என் மலர்
நீங்கள் தேடியது "Ajit Pawar"
- பட்னாவிசுக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியானது.
- ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.
முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.
இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமாறு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் நானா படோல் அழைப்பு விடுத்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நானா படோல், "ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் உங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் உங்களுடன் நின்று ஒன்றாக ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
நானா படோலின் கருத்துக்கு பதில் கூற மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் மறுத்துவிட்டார்.
- சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக ஜெயந்த் பாட்டீல் உள்ளார்.
- இவர் அதிருப்தி காரணமாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.
சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்வருமான சஞ்சய் ஷிர்சாத், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவரான ஜெயந்த் பாட்டீல் அக்கட்சியில் இருந்து விலகி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ஷிர்சாத் கூறியதாவது:-
ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு செல்வார் என்பதை முன்னதாகவே நான் சொல்லியிருக்கிறேன். நீண்ட காலத்திற்கு சரத்பவார் கட்சியில் இருக்க வேண்டும் என்ற மனநிலை அவருக்கு இல்லை. சரத் பவார் கட்சியில் பூகம்பம் ஏற்பட இருக்கிறது. ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.
இவ்வாறு சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்துள்ளார்.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஜெயந்த் பாட்டீல், தன்னைப் பற்றி உறுதியாக ஏதும் தெரியவில்லை எனக் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் ஷிர்சாத் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜய் வடேட்டிவார் "ஜெயந்த் பாட்டீல் அதிருப்தியில் இருப்பதால்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்" எனத் தெரிவித்ள்ளார். மேலும், "அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் யூகிக்க மட்டுமே முடியும். அவரது கருத்துக்குப் பின்னால் உள்ள அனுமானம் எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு மூத்த அரசியல்வாதி, எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மற்றும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்" என்றார்.
சரத் பவாரின் மகளும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே "சரத் பவார் எதிரிகளுக்கு மிகப்பெரிய அமைப்பு பலம் இருந்தபோதிலும், ஜெயந்த் பாட்டீல் தேவைப்படுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் கடந்த 2023-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்களுடன் கோஷ்டியாக செயல்பட்டு, பின்னர் கட்சியை கைப்பற்றிக் கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
அஜித் பவார் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. சரத் பவார் தலைமையிலான கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
- நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
- 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.
மும்பை :
மராட்டியத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது.
அந்த நேரத்தில் திடீரென தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் அதிகாலை 5 மணிக்கு ராஜ்பவனில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி பதவி ஏற்ற 3 நாளில் கவிழ்ந்தது.
இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து சரத்பார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டி.வி. நிகழ்ச்சியில் கூறியதாவது:-
நிலையான அரசு தேவைப்பட்டதால் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்சி அமைக்க நாங்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையின் போது சரத்பவாரும் இருந்தார். ஆனால் அதன் பிறகு நிலைமை மாறியது. நிலைமை எப்படி மாறியது என நீங்களே பார்த்தீர்கள். நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட தகவலை சரத்பவார் மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேவேந்திர பட்னாவிஸ் ஜென்டில் மேன், பண்பட்டவர் என்று நினைத்தேன். அவர் பொய்யை நம்பி இதுபோன்ற ஒரு அறிக்கையை விடுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை." என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.
- கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.
- கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது.
மும்பை :
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
மாநில அரசு சாமானிய மக்களின் துயரை தீர்க்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, தங்களின் சிரித்த முகத்தை வெளியில் காட்டிக்கொள்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.
கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது. ஆனால் இதுவரை அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ நிவாரண தொகை சென்று சேரவில்லை. மராட்டியம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நான் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இதை நான் கவனித்தேன்.
பணவீக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இருப்பினும் விவசாய விளை பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை.
எனவே கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு நடத்தும் வழக்கமான தேனீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
இதற்கு பதிலாக புதிய கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து எங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தவ் பாலாசாகேப் சிவசேனாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே, "அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களின் பெயரை சத்ரபதி சாம்பாஜிநகர் மற்றும் தாராஷிவ் என மாநில அரசு மாற்றி உள்ளது.
