என் மலர்
நீங்கள் தேடியது "TN Government"
- 10 மசோதாக்களையும் நிறைவேற்றுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்
- இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தார். அந்த வகையில் 10 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டன.
இதற்கிடையே 2 மசோதாக்களை அவர் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருந்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பு அளித்தனர்.
அதோடு ஆளுநர் வசம் உள்ள 10 மசோதாக்களையும் அரசிதழில் வெளியிட்டு நிறைவேற்றலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மூலம் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 415 பக்கங்கள் கொண்ட அந்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து 10 மசோதாக்களையும் நிறைவேற்றுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். தற்போது அந்த மசோதாக்களை தமிழ்நாடு அரசு சட்டமாக்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
10 மசோதாக்களையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது
இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த தீர்ப்பு உடனடியாக சட்டமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா?
- தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை ஏன் தவறாக பயன்படுத்துகிறது?
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து, பதில் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேர்ந்துள்ளவர்களின் மனுவுக்கு பதில் மனுவையும் அனைத்து தரப்பினரும் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கின் இறுதி விசாரணை 8-ந்தேதி (இன்று) மற்றும் 9-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று காலையில் சுமார் 11 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.
அப்போது, அரசு தரப்பில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில், அடுத்த சில நிமிடங்களில் விசாரணைக்கு வர உள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும்'' என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ''அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா? இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்டது.
இந்த வழக்கு இந்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் விசாரிப்பதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், இந்த ஐகோர்ட்டில் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு திடீரென வழக்கு தொடர்ந்த காரணம் என்ன? அந்த காரணத்தை முதல் நாளே இந்த ஐகோர்ட்டில் தெரிவித்து இருக்கலாமே? ஏன் அதை செய்யவில்லை?
தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை ஏன் தவறாக பயன்படுத்துகிறது? இந்த ஐகோர்ட்டை ஏன் அவமானப்படுத்த வேண்டும்? இன்று காலையில் கூட சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை? இறுதி விசாரணைக்கு பட்டியலிட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டு ஏன் செல்ல வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டை தமிழ்நாடு அரசு அணுக உரிமை உள்ளது. அதேநேரம், ஏன் இந்த ஐகோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் செல்ல வேண்டும்?'' என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குதான் அமலாக்கத்துறை பதில் மனு அரசுக்கு கிடைத்தது. அதன்பின்னர், அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
- இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன.
- 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களை விட விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.
இந்த கட்டுப்பாடு ஏப்.1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட இ-பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மறு ஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளன்று, ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
- இந்த மாதத்தின் கடைசி பணி நாளான 29-ந்தேதி, சனிக்கிழமையாக அமைகிறது.
சென்னை:
தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளன்று, ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
இந்த மாதத்தின் கடைசி பணி நாளான 29-ந்தேதி, சனிக்கிழமையாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31-ந்தேதி ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாகும்.
இந்த மாதத்தின் கடைசி 2 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்களாக வருவதால், குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, வருகிற 29-ந்தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டு, வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களில் உள்ள போக்குவரத்துக்கு கழகங்கள் என 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 25 மண்டலங்களில் 3 ஆயிரத்து 274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்களும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள விழுப்புரம் மண்டலத்தில் 88 பணியிடங்கள், வேலூர் மண்டலத்தில் 50, காஞ்சீபுரம் மண்டலத்தில் 106, கடலூர் மண்டலத்தில் 41, திருவண்ணாமலை மண்டலத்தில் 37 இடங்கள் என மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதே போன்று, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் கும்பகோணம் மண்டலத்தில் 101 பணியிடங்கள், நாகப்பட்டினம் மண்டலத்தில் 136, திருச்சி மண்டலத்தில் 176, காரைக்குடி மண்டலத்தில் 185, புதுக்கோட்டை மண்டலத்தில் 110, கரூர் மண்டலத்தில் 48 என மொத்தம் 756 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும், சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள சேலம் மண்டலத்தில் 382 இடங்கள், தர்மபுரி மண்டலத்தில் 104 என மொத்தம் 486 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கோவை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள கோவை மண்டலத்தில் 100, ஈரோடு மண்டலத்தில் 119, ஊட்டி மண்டலத்தில் 67, திருப்பூர் மண்டலத்தில் 58 என மொத்தம் 344 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதே போன்று, மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள மதுரை மண்டலத்தில் 190 பணியிடங்கள், திண்டுக்கல் மண்டலத்தில் 60, விருதுநகர் மண்டலத்தில் 72 என மொத்தம் 322 பணியிடங்களும், நெல்லை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள நெல்லை மண்டலத்தில் 139, நாகர்கோவில் மண்டலத்தில் 129, தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
8 கோட்ட போக்குவரத்துக் கழகத்திலும் சேர்த்து நிரப்பப்பட இருக்கும் 3 ஆயிரத்து 274 டிரைவர்- கண்டக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக 21-ந்தேதி (இன்று) மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட மேலும் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மேலும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேர்வு குறித்த விவரங்கள் அவ்வப்போது விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
- அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
இதில் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 20 நாட்களில் வந்த 14 வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.
- தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது.
- கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?
தூத்துக்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இன்று மாலை பா.ஜ.க. கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
தமிழக எம்.பி.க்கள் மும்மொழி கொள்கையில் தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இதை சுட்டிக்காட்டவே பாராளுமன்றத்தில் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார். ஆனால் தமிழக மக்களை அவர் பேசியதாக கூறுகின்றனர்.
முதலமைச்சரை குற்றம் சாட்டினால் அது தமிழக மக்களை குற்றம் சாட்டியதாக ஆகுமா?.
தமிழகத்தில் 4479 மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மும்மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 16 லட்சம் பேர் இந்தி பயில்கிறார்கள். தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது. விரைவில் 30 லட்சம் மாணவர்கள் இந்தி கற்பதாக ஒப்புக்கொள்வார்கள்.
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுவதற்கு பதில் வேறு ஏதோ கற்பிக்கப்படுகிறது. தமிழக கல்வித்துறை திவாலாகி விட்டது.
தமிழக அரசின் மதுபான கொள்கை மூலம் ரூ.1000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த பணம் தி.மு.க.விற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை வைத்து 2026 தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
டாஸ்மாக் மதுபான முறைகேட்டை மறைக்கவே தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஓவர் பெர்மாமன்ஸ்' செய்து வருகிறார்கள். டாஸ்மாக் விற்பனையில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது.
கனிமொழி எம்.பி.யின் மகன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர் எங்கு கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார் என்பது தெரியுமா? கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?
அமைச்சர் பி.டி.ஆர். மும்மொழி கொள்கைளை அறிவற்றவர்கள்தான் பேசுவார்கள் என்று கூறியுள்ளார். அவரது மகன் மும்மொழி கற்பதால் பி.டி.ஆருக்கு அறிவு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
இதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் வீடுகளில் சோதனை நடத்திக்கொண்டே காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் தொகுதி பேரம் நடத்தியது. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர்.
- குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர்.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தை கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இன்று காலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவைக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். கோவிலில் அண்ணாமலை கோட்டை ஈஸ்வர சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து மக்கள் நலம் பெற வேண்டி நடந்த கூட்டு பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.
தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது கோவிலின் தல வரலாறு உள்ளிட்ட தகவல்களை பூசாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் வெளியில் வந்த அவர் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து கோவில் பூசாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி பாடினார்.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மக்கள் எடுத்து கொடுத்ததாக கூறி பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளையும் அண்ணாமலை காண்பித்தார்.
கோவை 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கு பிறகு பின்னோக்கி சென்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மிக கடினமாக போராடி கோவையில் உள்ள மக்கள் தொழில் அதிபர்கள் இணைந்து கோவையை முன்னெடுத்து சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு விபத்து, தற்கொலைப்படை தாக்குதல் நடந்து இருந்தால் நினைத்து பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கிறது. நிச்சயமாக கோவை 20 வருடம் பின்னோக்கி சென்று இருக்கும். அதை தடுத்து நிறுத்தியது நம்மை காக்கும் கடவுளாக இருக்கும் காவல் துறை நண்பர்கள்.
இந்த விபத்து நடந்த பிறகு மிக துணிவாக காவல்துறையினர் இதனை அப்புறப்படுத்தினர். குற்றவாளிகளை கைது செய்து, அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை கைப்பற்றினர். தங்களது உயிரை பணயம் வைத்து வேறு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்து கொண்டனர். அவர்களுக்கு நன்றி.
இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். இது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் தீய மனிதர்கள் நோக்கம் இதுபோன்ற வெடி விபத்தை நடத்தி மதத்தை வைத்து கோவையை பிரித்து சூழ்ச்சியாடி, தமிழகத்தை பிரித்து சூழ்ச்சியாடி மக்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வை குறைப்பதற்காக தான் இந்த முயற்சி நடந்துள்ளது.
நாம் சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தான் கூறுகிறோம். அவர்களுக்கு எந்தவிதமான மதசாயத்தையும் கூட பூசவில்லை.
