search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested people"

    மார்த்தாண்டம் அருகே அகதிகள் முகாமில் மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டத்தை அடுத்த கோழிவிளை பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. முகாமில் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

    இந்த முகாமில் உள்ள ஒரு 3 1/2 வயது குழந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தை வீடு திரும்பிய போது அழுது கொண்டே வந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையிடம் விசாரித்த போது கடையில் இருந்தவர் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக கூறியது. இதையடுத்து கடைக் காரரிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர் எந்தவித பதிலும் கூறவில்லை.

    இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கடையில் இருந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அகதிகள் முகாமை சேர்ந்த நவநீதன் (வயது 44) என்பவர் கடை நடத்தி வருவதும், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்துள்ள கீழப்பூங்குடியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலைக்கு போக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த காட்டுவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த நாச்சியப்பன் (36) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் தாங்கள் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி வந்தனர்.

    இதை அறிந்த கதிர்வேல், 2 பேரிடமும் வெளிநாட்டில் வேலை வாங்கி தர கூறினாராம். இதையடுத்து அவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய கதிர்வேல் கடந்த ஆண்டு ரூ.2¾ லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து பணத்தை பெற்றுக் கொண்ட 2 பேரும், வெகுநாட்கள் ஆகியும் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பாமல் இருந்தனராம். இதுகுறித்து கேட்ட போது, முறையாக பதில் கூறாமலும், பணத்தை திருப்பி தர கேட்ட போது, அதை கொடுக்காமலும் இருந்து வந்தனராம். அதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கதிர்வேல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார்.

    அவரது உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தினார். மேலும் நாச்சியப்பன், முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, நாச்சியப்பனை கைது செய்தனர்.
    போச்சம்பள்ளியில் இளம்பெண்ணின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலூக அனகோடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கவுரிசங்கர் (வயது 28). இவரும், சூளகிரி அருகே உள்ள திராடி பகுதியைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் ஒன்றாக வேலை பார்த்தனர். இந்த நிலையில் கவுரி சங்கர், அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார். அவருடைய காதலை அந்த பெண் ஏற்க மறுத்து விட்டார்.  

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கவுரிசங்கர் திராடி பகுதியில் உள்ள இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் பெண்கேட்டார். அப்போது பெண்ணின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கவுரிசங்கர், இளம்பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, அவதூறு கருத்துகளை பதிவிட்டார்.

    இதுகுறித்து இளம்பெண் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் போலீஸ் ஏட்டை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே குமணன் தொழுவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது54). அதேபகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அதை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டு ராஜசேகரை கத்தியால் குத்திவிட்டு லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். 

    படுகாயமடைந்த ராஜசேகர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மயிலாடும் பாறை போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமணனை தேடி வந்தனர். இதனிடையே மயிலாடும் பாறையை சேர்ந்த பால்பாண்டி என்பவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த லட்சுமணன் நான் போலீசையே கத்தியால் குத்தியவன், எனவே பணம் கொடு என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அவரிடமிருந்து ரூ.650ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடமுயன்றார். பால்பாண்டி சத்தம்போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடினர். அவர்கள் லட்சுமணனை விரட்டி பிடித்து மயிலாடும்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலப்பாளையத்தில் குடிபோதையில் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் கனக சபாபதி. இவரது மனைவி தேவகி (வயது51). இவருக்கும் இவரது கொழுந்தன் சிவா (38) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த சிவா, தேவகியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து தேவகி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    தொழில் அதிபர் மனைவி கடத்தல் வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் திருநாமச்செல்வன் (வயது 47). தொழில் அதிபர். திருநாமச்செல்வனின் மனைவி கலா ராணி (44). இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த கலா ராணி, திடீரென மாயமானார். மேலும் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் அவர் எடுத்து சென்றிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் திருநாமச்செல்வன், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் தனது மனைவி கலா ராணியை அதே பகுதியை சேர்ந்த மரப்பட்டறை அதிபர் சதீஷ் (43) கடத்தி சென்றதாகவும், இந்த கடத்தலுக்கு அவரது நண்பர்கள் கண்ணன்விளையை சேர்ந்த முரளி மோகன் (57), வெட்டுமணியை சேர்ந்த மணிகண்டன், பள்ளியாடியை சேர்ந்த சுனில் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருநாமச்செல்வன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கலாராணியை மீட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்த உத்தரவிட்டது,

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, மார்த்தாண்டம் போலீசார் திருநாமச்செல்வன் புகார் குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சதீஷ், முரளி மோகன், மணிகண்டன், சுனில் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் முரளிமோகன் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கலா ராணியை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் வடசேரியில் தடையை மீறி லாட்டரிச்சீட்டு விற்ற மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தடையை மீறி லாட்டரிச்சீட்டு விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குமரி மாவட்டம் கேரள மாநிலம் எல்லையில் இருந்து லாட்டரிச்சீட்டுகள் கொண்டு வரப்பட்டு நாகர்கோவில் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. மேலும் ஆன்-லைனிலும் லாட்டரிச் சீட்டு விற்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் லாட்டரிச்சீட்டு விற்பவர்களை  கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வடசேரி பகுதியில் லாட்டரிச் சீட்டு விற்றதாக போலீசார் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடசேரி பஸ் நிலையம் முன்பு ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது வடசேரி பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 60) என்பதும் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டை விற்பதும் தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். குமரி மாவட்டம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பவர்களை கண்காணித்து வருகின்றனர். லாட்டரிச்சீட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீ சார் எச்சரித்துள்ளனர்.
    ×