என் மலர்
நீங்கள் தேடியது "Minister Ma Subramanian"
- தொலைதூர மனநல சேவை மையம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
- 14416 புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மனநல சேவை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொலைதூர மனநல சேவை மையம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக 14416 புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மனநல ஆற்றுதல் படுத்தும் சேவை, வீடியோ பதிவு ஆலோசனை தொடர்ச்சியான வழிகாட்டு முறைகள் மனநல சேவை வழியாக அளிக்கப்படும்.
ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது.
அதுபோல மன உளைச்சல் கொண்டவர்களுக்கு அதற்கான தீர்வு இதன் மூலம் வழங்கப்படும். இந்த மையத்தில் மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுதல்படுத்துபவர்கள் செயல்படுவார்கள்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை. மருத்துவமனை உரிய ஆவணங்களை மறைத்துள்ளது. அதற்காக அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென்காசி, மயிலாடுதுறை உள்பட 6 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
- சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகளில் முழு உடல் பரிசோதனை செய்ய ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை 3 விதமான கட்டணங்கள் நடைமுறையில் உள்ளது.
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோய், வலி மற்றும் நாள்பட்ட நிவாரண சிகிச்சைக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் ரேடியோ அலைவரிசை சிகிச்சை கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் கருவியையும் வழங்கினார். மாதவிலக்கு நின்ற பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் வழங்க சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ கல்வியை வட மாநிலங்களில் இந்தியில் கற்றுக்கொடுப்பதை போல் தமிழ்நாட்டில் தமிழில் கற்றுக்கொடுப்பதற்காக மருத்துவ பாடங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும்.
அதன்பிறகு கல்வியாளர்கள் ஆலோசனை பெற்று முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்தப்படும்.
தென்காசி, மயிலாடுதுறை உள்பட 6 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகளில் முழு உடல் பரிசோதனை செய்ய ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை 3 விதமான கட்டணங்கள் நடைமுறையில் உள்ளது.
தற்போது ஸ்டான்லி ஆஸ்பத்திரி சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருப்பதால் அவர்கள் பயன்பெறும் வகையில் இனி முழு உடல் பரிசோதனைக்கான கட்டணம் ஸ்டான்லியில் மட்டும் ரூ.1000 மட்டுமே வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒமைக்ரான் தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்தது.
- இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.
சென்னை
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல மனித உயிர்களை பறித்தது. மக்களை கடும் அச்சத்திலும் ஆழ்த்தியது. இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்த தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா தொற்று டெல்டா, ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களாக உருமாறியது. ஒமைக்ரான் தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்தது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.
தற்போது ஒமைக்ரான் பி.எப்.7 என்ற வைரசாக உருப்பெற்றிருப்பதாகவும், இந்த தொற்று வேகமாக பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்று நுழைந்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று உருமாறி எந்த வைரஸ் வடிவில் வந்தாலும் அதனை கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி மாநில அரசுகளிடையே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இந்த கருவி ஒன்றிய அரசு சார்பில் 14 இடங்களில் இருக்கிறது.
கொரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் இருந்தால் அவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரையில் ஒமைக்ரான் பி.எப்.7 தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
தமிழ்நாட்டில் அந்த தொற்று நுழையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் பெய்து வரும் கனமழையையொட்டி அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் பகுதியில் இன்று காலை மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 220 கி.மீ. தூர அளவுக்கு ரூ.710 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. 157 கி.மீ. தூர அளவுக்கு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.
இதுபோன்று பணிகள் முடிவடைந்த பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதற்கு முன்னர் 700 இடங்கள் வரையில் தண்ணீர் தேங்கி காணப்படும். தற்போது 40 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் 9 இடத்தில் மட்டுமே மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் செம்மஞ்சேரி பகுதிகளும் பாதிப்பை சந்தித்து வந்தது. இந்த பாதிப்புகளை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக செம்மஞ்சேரி பகுதியில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. கல்லுக்குட்டை, புழுதிவாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.
