search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "APJ Abdul Kalam"

    • அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து, கடந்த ஆண்டு திறந்து வைத்தோம்.
    • கல்வியின் துணைக்கொண்டு-அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் அவருக்குப் பெருமை சேர்த்திட வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கல்வியும், நெஞ்சில் கனவும், அதை நனவாக்கத் தேவையான கடும் உழைப்பும் இருந்தால் உயர்வு நம்மைத் தேடி வரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களிடம் விதைத்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று! நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அப்துல் கலாம் அவர்களுக்கு அவர் பயின்று-பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து, கடந்த ஆண்டு திறந்து வைத்தோம்.

    அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றுக்குப் பாடுபடும் தமிழர்களுக்கு, ஆண்டுதோறும் விடுதலை நாளில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது" வழங்கி வருகிறோம். நமது இளைஞர்கள் காணும் கனவுகள் மெய்ப்படத்தான் "நான் முதல்வன்" உள்ளிட்ட திட்டங்களை நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வியின் துணைக்கொண்டு-அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் அவருக்குப் பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுளளார்.

    • இந்திய இளைஞர்களின் கனவு நாயகன், விஞ்ஞானத்தில் நாட்டின் புகழை விண்ணைத்தொட செய்த அறிவியல் ஆராய்ச்சியாளர் அப்துல் கலாம்.
    • முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரின் பெரும் புகழையும், சாதனைகளையும் போற்றி வணங்குகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    யாராகினும் கல்வியால் எந்நிலையும் மாற்றி, உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை நிரூபித்து காட்டிய கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவு நாயகன், விஞ்ஞானத்தில் நாட்டின் புகழை விண்ணைத்தொட செய்த அறிவியல் ஆராய்ச்சியாளர், என்றும் மாணவர்களுக்கு ஆகச் சிறந்த வழிகாட்டியாக திகழும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரின் பெரும்புகழையும், சாதனைகளையும் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் அப்துல் கலாமுக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
    • அப்துல் கலாமுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது முழு உருவச்சிலை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் முழு உருவச்சிலை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னையில் அப்துல் கலாமுக்கு சிலை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையின்போது ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    அதன்படி அப்துல் கலாமுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது முழு உருவச்சிலை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    இந்த சிலை திறப்பு விழா அவரது பிறந்தநாளான இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கு கூடியிருந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர். மாணவிகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, விருகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், பொதுப் பணித்துறை செயலாளர் சந்திரமோகன், செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தித்துறை இயக்குனர் மோகன் மற்றும் இளைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.எம்.ஆர்.மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அப்துல்கலாமுக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது.
    • ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார்.

    அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்னரும், பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று தொடர்ந்து பேசி வந்தார்.

    2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று மேகாலயா தலைநகர் சில்லாங்கில் உள்ள கல்லூரியில் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்துல்கலாம் இறந்தார். அவரது 8-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், மகன் ஜெயுலாதீன், மருமகன் நிஜாமுதீன், பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. கீதா ஜெயின், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர்.

    அரசு சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்றனர்.

    • நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
    • ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கவர்ந்த ஜனாதிபதியாகவும் அப்துல் கலாம் பெரிதும் போற்றப்படுகிறார்.

    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கவர்ந்த ஜனாதிபதியாகவும் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பெரிதும் போற்றப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.
    • ஜமாத் நிர்வாகிகளும், அப்துல் கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

    ராமேசுவரம்:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இதில் ஜமாத் நிர்வாகிகளும், அப்துல் கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

    தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அப்துல் கலாமின் பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் ஆயிஷா பேகம், மகன் ஜெயினுலாதீன், நடிகர் தாமு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகன், மணிகண்டன், டி.ஆர்.டி.ஓ. சார்பில் பொறுப்பாளர் அன்பழகன், சமூக ஆர்வலர் பழனிசாமி உட்பட ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    • ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.
    • யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பதிவிட்டு தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை எடுத்துரைத்தவர் அப்துல் கலாம்.