இந்த 2 மாவட்டங்களின் பெயர்களையும் மாற்றலாம் என்று மத்திய அரசு, மாநில அரசுக்கு அனுப்பிய தகவலில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இதை செயல்படுத்த அரசு தவறிவிட்டது" என்றார்.
- மோடிக்கு அவரது கல்வி தகுதியை பார்த்து மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை.
- மோடி 9 ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.
மும்பை :
பிரதமர் மோடியின் எம்.ஏ. (அரசியல் அறிவியல்) பட்டச்சான்றிதழ் போலியானது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மோடியின் பட்டச்சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி, "பிரதமர் மோடி தனது கல்வி தகுதியை மறைக்க வேண்டிய மர்மம் என்ன?. அதை அவர் வெளியிட வேண்டும். மோடி தனது பட்டச் சான்றிதழை அவர் கட்டிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்" என்று விமர்சித்தார்.
ஆனால் உத்தவ் தாக்கரே கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் கல்வி தகுதி பிரச்சினை தேவையற்றது என்று கருத்து கூறியுள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டப்படிப்பு விவகாரத்தில் என்ன இருக்கிறது?. நமது ஜனநாயகம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. 543 தொகுதிகளை கொண்ட மக்களவையில் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறதோ, அவர் பிரதமர் ஆவார்.
மருத்துவ துறையில், ஒருவர் டாக்டராக பணியாற்ற எம்.பி.பி.எஸ். அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அரசியலில் அப்படி எதுவும் இல்லை.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு அவரது கல்வி தகுதியை பார்த்து மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை. அவர் பா.ஜனதாவில் இல்லாத ஒரு வசீகரத்தை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உருவாக்கினார். அதுவே அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதன் முழு புகழும் மோடியை தான் சாரும்.
அவர் (மோடி) 9 ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவருடைய அல்லது வேறு சில மந்திரிகளின் கல்வி தகுதி பற்றிய பிரச்சினை தோண்டி எடுக்கப்படுவதை நான் கவனிக்கிறேன். இது ஒரு முக்கியமான பிரச்சினை அல்ல.
நாட்டில் பல முக்கிய பிரச்சினை நிலவுகிறது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் வேலையின்மை முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இவற்றை பற்றி யாரும் விவாதிக்க தயாராக இல்லை. பிரதமர் மோடியின் கல்வி தகுதி பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
இவ்வாறு அஜித்பவார் கூறினார்.
- ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்குவதற்கு பா.ஜனதா முடிவு செய்துவிட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
- மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்க பா.ஜனதா விரும்பவில்லை.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.
ஆனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதால் கூட்டணி முறிந்தது. இந்நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகனான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தார். இதையடுத்து பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.
ஆனால் இந்த அரசு 72 மணி நேரம் மட்டுமே நீடித்தது. சரத்பவாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டது.
சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை இழுத்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். தற்போது ஆட்சியும், சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் உள்ளது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்ப வாருக்கும், அஜித் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.இது ஒரு புறம் இருக்க ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என கூறப்படுகிறது.
தீர்ப்பு ஷிண்டே தரப்புக்கு எதிராக அமைந்தால் ஆட்சியை காப்பாற்றுவதற்காக அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் ஆட்சியை தொடருவதற்கு பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்போது அஜித் பவார் தன்வசம் 35 முதல் 40 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், எனவே தனக்கு முதல்-மந்திரி பதவி தந்தால் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் கட்சி தாவல் தடை சட்டமும் நடை முறைக்கு வராது. ஆனால் இந்த கூட்டணிக்கு சரத்பவார் ஒப்புதல் தரமாட்டார் என்பதால் அவரின் ஆசியை பெறுவதற்காக அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
அதே நேரம் பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு சரத்பவார் தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சரத்பவார், ராகுல்காந்தியை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்நிலையில் கூட்டணி மாறினால் தனது அரசியல் வாழ்க்கையில் களங்கம் ஏற்படலாம் எனவும், பா.ஜனதா கூட்டணியை விரும்பவில்லை எனவும் அவர் அஜித் பவாரிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சி அமைந்த சில மணி நேரங்களிலேயே அஜித் பவார் தனது நிலையை மாற்றி கொண்டு கட்சி தலைமைக்கு அடிபணிந்தார்.
