என் மலர்
நீங்கள் தேடியது "ayyanar"
- பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
- ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட குணமங்கலம் ஊரின் ஏரிக்கரையில் பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக ஐயனார் வடிக்கப்பட்டுள்ளது. தலையின் உச்சியில் குமிழுடன் கூடிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீளமான காதுகளில் பத்ர குண்டலமும், வட்டமான முகத்தில் மீசையுடன் கழுத்தில் பட்டையான சரப்பளியை அணிகலனாக அணிந்து காட்சி தரும் ஐயனார், உத்குதிகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்து தனது இடது கையை பீடத்தின் மீது ஊன்றியும், வலது கையை காலின் மீது வைத்து தொங்கவிட்ட நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
தோளிலிருந்து வலது காலைச் சுற்றி யோக பட்டையுடன், இடையாடை உடுத்தி அதில் குறுவாள் ஒன்றைச் சொருகி அமர்ந்துள்ள ஐயனாரின் கால்களின் அருகே ஆடும், நாயும் காட்டப்பட்டுள்ளது. மேலும் வலது காலருகே ஒரு நீர் குடுவையும், நாயின் அருகே ஒரு நீர் குடுவையும் காட்சிப் படுத்தபட்டுள்ள நிலையில், இடது தொடை அருகே சேவல் ஒன்று காட்டப்பட்டுள்ளது.
ஐயனாரின் மேற்புற வலது பக்கத்தில் குதிரையும் இடது பக்கத்தில் சாமரம் வீசும் பணிப் பெண்ணும், அதன் அருகே மிகவும் சிதைந்து நிலையில் வணங்கிய நிலையில் ஒரு உருவமும் காட்டப்பட்டுள்ளது.
இதுவரை விழுப்புரம் பகுதியை ஒட்டி ஏராளமான பல்லவர் கால ஐயனார் சிற்பங்கள் ஆவணம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆடை , அணிகலன் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ஐயனார் என்பது உறுதியாகிறது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இச்சிற்பம் இன்றும் வழிபாட்டில் சிறப்புடன் இருந்து வருகிறது.
- சுமார் 45 பணியாளர்கள் 7 நாட்களாக இதை தயாரித்து வருகின்றனர்.
- இந்த பிரமாண்ட வடக்கயிறு சுமார் இரண்டரை டன் எடை கொண்டது.
சிங்கம்புணரி பகுதியில் தென்னை அதிகளவு பயிரிடப்படுவதால் இந்த பகுதியில் தென்னை நார்களை கொண்டு கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சாரம் கட்டுவதற்காக கொச்சை கயிறு, விவசாயத்துக்கு தேவைப்படும் நாத்து கட்டும் கயிறு உள்ளிட்ட கயிறுகள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் உடைய பராசக்தி கோவில் தேருக்காக 170 அடி நீளமும், 12 இன்ச் சுற்றளவு கொண்ட பிரமாண்ட வடக்கயிறு தயாரிக்கும் பணி சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் வளாகப் பகுதியில் தொடங்கி நடைபெற்றது. சுமார் 45 பணியாளர்கள் 7 நாட்களாக இதை தயாரித்து வருகின்றனர்.
இந்த பிரமாண்ட வடக்கயிறு சுமார் இரண்டரை டன் எடை கொண்டது. தென் தமிழகத்திலேயே சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் இந்த தேர் வடக்கயிரானது முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுவதாகும். தென்னை தேங்காய் மட்டைகளிலிருந்து நார் உறித்து பக்குவம் செய்து கயிறாக திரித்து பின் வடக்கயிராக தயாரிக்கப்படுகிறது.
