search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்குரு"

    • ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் கோவையில் இன்று நடைபெற்றன.
    • ஐ.பி.எல்.லை விட பெரியது கிராமோத்சவம் என்றனர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத்

    கோவை:

    ஈஷா சார்பில் பாரதத்தின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் சத்குரு முன்னிலையில் இன்று கோவையில் கோலாகலமாக நடைபெற்றது.

    கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

    இந்த விழாவில் சத்குரு பேசியதாவது:

    ஒரு காலத்தில் 100 சதவீத கல்வி பெற்றதாக இருந்த நாடு, விடுதலை பெறும்போது 93 சதவீதம் கல்வியறிவு இல்லாத நாடாக மாறி இருந்தது. இது வெறும் 300 ஆண்டுகளில் நடைபெற்றது.

    ஆனால் கடந்த 75 வருடங்களில் நாம் மகத்தான பல விஷயங்களைச் செய்துள்ளோம். புத்திசாலித்தனம், உறுதி, திறமை போன்ற பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லை என்றால் எவ்வளவு பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்க முடியாது. அந்த வகையில் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.

    எளிமையாக துவங்கப்பட்ட இந்த கிராமோத்சவம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் பெரிய விழாவாக இன்று மாறி உள்ளது. ஆனால் இது போதாது. ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியதாவது:

    மனித நல்வாழ்விற்காக சத்குரு செய்து வரும் மகத்தான பணிக்கு என் வணக்கங்கள். கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம், தீவிரம் அனைத்தையும் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி மகத்தான விளையாட்டுத் திருவிழாவாக இது நடந்து இருக்கிறது. இதற்கு சத்குருவிற்கு என் நன்றிகள். நீங்கள் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10 - 15 நிமிடங்கள் செலவிடுங்கள்.

    விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர், அது குழுவாக இணைந்து செயல்படுவதை, எதிர்த்துப் போராடுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது என கூறினார்.

    பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து தினக்கூலிக்கு பிறந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும். பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க சத்குரு ஊன்றுகோலாகத் திகழ்கிறார். நான் ஏராளமான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு எழுந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சத்குருவின் உத்வேக வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது என்றார்.

    கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ஐ.பி.எல். போட்டிகளை ஒருங்கிணைப்பது கூட எளிதானது. இது போன்ற கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதுதான் கடினமானது. இதனை செய்யும் ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.


    வாலிபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த அலிப் ஸ்டார் அணி வென்று முதல் இடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை உடுப்பி மாவட்டம் பள்ளிகிராமத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி பிடித்தது.

    அதேபோல் பெண்களுக்கான த்ரோபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்தைச் சேர்ந்த அணி வென்று முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் இருந்து புள்ளாக்கவுண்டன் புதூர் கிராம அணி பிடித்தது

    மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் வென்றன.

    16-வது ஈஷா கிராமோத்சவ இறுதிப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு 5 லட்சமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு 3 லட்சமும், 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    முன்னதாக, ஈஷாவுடன் இணைந்து யுவா கபடி லீக் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

    அதேபோல், ஈஷாவுடன் இணைந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய சூப்பர் ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேவாக் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது. சிலம்பம் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வயது அடிப்படையில் 6 பிரிவுகளில் கலந்துகொண்டனர்.

    இதனுடன் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும், தெலுங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பஞ்சரி மேளம், 1000 பேர் கலந்துகொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், 1,500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.

    • ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஞ்ஜதாச ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.

    இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளை முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    ஈஷா யோக மையம் குறித்து ஜீயர் சுவாமிகள் கூறியதாவது, "இந்த இடத்தில் சுவாமிகளை தரிசனம் செய்வது பெரும் பாக்கியம், அடியேன் பெருமாள் பக்தர், ஆனால் ஹரியும் ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த சிவாலயத்திற்கு வந்திருக்கின்றோம்.

    ஈஷாவிற்கு வந்து இருப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்று, அந்த சிவனின் பாதங்களில் இருப்பது போல் தான் அடியேனுக்கு இருக்கிறது. இங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களும் தனிபட்ட நபரின் செயல்பாட்டில் நடப்பதல்ல. இறைவன் இந்த இடத்தில் இந்த காரியத்தை நடத்துவதற்காக சத்குருவை அனுப்பி ஏற்பாடுகளை செய்து வழி வகுத்து இருக்கிறான்.

    இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் கூட சொல்வதை சரியாக கேட்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்று இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்கி இருப்பது தனிபட்ட ஒரு நபர் செய்யக் கூடியது இல்லை. இது இறைவனின் கட்டளை படி சத்குரு அவர்கள் செய்து வருகிறார்கள்.

    இங்குள்ள பக்தர்கள் மிகவும் ஆத்மார்த்தமாக தொண்டு செய்கிறார்கள். இப்படி மனப்பூர்வமாக செய்வது மிகவும் சிறப்பானது. இங்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிக அற்புதமாக நடைபெறுகிறது. மென்மேலும் இது சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது அடியேனின் ஆசை, இறைவன் நாராயணனும் இதற்கு உறுதுணையாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.

    இங்குள்ள ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் தமிழ், சமஸ்கிருதம், நாட்டியம், இசை ஆகியன சொல்லி கொடுக்கப்படுகின்றன. இது வார்த்தைகளில் விவரிக்க முடியாத வகையில் சிறப்பாக நடைபெறுகிறது. இது அனைவராலும் முடியாத ஒன்று, தேவலோகத்தில் நடப்பது போல் இங்கு சத்குரு நினைப்பதை சிஷ்யர்கள் செய்கிறார்கள்.

    சப்தரிஷி ஆரத்தியில் சிவாச்சாரியார்கள் செய்த பூஜை, அலங்காரம், ஆரத்தி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    அதனைத் தொடந்து நடைபெற்ற ஆதியோகி திவ்ய தரிசனத்தை எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை, இது போல் முன்பு நாம் பார்த்தது இல்லை, இதுவே முதல் முறை. நான் ஒரு ஜீயர், இங்கு சிவன் முன்பு அமர வைத்து இருக்கிறாய், உன் திருவிளையாடல் தான் என்ன என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு மிகவும் அற்புதமான ஆனந்தமான காட்சியை காணும் போது நம்மையே மறந்து மெய் சிலிர்த்து போய் விட்டேன்." எனக் கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவங்கினர்.

    அதனைத் தொடர்ந்து தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை இரவு 08:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.

    முன்னதாக கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, அன்னூர் உள்ளிட்ட பகுதில் இருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் ஈஷாவிற்கு நேற்று வந்திருந்தனர். அவர்கள் சூர்ய குண்ட மண்டபத்தில் தேவாரப் பதிகங்களைப் பாடினர். அவர்களும் மாலை நடைபெற்ற சப்தரிஷி ஆரத்தியில் பங்கேற்றனர். கோவை பைரவ பீடத்தின் சுவாமிகள் கிருஷ்ணமூர்த்தி, வாசு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    சப்தரிஷி ஆரத்தி வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் புனிதம் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும்.
    • இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும்.

    தியானத்தின் மூலம் மனம் எனும் அதிசயத்தை அனைவரும் உணர வேண்டும் என சர்வதேச தியான தின வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியுள்ளார். டிசம்பர் 21-ம் தேதியை சர்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உள்ளது. அந்த வகையில் முதலாம் ஆண்டு சர்வதேச தியான தினம் இன்று (21/12/2024) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் "மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மனநல பாதிப்புகள் இருக்கும் நிலையில் டிசம்பர் 21-ஆம் தேதியை சர்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மனநோயின் பெருந்தொற்று உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கும் இந்த காலகட்டத்தில், மன நலம், உணர்ச்சியில் உறுதி மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான கருவியாக தியானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருப்பது பாராட்டத்தக்கது

    மனிதர்களின் மனம் அதிசயமானது. ஆனால் துரதிஷ்டவசமாக பல மக்கள் அதனை துன்பத்தை உருவாக்கும் இயந்திரமாகவே உணர்கிறார்கள். இது ஏனென்றால் மனம் எனும் அதிசய தொழில்நுட்பத்தை சரியாக கையாளும் கருவிகளை மக்களுக்கு கொடுக்கவில்லை.

    தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும். நாம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் "மிராக்கிள் ஆப் தி மைண்ட்" என்ற ஆப்-இனை வெளியிட இருக்கிறோம். இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும். இதன் மூலம் அமைதி, ஆனந்தம் மற்றும் உற்சாகத்தை உங்கள் வாழ்வில் கொண்டு வர முடியும். பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மனமெனும் அதிசயத்தை உணர்ந்திட வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆசியும். .