    ராமேஸ்வரத்தில் பிறந்து, ராக்கெட்டுகளை வடிவமைத்த ரட்சகன் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக 2010-ம் ஆண்டு அவரது பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15-ம் தேதியை உலக மாணவர் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. இவர் இந்தியாவின் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு துறை பொறியாளராகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ)தலைவராகவும் பணியாற்றினார்.

    ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்னும் இயற்பெயர் உடைய இவர் மாணவர்களின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். வருங்கால தலைமுறையினரால் இந்திய தேசம் வல்லரசாகும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் மாணவர்களை சந்திக்கும் போதும் கனவு காணுங்கள்! அதற்கான முழு முயற்சியுடன் அர்ப்பணிப்போடு செயலாற்றுகள்! வெற்றி உங்களை வந்தடையும்! என்ற உற்சாகமூட்டும் வார்த்தைகளை மாணவர்களிடையே ஊட்டிவிட்டு ‌அவர்களின் எதிர்கால வாழ்க்கை நோக்கிய பயணத்தை ஊக்குவித்தார்.

    பாதுகாப்பு துறையில் நமது நாட்டை வலிமைபடுத்த பொக்ரான்-2 எனும் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா நோக்கி திரும்ப வைத்த பெருமைக்குரியவர். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நம் நாட்டின் அணு ஆயுதங்களை வலுப்படுத்த பெரும்பங்காற்றிய வான்துறை பொறியாளரான இவர் ராக்கெட்டுகளை வடிவமைப்பதிலும் திறம்பட செயல்பட்டார். இவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் முதன்முதலாக ரோகிணி செயற்கைக்கோள் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைக்கப்பட்டது. வெற்றி பெற்றால் உன்னோடு இருப்பவர்களை கை காட்டு! தோல்வி அடைந்ததால் நீயே பொறுப்பேற்றுக் கொள்! என்ற உன்னத வார்த்தைகளை வெளிப்படுத்தி தலைமை பண்பிற்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தினார்.

    யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பதிவிட்டு தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை எடுத்துரைத்தவர். போற்றாத மனிதர் இல்லை! அவரது பொதுமை வார்த்தைகளை கேட்காத குழந்தை இல்லை. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்று இதயமொழி கூறிய இந்தியாவின் ஏவுகணை நாயகன். அணு ஆயுதங்கள், ராக்கெட்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான எடை குறைந்த செயற்கை கால்கள் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஸ்டெண்ட் கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.

    பல்வேறு துறைகளில் சிறப்புற செயலாற்றிய இவர் அக்னி சிறகுகள் எனும் தமது சுயசரிதை புத்தகத்தில் " உனது எல்லா நாட்களிலும் தயாராக இரு! எவரையும் சம உணர்வோடு சந்தி! நீ பட்டறை கல்லானால் அடி தாங்கு! சுத்தியலானால் அடி! " என்ற உணர்ச்சி மிக்க வரிகளில் எதுவானாலும் எதிர்கொள்! நீ எந்த சூழ்நிலையில் இருக்கிறாயோ அதற்கேற்ப சிந்தித்து செயலாற்று என்று எடுத்து கூறியுள்ளார்.

    மேலும் "என் மீது நீங்கள் கொலைப்பழி சுமத்தலாம் அல்லது எனக்கு புத்தியில்லை என்று சொல்லலாம்! ஆனால் போலி நடிப்பு மட்டும் என் குற்றங்களில் ஒன்றல்ல! எனும் வார்த்தைகளால், நீங்கள் என்மீது எந்த பழி சுமத்தினாலும் நான் ஏற்றுகொள்வேன் ஆனால் போலி நடிப்பினால்‌ ஒருவரை ஏமாற்றினேன் என்று கூறினால் அதை மட்டும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று தனது சுயசரிதை புத்தகத்தில் சுயமான அடையாளத்தை வெளிப்படுத்தி சமானியனாக அனைவரும் உள்ளத்திலும் நீங்காத இடம்பெற்ற ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. வறுமைப்படிகளை தாண்டி வரலாறு படைத்த அவரது நினைவை இந்நாளில் போற்றுவோம். அவரது வழியில் மாணவர்கள் நலனுக்காக நாமும் உழைத்திட உறுதி ஏற்போம்.

    ×