search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arreste"

    மதுரை அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை

    மதுரை மருதங்குளத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 45). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரை அதேபகுதியில் வசிக்கும் சிலர் ஆட்டோ சவாரிக்கு அழைத்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் அவர்களுக்கும், ஹரீஹரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஹரிகரன் நேற்றுமாலை ஆழ்வார்புரம் ஆட்டோ நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த 3பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டது. இதில் ஹரிஹரனுக்கு சரமாரி அடி-உதை விழுந்தது. ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியும் அடித்து உடைக்கப்பட்டது. 

    இதுபற்றி ஹரிகரன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புளியந்தோப்பு, கோனார் மண்டபம் கார்த்திக் (28), மதிச்சியம் அழகர் மகன் அழகுபாண்டி (23), ஆழ்வார்புரம் சதாம் உசேன் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 

    இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் ஹரிஹரனை தாக்கி ஆட்டோவை அடித்து உடைத்ததாக கார்த்திக், அழகுபாண்டி, சதாம்உசேன் ஆகிய 3 பேரையும் மதிச்சியம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் புகையிலை, கஞ்சா, பணம் வைத்து சூதாட்டம்,சேவல் சண்டை, அனுமதியின்றி மது விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம் என்ற பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த முத்துசாமி (53), நல்லசிவம் (35), ரவிக்குமார் (42) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.230 ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரையில் வாலிபரை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனிப்படை போலீசார் ஆரப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவர் நேற்று இரவு சிம்மக்கல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்து 730-ஐ பறித்து சென்றனர். இதுபற்றி மாடசாமி திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனைபேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே ஆரப்பாளையம், மஞ்சள்மேடு காலனியில் பிச்சை (47) என்பவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றது. இதையடுத்து படுகாயங்களுடன் கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் என் மகனை இதே பகுதியில் வசிக்கும் 2 பேர் கத்தியால் குத்தினர். இது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்தேன். இதன் காரணமாக அவர்களுக்கும் எனக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நான் நேற்று இரவு மஞ்சள்மேடு காலனியில் நடந்து சென்றேன்.

    அப்போது அங்கு வந்த 2 பேர் என்னை கத்தியால் குத்திவிட்டு, உருட்டுக்கட்டையால் தாக்கினர் என்று கூறினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் திலகர் திடல், கரிமேடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் இடம்பெற்று இருந்த காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆரப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் கண்மாய்க்கரை, சகாயமாதா தெருவைச் சேர்ந்த அஜய்குமார் என்ற குட்டி சாக்கு (23), ஆரப்பாளையம், அன்னை இந்திரா நகர், மலையாளம் மகன் ஜீவமணி என்ற தீப்தி (20) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மாடசாமியிடம் பணம் பறித்தது, பிச்சையை கத்தியால் குத்தியது நாங்கள் தான் என்று தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து திலகர் திடல் போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதிய சம்பவத்தில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தன்னை கைது செய்யாமல் இருக்க சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #seeman

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை வைகோ, சீமானை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் உருவானது.

    இதுதொடர்பாக திருச்சி விமான நிலைய போலீசார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சீமானை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் திருச்சி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    இந்த நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்கும் பொருட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று வக்கீல் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார்.

    சீமான், லஜபதிராய், நெல்லை சிவா, திருச்சி மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு ஆகிய 4 பேருக்கும் முன் ஜாமீன் கேட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில் திருச்சி விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களிடையே மோதல் சம்பவம் நடந்தபோது சீமான் உள்ளிட்டோர் விமான நிலையத்தின் உள் பகுதியில் இருந்ததாகவும், தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கும் இந்த மோதலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #seeman #vaiko

    ×