எனவே தற்போது கட்சி தலைமைக்கு எதிராக அஜித் பவாரின் பின்னால் செல்வது தங்கள் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருதுகிறார்கள். ஆனாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்தால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்கள் சரத்பவாரிடம் ஒப்புதல் பெறுவதற்கு அஜித் பவாரை வற்புறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் கடந்த 8-ந்தேதி அஜித் பவார் திடீரென டெல்லிக்கு சென்று பா.ஜனதா மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணியின் இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோர் அஜித் பவாருடன் சென்றதாகவும், பேச்சு வார்த்தையின் போது அமைச்சரவை இலாகாக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்குவதற்கு பா.ஜனதா முடிவு செய்துவிட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இதுதொடர்பாக மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், மகாராஷ்டிராவை பொறுத்தவரை பா.ஜனதா கட்சி தற்போது ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளது. உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் ஆட்சி மற்றும் கட்சி சின்னத்தை இழந்தாலும் கூட மாநிலத்தில் அவர்களின் புகழ் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் மாநிலத்தில் மொத்தமுள்ள 48 பாராளு மன்ற தொகுதிகளில் 33 இடங்களை மகாவிகாஸ் அகாடி கூட்டணி கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறப்படுகிறது. எனவே மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்க பா.ஜனதா விரும்பவில்லை. அதற்காக தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர பா.ஜனதா விரும்புகிறது என்றனர்.
- அஜித்பவார் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலை சரத்பவாரும் மறுத்தார்.
- நான் உயிருள்ள வரை தேசியவாத காங்கிரசுக்காக உழைப்பேன்.
மும்பை :
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து பரபரப்பு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் கடந்த 7-ந் தேதி தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு திடீரென மாயமானார்.
கட்சி தலைமையுடன் அவர் தொடர்பை துண்டித்து விட்டதாகவும், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கைகோர்க்க இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
2019-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்த வேளையில், அதிகாலை 3 மணிக்கு பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றதும், பின்னர் அந்த ஆட்சி 80 மணி நேரம் மட்டுமே நீடித்ததும் நினைவுக்கூரத்தக்கது. இப்படி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் அஜித்பவார் என்பதால், தற்போது அவர் திடீரென மாயமானதும் அரசியலில் விறுவிறுப்பை எகிற செய்தது.
ஆனால் மறுநாள் பொதுவெளியில் தோன்றிய அஜித்பவார் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுத்தேன் என்று கூறி சமாளித்தார். இந்த சம்பவத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி பற்றிய கல்வி தகுதி சர்ச்சை தேவையற்றது என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியது பா.ஜனதாவுடனான நெருக்கம் தொடர்பான ஊகங்களுக்கு வலு சேர்த்தது.
இந்த நிலையில் மும்பையில் நேற்று அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட இருந்ததாக தகவல் வெளியானது. அஜித்பவார் எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அன்னா பன்சோடே, மாணிக்ராவ் கோகடே கூறியிருந்தனர்.
இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் நேற்று விறுவிறுப்பானது. ஆனால் எதிர்பார்த்தபடி அஜித்பவார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவில்லை.