இதுகுறித்து கயிறு தயாரிப்பாளர் நல்லதம்பி கூறும்போது, இறைவன் திருப்பணியில் எங்கள் குடும்பத்தார்கள் நான்கு தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர் வடக்கயிறு என்பது இறைவனுக்கு செய்யும் தொண்டாகவே நினைத்து நாங்கள் பணிபுரிந்து வருகின்றோம். தேர் வடக்கயிறு தயாரிக்கும் போது தயாரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மாமிசம் உண்ணாமல் கடுமையான விரதம் இருந்து தேர் வடக்கயிறு தயார் செய்யும் பணியில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
- பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது
சாயல்குடி சிறை மீட்ட நிறைகுளத்து அய்யனார் வன்னியராய சுவாமி கருப்பணசாமி கோவில் புரவி எடுப்பு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். சாயல்குடி யாதவ மகாசபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
நேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்த பெண்களும் ஆண்களும் சாயல்குடி ராமநாதபுரம் சாலை வழியாக ஊர்வலமாக குதிரை மற்றும் தவளும் பிள்ளை உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சுவாமி பொம்மைகளை எடுத்து நகர் வலமாக வந்து அய்யனார் கோவிலை வந்தடைந்தனர். பின்பு வாணவேடிக்கையுடன் பொங்கல் பானை எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், சாயல்குடி யாதவ மகா சபை நிர்வாகிகள் மற்றும் சாயல்குடி யாதவ இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
- விழா வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறவுள்ளது.
- 6-ந்தேதி புரவி பொட்டலுக்கு முறைப்படி கொண்டு செல்லப்படுகிறது.
சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத்தலைவி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழாவையொட்டி புரவி எடுப்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக புரவிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து செகுட்டு அய்யனார் கோவில் கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில், புரவி எடுப்பு விழாவிற்காக கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி குயவர்களிடம் புரவிகள் செய்ய பிடி மண் வழங்கப்பட்டது. 30 குயவர்கள் புரவி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 2 அரண்மனை புரவிகள் மற்றும் 280 நேர்த்திக்கடன் புரவிகள் என 282 புரவிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 20 புரவிகள் செய்யப்பட்டு வருகிறது.
செகுட்டு அய்யனார் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடன் புரவிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தென் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு எம்.சூரக்குடியில் 282 புரவிகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட உள்ளது. மேலும் சுமார் 20 அடி உயரம் கொண்ட அரண்மனை புரவிகளை தூக்குவதற்கான பிரமாண்டமான தூண்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார். குயவர் மணிகண்டன் கூறுகையில், முறையாக புரவிகள் தயாரிக்கப்படுவதற்காக 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் விரதம் இருந்து மண் எடுத்து புரவிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தயாரித்து வைக்கப்படும் புரவிகள் கை, கால்கள், தலை போன்றவை தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டு குதிரை பொட்டலில் சூலை வைத்து எரியூட்டி காய வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து குதிரை பொட்டலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தலை ஒட்டப்பட்டு வர்ணம் பூசும் பணி தொடர்ந்து நடைபெறும்.
குதிரைப் பொட்டலில் இருந்து கிராமத்தார்கள் சார்பிலும் நேர்த்திக்கடன் பக்தர்கள் சார்பிலும் 6-ந் தேதி புரவி பொட்டலுக்கு முறைப்படி கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து புரவி பொட்டலில் முறையாக பூஜை செய்யப்பட்டு புரவி பொட்டலில் இருந்து கோவிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.
- 29-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 30-ந்தேதி கழுவன் திருவிழா நடக்கிறது.
சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் வரும் விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றதால் இந்தாண்டு நாளை ஆனி மாதத்தில் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்குகிறது. முன்னதாக கடந்த 15-ந்தேதி இரவு சுவாமி சந்திவீரன் கூடத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை முதல் நிகழ்ச்சியாக கடந்த 15-ந் தேதி இரவு சந்திவீரன் கூடத்திற்கு வைகாசி திருவிழா காணிக்கை வாங்க சென்றதாக கூறப்படும் நிகழ்ச்சிக்காக சென்ற வெண்கல விநாயகர் வெள்ளி சப்பரத்தில் திருவிழாவிற்கான வசூல் முடிவுற்று கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. வெண்கல விநாயகர் சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலையில் வெண்கல விநாயகர், அம்பாள், சேவுகப் பெருமாள் அய்யனார் உற்சவமூர்த்திகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் முன்பு உள்ள பிரமாண்டமான கொடிமரத்தின் முன்பு சிவாச்சாரியாருக்கான காப்பு செல்வமணி சிவாச்சாரியாருக்கும், பூஜகருக்கான காப்பு சேவுகமூர்த்தி பூஜகர்க்கும் கட்டப்பட்டது. இதையடுத்து பிடாரியம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் சின்னையா, கதிரேசன், அருணகிரி, சேதுராமலிங்கம், செந்தில் கணேசன், சேவற்கொடியோன், கணேசன் உள்ளிட்ட வேளார் வம்சாவளி சிவாச்சாரியார்களுடன் கோவில் பரம்பரை பூஜகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் 29-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 30-ந்தேதி கழுவன் திருவிழாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 3-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், தேர் நிலையை வந்தடைந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
4-ந் தேதி 10-ம் நாள் திருவிழா அன்று நள்ளிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்தரவுக்கிணங்க தேவஸ்தான அதிகாரி தன்னாயிரம், சிங்கம்புணரி கிராமத்தார்கள், அடைக்கலம் காத்த நாட்டார்கள், கோவில் பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள், பூஜகர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
- 29-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்பட்ட பிரசித்தி பெற்ற சேவகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கல தேவியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவில் 9-ம் நாளன்று நடைபெறும் தேரோட்ட விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு கோவில் திருவிழா ஆனி மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 15-ந் தேதி இரவு சுவாமி சந்திவீரன் கூடத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை காலை முதல் நிகழ்வாக சந்திவீரன் கூடத்திற்கு வைகாசி திருவிழா காணிக்கை வாங்க சென்றதாக கூறப்படும் வெண்கல விநாயகர் வெள்ளி சப்பரத்தில் திருவிழாவிற்கான வசூல் முடிவுற்று கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. வெண்கல விநாயகர் சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் எழுந்தருளல் நிகழ்ச்சியை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 5-ம் நாள் திருவிழாவான வரும் 29-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி, 30-ந் தேதி கழுவன் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் ஜூலை மாதம் 3-ந் தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவுக்கிணங்க தேவஸ்தான அதிகாரி தன்னாயிரம், சிங்கம்புணரி கிராமத்தார்கள், அடைக்கலம் காத்த நாட்டார்கள், கோவில் பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள், பூஜகர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
- யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன.
- மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவகப் பெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகளை கொண்டு நாமம், ஓம், சிவலிங்கம் வடிவிலும் மற்றும் மலர்கள் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் மண்டல பூஜை நடந்தது. திருப்பணி குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி தலைமையில் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலையில் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.
இதில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பூர்ணா குதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வலம்புரி சங்குகளில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு மூலவர் சேவகப் பெருமாள் அய்யனார், சுயம்பு லிங்கேஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், பிடாரியம்மன் போன்ற கோவில் சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் சுமந்து கொண்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சேவகபெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் கும்பத்தில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கிராமத்தின் சார்பிலும், அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பிலும் அன்னதான விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் திருப்பணி குழு தலைவர் ராம அருணகிரி, , அடைக்கலம் காத்த நாட்டார்கள் சிங்கம்புணரி கிராமத்தார்கள், பரம்பரை ஸ்தானியம் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
- புரவிகள் அனைத்தும் இன்று கருக்குமடை அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
- காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள படைத்தலைவி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை பால் குட ஊர்வலம் நடைபெற்றது. எஸ்.எஸ்.கோட்டை சீனி விநாயகர் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து படைத்தலைவி அம்மன் கோவிலை அடைந்தனர்.
அங்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சியா முத்துப்பட்டி வேளார் வம்சாவளி கோவில் வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை சியாமுத்துப்பட்டி வேளார் வம்சாவளி கோவில் வீட்டிலிருந்து கிராமத்தார்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு படைத்தலைவி அம்மன் கோவிலில் சேர்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சியாமுத்துப்பட்டியில் உள்ள கருக்குமடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவிற்காக படைத்தலைவி அம்மன் கோவில் அருகே உள்ள குதிரை பொட்டலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேளார் வம்சாவளி குயவர்களிடம் பிடிமண் கொடுக்கப்பட்டு இரண்டு அரண்மனை புரவிகள், 6 காரனகாரர்கள் புரவி மற்றும் ஒரு நேர்த்திக்கடன் புரவிகள் என மொத்தம் 9 புரவிகள் குதிரை பொட்டலில் தயாரானது.