ஓரிரு இடங்களில் தேங்கும் மழைநீரும் ½ மணி நேரத்தில் வடிந்து விடுகிறது. கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பணிகள் நடைபெற்றதால் அங்கு இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இங்கு தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஆனால் தற்போது 2 இஞ்ச் அளவுக்கு அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலை மற்றும் பி.டி.ராஜன் சாலை பகுதியில் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டார். இதனால் கால்வாய் ஆக்கிரமிப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 155 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களின் போது மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த முறை மழை பெய்ய தொடங்கிய உடனேயே சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கி இருந்ததை காண முடிந்தது. இதனால் பல சுரங்க பாதைகள் மூடியே கிடந்தன. ஆனால் தற்போது கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டுமே வாகன போக்கு வரத்து தடைபட்டுள்ளது. மற்ற 15 சுரங்க பாதைகளும் எப்போதும் போல செயல்படுகின்றன. மழை பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூரில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சிங்கப்பூரில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் உலக அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவப் பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு சுகாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்.
இந்த மாநாட்டில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை தொடங்கி வைத்து, கொரோனா பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், தொற்று நோய்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், பல்வேறு வைரஸ் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இத்தகைய மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதோடு, தமிழகத்தின் கருத்துகளும் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டது. பேரிடர், புதிய வைரஸ் போன்றவைகள் பரவும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடித்தல், புகை அடித்தல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி, மலேரியா ஒழிப்பு துறை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்து அப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா பரவுகின்றன. அந்த நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக தான், மக்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இதை குறிப்பிட்ட சதவீதத்தினர் கேலி செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக தான் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு, கல்லூரி மாணவியை அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர். அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக்களை பரப்புகின்றனர். இது சரியானது அல்ல.
மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள்.
இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகாரையும் ஒதுக்கி தள்ளாமல், அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- மருத்துவர் தலைமறைவாக இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் நீர்நிலை ஓரங்களில் உள்ள குடும்பங்களுக்கு விலையில்லா கொசுவலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீர்நிலைகள் ஓரம் வசிக்கும் பொதுமக்கள் கொசுக்கடி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் கொசு வலைகள் மாநகராட்சியிடம் கையிருப்பில் உள்ளன. சைதாப்பேட்டையில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கப்படுகிறது.
மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. 55 நாட்களில் 76 லட்சம் பேர் முகாம்கள் மூலம் பயன் அடைந்தனர். காய்ச்சல் முகாம் மூலம் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரையில் 48 ஆயிரம் முகாம்கள் நடந்துள்ளன.
சென்னையை பொறுத்தவரை 3,362 முகாம்கள் நடத்தப்பட்டதில் 2.33 லட்சம் பேர் பரிசோதனை செய்துள்ளனர். டெங்கு, மலேரியா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
டெங்கு காய்ச்சலால் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் தலைமறைவாக இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.
மரண இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. இந்த சம்பவம் கவனக்குறைவாக நடந்துள்ளது என்று நான் விளக்கமாக கூறி உள்ளேன்.
ஆனால் சிலர் இதில் அரசியல் செய்கிறார்கள். குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 150 பேர் உயிரிழந்தனர். அந்த பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனம் கடவுள் விதி என்று கூறியுள்ளது. நாங்கள் அதுபோல கூறவில்லை. கவனக்குறைவாக நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் 20 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். அதில் ஒன்று இரண்டுபேரின் கவனக்குறைவு, அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு ஆயுர்வேதா, கல்லூரி, 2 சித்தா கல்லூரி தலா ஒரு யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன.
- 26 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1660 இடங்கள் உள்ளன.
சென்னை:
ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்பிற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அரசு ஆயுர்வேதா, கல்லூரி, 2 சித்தா கல்லூரி தலா ஒரு யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள் 259-ம் உள்ளன.
26 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1660 இடங்கள் உள்ளன. அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்புக்கு கலந்தாய்வு மூலம் டாக்டர்கள் ஜெயின் ராஜ், கதிரேசன், ரமேஷ், வினோத்குமார், அரவிந்த், ரஞ்சித் நடேஷ் ஆகிய 6 மாணவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, இந்த ஆட்சியில் விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல் மற்றும் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நிதி அறிக்கையில் 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் செயல்பாடுகள் அனைத்துமே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
- குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்த கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.
- 3 முதல் 4 நாட்கள் அலுவலகங்களுக்கு செல்வதையோ, பள்ளிகளுக்கு செல்வதையோ, வணிக வளாகங்களுக்கு செல்வதையோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.
