என் மலர்
நீங்கள் தேடியது "பெரியபாளையம்"
- ஆரணி ஆற்றில் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
- பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் மற்றும் ஆரணி சமுதாய கூடத்தில் இருந்து மங்களம் கிராமம் செல்லும் தரைப்பாலம் ஆகிய இரண்டும் தண்ணீரில் மூழ்கியது.
இப்பகுதியில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
எனவே, ஆற்றின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து ஆரணி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மங்களம், புதுப்பாளையம், காரணி, ஆத்துமேடு, நெல்வாய், எருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மாற்று பாதையில் பெரியபாளையம் வழியாக வந்து செல்கின்றனர்.
மேலும், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும், தனியார்-அரசு துறையில் பணியாற்றும் பணியாளர்களும், விவசாயிகளும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.
எனவே, அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் கட்டி முடித்து போக்குவரத்து பாதிப்பை தீர்க்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையது.
- பக்தர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.
பெரியபாளையம்:
பூரம் நட்சத்திரம் என்பது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து சக்தி வெளிப்பட்ட நட்சத்திரம் ஆகும். சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரம் போன்று அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையாது.
இந்ந நிலையில் அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூரம் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் திருபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் வளையல் பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.
வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல், குங்கும பிரசாதமாக வழங்கப்படும். புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கர்ப்பிணி பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள்.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடிப்பூரம் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை காலை சர்வ சக்தி மாதங்கி அம்மனுக்கு காயத்ரி ஹோமம், துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இதன் பின்னர் 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
- மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு ஊராட்சிக்குட்பட்ட வேம்பேடு கிராமம், செல்லியம்மன் கண்டிகை பகுதியில் சுடுகாடு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இடையே அலமாதியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மின்கம்பங்கள் மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகளை தாங்கி பிடிக்கும் 2 சிமெண்டு மின்கம்பங்களும் முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கின்றன. பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
இதேபோல் அப்பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஆயிலச்சேரி கிராமத்தில் அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் உடைந்து விழுந்ததால் வயல்வெளியில் இருந்த ஒருவர் பலியானார். கோடு வெளி கிராமத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 10 ஆடுகள், ஒரு மாடு பலி ஏற்பட்டது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்னர் இப்பகுதியில் உள்ள சேதம் அடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.
- குண்டலினி சக்தியை எழுப்ப பல சாதனங்கள் உள்ளன.
- தத்துவ ஆராய்ச்சியின் வலிமையாலும் குண்டலினி சக்தி எழும்பும்.
குண்டலினி சக்தியை எழுப்ப பல சாதனங்கள் உள்ளன. பிராணாயாமம் ஒரு வழி. இறைவனிடம் தூய்மையான பக்தி செலுத்துபவர்களுக்கும் குண்டலினி சக்தி எழும்பும். பரிபூரண நிலை அடைந்த முனிவர்கள், ஞானிகள் குருமார்க்கள் தயவினால் எழுப்பப்படும். தத்துவ ஆராய்ச்சியின் வலிமையாலும் குண்டலினி சக்தி எழும்பும்,.
குண்டலம் என்றால் வளையம், நம்மிடம் உள்ள ஓஜஸ் என்ற சக்தி பாம்பு போல சுருண்டு வளையம் போலத் தேங்கிக் கிடப்பதால் அதற்கு குண்டலினி சக்தி என்று பெயர்.
அந்த சக்தி நம் உடம்பில் மூலாதாரம் என்ற மையத்தில் சுருண்டு கிடக்கிறது. மூலாதாரம் என்பது நம் உடம்பில் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் உள்ள பகுதியாகும்.
ஆதிசங்கரர் இயற்றிய பவானி புஜங்கம் என்ற நூலின் நான்கு வரிகளிலேயே இந்த குண்டலினி சக்தியைப் பற்றி விளக்குகிறார்.
விடாதார பங்கேரு ஹாந்தர் விராஜத்
ஸீஷீம் நாந்தராலேதி
தேஜோல் ல ஸந்தீம்
பிரபந்தம் ஸீரதா மண்டலம் தீராவயந்திம்
ஸீதா மூர்த்தி மீட்ட மஹாநந்த ரூபம்
`ஆறு ஆதாரங்களென்னும் தாமரை மலரின் நடுவே நன்கு ஒலியுடன் இலங்கும் ஸ¨ஷ¨ம்நா நாடியினுடைய நடுவில், மிகுந்த காந்தியுடன் மிளிருகின்றதும், சந்த்ர மண்டலத்தைப் பெருகச் செய்கிறதும், பெருகி வருகின்ற அமுதத்தை பருகுகின்றதும் பரமானந்த வடிவாயுள்ள அமுதவடிவாம் குண்டலினி சக்தியை, பவானியை, அன்னையை துதிக்கிறேன்.
