என் மலர்
உலகம்

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது மிகவும் நியாயமற்றது: டிரம்ப்

- இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டது.
- இதன்மூலம் இந்தியாவில் டெஸ்டா நிறுவனம் கால் பதிப்பது உறுதியாகிவிட்டது.
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும் குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெஸ்லா அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்க்க இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "மின்சார வாகனம் தயாரிக்கும் டெஸ்லா, அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்ப்பதற்காக இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, கார்கள் மீதான இந்தியாவின் அதிக வரி தொடர்பாக வலியுறுத்தியதை நினைவு கூர்ந்த டொனால்டு டிரம்ப், விரைவில் முன்னதாக உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படவும், வரிகள் தொடர்பான மோதலைத் தீர்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.