இது தொடர்பாக அஜித்பவாரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அவர் பதிலளித்து கூறியதாவது:-
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இருப்பதாகவும், பா.ஜனதாவுடன் நான் கைகோர்ப்பதாகவும் வெளியான செய்திகளில் துளியும் உண்மையில்லை. நாங்கள் (கட்சி எம்.எல்.ஏ.க்கள்) அனைவரும் தேசியவாத காங்கிரசுடன் இருக்கிறோம். நான் உயிருள்ள வரை தேசியவாத காங்கிரசுக்காக உழைப்பேன். கட்சியில் எந்த பிளவும் இல்லை. நாங்கள் குடும்பம் போல உழைத்து வருகிறோம். இது தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவுடன் செல்வதற்காக தேசியவாத காங்கிரசில் உள்ள 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரிடம் கையெழுத்து வாங்கி வைத்து இருப்பதாக எழுப்பிய கேள்வியை அஜித்பவார் மறுத்தார்.
இதுபோன்ற ஆதரமற்ற தகவல்கள் கட்சி தொண்டர்களை குழப்புவதோடு, அவர்களது மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் அஜித்பவார் கூறினார்.
இதேபோல அஜித்பவார் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலை சரத்பவாரும் மறுத்தார்.
சரத்பவாரும், அஜித்பவாரும் விளக்கம் அளித்தபோதிலும், தேசியவாத காங்கிரசில் உள்கட்சி குழப்பம் நீடிப்பதை மறுக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர். கடந்த காலங்களில் அதிரடி அரசியல் மாற்றங்களை கண்ட மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் மாற்றம் ஏற்படாது என்று சொல்ல முடியாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி எனப்படும் உத்தவ் தாக்கரே கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பலமிக்கதாக மாறி இருப்பது பா.ஜனதாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் பின்னணியில் தான் அஜித்பவாரை அவரது ஆதரவாளர்களுடன் தன்பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவை அடுத்து ஏற்பட்ட மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி இன்னும் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி.
- அஜித்பவார், உத்தவ் தாக்கரேவின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.
மும்பை :
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவலை அஜித்பவார் மறுத்து வருகிறார்.
இந்தநிலையில் அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்தால், கூட்டணி அரசில் இருந்து விலகுவோம் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாட் கூறியதாவது:-
அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனா மற்றும் பா.ஜனதாவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் அவரை வரவேற்போம். அதே நேரத்தில் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அல்லது கட்சியின் ஒரு அணியாக (எம்.எல்.ஏ.க்களுடன்) சேர்ந்தால் அது தவறு. அப்படி நடந்தால் நாங்கள் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம். எங்கள் கொள்கை தெளிவானது. தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி. ஆட்சி அதிகாரத்தில் கூட தேசியவாத காங்கிரசுடன் இருக்க மாட்டோம். பா.ஜனதா, தேசியவாத காங்கிரசை சேர்த்தால் மராட்டியம் அதை விரும்பாது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்தது பிடிக்கவில்லை என்பதால் தான் நாங்கள் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.
முன்பு சிவசேனாவில் நிலவி வந்தது போல தற்போது தேசியவாத காங்கிரசில் குழப்பம் நிலவி வருகிறது. அஜித்பவார், உத்தவ் தாக்கரேவின் தலைமையை (மகா விகாஸ் கூட்டணி அரசில்) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேசியவாத காங்கிரசில் நீடிக்கவும் விரும்பவில்லை. அங்கு அவர் சுதந்திரமாக இல்லை என நினைக்கிறேன். அஜித்பவாருக்கு அவரது கட்சி மீதுள்ள அதிருப்திக்கும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சிவசேனா வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அஜித் பவாரின் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே செல்வது புதிதல்ல. அஜித்பவாரின் மகன் பார்த் பவார் தேர்தலில் தோல்வியை சந்தித்ததில் இருந்து அவர் கட்சி மீது அதிருப்தியில் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாம்னாவில் சஞ்சய் ராவத் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
- எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி நடக்கவில்லையா என்பதை அஜித்பவார் தான் கூறவேண்டும்.