அதாவது மலர்ந்த தாமரை மலரின் வடிவம் கொண்ட மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களுக்கு நடுவில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறதும், ஒளியுடன் விளங்குவதுமான ஸ¨ஷ¨ம்நா நாடியின் நடுவில், அளவு கடந்த ஒளியுடன் இலங்குவதும், சிரசிலுள்ள சந்திரமண்டலத்தை பெருகச் செய்கின்றதும் அவ்விடமிருந்து இழிந்து வருகின்ற அமுதத்தை சுவைத்த வண்ணமிருப்பதும், பரமாநந்த வடிவாயமைந்துள்ளதும் அமுதமயமான வடிவம் கொண் டுள்ளதுமான குண்டலினி சக்தியாம் ஸ்ரீ பவானியை நான் துதிக்கிறேன் என்பது இதன் விளக்கமாகும்.
ஒரு சிறிய சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், இவ்வளவு பெரிய குண்டலினி சக்தியை பற்றிக் கூறியிருப்பது குறித்து ஆராய்ந்து பார்த்தால் விந்தையிலும் விந்தையாக இருப்பதுடன், நமது மனதைக் கவரக் கூடிய வல்லமை பெற்றுள்ளது என்பதும் புலனாகும்.
- பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.
- அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக காட்சி அளிக்கிறாள்.
பக்தர்களின் குறைகளை களைந்து, வேண்டும் வரம்களை உடனுக்குடன் வழங்கும் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் ரேணுகா தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். இது தொடர்பான புராண கதை வருமாறு:-
முன்னொரு காலத்தில் இப்பிரதேசத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் தவம் இருந்து வந்தார். அவரது மனைவியே ரேணுகாம்மாள். அவர்கள் ஹரிதத்தன், உச்சாங்கன், விஸ்வாசு, பரசுராமர் என்ற நான்கு ஆண் குழந்தைகளை பெற்றனர். அவர்களுள் இளையவர் பரசுராமர்.
ஒருநாள் பூஜைக்கு வேண்டிய மலர்களையும், நீரையும் கொண்டு வரச் சென்ற ரேணுகாதேவி, மண்குடத்தில் தண்ணீர் எடுக்கும் போது, வானத்தில் பவனிசென்ற ஒரு கந்தர்வனின் உருவ நிழலை நீரில் கண்டாள். அவனது பேரழகைக் கண்டு சிறிது நேரம் ரசித்தாள். அவ்வளவுதான். மண்குடம் கரைந்து போனது இதனால் செய்வதறியாது தவித்தாள்.
இதை அறிந்த ஜமத்கனி முனிவர் வெகுண்டெழுந்தார். தன் மகன்களை அழைத்தார் உம் தந்தையின் தவ வலிமையே அழிவுறும் வண்ணம் செய்ய முனைந்த உங்கள் தாயை தலை வேறு உடல் வேறாக வெட்டி எறியுங்கள் என்று கட்டளையிட்டார்.
மூத்த மகன்கள் 3 பேரும் முடியாது என்று ஒதுங்கினார்கள். அதைக் கண்ட முனிவர் மேலும் கோபம் கொண்டு அவர்களை போதராஜன், காட்டண்ணன், கருப்பண்ணசாமி என்ற தேவதைகளாக உருமாற்றி சாபமிட்டார்.
பிறகு பரசுராமனை அழைத்தார். நான் சொல்வதை செய்! உன் வாளால் உன் தாயின் கழுத்தை வெட்டிச் சாய்க்க வேண்டும்' என்றார் முனிவர்.
நிலைதடுமாறிய பரசுராமர், தந்தையின் கட்டளையை ஏற்று தாயின் தலையை துண்டித்தார்! மகிழ்வுற்றார் முனிவர். பரசுராமரை பாராட்டியதோடு இரண்டு வரங்களையும் அவனுக்கு அளிப்பதாக கூறினார்.
பரசுராமர் அந்த வரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.
