search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம்"

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
    • மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக சிறிய பல்லக்கில் சுவாமி ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முன்னதாக உற்சவர் சந்தையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் அருகே உள்ள சகடை தேரில் சுப்பிர மணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமி ரத விதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை இருந்து நிபுணர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    மலை மேல் 3½ அடி உயரம் 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 150 லிட்டர் நெய் 100 மீட்டர் காடா துணி 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டு பாதை, புதிய படிக்கட்டு பாதை, கோவில் வாசல்,பேருந்து நிலையம் என நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டு உரிய அனுமதி சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்து மீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம்.
    • காசிவிஸ்வநாதர் கோவிலில் மச்ச முனியின் ஜீவசமாதி உள்ளது.

    எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்த பூமியிது. அதில் ஒரு சித்தர்தான் மச்சமுனி. அவர் பாடல் இது;

    "செபித்திட காலம் செப்புவேன் மக்களே

    குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம்

    அவித்திடும் இரவி அனலும் மேலும்

    தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே''

    பொருள்:

    ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜெபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும்.

    ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையில் மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்ச முனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

    காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். ஆடி மாதம் ரோகிணியில் அவதரித்து, 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்த இந்த சித்தரின் குருபூஜை இன்று நடைபெறுகிறது.

    திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு சுனை உள்ளது. அங்கே பக்தர்கள் தயிரை வாங்கி சுனை நீரில் விடுகிறார்கள். அப்பொழுது மச்ச முனி சித்தர் மீன் வடிவில் வந்து அந்த தயிரை ஏற்றுக் கொண்டு நமக்கு நல்லருள் புரிகிறார் என்பது நம்பிக்கை.

    • கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர்.
    • போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்திக் (வயது 29). திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திர பிரசாத் (21) மற்றும் சண்முகராஜ் (24). நண்பர்களான மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்றனர்.

    இவர்களுக்கிடையே கடந்த தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலாக மாறி கைகலப்பில் முடிந்தது. அப்போது முதல் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவருக்கொருவர் ஒரே இடத்தில் வேலை பார்த்தபோதும் பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் தகராறு உருவானது. இதில் ராஜேந்திர பிரசாத், கார்த்திக்கை அருகில் இருந்த தராசு படிக்கல்லை எடுத்து தாக்கியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனது வீட்டில் இருந்த சூரிக் கத்தியை எடுத்து வந்து ராஜேந்திர பிரசாதின் தோள்பட்டையில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திர பிரசாத் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திர பிரசாத் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் சமாதானம் பேச சென்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மலைச்சுவரோடு பதிந்திருக்கிறபடியால் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.
    • பரங்குன்றத்து நாயகன் திருக்கரத்தில் உள்ள வேல் படைக்கு அபிஷேகமும் முருகனுக்கு புனுகும், எண்ணெய்க் காப்பும்தான் சாத்துபடி செய்யப்படுகின்றன.

    பொய்கையில் வழிந்தோடும் நீர் நிலைகள் அருவியும் சுனையும் மிகுந்து இயற்கைப் பொலிவோடு அன்றைய திருப்பரங்குன்றம் விளங்கியது.

    திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள குமரப் பெருமான் போகத்துக்குரிய மாலையாகிய கடம்பினையும், வீரத்திற்குரிய மாலையாகிய காந்தளையும் அணிந்து விளங்குவதாகத் திருமுருகாற்றப்படையில் ஒரு செய்தி வருகிறது.

    சீரலைவாய்ப் போரில் திருமுருகன் சூரபத்மனை அழித்து ஆட்கொண்டு & "பணிப்பகை மயிலும் சேவற் பதாகையும்" போலே கந்தவேளின் வாகனமான மயிலாகவும் கொடியில் நிமிர்ந்து நிற்கும் சேவலாகவும் கொண்டு, தனது தொண்டனாக ஏற்றுக் கொண்டான்.

    பிறகு திருச்செந்தூரிலிருந்து திருப்பரங்குன்றம் வந்தமர்ந்தான் குமரன். குன்றின் வடபாகத்தில் குமரப் பெருமானது திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கோவிலின் நுழைவு வாயில் உள்ள ஆஸ்தான மண்டபம் சுந்தர பாண்டியன் கட்டியது. அறுபத்தாறு கற்தூண்களைளக் கொண்ட பெரிய மண்டபம்.

