search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்த அமெரிக்கா அதிரடி முடிவு
    X

    உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்த அமெரிக்கா அதிரடி முடிவு

    • வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • டிரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்தது.

    போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், ராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினார். ரஷியாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். இந்த விவகாரத்தில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

    இதற்கிடையே டிரம்ப்-ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுத்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சென்றார்.

    அப்போது வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கேட்ட கேள்வியால் அதிருப்தி அடைந்த ஜெலன்ஸ்கி தனது கருத்தை தெரிவித்தபோது டிரம்ப் குறுக்கிட்டு அவரை கண்டித்தார். மேலும் வான்சும் கண்டிக்கும் வகையில் பேசினார்.

    ரஷியாவுடன் போர் நிறுத்தத்தை டிரம்ப் வலியுறுத்திய நிலையில் அதை ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்தார். இதையடுத்து இந்த சந்திப்பு பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.

    சர்வதேச ஊடகங்கள் மத்தியில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே நடந்த வாக்குவாதம், போரின் திசையை மாற்றி விடும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு மிகவும் முக்கியம் என்றே கருதப்படுகிறது.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, போரில் உக்ரைனுக்கு அனுப்பப்பட காத்திருக்கும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பு உள்ள ரேடார்கள், வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உதவிகள் விநியோகத்தை நிறுத்தும் முடிவு தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது என்றார். இந்த தகவலை வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே டிரம்ப் அதிபராக பதவியேற்றதும் வெளிநாடுகளுக்கான நிதி உதவிகளை நிறுத்தவும் உத்தரவிட்டார். இதற்கிடையே உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தும் பட்சத்தில் அது போரில் உக்ரைனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவினாலும் அமெரிக்காவை போல் ஆயுதங்களை வழங்க முடியுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    இதற்கிடையே டிரம்ப்-ஜெலன்ஸ்கி மோதல் விவகாரத்தில் நேட்டோ அமைப்பு சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து உள்ளது. டிரம்புடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று ஜெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறும் போது, அமெரிக்க அதிபர் டிரம்புடனான உறவை மீட்டெடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நான் கூறியுள்ளேன். டிரம்ப் இதுவரை உக்ரைனுக்குச் செய்த உதவியை ஜெலன்ஸ்கி உண்மையில் மதிக்க வேண்டும்.

    டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பில் நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. உக்ரைன் ரஷியாவுடன் அமைதியைப் பெறுவதை உறுதி செய்வதில் அமெரிக்க நிர்வாகம் ஈடுபட்டுள்ளதை நான் அறிவேன் என்றார்.

    அதேபோல் இந்த விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்த நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் லண்டனில் இன்று ஐரோப்பிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.

    இதன்மூலம் எதிர்கால அமைதி ஒப்பந்தத்தைப் பெற ஐரோப்பிய தலைவர்கள், உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்தார்.

    உக்ரைன்-ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதும் தெரிவித்து இருந்தார். இதற்கான முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.

    இந்த நிலையில் ஜெலன்ஸ்கியுடன் மோதலால் இந்த போரின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே நிலவி வருகிறது.

    Next Story
    ×