முதலாவதாக எனது தாயை கண்டு வணங்கி அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதற்கு என் தாய் வேண்டும்'' என்றார்.
உடனே ஜமதக்கினி முனிவர் மகனிடம் கமண்டல நீரைக் கொடுத்து, வெட்டுண்ட உன் தாயின் தலையையும், உடலையும் ஒன்றாக இணைத்து, அத்தீர்த்தத்தை தெளித்தால் அவள் உயிர் பெறுவாள் என்று கூறினார்.
ஆவலுடன் அக்கமண்டலத்தைப் பெற்ற பரசுராமர், அவசரத்தில் அவ்விடத்தில் கிடந்த மற்றொரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலும், தலையும் கிடந்ததை சரியாக கவனிக்காமல், அப்பெண்ணின் உடலோடு தன் தாயின் தலையை சேர்த்து கமண்டல நீரைத் தெளித்துவிட்டார்.
ரேணுகாதேவி உயிர் பெற்றெழுந்ததும் முன்போன்ற உடல் இல்லாமல் போய் விட்டதே என்பதை உணர்ந்தாள். பரசுராமரும் அப்போது தான் அந்த தவறை அறிந்து வருந்தினார்.
இந்நிலையில் ஒருநாள் நாகலோகத்து அரச குமாரன் கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் தம் குமாரர்கள் நூறு பேர்களுடன் புறப்பட்டு வந்து ஜமத்கினி முனிவரிடம் உள்ள காமதேனு பசுவை கொடுக்குமாறு வேண்டினார்கள். முனிவர் மறுத்ததால் அவரைக் கொன்று விட்டு அப்பசுவை இழுத்துச் சென்றார்கள்.
கணவனுக்கு நேர்ந்த கதியை பார்த்த ரேணுகாதேவி கணவனுக்காக மூட்டிய சிதையில் தானும் குதித்தாள். அப்போது பலத்த மழை பெய்தது.
இதனால் தீ அணைந்தது மழைநீர் வெள்ளமாகப் பெருகி ஆற்று நீருடன் கலந்து சென்றதால் ரேணுகாதேவியின் தீப்புண் பட்ட உடலும் மிதந்து சென்று ஒரு இடத்தில் கரை ஒதுங்கியது.
மயக்கம் தெளிந்து பார்த்தாள் ரேணுகாதேவி தீயில் எரிந்து போய், வெற்றுடலில் வெந்த புண்களுடன் தனியே தவித்திருக்கும் அவளது நிலைமையை அளவிட்டுக் கூறிட இயலாது.
அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளைப் பறித்து ஆடையாக கட்டிக் கொண்டு அந்த வழியே வந்த வயதான முதாட்டியின் தயவால் அவளிடம் அடைக்கலம் புகுந்தாள் தேவி.
மூதாட்டி தேனும், தினைமாவும் அளித்து, வெந்த புண்களுக்கு, மஞ்சள், வேப்பிலையை அரைத்து வைத்து கட்டி குணப்படுத்தினாள். படிப்படியாக புண்கள் எல்லாம் மறைந்தன.
பரமனிடமும் பார்வதியிடத்திலும் மாறாத பக்தி கொண்டிருந்த ரேணுகாதேவி சக்தி அம்சங்களைப் படிப்படியாகப் பெற்று விளங்கத் தொடங்கினாள். அத்தேவியே தெய்வமாக மாறி பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மனாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றாள்.
இத்திருத்தலத்தில் அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக விளங்குகின்றாள். ஐந்து தலைநாகம் தலைக்குமேல் குடை விரிக்க அகிலம் வியக்கும் வண்ணம் அருளாட்சி புரிந்து வருகின்ற இத்தேவியின் திருக்கோவிலில் அருட்பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.
உலகச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் நாம் கொஞ்சமாவது அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டுமானால், பவானி அம்மன் அன்னை வழிபாட்டை செய்தல் வேண்டும்.
- பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
- அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள்.
தேங்காய் உருட்டும் பிரார்த்தனை
அங்க பிரதட்சணம் செய்வதை நீங்கள் எல்லா கோவில் களிலும் பார்த்து இருப்பீர்கள். அந்த பிரார்த்தனையை பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலில் சற்று மாறுபட்டு செய்கிறார்கள்.
