என் மலர்
உலகம்
அவரை விடுதலை செய்யும்வரை.. பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்குள் நுழைய முடியாது - இஸ்ரேல்
- ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டத்தில் 5 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
- ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.
அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.
பிணைக்கைதிகளான ஆகிய 3 இளம்பெண்களை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் நேற்று விடுவித்தது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வந்தடைந்த அவர்கள், உடல்நிலை பரிசோதனைக்கு பின் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
ஆனால் ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டத்தில் 5 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் 4 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி நேற்று, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.
இந்நிலையில், ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் இடம்பெயர்ந்த ஆறரை லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாசின் அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது Kibbutz Nir Oz பகுதியில் இருந்து அர்பெல் யாஹுட் கடத்தப்பட்டார். அதே தாக்குதலில் அவரது சகோதரர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் பலர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.