மும்பை :
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான "சாம்னா"வில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரையில் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்தபோது, "யாராவது (அஜித்பவார்) தனிப்பட்ட முடிவை எடுத்தாலும், தேசியவாத காங்கிரஸ் பா.ஜனதாவுடன் ஒருபோதும் சேராது" என்று சரத்பவார் கூறியதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்தநிலையில் பா.ஜனதாவுடன் கைகோர்க்க இருப்பதாக வெளியாகும் ஊகங்களுக்கு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்த அஜித்பவார், "தான் உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.
மேலும் சஞ்சய் ராவத்தை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக தாக்கி பேசினார். இதுபற்றி அவர், "தற்போது மற்ற கட்சியை சேர்ந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் போல நடந்துகொள்வதாக" கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று கூறியதாவது:-
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மட்டுமே எனது நம்பத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப முடியும். நான் அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறேன். நான் பத்திரிக்கையில் அப்படி ஒன்றும் தவறாக எழுதவில்லை.
எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி நடக்கவில்லையா என்பதை அஜித்பவார் தான் கூறவேண்டும். சிவசேனா கட்சி உடைக்கப்படவில்லையா? தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயற்சி நடக்கவில்லையா?
இதை சரத்பவார் கூட கூறியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சரத்பவார் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றிய தகவல்களை நான் முன்வைப்பதில் என்ன தவறு?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது.
- இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று புனே பாராமதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்தபோது மக்கள் தொகை 35 கோடியாக இருந்ததாக எனது தாத்தா என்னிடம் அடிக்கடி கூறுவார். ஆனால் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. சீனாவை முந்தி விட்டோம். இதற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு.
நமது நாடு, மாநிலங்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு நிறுத்த வேண்டும்.
மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரியாக இருந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 3 குழந்தைகளை பெற்றால் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்போது இந்த முடிவுக்காக நாங்கள் பயந்தோம்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஏன் இது போன்ற முடிவை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், அது எங்கள் கையில் இல்லை. அது மத்திய அரசின் கையில் உள்ளது. அதை மத்திய அரசு செய்ய வேண்டும்.
2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது. எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டால், மக்கள் இந்த விவகாரத்தில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது.
- உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும்.
புனே :
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அஜித்பவார் நேற்று புனேயில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
என்னை பற்றி பல தகவல்களும், வதந்திகளும் பரவி வருகிறது. காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது. ஆனால் வதந்திகளுக்கு இடம்கொடுக்காமல் நான் எனது வேலையை தொடர்ந்து வருகிறேன்.
உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும். அதிகாலையில் நடந்ததை (பட்னாவிசுடன் துணை முதல்-மந்திரி ஏற்ற சம்பவம்) மீண்டும் நான் செய்வேனா என்ற கேள்வி உங்களுக்கும் எழுந்து இருக்கும். நான் ஏற்கனவே கூறிவிட்டேன். கடைசி மூச்சு உள்ளவரை தேசியவாத காங்கிரசுக்காக தான் உழைப்பேன் என்பதை கூறிவிட்டேன். கட்சி எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன். மக்கள் நலம், வளர்ச்சிக்காக உழைப்பது தான் எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே தாராசிவ் மாவட்டத்தில் கிராஸ்ரோடு பகுதியில் அஜித்பவார் வருங்கால முதல்-மந்திரி என புகழ்ந்து வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
- 1999-ம் ஆண்டு சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.
- அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று சோனியா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார்.
அடுத்த ஆண்டில் (1999) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆனது. அப்போது சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி நடந்தது. ஆனால் சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற சர்ச்சையை கிளப்பி, மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சோனியாவுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு குரல் கொடுத்த சரத்பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர்.
காங்கிரசின் இந்த அதிரடியால், அதே ஆண்டு (1999) உருவானது தான் தேசியவாத காங்கிரஸ். சரத்பவார் இந்த புதிய கட்சியை உருவாக்கினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அதே ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனா- பா.ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்தது. காங்கிரசை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரி ஆனார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த சகன் புஜ்பால் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சரத்பவார் மாநில அரசியலுக்கு திரும்பவில்லை. தொடர்ந்து அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பகையை மறந்து தேசிய அளவிலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்.