அதாவது தாங்கள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு பதில் கோவிலை சுற்றி அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள். இந்த பிரார்த்தனையில் ஈடுபடுபவர்கள் ஈரத்துணியுடன் பவானி அம்மனை வணங்கி விட்டு தேங்காயை உருட்டி விடுவார்கள். அந்த தேங்காய் உருண்டு செல்லும்.
எந்த இடத்தில் அந்த தேங்காய் நிற்கிறதோ, அந்த இடத்தில் பவானி அம்மனை நோக்கி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவார்கள். இப்படி தேங்காயை உருட்டியபடி கோவிலைச் சுற்றி வருவார்கள். இந்த பிரார்த்தனையை `அடிதண்டம்' என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள்.
கரகம் பிரார்த்தனை
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் பவானி அம்மனிடம் கரகம் எடுத்து வருவதாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகன் கரகம் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.
கரகத்தை நன்றாக அலங்காரம் செய்து பட்டுச்சேலை சுற்றி, பூ வைத்து, தலையில் ஏந்தி கோவிலை சுற்றி வருவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பெரியபாளையத்தம்மனை குல தெய்வமாக கருதுபவர்களும் இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்கிறாரக்ள்.
திருமணத்துக்காக இந்த பிரார்த்தனை செய்யப்படுவதால், இதை `குடை கல்யாணம்' என்றும் அழைக்கிறார்கள்.
மஞ்சள் தீர்த்தத்தில் மருந்து
பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுக்கப்படுவது போல பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
இந்த மஞ்சள் தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. பவானி அம்மனின் அருள்பட்ட இந்த மஞ்சள் தீர்த்தம் பிணி தீர்க்கும் மாமருந்து என்றே சொல்லலாம். கோவிலில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் தீர்த்தத்தை பருகினால் நோய்கள் பறந்தோடி விடும் என்று பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
அம்மை போட்டவர்கள் இந்த மஞ்சள் தீர்த்தத்தை குடித்தால் மூன்றே நாளில் அம்மை இறங்கி விடும் என்பது கண்கூடு.
தற்போது பெரியபாளையத்தம்மன் கோவில் கருவறை அமைந்திருக்கும் பகுதியில்தான் பெரியபுற்று இருந்தது என்பதையும், அந்த புற்றை அகற்றும்போது கம்பி பட்டு சுயம்பு காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு வந்ததையும் ஏற்கனவே நீங்கள் படித்து இருப்பீர்கள்.
அப்படி ரத்தம் வந்தபோது மஞ்சள்தான் வைத்தனர். அதை பக்தர்களுக்கு உணர்த்தவே மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
சுயம்பில் வைத்து எடுத்துத் தரப்படும் மஞ்சளை நாள்பட்ட காயம், புண்களில் வைத்தால், விரைவில் அவை ஆறி குணமாகி விடும். எனவே இந்த மஞ்சள் தீர்த்தத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வதை காணலாம். சென்னையில் இருப்பவருக்கு அம்மை போட்டிருந்தால், இந்த தலத்துக்கு வந்து மஞ்சள் தீர்த்தம் வாங்கி சென்று பயன்பெறுவது மரபாக உள்ளது.
தாலி தரும் பிரார்த்தனை
பெரியபாளையத்தம்மன் ஏழைகளின் வீட்டு தெய்வமாவாள். குறிப்பாக மீனவ சமுதாய மக்களின் குலதெய்வமாக திகழ்ந்து, அம்மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருகிறாள்.
பொதுவாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடும் அலை, சூறைக்காற்று போன்றவைகளை எதிர்கொண்டு சமாளித்து மீன்பிடித்து வரவேண்டும். மீன்வளம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் சில நாட்கள் கழித்தே கரை திரும்புவார்கள்.
இப்படி கடலுக்குள் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்று மீனவப் பெண்கள் பவானி அம்மனை நினைத்து மனதார வேண்டிக் கொள்வார்கள். அதற்கு நன்றி காணிக்கையாக தங்களது தாலிக்கொடியையே அப்படியே பெரியபாளையத்தம்மன் கோவில் உண்டியலில் போட்டு விடுவார்கள்.
ஆடி மாத விழா காலத்தில்தான் மீனவப் பெண்கள், இந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக 3-வது வாரம், 5-வது வாரம், 7-வது வாரம் அல்லது 9-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை மீனவப் பெண்கள் இந்த பிரார்த்தனையை செய்வதுண்டு.