சென்னை:
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்களில் இருக்கிறது.
எழும்பூர் கண்நோய் மருத்துவமனையை போன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என 10 இடங்களில் கண் மருத்துவம் பார்க்கும் மையங்கள் இருக்கிறது.
இதில் எழும்பூரில் இருக்கிற மண்டல கண் மருத்துவயியல் நிலையம் என்பது கண் மருத்துவத்தில் மிக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் நாள்தோறும் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை இந்த நோயினால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் தினமும் 4000 முதல் 4500 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
சென்னையில் 10 கண் நோய் மருத்துவ மையங்கள் இருப்பதை போலவே தமிழ்நாடு முழுவதிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், சில வட்டார அரசு மருத்துவமனைகள் என 90 இடங்களில் அரசு கண் மருத்துவ மையங்கள் இயங்கி வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 1.50 லட்சம் பேரில் யாருக்கும் பார்வை இழப்பு என்ற பாதிப்பு இல்லை.
இந்த பாதிப்பு கண்ணின் முன் பகுதியான வெள்ளைப்படலத்தில் வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு கண்நோய் ஆகும். இந்த வைரஸ் என்பது மண்டல கண் மருத்துவவியல் நிலையத்தின் சார்பில் அதன் மாதிரிகளை எடுத்து கிண்டியில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தில் பரிசோதனைக்கு பிறகு அடினோ மற்றும் என்ரோ என்று சொல்லக்கூடிய வைரஸ் தாக்குதலினால் மெட்ராஸ் ஐ வருகிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.
இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இது எப்படி உறுதி செய்யப்படுகிறது என்றால் கண்ணில் உறுத்தல் இருக்கும். சிவந்த நிறமாக மாறும். அதிக கண்ணீர் சுரக்கும். அரிப்பு ஏற்படும். கண் வீங்கும். கண்ணில் அடிக்கடி அழுக்கு சேரும். கண் இமைகள் ஒட்டிக்கொள்ளும். இவைதான் மெட்ராஸ் ஐ அறிகுறிகள் ஆகும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கைகளினால் தொடுவது கூடாது. கண்களை தொட்டு விட்டு அக்கம் பக்கம் இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் அந்த பாதிப்பை ஏற்படுத்தும். இது எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் ஆகும்.
எனவே குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்த கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. 3 முதல் 4 நாட்கள் அலுவலகங்களுக்கு செல்வதையோ, பள்ளிகளுக்கு செல்வதையோ, வணிக வளாகங்களுக்கு செல்வதையோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.
இது விரைவாக பரவும் தன்மையுடையது என்பதால் மற்றவர்களுக்கும் இந்நோய் பாதிப்பு உடனடியாக வரும். எனவே இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண் சொட்டு மருந்தை தாங்களாகவே கடையில் வாங்கி போட்டுக்கொள்ளக்கூடாது.
சுய சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. முறையாக கண் மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையினை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
கண்நோய்க்கு போடப்படும் மருந்தின் தன்மை, வீரியம் போன்றவைகள் ஒவ்வொரு மருந்துக்கும், நோயின் பாதிப்பு தன்மைக்கு ஏற்பவும் மாறுபடும். எனவே கடையில் போய் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி போட்டுக் கொள்வதன் மூலம் தங்களுடைய கருவிழிகள் பாதிப்புக்கு உள்ளாகும். பார்வை இழப்பும் ஏற்படும்.
எனவே மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை போட்டுக் கொள்ளக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கண்நோய் ஏற்பட்டால் அவர்களுக்காக வாங்கும் சொட்டு மருந்து பாட்டிலை வேறு ஒருவருக்கு பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன.
- திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு அவசர சிகிச்சை படுக்கைள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
மேலும், 32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
அமைச்சர் மா.சுப்ரமணியன், காலையில் ஜாக்கிங் செல்லும் போது, கல்லணை அருகே உத்தமர் சீலி கிராமத்தில் வீடு, வீடாக சென்று 'மக்களை தேடி மருத்துவம்' வந்து சேர்ந்ததா? என்று ஆய்வு செய்திருக்கிறார். தனது துறையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். திருச்சிக்கு இரண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொடுத்துள்ளார். திருச்சிக்கு அரசு பல் மருத்துவமனை ஒன்று வேண்டும். அதை, நிதி நிழல் அறிக்கையில் மட்டும் நீங்கள் (அமைச்சர்) சேருங்கள். நிதியை நான் முதல்வரிடம் கேட்டுப்பெற்றுக்கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணம், இரு மருத்துவர்கள் என்று அறிக்கை வந்தவுடன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 540 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது. அறுவை சிசிச்சை அறை முன்பு, 'செக் லிஸ்ட் போர்டுகளை' வைத்துள்ளோம். இதன் மூலம் மருத்துவத் தவறுகள் குறையும்.
விரைவில், 1,649 அறுவை சிகிச்சை அரங்கு முன்பு செக் லிஸ்ட் போர்டு வைக்கப்படும். இதுபோன்ற ஏற்பாடு இந்தியாவில் இதுவே முதல்முறை. தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன. திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு அவசர சிகிச்சை படுக்கைள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான தொடு உணர்வு சிகிச்சை பூங்கா தொடங்கிவைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் காது கேட்கும் திறனற்ற 88 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
திருச்சியில் அரசு பல் மருத்துவமனை நிதி நிழல் அறிக்கையில் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியும் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் புதிதாக 708 நகர்நல வாழ்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் நமது அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியால் திருச்சியில் மட்டும் 36 மையங்கள் அமைய இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- வார்டு மற்றும் சுற்றுப்புறங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
- ஆஸ்பத்திரியை முறையாக கண்காணிக்க தவறிய செங்கல்பட்டு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமாமணியை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
சென்னை:
அமைச்சர் ஆய்வுக்கு செல்லும்போது முன்கூட்டியே தகவல் கொடுத்து சென்றால் வாசல்களில் கோலம் போட்டு, வாசனை திரவியங்கள் தெளித்து சுற்றுப்பகுதியை மணக்க வைத்து அமைச்சர்களை உற்சாகமாக வரவேற்பார்கள். எந்த குறையும் கண்டு பிடிக்க முடியாதபடி அமைச்சர்களும் மனநிறைவோடு திரும்பி விடுவார்கள்.
திடீரென்று சென்றால்தான் உள்ளே இருக்கும் பிரச்சினைகள் வெளியே தெரியும். இந்த மாதிரி திடீர் ஆய்வுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார்.
இன்று திருவண்ணாமலையில் அரசு ஆஸ்பத்திரியில் கட்டட திறப்பு விழா நடந்தது. அதற்காக காரில் சென்ற அமைச்சர் மதுராந்தகத்தில் அரசு ஆஸ்பத்திரியை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு திடீரென்று ஆஸ்பத்திரிக்குள் சென்றார். உடனடியாக மருத்துவர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.
அப்போது 4 மருத்துவர்கள் வராதது தெரிய வந்தது. அதை குறித்து வைத்து விட்டு வார்டுகளுக்குள் வேகமாக சென்றார். அங்கு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியிடமும் மருத்துவர்கள் வருகிறார்களா?
சரியாக கவனிக்கிறார்களா? என்று கேட்டுக்கொண்டார். வார்டு மற்றும் சுற்றுப்புறங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதையும் பார்வையிட்டார்.
பின்னர் அந்த ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி அறைக்கு சென்று பணியில் இல்லாத மகப்பேறு மருத்துவர் மிர்லின், மயக்கவியல் துறை மருத்துவர் பிரபா வடிவுக்கரசி, எலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷா பாலாஜி, தொண்டை, காது, மூக்கு சிறப்பு மருத்துவர் கிரத்திகா ஆகியோர் ஏன் பணியில் இல்லை? பணிக்கு வராவிட்டால் லீவுக்கான கடிதம் எங்கே? என்று கேட்டார். அதற்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் அவர்கள் பணிக்கு வராதது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 17 பி மெயே கொடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த ஆஸ்பத்திரியை முறையாக கண்காணிக்க தவறிய செங்கல்பட்டு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமாமணியை உடனடியாக இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த ஆஸ்பத்திரியில் மாதம் 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு நடக்கிறது. மக்கள் அரசு ஆஸ்பத்திரி மீது நம்பிக்கை வைத்து வருகிறார்கள். மருத்துவ சேவைக்காக 16 டாக்டர்கள் நியமித்து அரசு சம்பளம் வழங்குகிறது. ஆனால் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடும் கோபத்தில் எச்சரித்தார். நாங்கள் ஆய்வு செய்வதை விட நீங்கள் மன சாட்சியோடு பணியாற்றுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
- கிண்டியில் ரூ.230 கோடி செலவில் புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணியை கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிண்டியில் ரூ.230 கோடி செலவில் புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணியை கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5.50 லட்சம் சதுர அடியில் 7 தளங்களுடன் 1000 படுக்கை வசதிகளுடன் இந்த ஆஸ்பத்திரி கட்டப்படுகிறது. வருகிற 2023 செப்டம்பர் மாதம் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த பணியை விரைவுபடுத்த கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதன் விளைவாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிற ஜூன் மாதம் இந்த ஆஸ்பத்திரி திறக்கப்படும்.
கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது. அனைத்து நவீன வசதிகளுடன் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இந்த ஆஸ்பத்திரி உதவிகரமாக இருக்கும்.
அதே போல் இந்த வளாகத்தில் முதியோருக்காக தனியாக ஒரு ஆஸ்பத்திரி கட்ட கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 87 கோடி ஒதுக்கியது.
இந்த ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் 2019-ல் முடிவடைந்த நிலையில் கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் ரூ. 4 கோடி மதிப்பில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விசுவநாத், மருத்துவ கல்வி பணிகள் இயக்குனர் டாக் டர் சாந்திமலர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
கிண்டியில் புதிய பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது.
- கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து திட்டத்தை செயலாக்கம் செய்ய வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதன்படி தற்போது இந்த திட்டம் கடந்த ஓராண்டில் படிப்படியாக வளர்ந்து ஒரு கோடியாவது பயனாளி என்ற இலக்கை தொட்டு இருக்கிறது. அந்த ஒரு கோடியாவது பயனாளி திருச்சி அருகே உள்ள சன்னாசிப்பட்டியில் கண்டறியப்பட்டு உள்ளார். அவருக்கு திருச்சி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அதே பகுதியில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பிசியோதெரபி சிகிச்சை பெற்று வரும் நபரையும் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை அவர் தொடங்கிவைக்கிறார்.
இதில் கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களையும், தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரூ.2.50 கோடி மதிப்பிலான சி.டி.ஸ்கேன் எந்திரத்தையும் இயக்கி வைக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சன்னாசிப்பட்டி நிகழ்ச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தத்தை கண்டறியும் எந்திரங்கள் வழங்கும் திட்டத்தையும் 10 பேருக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.
மேலும், இந்த இடைநிலை சுகாதார செவிலியர்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் 20 ஆயிரம் பேருக்கு அவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, டீம் இன்சென்ட்டிவ் (குழு ஊக்கத்தொகை) வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கு ஏற்கனவே இந்த நிதியாண்டில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு பயனாளியும் ரூ.500 முதல் ரூ.1000 வரை தனித்தனியாக ஊக்கத்தொகை பெற உள்ளார்கள். இந்த சன்னாசிப்பட்டி நிகழ்ச்சி பிற்பகல் 2 மணியளவில் நடக்கிறது.
சீனா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் உருமாறுதல் பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா கட்டுக்குள் வந்ததற்கு தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியதுதான் காரணம். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பிரத்யேக ஆய்வகம் சென்னையில் ரூ.4 கோடி செலவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம்.
சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா அரிய வகை தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது. அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்துள்ளோம். சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் தனிநபர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
பத்திரிக்கை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019-ல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் தற்போதும் உள்ளது. இதுதொடர்பாக டி.ஆர்.பாலு எம்.பி. கூட சமீபத்தில் பாராளுமன்றத்தில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் காம்பவுண்டு சுவருடன் நிற்கிறது என குரல் கொடுத்தார். அப்போது மத்திய மந்திரி வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார். நானும், துறை செயலரும் மீண்டும் மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும். கோவையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறோம்.
2024 தேர்தலை மையப்படுத்தி ஒன்றிய அரசு மருத்துவமனையை கட்ட முயற்சித்தாலும் தேர்தலுக்காக செய்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.