இந்தநிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்க்காத வகையில் 82 வயது சரத்பவார் நேற்று முன்தினம் அரசியல் வெடிகுண்டை தூக்கி போட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த விழாவில், தனது புதுப்பிக்கப்பட்ட சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு, இந்த அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டபோது, கட்சி நிர்வாகிகள் முகம் வாடியது. முடிவை திரும்ப பெறுமாறு அவரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மன்றாடி கேட்டனர்.
ஆனால், கட்சி தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும், நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன் என்று கூறிய சரத்பவார் அரங்கை விட்டு வெளியேறி வீடு திரும்பினார். இருப்பினும் ஒய்.பி. சவான் அரங்கில் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை சரத்பவாரின் அண்ணன் மகனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது அவர், "சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தான் அறிவித்துள்ளார். கட்சியை அவர் தொடர்ந்து வழிநடத்துவார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், கட்சியை சோனியா காந்தி தானே வழிநடத்துகிறார். அதே போல கட்சி சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்படும். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் தொண்டர்கள் பலர் சரத்பவாரின் ராஜினாமா முடிவை ஏற்க தயாராக இல்லை. 4 முறை முதல்-மந்திரி பதவி, சுமார் 12 ஆண்டு காலம் மத்திய மந்திரி பதவி வகித்த சரத்பவார், தேசியவாத காங்கிரசை தொடங்கி 24 ஆண்டு காலம் கட்சியை திறம்பட நடத்தி வந்தவர். தொண்டர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு ஒரு உதாரணமாக, சரத்பவார் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தொண்டர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். இவ்வாறு தொண்டர்கள் ஆக்ரோஷமாக இருக்க, சரத்பவார் அவரது முடிவில் இருந்து மாற மாட்டார் என்று கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அஜித்பவார் கூறுகையில், "நான் சரத்பவாரின் மனைவியிடம் பேசினேன். அப்போது சரத்பவார் அவரது முடிவை திரும்ப பெறமாட்டார் என்று அவர் கூறி விட்டார்" என்றார்.
தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க போவதாக சமீப நாட்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சரத்பவார் பதவி விலகல் தொடர்பான தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.
2019-ம் ஆண்டு பா.ஜனதா- சிவசேனா கூட்டணி முறிவை தொடர்ந்து, சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க சரத்பவார் முயன்று கொண்டு இருந்தவேளையில், பா.ஜனதாவுடன் கைகோர்த்து அதிகாலையில் துணை முதல்-மந்திரி பதவி ஏற்று கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் தான் இந்த அஜித்பவார். எனவே அஜித்பவார் மீண்டும் பா.ஜனதா பக்கம் சாய தயாராகி வருவதாக கூறப்படும் வேளையில் விரக்தி அடைந்து சரத்பவார் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சரத்பவாரின் இந்த திடீர் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முடிவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து திரைமறைவு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சரத்பவார் தனது முடிவை திரும்ப பெறாதபட்சத்தில் புதிய தலைவர் யார்? என்பது பற்றி ஆலோசிக்க தொடங்கி உள்ளனர். இதில் சிலரின் பெயர் அடிப்படுகிறது. சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முன்னணியில் உள்ளார். அஜித்பவார், கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.
சுப்ரியா சுலே தான் தேசிய அரசியலுக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி சகன்புஜ்பால் நேற்று தனது கருத்தை பகிரங்கப்படுத்தினார். அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. அவரை மாநில அரசியலுடன் மட்டுப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் சரத்பவாரின் ஒரே மகளான சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரியா சுலே தற்போது பாராளுமன்ற எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் மீண்டும் ஒருமுறை தனது முடிவை தெளிவுப்படுத்தும் போது, தேசியவாத காங்கிரசில் அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடையும்.