இதன் காரணமாக ஆடி மாதம் முழுவதும் உண்டியலில் தாலி காணிக்கை மிகுதியாக இருக்கும். வேப்பஞ்சேலை பிரார்த்தனை போலவே இந்த பிரார்த்தனையும் இந்த ஆலயத்துக்குரிய ஒன்றாக தனித்துவத்துடன் உள்ளது.
சென்னையில் காசிமேடு பகுதி மீனவர்கள் ஏராளமானோர் பெரியபாளையத்துக்கு வந்து இந்த பிரார்த்தனையை செய்கிறார்கள். வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பெரியபாளையத்தம்மனை குலதெய்வமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
- தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும்
- பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.
1. பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது.
2. ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருப்பதால் கோவிலில் எப்போதும் நன்கு காற்றோட்டமாக உள்ளது.
3. பாவனி அம்மன் இத்தலத்தில் அகண்ட பரிபூரண ஆனந்த ஜோதியாய், வழிபடும் அடியார்களின் வல்வினை போக்கும் வண்டார் குழலியாய், 7 அவதாரங்களில் ஒன்றாகிய சங்கு, சக்கர பேருருவாய் கோவில் கொண்டு எழுந்துருளியுள்ளாள்.
4. ஆடி திரவிழா அம்மன் தலங்களில் 4 அல்லது 5 வாரம்தான் நடைபெறும். ஆனால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் மட்டும் 14 வாரங்கள் ஆடிப்பெருவிழா நடைபெறும்.
5. பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மன் சுயம்புவாக தோன்றியுள்ளாள்.
6. அபிஷேக நேரம் தவிர மற்ற நேரங்களில் சுயம்பு உருவை அம்மன் தலை கவசத்தால் மூடி விடுவார்க்ள.
7. பஸ்சில் வரும் பக்தர்கள்தான் கோவில் நுழைவாயிலுக்கு எளிதாக வர முடியும். கார், பைக்கில் செல்பவர்கள் ஆலயத்தின் பின் பகுதி வழியாகத்தான் உள்ளே வர முடியும்.
8. ஆலயத்தின் இடது பக்கத்தில் சித்புத் விநாயகர் மற்றும் மாதங்கி சன்னதிகள் உள்ளன. அந்த இரு சன்னதிகளிலும் வழிபட்ட பிறகே பவானி அம்மனை சென்று வணங்க வேண்டும்.
9. மூலவரை சுற்றியுள்ள பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.
10. இத்தலம் அருகிலேயே மிகப்பெரிய புற்றுக்கோவில் உள்ளது. தகர கூரை வரை உயர்ந்து அந்த புற்று வளர்ந்துள்ளது.
11. இத்தலத்தில் ஆங்காங்கே பாம்பு நடமாடுவது சகஜமான ஒன்று. ஆனால் அந்த சர்ப்பங்கள் யாரையும் தீண்டியதே இல்லை.
12. புற்று கோவிலில் இருந்து தினமும் இரவு பவானியம்மன் கருவறைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு வந்து செல்வதாக சொல்கிறார்கள்.
13. தினமும் காலை பூஜைக்காக கருவறை கதவை திறக்கும் முன்பு 4, 5 தடவை கதவை தட்டி விட்டு சிறிது நேரம் கழித்தே அர்ச்சகர்கள் நடையைத் திறப்பார்கள். சர்ப்பம் உள்ளே இருந்தால் சென்று விடும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.
14. பவானி ஆலய நாகவழிபாட்டை வலியுறுத்தும் வகையில் கோவில் பிரகாரங்களில் சர்ப்பம் சிலைகளும் நாகதேவதை சிலைகளும் செதுக்கப்பட் டுள்ளன.
15. பெரியபாளையம் ஆலய வழிபாடுகளில் மிக முக்கியமானது வேப்பஞ்சேலை பிரார்த்தனை வழிபாடுதான். நூற்றுக்கு 50 பக்தர்கள் வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்கிறார்கள்.
16. செவ்வாய், வெள்ளி என்ற கணக்கு இல்லாமல் தினமும் இங்கு வேப்பஞ்சேலை வழிபாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.
17. பெரியபாளையம் தலத்தின் விருட்சம் வேப்பமரமாகும். கோவில் உட்பிரகாரத்தில் இத்தல விருட்சம் உள்ளது.
18. பெரியபாளையம் கோவிலில் கொடி மரம் கிடையாது. அதற்கு பதில் சக்தி மண்டபம் உள்ளது.
