என் மலர்
உலகம்
வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் திடீர் முடக்கம்: பயனாளிகள் கடும் அவதி
- மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன.
- உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியது.
நியூயார்க்:
அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் கடந்த 2004-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம் பேஸ்புக்.
உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.
தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உலகெங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு சமூக வலைதளங்களும் முடங்கின.
இதனால் அவற்றை பயன்படுத்தும் பயனாளர்கள் கருத்துப் பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
இரவு 11 மணி முதல் வாட்ஸ்-அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என எக்ஸ் தளத்தில் பயனாளர்கள் புகாரளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை.
இதனையடுத்து #MetaDown, #WhatsappDown போன்ற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பயனர்கள் பலரும் புகார் கூறிவருகின்றனர். இதனால் சில நிமிடங்களிலேயே இந்த ஹேஷ்டேகுகள் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதே போல கடந்த மார்ச் மாதம் இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.