சனதான தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. ஒன்றாக செல்ல வேண்டும். கோவை மாநகரில் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் நீங்கள் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடாது. இது தவறான முன் உதாரணம். மதகுருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி யாராவது இளைஞர்கள் தவறான வழித்தடத்தில் சென்றாலும் கூட சொல்வது நமது கடமை.
மக்கள் எடுத்துக்கொடுத்த பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளை பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.
மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மாநில அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மட்டுமே நாங்கள் சொல்லி வருகிறோம். தொடர்ந்து கருத்துக்களை சொல்வோம். அதனால் நாங்கள் சொல்வது யாருக்கும் எதிரானது கிடையாது.
தொடர்ந்து பா.ஜனதா கட்சி போலீஸ் உயர் அதிகாரிகளை கேட்கின்ற கேள்வி இங்கே சில தவறுகள் நடந்து இருக்கிறது. திருத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
அடுத்த கட்ட தாக்குதல் நடந்த பிறகு நாங்கள் உங்களை பார்த்து, நீங்கள் எங்களை பார்த்து குற்றம் சொல்லாமல் சரியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்காக தான் கேள்வியை எழுப்பி வருகிறோம்.
கடந்த ஜூன் 19-ந் தேதி மத்திய உளவுத்துறை தமிழகத்தில் இது போன்ற 96 நபர்கள் ஐ.எஸ்.எஸ். மூளை சலவை செய்யப்பட்டவர்கள், கைதானவர்களை கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதில் 89-வது நபராக இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முபினின் பெயர் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டும் என கூறியும் அது நடக்காததால் இந்த தவறு நடந்து இருக்கிறது.
மக்களை எச்சரிக்கைப்படுத்துவது காவல்துறையின் தலையாய பணி. பொதுமக்களுக்கு உண்மையை சொல்வதால் யாரும் எதுவும் தவறாக நினைக்க போவதில்லை. அதனை வெளியில் சொல்ல வேண்டும். அதனை சொன்னால் மக்களுக்குள் பிளவு வந்து விடும் என்பது கிடையாது.
குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர். ஐ.எஸ். கொள்கை என்பது பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய குருமார்களே சொல்கின்றனர்.
நல்ல குருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவையை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க. அறிவித்திருந்தது. பின்னர் வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.க.வினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
ஏற்கனவே மாவட்ட பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை வருகையை முன்னிட்டு அந்த பகுதிக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட போலீசார் என 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வழியாக வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை கேட்டு பெற்று ஆராய்ந்து விசாரித்த பின்னரே அந்த பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.
இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மேலும், தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
- தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை துரிதமாக அகற்றப்பட்டது.
சென்னை :
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை துரிதமாக அகற்றிய தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய உடனே மக்கள் பாதிக்கப்படாதவாறு மழைநீரை உடனடியாக அகற்றிய தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2016-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை16-ந்தேதியன்று வெளியிடப்பட்டது.
- தேர்வு செய்யப்பட்ட இந்த 10 எழுத்தாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3.6.2021 அன்று, 'தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்ல திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22-ம் ஆண்டிற்கான கனவு இல்ல திட்டத்திற்கு, சாகித்ய அகாடமி விருது மற்றும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதன், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற இ.சுந்தரமூர்த்தி, சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கு.மோகன ராசு, சாகித்ய அகாடமி விருது பெற்ற இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை 3.6.2022 அன்று வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, 2022-2023-ம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2005-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜி.திலகவதி, 2011-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற பொன்.கோதண்டராமன், 2011-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், 2013-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ப.மருதநாயகம்,
2015-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற மறைமலை இலக்குவனார், 2015-16-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற மருத்துவர் இரா.கலைக்கோவன், 2018-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், 2016-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கா.ராஜன், 2013-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆர்.என்.ஜோ.டி.குருஸ்,
2016-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை16-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இந்த 10 எழுத்தாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பஸ்கள், சேலம்-100, கோவை-120, கும்பகோணம்-250, மதுரை-220, நெல்லைக்கு-130 பஸ்கள் என ஒதுக்கப்படுகிறது.
- ஒரு பஸ் வாங்க ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஓடும் பழைய பஸ்களை ஓரம் கட்டி விட்டு புதிதாக 1000 பஸ்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 1000 பஸ்கள் வாங்குவதற்காக ரூ.420 கோடியை அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதில் மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கும் சேர்த்து இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பஸ்கள், சேலம்-100, கோவை-120, கும்பகோணம்-250, மதுரை-220, நெல்லைக்கு-130 பஸ்கள் என ஒதுக்கப்படுகிறது.
அதாவது ஒரு பஸ் வாங்க ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.