    டிசம்பர் 21-ஆம் தேதியை இதற்கு தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால் இது குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் அல்லது உத்தராயண காலத்தின் துவக்கம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை, இந்திய அரசாங்கம் மற்றும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகிற்கு மாற்றத்திற்கான கருவிகளை எடுத்துச் செல்வதில் பாரதம் மீண்டும் முன்னணியில் இருப்பது அற்புதமானது. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான மனிதர்களின் தலைமுறையை உருவாக்குவதில் இது மிகவும் முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க படியாகும்," என்று கூறியுள்ளார்.

    சத்குரு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யோகா மற்றும் தியானக் கருவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். இதன் மூலம் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சிகள் குறித்து முன்னணி பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவில், ஈஷா யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் மக்களின் மன அழுத்தம் 50% குறைகிறது, தூக்கத்தின் தரம் மேம்பட்டுள்ளது, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்து உள்ளது என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
    • ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.

    அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று பிரம்மாண்டமான வரவேற்பினை வழங்கினர்.

    அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.

    சத்குரு மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மட்டுமே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேலும், சத்குருவுக்கு மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர். 

    இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர்.

    குறிப்பாக அவிநாசி சாலையில் உள்ள நாகர்கோவில் ஆர்ய பவன் உணவகத்தில் திரண்டு இருந்த மக்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

    ரேஸ் கோர்ஸ் சாலையில் வள்ளி கும்மி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காளம்பாளையம், மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பினை வழங்கினர். 

    ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில், ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி மக்கள் திரண்டு அவர்களின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டமாக சத்குருவை வரவேற்றனர்.

    மேலும் ஆதியோகியில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் சத்குருவை வரவேற்கும் பொருட்டு ஆதியோகி மற்றும் ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.

    ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். மேலும் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் சத்குருவை வரவேற்றனர். ஆதியோகி முன்பு திரண்டு இருந்த மக்கள் முன்பு சத்குரு உரையாற்றினார்.

    • வருகிற 20-ந்தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
    • பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    பாராளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவை நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதனால் அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோரோஸ்- சோனியா காந்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த பா.ஜ.க. கோரிக்கை வைக்கிறது. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதகுரு ஜாக்கி வாசுதேவ்,

    உலகிற்கு ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க நாம் விரும்பும் போது, இந்திய பாராளுமன்றத்தில் இடையூறுகள் ஏற்படுவதைக் காண்பது வருத்தமளிக்கிறது.

    இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள், வேலை வாய்ப்பை வழங்குபவர்களை அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளாகக்கூடாது.

     

    முரண்பாடுகள் இருந்தால், அதை சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு உரிய முறையில் அதற்கு தீர்வு காண வேண்டும் ஆனால் அவர்களை அரசியல் கால்பந்தாக பந்தாடக்கூடாது.

    மிக முக்கியமாக, இந்திய வணிகங்கள் செழிக்க வேண்டும்.பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்என்று தெரிவித்துள்ளார். 

    • 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர்.

    சத்குரு அகாடமி சார்பில் "இன்சைட்" எனும் தொழில் முனைவோர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    ஈஷாவில் இன்சைட் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

    இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத்," இஸ்ரோவின் வளர்ச்சி பயணம் மற்றும் வெற்றிக்கான மக்களை உருவாக்குதல்" எனும் தலைப்பில் பேசினார். 

    அப்போது, இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தலைமை தாங்கிய புகழ்பெற்ற தலைவர்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரோவை தலைமை தாங்கிய ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர். இது கால்களுக்கு கடிவாளமிடும் மிகக்குறைவான பட்ஜெட்டுகளில் கூட மகத்தான விண்வெளி பயணங்களை சாத்தியப்படுத்தும் ஊக்கத்தையும், உந்துதலையும் பல குழுக்களுக்கு அளித்தது" என்றார்.

    தொடர்ந்து, இஸ்ரோவின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் குறித்து அவர் பேசுகையில், "ராக்கெட்டுகளை உருவாக்கிய அனைத்து மனிதர்களின் உருவாக்கத்தில் அவர் பணிபுரிந்தார். மனிதர்களிடம் சிறந்த சக்தி உள்ளது அதனைக் கொண்டு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நீங்கள் உருவாக்கி விட முடியும் என்று அவர் நம்பினார்" எனக் கூறினார்.

