search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arupadai veedu"

    • திருவண்ணாமலை விநாயகரை வழிபட துன்பங்கள் தீரும்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    தம்பியாகிய முருகப் பெருமானுக்கு இருப்பதுபோல, அவரது அண்ணன் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

    திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடவூர், மதுரை, பிள்ளையார்பட்டி மற்றும் திருநாரையூர் ஆகியவையே விநாயகருக்கான அறுபடை வீடுகள் ஆகும்.

    விநாயகரின் அறுபடை வீடுகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

    முதல் படைவீடு-திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

    இரண்டாம் படைவீடு-விருத்தாசலம்:

    இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

    மூன்றாம் படைவீடு-திருக்கடவூர்:

    எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

    நான்காம் படைவீடு-மதுரை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன் சித்தி விநாயகரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

    ஐந்தாம் படைவீடு-பிள்ளையார்பட்டி:

    அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    ஆறாம் படைவீடு-திருநாரையூர்:

    திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக அருள்பாலிக்கிறார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

    • பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினத்தையொட்டியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வரும் கூட்டத்தை விட சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.

    வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலிசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • திருப்பரங்குன்றம்- சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகள் தெய்வானையை மணந்த திருத்தலமிது.
    • பழமுதிர் சோலை- அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

    சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதி நூலை பாடியிருக்கின்றார்.

    அதன் மூலம் ஆறு திருத்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.

    அதன் விவரம் வருமாறு:

    1.திருப்பரங்குன்றம்- சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகள் தெய்வானையை மணந்த திருத்தலமிது.

    2. திருச்செந்தூர் -அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச்சூடிய திருத்தலமிது.

    3. பழனி- மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுத பாணியாக நின்ற திருத்தலமிது.

    4. சுவாமிமலை- தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.

    5. திருத்தணி-சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

    6.பழமுதிர் சோலை- அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

    • போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் “படைவீடு’ எனப்படும்.
    • இவற்றுள் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் தலத்தின் மகிமை பற்றி கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது.

    போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும்.

    அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்ய சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும்.

    ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.

    வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தை சுட்டிக்காட்டி,

    அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார்.

    இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது.

    இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார்.

    அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார்.

    முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது.

    பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

    பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை.

    இதுகடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழி செய்தியாகும்.

    இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்று கருதுவாரும் உண்டு;

    எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் இது சங்கநூல் என்கிறார்கள்.

    முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

    "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்று பொருள்படும்.

    "முருகாற்றுப்படை" எனும்போது, முக்தி பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை முக்தி பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும்.

    திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளை தனித்தனியாக கூறியுள்ளது.

    அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற அரிய ரகசியம் தொகுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அறுபடை வீடுகளும் மனிதன் யோக சாஸ்திரத்துடன் எப்படி ஒருங்கிணைந்துள்ளது என்பதை காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

    இவற்றுள் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் தலத்தின் மகிமை பற்றி கூறப்பட்டுள்ளது.

    இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் மூன்றாம் பகுதியில் பழனி, நான்காம் பகுதியில் சுவாமிமலை,

    ஐந்தாம் பகுதியில் திருத்தணி, ஆறாம் பகுதியில் பழமுதிர்சோலை ஆகிய படை வீடுகள் பற்றி கூறப்பட்டுள்ளன.

    • குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
    • தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    திருமுருகன் சீரலை வாயில் சூரபத்மனையும், அசுரர்களையும் அழித்துத் தேவர்களின் துயரைத் துடைத்தார்.

    துயர் நீங்கப் பெற்ற தேவர் தலைவன் இந்திரன் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தன் புதல்வியாகிய தேவசேனா தேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான்.

    திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள், திருமுருகனது அழகில் மயங்கி அவனையே அடைய வேண்டுமெனத் தவமிருந்தார்கள்.

    அவர்களுள் அமிர்தவல்லி இந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் வளர்ந்தாள்.

    தேவர்கள் சேனைக்கு அதிபதியான செந்தமிழ் முருகன் தேவசேனையைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துத் திருமணம் முடித்துக் கொண்டார்.

    தேவசேனைக்குத் திருமணம் நடந்த இத்திருத்தலத்தில் மற்றொரு அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான் திருமுருகன்.

    பெரும்புலவர் நக்கீரர் தலயாத்திரை செய்து வருகின்ற போது திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரையில் உட்கார்ந்து நித்ய பூஜா அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார்.