19. மற்ற கோவில்களில் விழா தொடங்கி விட்டால் அதன் அடையாளமாக கொடியேற்றம் நடைபெறும். இந்த தலத்தில் சக்தி மண்டபத்தில் பந்தகால் நாட்டுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
20. பவானி அம்மன் நேர் பார்வையில் நுழைவாயில் அருகே சக்தி மண்டபம் உள்ளது.
21. சக்தி மண்டபம் அருகில்தான் திருஷ்டி பரிகார பூஜைகள் அனைத்தும் நடைபெறுகின்றன.
22. சக்தி மண்டபம் அருகில் உள்ள மரத்தில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும். தொட்டில் வாங்கி கட்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
23. இத்தலத்தில் சுயம்புக்கு காலை 8 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணி ஆகிய 3 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது.
24. கோவில் கருவறை முகப்பில் சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் தங்கையே இங்கு தெய்வம்சமாக இருப்பதால் அப்படி செதுக்கப்பட்டுள்ளது.
25. இத்தலத்தில் சுயம்பு மீது பூசப்பட்டு எடுத்துத் தரப்படும் மஞ்சளுக்கு அதிக மகிமை உண்டு.
26. அந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து தீர்த்தமாக அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகி விடும்.
27. அந்த மஞ்சளை கொஞ்சம் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு, வெளியில் செல்லும் போது பூசிச் சென்றால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
28. பெரியபாளையம் அம்மனுக்கு நிறைய மஞ்சள் பூசி பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வது என்றால் பிரியம் அதிகம். எனவே அர்ச்சகர் தினமும் அன்னைக்கு நிறைய சந்தனம் பயன்படுத்தி அலங்காரம் செய்கிறார்.
29. பவானி அம்மன் சுயம்பு மஞ்சளை இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களும் வந்து பெற்று சென்று பயன் அடைகிறார்கள்.
30. பவானி அம்மனுக்கு தினமும் 3 தடவை அபிஷேகம் முடிந்ததும் மஞ்சள் பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.
31. ஆடி விழாவில் 10-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை சுயம்பு மீது சூரிய ஒளிபடும். அந்த சமயத்தில் மின் விளக்குகளை அனைத்து விட்டு சூரிய ஒளி வழிபாட்டை பக்தர்களை காண செய்கிறார்கள்.
32. கோவில் வளாகத்தில் துலாபாரம் கொடுக்கும் வசதி உள்ளது.
33. ஆடி விழாவின் 6-வது, 7-வது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடலோரப் பகுதி மீனவர்கள் திரண்டு வந்து பவானி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
34. பெரியபாளையம் கோவிலுக்கு தினமும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.
35. விழா நாட்களில் பவானி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும்.
36. உண்டியலில் பணம் மட்டுமின்றி தாலியையும் பெண்கள் கழற்றி போடுகிறார்கள். கை, கால் போன்ற வெள்ளி உறுப்புகளையும் வாங்கி செலுத்து கிறார்கள்.
37. முகூர்த்த நாட்களில் இத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. அதற்கு வசதியாக கோவில் வளாகத்துக்குள்ளேயே திருமண மண்டபம் உள்ளது.
38. இத்தல தீர்த்தம் சக்தி வாய்ந்தது. எனவே வர முடியாத நோயாளிகளுக்காக இத்தல தீர்த்தத்தை பாட்டில்களில் வாங்கி செல்கிறார்கள்.
39. இத்தல தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
40. இத்தலம் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.
41. ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். அன்று எப்போது வேண்டுமானாலும் சென்று வழிபடலாம்.
42. ஆடி மாதம் விழாவின் 14-வது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருக்கும்.
43.பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் மிகச் சிறந்த பிரார்த்தனை தலம் மட்டுமின்றி பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
44. ஆடி விழாவில் பங்கேற்க மாட்டு வண்டி கட்டி, தொலை தூரங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வரும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது.
45. பவானி அம்மனை குலதெய்வமாக வழிபடுபவர்கள் பெரியபாளையத்தில் குறைந்த பட்சம் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடு செய்கிறார்கள்.
46. ஆரணியாற்றில் குடில் அமைத்து தங்கும் பக்தர்கள் ஆடு, கோழிகளை படையலிட்டு சாப்பிட்டு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
47. ஒரு குடும்பத்தில் உள்ள சகோதர- சகோதரிகள் அனைவரும் ஒன்றாக பெரியபாளையத்தம்மனை வணங்க வருவதால் இங்கு குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
48. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழிபாதை தலங்களில் ஒன்றாக பெரியபாளையம் இருந்துள்ளது.
49. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
50. தைப்பூசம் தினத்தன்று ஆரணியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அன்னைக்கு அபிஷேகம் செய்வார்கள்.
- ஆடித்திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
- பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.
தமிழ்நாட்டில் எந்த கோவிலிலும் இல்லாத வகையில், பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித் திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
இந்த 3 மாத காலக்கட்டத்தில் 15 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இந்த கிழமைகளில் ஒவ்வொரு வகை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.
இது தவிர பெரியபாளையம் கோவிலில் 15 ஞாயிற்றுக்கிழமையும் அம்மனின் ஜோதி தரிசனம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இது பெரியபாளையம் கோவிலில் மட்டுமே நடைபெறும் பிரத்தியேக ஆடி சிறப்பு வழிபாடாகும்.
பாளையத்தம்மனை ஜோதி ஒளியில் வழிபடுவதே இதன் முக்கிய அம்சமாகும். அந்த சமயங்களில் பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சிக் கொடுப்பதாக ஐதீகம்.
ஆடித் திருவிழாவின் சனிக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு இந்த ஜோதி தரிசன நிகழ்ச்சித் தொடங்கும். முதலில் பாளையத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.
அதன்பிறகு திரையிடப்பட்டு அம்மனை அலங்கரிப்பார்கள். வித, விதமான பூக்களால் புஷ்ப அலங்காரம் செய்வார்கள்.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு நைவேத்தியம் படைக்கப்படும். இவை அனைத்தும் முடிந்ததும் ஜோதி தரிசனம் தொடங்கும்.
அம்மனுக்கு மொத்தம் 16 வகை தீபாரதனைகள் காட்டப்படும். ஒவ்வொரு தீபராதனையின் போதும் பாளையத்தம்மன் ஒவ்வொரு விதமாக ஜொலித்து நமக்குக் காட்சி கொடுப்பாள். அந்த திருக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
16 வகை தீபாரதனை முடிந்ததும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மீண்டும் நைவேத்தியம் படைக்கப்படும்.
அத்துடன் ஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். இறுதியில் வந்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை இவை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜோதி தரிசனத்தின் சிறப்பு என்னவென்றால் இது பெரியபாளையம் கோவிலில் ஆடி பெருவிழா நடக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். மற்ற மாதங்களில் இத்தகைய தரிசனம் கிடையாது.
எனவே இந்த ஆண்டு ஜோதி தரிசனத்தை தவற விட்டு விட்டால், இனி அடுத்த ஆண்டு வரும் ஆடிப் பெருவிழாவில்தான் பாளையத்தம்மனை ஜோதியாக தரிசனம் செய்ய முடியும்.
சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கியமை அதிகாலை 3 மணி வரை ஜோதி தரிசன பூஜைகள் நடக்கும் என்பதால் வெளியூர்களில் இருந்து பெரியபாளையத்துக்கு வரும் பக்தர்கள் அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொண்டு வருவது நல்லது.
கோவில் நிர்வாகம் சார்பில் இந்த ஜோதி தரிசன வழிபாட்டுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இது தொடர்பான மேலும் தகவல்களை கோவில் அலுவலகத்தை 044-27927177 மற்றும் 9444487487 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
- கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் புகழ்பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்தும் சிலர் போலியாக டோக்கன் அச்சடித்து வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது போலி ரசீது மூலம் பணம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சேர்ந்த சூர்யா(28), தாராட்சி கிராமம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர்களுடன் இருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். மேலும் பிடிப்பட்ட இருவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சென்று ராக்கெட் லாஞ்சர் குண்டை ஆய்வு செய்தனர்
- இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நிலத்தை தோண்டியபோது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் ஒன்றை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த ராக்கெட் லாஞ்சர் குண்டை ஆய்வு செய்தனர். அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது எப்படி இங்கு வந்தது இதன் சக்தி என்ன என்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும், இப்பகுதியில் இன்னும் இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். இதன் பின்னர், வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என கூறிவிட்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டை பத்திரமாக கொண்டு சென்றனர். அதனைத் திருவள்ளூர் அருகே கொண்டு சென்று செயலிழக்க செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர். இச்சம்பவம் இப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.