    மண்டபத்தின் தூண்களில் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த யாளிகள் & குதிரை வீரர்கள் & சிவனாரின் திரிபுரத கற்பக விநாயகருக்கருகில் உள்ள குடைவரைக் கோவிலில் சத்யகிரீசுவரர் என்னும் சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியாகத் திருக்காட்சி தருகின்றார்.

    இக்கோவிலின் உட்புறச் சுவர்களில் சோமாஸ்கந்தரின் உருவமும், வெளிப்புறச் சுவரில் சிவபெருமான் பார்வதி உருவங்களும் காட்சியளிக்கின்றன.

    அர்த்த மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகைக் கோவிலில் அன்னபூரண தேவி தன் பரிவாரங்களுடன் காட்சி தருகின்றாள்.

    திருமணக் கோலம் கொண்ட திருமுருகன் உயர்ந்த இடத்தில் எல்லா தெய்வங்களும் புடைசூழத் திருக்காட்சியளிப்பது ஓர் அற்புதக் காட்சி. அந்த அருட்காட்சியைக் காண ஆயிரம் கண்கள் போதாது.

    பரங்குன்றத்தின் அடிவாரத்தின் கீழ்த்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இந்தப் பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

    திருமுருகன் திருப்பரங்குன்றம் வந்தடைந்த போது தேவதச்சனை அழைத்துத் தனக்கொரு திருக்கோவில் அமைத்துக் கொடுக்கச் செய்து அங்கே இருந்து அருளாட்சி செய்வதாக ஒரு செய்தியும் உண்டு.

    மலைச்சுவரோடு பதிந்திருக்கிறபடியால் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    பரங்குன்றத்து நாயகன் திருக்கரத்தில் உள்ள வேல் படைக்கு அபிஷேகமும் முருகனுக்கு புனுகும், எண்ணெய்க் காப்பும்தான் சாத்துபடி செய்யப்படுகின்றன.

    தல வரலாறு

    திருமுருகன் சீரலை வாயில் சூரபத்மனையும், அசுரர்களையும் அழித்துத் தேவர்களின் துயரைத் துடைத்தார்.

    துயர் நீங்கப் பெற்ற தேவர் தலைவன் இந்திரன் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தன் புதல்வியாகிய தேவசேனா தேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான்.

    திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள், திருமுருகனது அழகில் மயங்கி அவனையே அடைய வேண்டுமெனத் தவமிருந்தார்கள்.

    அவர்களுள் அமிர்தவல்லி இந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் வளர்ந்தாள்.

    தேவர்கள் சேனைக்கு அதிபதியான செந்தமிழ் முருகன் தேவசேனையைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துத் திருமணம் முடித்துக் கொண்டார்.

    தேவசேனைக்குத் திருமணம் நடந்த இத்திருத்தலத்தில் மற்றொரு அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான் திருமுருகன்.

    பெரும்புலவர் நக்கீரர் தலயாத்திரை செய்து வருகின்ற போது திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக் கரையில் உட்கார்ந்து நித்ய பூஜா அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார்.

    குளக் கரையிலிருந்த அரசமரத்து இலை ஒன்று உதிர்ந்து பாதி நீரிலும் பாதி தரையிலும் விழுந்தது.

    நீரில் விழுந்த பகுதி மீனாகவும், தரையில் விழுந்த பகுதி பறவையாகவும் மாறின.

    ஒன்றையன்று இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன. இந்த சலசலப்பால் நக்கீரனது அனுஷ்டானம் கலைந்து போயிற்று.

    உடனே கற்கிமுகி என்ற பூதம் நக்கீரரை மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது. குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

    ஆயிரம் பேர் சிறையில் சேரக் காத்திருந்த கற்கிமுகி ஒருசேர அத்தனை பேரையும் விழுங்கிப் பசியாறக் காத்திருந்ததாம்.

    நக்கீரர் திருமுருகனை மனத்திலிருந்து திருமுருகாற்றுப் படையைப் பாடியவுடன் அக்குகையைப் பிளந்து அத்துணை பேருக்கும் விடுதலை நல்கி, பூதத்தையும் திருமுருகன் அழித்ததாகத் திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்துள்ளார் நக்கீரர்.

    திருப்பரங்குன்றத்துப் பதியிலே நடந்த தேவசேனா தேவியின் திருமணத்திற்கு பிரம்மா திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தவும், சூரியனும், சந்திரனும், ரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும், உமையம்மையும், தென்னவர்கோன் பரமேசுவரனும் இணையாக நின்று வாழ்த்திக் களிக்கவும், ஆயிரங் கண்ணுடைய இந்திரன் தகப்பனார் கடமையாக தாரை நீர் வார்த்துக் கொடுக்கவும், தேவியைக் கரம் பிடித்தான் பரகுன்றத்துக் குமரன்.