    குளக் கரையிலிருந்த அரசமரத்து இலை ஒன்று உதிர்ந்து பாதி நீரிலும் பாதி தரையிலும் விழுந்தது.

    நீரில் விழுந்த பகுதி மீனாகவும், தரையில் விபந்த பகுதி பறவையாகவும் மாறின.

    ஒன்றையன்று இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன.

    இந்த சலசலப்பால் நக்கீரனது அனுஷ்டானம் கலைந்து போயிற்று.

    உடனே கற்கிமுகி என்ற பூதம் நக்கீரரை மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது.

    குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

    ஆயிரம் பேர் சிறையில் சேரக் காத்திருந்த கற்கிமுகி ஒருசேர அத்தனை பேரையும் விழுங்கிப் பசியாறக் காத்திருந்ததாம்.

    நக்கீரர் திருமுருகனை மனத்திலிருந்து திருமுருகாற்றுப் படையைப் பாடியவுடன் அக்குகையைப் பிளந்து அத்துணை பேருக்கும் விடுதலை நல்கி, பூதத்தையும் திருமுருகன் அழித்ததாகத் திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்துள்ளார் நக்கீரர்.

    திருப்பரங்குன்றத்துப் பதியிலே நடந்த தேவசேனா தேவியின் திருமணத்திற்கு பிரம்மா திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தவும், சூரியனும், சந்திரனும், ரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும்,

    உமையம்மையும், தென்னவர்கோன் பரமேசுவரனும் இணையாக நின்று வாழ்த்திக் களிக்கவும், ஆயிரங் கண்ணுடைய இந்திரன் தகப்பனார் கடமையாக தாரை நீர் வார்த்துக் கொடுக்கவும், தேவியைக் கரம் பிடித்தான் பரகுன்றத்துக் குமரன்.

    திருமுருகன் திருப்பரங்குன்றத்தில் தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    எனவேதான் இவ்விழாவைப் பெரிய திருவிழாவாக, பிரமோத்சவமாக இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    • திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.
    • பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

    பொய்கையில் வழிந்தோடும் நீர் நிலைகள் அருவியும் சுனையும் மிகுந்து இயற்கைப் பொலிவோடு அன்றைய திருப்பரங்குன்றம் விளங்கியது.

    திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள குமரப் பெருமான் போகத்துக்குரிய மாலையாகிய கடம்பினையும், வீரத்திற்குரிய மாலையாகிய காந்தளையும் அணிந்து விளங்குவதாகத் திருமுருகாற்றுப் படையில் ஒரு செய்தி வருகிறது.

    சீரலைவாய் போரில் திருமுருகன் சூரபத்மனை அழித்து ஆட்கொண்டு "பணிப்பகை மயிலும் சேவற் பதாகையும்" போலே கந்தவேளின் வாகனமான மயிலாகவும் கொடியில் நிமிர்ந்து நிற்கும் சேவலாகவும் கொண்டு, தனது தொண்டனாக ஏற்றுக் கொண்டான்.

    பிறகு திருச்செந்தூரிலிருந்து திருப்பரங்குன்றம் வந்தமர்ந்தான் குமரன்.

    குன்றின் வட பாகத்தில் குமரப் பெருமானது திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கோவிலின் நுழைவு வாயில் உள்ள ஆஸ்தான மண்டபம் சுந்தர பாண்டியன் கட்டியது.

    அறுபத்தாறு கற் தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம்.

    மண்டபத்தின் தூண்களில் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த யாளிகள் & குதிரை வீரர்கள் & சிவனாரின் திரிபுரத கற்பக விநாயகருக்கருகில் உள்ள குடைவரைக் கோவிலில் சத்யகிரீசுவரர் என்னும் சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியாகத் திருக்காட்சி தருகின்றனார்.

    இக்கோவிலின் உட்புறச் சுவர்களில் சோமாஸ்கந்தரின் உருவமும், வெளிப்புறச் சுவரில் சிவபெருமான் பார்வதி உருவங்களும் காட்சியளிக்கின்றன.

    அர்த்த மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகைக் கோவிலில் அன்னபூரண தேவி தன் பரிவாரங்களுடன் காட்சி தருகின்றாள்.

    திருமணக் கோலம் கொண்ட திருமுருகன் உயர்ந்த இடத்தில் எல்லா தெய்வங்களும் புடைசூழத் திருக்காட்சியளிப்பது ஓர் அற்புதக் காட்சி.

    அந்த அருட்காட்சியைக் காண ஆயிரம் கண்கள் போதாது.

    திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தின் கீழ்த்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.