    மேலும், இஸ்ரோவிற்கான பொருளாதாரத்தை திரட்டுவதில் இருந்த சிரமங்கள், விண்வெளி ஆராய்ச்சி மூலம் பொது மக்களுக்கு கிடைக்கும் நலன்களை விளக்கி அரசியல் அமைப்புகளின் நம்பிக்கையை பெற்றது முதல் இன்று உலகிலேயே அதிகப் புகழும், மதிப்பும் பெற்ற விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் இன்றைய நிலை வரை, இஸ்ரோவின் பரிணாம வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார்.

    முன்னதாக இன்சைட் நிகழ்ச்சியில் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்ட சத்குரு அவர்கள் பேசுகையில், "நம் பாரதம் முன்பு உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருந்தது. ஆனால் கடந்த 250 ஆண்டுகால ஆக்கிரமிப்பு, நம்மை நம்பிக்கையற்ற வெறும் கிளார்க் பணிகளை தேடும் மக்களாக மாற்றி உள்ளது. 

    அதிர்ஷ்டவசமாக இந்த தலைமுறை அந்த மனநிலையை கைவிட்டு வருகிறது. நம் நாட்டில் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் அதாவது 100 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் உள்ளனர். தற்போதைய தேவை நம் நாட்டின் தொழில்கள் விரிவடைய வேண்டும். இதற்காக தான் இன்சைட் நிகழ்ச்சி" எனக் கூறினார்.

    இந்தாண்டு இன்சைட் நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்றுள்ளனர். டைடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே. வெங்கட்ராமன், வெல்ஸ்பன் லிவிங் லிமிடட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஶ்ரீமதி தீபாளி, டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் ஆப் இந்தியா (TII) நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவரும், சோழமண்டலம் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் தலைவருமான ஶ்ரீ வேலையன் சுப்பையா ஆகியோர் முக்கிய விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர்.

    இதற்கு முந்தைய ஆண்டு இன்சைட் நிகழ்ச்சிகளில் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, பயோகான் கிரண் மசும்தார்ஷா, ஜி.எம். ராவ், கே.வி.காமத், அருந்ததி பட்டாச்சார்யா, ஓலா பவேஷ் அகர்வால் உள்ளிட்ட நாட்டின் பிரதான வணிகத்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார்.
    • சர்வதேச விமான நிலையத்தில் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

    Cop-29 என்ற காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

    அசர்பைஜானின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மற்றும் பிற அரசு அதிகாரிகள், ஹைதர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

    • சத்குருவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
    • சத்குரு எனும் தனிநபரைக் குறி வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

    சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்ரை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

    சத்குருவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது மக்களின் பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு இல்லை, சத்குரு எனும் தனிநபரைக் குறி வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பினை ஈஷா அறக்கட்டளை வரவேற்கிறது.

    முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "கடந்த பல ஆண்டுகளாக சத்குரு அவர்கள் செய்து வரும் அனைத்து நல்ல பணிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குருவை பத்ம விபூஷன் விருதிற்கு பரிந்துரைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதாகவும், சத்குருவுக்கு எதிராக எந்த எதிர்மறையான விஷயங்களும் இல்லை" என்றும் கூறினார்.

    இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்த அமைப்பு, இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஷாவிற்கு எதிராக வேறொரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தது. அந்த வழக்கை "உள்நோக்கத்துடன் தொடரப்பட்டு வழக்கு" எனக் கூறி அப்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது நினைவுக்கூறதக்கது.

    ஈஷாவின் நற்பெயருக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் இடையூறு மற்றும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஒரு குழுவாக சிலர் செயல்பட்டு, ஈஷா குறித்து அவதூறுகளை பரப்பியும், பொதுநல மனு என்ற பெயரில் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

    அவ்வாறு அவதூறு குற்றச்சாட்டுகளோடு உள்நோக்கத்துடன் ஈஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளை, உண்மையின் பக்கம் நின்று தள்ளுபடி செய்து நியாயமான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சத்குருவிற்கு இந்த விருதினை கனடா-இந்தியா அறக்கட்டளை வழங்குகிறது.
    • விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார்.

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு, 'CIF குளோபல் இந்தியன் விருது 2024' வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    இந்த வவிருதினை இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையேயான இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் அமைப்பான 'கனடா இந்தியா அறக்கட்டளை' வழங்குகிறது.

    உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைக் கொண்டாடும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகளவில் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்காக சத்குரு தலைமை ஏற்று செய்து வரும் பணிகளை பாராட்டியும், விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதிலும், மனிதர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துதலிலும் அவரின் ஈடுஇணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

    இது குறித்து கனடா இந்தியா அறக்கட்டளையின் தலைவரான ரித்தேஷ் மாலிக் கூறுகையில், "சத்குரு CIF விருதினை பெற ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் அதனை டொராண்டோவில் நடைபெறும் விழாவில் நேரில் பெற்றுக் கொள்ள சம்மதித்து இருப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம்.

    சத்குரு மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நடைமுறை தீர்வுகளையும், மண் சிதைவு, காலநிலை மாற்றம் மற்றும் உணவின் தரம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளையும் வழங்குகிறார்.

    சத்குரு போன்ற நற்சிந்தனைத் தலைவர்களிடமிருந்து கனடா பெரிதும் பயனடையும். சத்குருவின் போதனைகள், கனடா முன்னிறுத்தும் தனிநபர்களின் நல்வாழ்வு, நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் அரவனைத்துக் கொள்ளுதல் ஆகியவைகளோடு ஒன்றிப் போகின்றன.

    சத்குரு யோகா, தியானம் மற்றும் தெளிவான மனநிலை போன்றவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இது குறிப்பாக மனநோய் பிரச்சனைகளின் சவால்களை எதிர்கொள்ளும் கனடாவின் சுகாதார அமைப்பின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது" என்றார்.

    இந்த விருது வழங்கப்பட்டதற்காக சத்குரு தனது நன்றியை CIF-க்கு தெரிவித்துக் கொண்டார். மேலும் விருதுடன் வழங்கப்படும் தொகையான கனடா நாட்டு மதிப்பில் CAD 50,000/- ஐ காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

    • ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
    • ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

    ஈஷா பெண் துறவிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பெண் துறவிகள் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கி இருக்கின்றனர். அதனால் இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து 'நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்' என சத்குரு கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் "நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது" எனக் கூறியுள்ளார்.

    https://x.com/SadhguruTamil/status/1847312679628583005

    • ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும்
    • அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    கோவையில் ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் பெண்கள் சந்நியாசம் மேற்கொள்ள மூளைச்சலவை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு ஈஷா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரக் கோரி கோவை வேளாண் பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்றி வரும் காமராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்குதல் செய்திருந்தனர்.

    இந்த மனு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ஆஜரான காமராஜின் பெண்கள் இருவரும் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ஈஷா மையத்தில் உள்ளதாகக் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவரை வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில்   ஆக்கிய ஜக்கி வாசுதேவ் மற்ற இளம் பெண்களின் தலையை மொட்டையடித்துக்கொள்ள ஊக்குவிப்பது ஏன்? அவர் இப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். மேலும் துறவியாகத் தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

     

    இதற்கிடையே மனுதாரரின் வழக்கறிஞர் பேசுகையில், ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், சமீபத்தில் அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே ஈஷா அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

    • ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
    • அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சமீபத்தில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் 'சத்குரு' அவர்களின் படமும் இடம்பெற்று உள்ளது. அந்தப் புகைப்படங்களுடன் வலிமையான காப்பாளர்கள் தன்னை என்றும் சூழ்ந்து இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார்.

    நடிகர் வில் ஸ்மித், உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பேட் பாய்ஸ் (Bad Boys), மென் இன் பிளாக்(Men in Black), ஐ ரோபாட் (I Robot), தி பர்சுயூட் ஆப் ஹாப்பினஸ் (The Pursuit of Happiness) ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். அவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

    அதில் அவர், 'நான் எப்பொழுதும் வலிமையான காப்பாளர்களால் சூழப்பட்டு உள்ளேன்' என்று குறிப்பிட்டு உள்ளார். முதல் புகைப்படத்தில் வில் ஸ்மித் அவரின் தந்தை மற்றும் கார்த்தே கிட் படத்தில் நடித்து புகழ்பெற்ற அவரின் முதல் மகன் இருக்கின்றனர். அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

    மேலும் மூன்றாவது புகைப்படத்தில் வில் ஸ்மித், பிரபல எழுத்தாளர் ஜெய் ஷெட்டி மற்றும் சத்குரு ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

    கடந்த 2020-ஆம் ஆண்டு சத்குரு அவர்கள் அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக அந்நாட்டில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

    அப்போது சத்குருவை தனது வீட்டிற்கு வில் ஸ்மித் அவர்கள் அழைத்து இருந்தார். அதன்படி சத்குரு அவர்களும் ஸ்மித்தின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.



    ×