என் மலர்
உலகம்
உக்ரைனின் இசியம் நகரில் தோண்டும்போது கிடைத்த 400க்கும் அதிகமான உடல்கள் - அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை
- ரஷியாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்.
- அங்கு புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
கீவ்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷியா கைப்பற்றிய பல இடங்களை உக்ரைன் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் உக்ரைன் அதிபர் பார்வையிட்டார்.
அப்போது உக்ரைனின் இசியம் நகரில், 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடக்கிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
ரஷியா நடத்திய இந்தப் படுகொலைகளை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.
மீட்கப்பட்ட நகரங்களை ஆய்வு செய்தேன். ரஷியப் படையினர் கோர தாண்டவம் ஆடியுள்ளனர். பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
இசியம் நகரில் மிகப்பெரிய குழியில், 400க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளன. போர் விதிமுறைகளை மீறி ஏராளமான பொதுமக்களை ரஷியப் படையினர் கொன்று குவித்துள்ளனர்.
ரஷியாவின் போர்க்குற்றங்களை ஆதாரத்துடன் விரைவில் அம்பலப்படுத்துவோம். கொலை செய்யப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என தெரிவித்தார்.