    திருமுருகன் திருப்பரங்குன்றத்தில் தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    எனவேதான் இவ்விழாவைப் பெரிய திருவிழாவாக, பிரமோத்சவமாக இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    • நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முத லாம் படை வீடாக போற் றப்படும் திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப் படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா முக்கி யத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்காண விசா கத்திருவிழா, கடந்த 13-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். வெளியூர்களில் இருந்தும் நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடை பெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத் தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி னர்.

    அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் வைத்து சுமந்து வந்த பாலில் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. அவ்வாறு அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வைகாசி விசாகத்தை யொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப் பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்தி ருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். நகரில் பல்வேறு பகுதிகளில் இருந் தும் பக்தர்கள் சாரை சாரையாக கோவிலை நோக்கி படையெடுத்தனர்.

    குறிப்பாக கோரிப்பாளை யம், சிம்மக்கல், நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆண்டாள்புரம், வசந்தநகர், பழங்காநத்தம், பைக்காரா, பசுமலை, மூலக்கரை, திரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையே தெரியாத அள வுக்கு பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். அதிலும் குழந்தை கள் பால்குடங்களை தலை யில் சுமந்து வந்ததை வழி நெடுகிலும் நின்று பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.

    கடந்த வாரம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத் திய நிலையில் சில நாட்க ளாக பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கமின்றி சாலைகளில் பக்தர்கள் பாதயாத்திரை யாக கோவிலை நோக்கி சென்றனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிச னம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

    மேலும் கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அதி காலை 6 மணி முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவி லுக்கு செல்லும் வழிநெடுகி லும் சாலையின் இருபுறமும் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம், நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஆங் காங்கே மருத்துவம் உள் ளிட்ட அடிப்படை வசதிக ளும் செய்யப்பட்டிருந்தது.

    விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்ப ரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து விண்ணதிர அரோ கரா கோஷம் எழுப்பினர். விழாவிற்கான ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர்.

    இதேபோல் முருகப்பெரு மானின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச் சோலை முருகன் கோவிலி லும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள் ளத்தில் சிறப்பாக நடை பெற்றது. மலையடிவாரத் தில் இருந்து நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பால் குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத் தில் நீராடி பின்னர் பழ முதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
    • ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

    மதுரை:

    தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை வந்தார். அப்போது அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் இரவு அழகர்கோவில் சாலையில் உள்ள தங்குவிடுதியில் தங்கினார்.

    இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற பின்னா் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தார்.

    பின்னர் மீனாட்சியம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்

    முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர் தங்கிய தங்கு விடுதியில் இருந்து கோவில் வரை பலத்த பாதுகாப்பு போடப் பட்டதோடு, கோவிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.

    மீனாட்சியம்மன் கோவிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுசென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுசென்றார்.

    முன்னதாக காலையில் ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.

    இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

    இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

    9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.

    • 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய் வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, பெரிய ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதேபோல இரவு மின்னொளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
    • 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி கோவில் மலைமேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ள தாமிரக் கொப்பரையில் 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து வந்த சிறப்பு குழுவினர் மூலம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்காக மாலை 6 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமை யில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    தேரோட்டம் மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்று வதை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. ஏழு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை பாக்கியம், திருமணம் உள் ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக காப்பு கட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். விழாவினை முன்னிட்டு தினமும் காலை 11 மணி, மாலை 5.30 மணி என இருவேளைகளிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.

    மேலும் உற்சவர் சுப்பி ரமணிய சுவாமி தெய்வா னையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி கோவில் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 6.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய சுப்பிரமணிய சுவாமி அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை மாலை 6.30 மணி அளவில் கோவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னி லையில் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை மறுதினம் 19-ந்தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    • ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். ஐப்பசி மாதம் 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு காப்பு கட்டப்பட்டு, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய் வானைக்கு காப்பு கட்டப்பட்டது. உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9 மணிக்கு மேல் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டப்பட்டது.

    இதையொட்டி மதுரை மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி கந்தசஷ்டி விரதம் தொடங்கினார்கள். விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.

    தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 17-ந் தேதி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 18-ந்தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்காரம் நடை பெறும்.

    விழாவில் நிறைவு நாளான 19-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார். அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    ×