸ்டிக்கர்கள் விற்பனை செய்தார்.
- கல்லூரிக்கு சென்று வந்த பிறகு தினமும் 3 மணி நேரம் வீட்டில் ஸ்டிக்கர்கள் தயாரிக்க செலவிட்டார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைனில் ஸ்டிக்கர்களை விற்று மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லங்காஷையர் பகுதியை சேர்ந்தவர் கேலன் மெக்டொனால்ட். 17 வயதான இந்த இளைஞர் ஸ்டிக்கர்கள் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்தார். இதையறிந்த அவரது தாயார் கரேன் நியூஷாம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பரிசாக தனது மகனுக்கு ஒரு டிஜிட்டல் கைவினை எந்திரத்தை பரிசாக வழங்கினார். அதன்மூலம் கண்ணாடி பொருட்களில் ஒட்டுவதற்காக ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை பேஸ்புக்கில் பதிவிட்டார். புதுமையான வடிவமைப்புடன் கூடிய இந்த ஸ்டிக்கர்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதத்திற்கு 200 ஸ்டிக்கர்கள் விற்பனை செய்தார். கல்லூரிக்கு சென்று வந்த பிறகு தினமும் 3 மணி நேரம் வீட்டில் ஸ்டிக்கர்கள் தயாரிக்க செலவிட்டார். பின்னர் தொழில்ரீதியாக பெரிய பிரிண்டர்களை வாங்கி கடந்த ஜூலை மாதம முதல் அதிக அளவிலான ஸ்டிக்கர்களை தயாரித்து ஆன்மூலம் விற்பனை செய்தார்.
டிக்டாக் மற்றும் பிற வணிக ரீதியிலான வலைதளங்கள் மூலம் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் வரை ஸ்டிக்கர்ளை விற்பனை செய்துள்ள கேலன் மெக்டொனால்ட் மாதம் சராசரியாக ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பெற்றதிலேயே சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு எனது தாய் எனக்கு கொடுத்த எந்திரம் தான். ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கிய இந்த ஸ்டிக்கர் தயாரிப்பு மூலம் நான் இந்த அளவுக்கு உயர்வேன் என்று நினைக்கவில்லை என்கிறார்.
- ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
- காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
லண்டன்:
உலகம் முழுவதிலும் உள்ள பொது போக்குவரத்தில் ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாதது, குறைந்த செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரெயிலில் பயணம் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இங்கிலாந்து முழுவதும் ஜி.எஸ்.எம்.ஆர். எனப்படும் ரேடியோ அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இது ஓட்டுனர்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் இடையே பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகும்.
இதில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல ரெயில்கள் தாமதமாக சென்று சேர்ந்தன. குறிப்பாக தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் செல்லும் எலிசபெத் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். பரபரப்பாக இயங்கும் காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் தொழில்நுட்ப குழுவினர் அங்கு விரைந்து ரேடியோ அமைப்பில் ஏற்படும் கோளாறை சரிசெய்தனர். அதன்பிறகே ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.