தயாராக இருந்த 9 புரவிகளை கிராமத்தார்கள் சாமியாடிகள் உத்தரவு பிறப்பித்தவுடன் அதனை சுமந்து கொண்டு குதிரை பொட்டலில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக எஸ்.எஸ்.கோட்டை புரவி பொட்டலுக்கு சென்றடைந்தனர். எஸ்.எஸ். கோட்டை சீனிவிநாயகர் கோவிலில் இருந்து சியாமுத்துப்பட்டி படைத்தலைவி அம்மன் கோவிலுக்கு இரவு 9 மணிக்கு பூத்தட்டு எடுத்து வரும் விழா நடைபெற்றது. புரவி பொட்டலில் வைக்கப்பட்ட புரவிகள் அனைத்தும் இன்று மாலை கருக்குமடை அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ். கோட்டை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கணக்கபிள்ளைவலசை கிராமத்தில் அமைந்துள்ள குளத்தூர் அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் மற்றும் விவேகானந்த கேந்திரம் சார்பில் நாடு செழிக்கவும், மழை வேண்டியும் உலக மக்கள் நோய் நொடியிலிருந்து விடுபவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக குளத்தூர் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. கேந்திர மூத்த தொணடர்களான சகோதரிகள் செல்வி, குமாரி, அகிலா, வனராணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் திருவிளக்கினை ஏற்றி வழிபாடினை நடத்தினர்.
அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 208 பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடினை நடத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கிராமத்தார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பெண்களுக்கு மாங்கல்ய கயிறு வழங்கப்பட்டு மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டனர்.
சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பூரண புஷ்கலை உடனாகிய சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா 21 ஆண்டுகளுக்கு பின் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால பூஜை, பூர்ணா குதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்பணிக்குழு தலைவர் ராம அருணகிரி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அன்று மாலை பூரண புஷ்கலை உடனாகிய சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் மலர் மாலைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் அமர்த்தப்பட்டனர்.
அடைக்கலம் காத்த நாட்டார்கள், சிங்கம்புணரி கிராமத்தார்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமண வைபோக நிகழ்ச்சியை 15-க்கும் மேற்பட்ட பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். முன்னதாக சுவாமிக்கு மாலை மாற்றும் வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். நிகழ்ச்சியின்போது பெண்களுக்கு மாங்கல்ய கயிறு வழங்கப்பட்டு மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டனர்.
இரவு பல்வேறு அமைப்புகள், கிராமத்தார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிங்கம்புணரி அக்னி சிறகுகள் சார்பில் தனியார் தொலைக்காட்சி புகழ், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி அடைக்கலம் காத்த நாட்டார்கள் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
- இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- சுமார் 16 ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. பண்டைய சோழ பாண்டிய நாடுகளின் எல்லை நகரமாக விளங்கிய சிங்கம்புணரியில் அமைந்துள்ள இக்கோவிலில் சைவமும், வைணவமும் சங்கமிக்கும் சிறப்பு பெற்றதாகவும் உள்ளது. இப்பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்கு பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. சுமார் 16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் சிங்கம்பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகர், நவக்கிரகங்களுக்கு தனி கருவறைகளும், தனி விமானங்களும் அமைந்துள்ளது.
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இங்குள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 5-வது நாள் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும், 6-வது நாள் திருவிழாவின் போது நடைபெறும் கழுவன் திருவிழாவும், 9-ம் நாள் நடைபெறும் தேர்த்திருவிழாவும், 10-ம் நாள் நடைபெறும் பூப்பல்லக்கு உற்சவமும் இக்கோவிலுக்கு மட்டுமல்ல சிங்கம்புணரி நகருக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.
அதிலும் தேர்த்திருவிழா அன்று சுற்று வட்டார 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டு வடம் பிடிக்கும் அழகே தனிதான். குறிப்பாக தேர் நிலையை வந்தடைந்ததும் லட்சக்கணக்கான தேங்காய்களை தேரடி படிக்கட்டுகளில் பக்தர்கள் வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் இக்கோவிலில் நடைபெறும் மற்றொரு மணிமகுட விழாவாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்கள் இக்கோவில் திருவிழா நாட்களில் தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய முடிவுகள் எடுக்கும் சந்தி வீரன் கூடம்
இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராசன், சேவுகன், சேதுபதி என பல்வேறு திருநாமங்களில் போற்றப்பட்டு வருகிறார். அரிஹர புத்திரராக விளங்கும் இந்த சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள் என்னும் பெயர் கொண்ட போதிலும் சைவ கடவுளாகவே போற்றப்பட்டு வருகிறார்.
கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டு அந்த மாடுகள் இந்த பகுதியில் உள்ள வீதிகளில் சுற்றி வரும்போது அந்த மாட்டிற்கு பழம், உணவுகளை அப்பகுதி மக்கள் பாசத்துடன் கொடுப்பது வழக்கம். சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏதும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தால் இந்த கோவில் காளைகளுக்குதான் முதல் மரியாதை செலுத்தப்படுவது இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.
இவ்வாறு நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் மாடுகள் கோசாலை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சிங்கம்புணரியில் உள்ள சந்திவீரன் கூடத்தில் சேவுகபெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக உள்ளார். இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடத்தும் பொருட்டு மக்களிடம் காணிக்கை பெற கிராமத்திற்கு வரும் உற்சவ விநாயகர் இங்குள்ள சந்திவீரன் கூடத்தில் 10 நாட்கள் தங்கியிருப்பார்.
அந்த 10 நாட்களும் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்வேத்தியம் கொண்டு விநாயகருக்கு படையல் படைக்கப்படும். பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் கோவிலுக்கு விநாயகர் திரும்பியவுடன் திருவிழா முறைப்படி தொடங்கும். இந்த கூடத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் 10 நாட்களும் அவருடன் சேவுகபெருமாளும் தங்கியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.
மற்ற நாட்களில் இந்த கூடத்திற்கு வரும் பக்தர்கள் சேவுகமூர்த்தியை மட்டும் வணங்குவார்கள். சந்திவீரன் கூடத்தில் கிராமத்தினர் ஒன்றாக கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும் இடமாகவும் உள்ளது. இங்கு உருவமற்ற சொருபமாய் விளங்கும் சேவுகபெருமாள் முன்னிலையில்தான் வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படும். அப்போதுதான் பொய் சொல்லமாட்டார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் பக்தர்களின் பங்களிப்புடன் தற்போது தங்க கோவிலாக மாறி உள்ளது. இக்கோவிலில் உள்ள சேவுகப்பெருமாளை குலதெய்வமாக வணங்கும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் பக்தர்களின் சார்பில் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நன்கொடைகள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.
தங்கமாக ஜொலிக்கும் கோவில்
இக்கோவிலில் வெள்ளி தேர் செய்ய பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வெள்ளியை உபயமாக வழங்கி வெள்ளி தேர் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கும் வெள்ளி தகடும் பதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டகபடிதாரர்கள் சார்பில் கோவிலில் உள்ள அனைத்து உற்சவ வாகனங்களுக்கும் வெள்ளி தகடு பதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பணிக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம.அருணகிரியின் முயற்சியின் காரணமாக கோவிலில் உள்ள 5 மூலஸ்தான விமானங்களுக்கும் தங்கத்தகடும், கோவில் கொடிமரத்திற்கு தங்க தகடும் பதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அடைக்கலம் காத்த அய்யனார் விமானம், ராஜகோபுர கலசங்கள் ஆகியவற்றிக்கும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு தங்க கோவிலாக காட்சியளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் முன்பு உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டு புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த அய்யனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணம் பூச்சுகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த 1973 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.
- இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.
- இந்த கோவில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.
சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் உடனான பூரணை புஷ்கலை தேவியர் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இந்த கோவில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாகவும் சிங்கம்புணரியின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவிற்கு ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் யாக சாலை மண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. நேற்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.ராம அருணகிரி தலைமையில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, கோவில் கண்காணிப்பாளர் தன்னாயிரம், கிராம அம்பலம் சத்தியசீலன், கிராம முக்கியஸ்தர்கள் அடைக்கலம் காத்த நாட்டார்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இதை தொடர்ந்து சேவகப்பெருமாள் உடனான பூரணை புஷ்கலை தேவியாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. தினமும் அன்னதான நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.