    இந்தப் பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

    திருமுருகன் திருப்பரங்குன்றம் வந்தடைந்த போது தேவதச்சனை அழைத்துத் தனக்கொரு திருக்கோவில் அமைத்துக் கொடுக்க செய்து அங்கே இருந்து அருளாட்சி செய்வதாக ஒரு செய்தியும் உண்டு.

    மலைச்சுவரோடு பதிந்திருக்கிற படியால் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    திருப்பரங்குன்றத்து நாயகன் திருக்கரத்தில் உள்ள வேல் படைக்கு அபிஷேகமும் முருகனுக்கு புனுகும், எண்ணெய்க் காப்பும்தான் சாத்துபடி செய்யப்படுகன்றன.

    • அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் சிவபெருமானை சரணடைந்தனர்.
    • அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியவில்லை.

    சூரபத்மன் கதை

    காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக் குலப்பெண்ணிற்கும் பிறந்தவர் சூரபத்மன்.

    தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அப்படியும் சிவபெருமான் காட்சி அளிக்காததால் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.

    சூரபத்மனின் தவ வலிமையையும், தியாகத்தையும் மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.

    இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான்.

    இப்படி மிகவலுவான வரங்களைப் பெற்ற சூரபத்மனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

    தேவர்களுக்குப் பல வழிகளிலும் துன்பத்தைக் கொடுத்தான். அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் வரம் கொடுத்த சிவபெருமானை சரணடைந்தனர்.

    இந்த அசுரனை ஒழிக்க ஒரு சேனாதிபதி வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.

    அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது. அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.

    கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.

    பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார். அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார். அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.

    சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார். முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.

    பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவகுருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார். ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.

    அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    முருகப்பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.

    கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெற செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனை சரணாகதி அடைந்தான். அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.

    தானே அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.

    இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும்போது பகவானுடைய மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.

    • முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
    • முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன்.

    ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்!

    தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர்.

    முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.

    சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார். முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.

    மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.

    தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    முருகப்பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

    சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.

    எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

    முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

    ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.

    அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.

    சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.

    உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.

    வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

    வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடு பேற்றை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

    ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான "சரவணபவ" என்பதை கூறியபடி ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடன் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.

    இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் அவன் ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள்.

    சூரபத்மன் கதையை அடுத்த பதிவில் காணலாம்.

    • முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.
    • நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன.

    அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் முருகனை வழிபாடு செய்தால் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.

    சும்மா... ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற நிலையில் இருக்கக் கூடாது.

    அறுபடை வீடுகளில் உள்ள ஆழமான சூட்சம ரகசியங்களை முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதலை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பது பலருக்கும் மலைப்பாக இருக்கலாம்.

    கவலையே படாதீர்கள். அது மிக, மிக எளிதானது. கொஞ்சம் நாம் மனதை ஒருமுகப்படுத்தினால் நிச்சயம் அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் அருளை ஒவ்வொன்றாக பெறமுடியும்.

    அறுபடை வீடுகளையும், நம் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, அந்த ரகசியம் நமக்குத் தெரிந்து விடும்.

    நம் உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி ஆக்ஞை என்று 6 சக்கரங்கள் உள்ளன. நம் முதுகுத் தண்டில் அவை அமைந்துள்ளன.

    இந்த சக்கரங்கள் நம் பிட்டத்தில் இருந்து தலை வரை உள்ளது. அவை வேறு, வேறு பகுதிகளில் இருந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை.

    நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன. எனவே இந்த சக்கரங்களை நாம் சரியானபடி தட்டி எழுப்பினால் ஞான முதிர்ச்சியைப் பெற முடியும்.

    அது போலத்தான் அறுபடை வீடுகளை ஆறு ஆதாரங்களாகப் பிரித்து வழிபட்டால் இறுதியில் முக்தி கிடைக்கும்.

    முருகப்பெருமானின் முதல் படை வீடு-திருப்பரங்குன்றம். இந்த படை வீட்டின் நமது ஆதாரமாக மூலாதாரம் உள்ளது. இத்தலத்தில் முருகன் வடிவத்தில் நல் துணை வடிவமாகவும், சக்தியில் பராசக்தியாகவும், தன்மையில் உல்லாசமாகவும் உள்ளார்.

    நம் உடம்பில் உள்ள மூலாதாரம், நமது உயிர் இயக்கத்துக்கு எப்படி மூல காரணமாக உள்ளதோ, அது போல திருப்பரங்குன்றமும் நம் ஆன்மிக இயக்கத்துக்கு முதல் படியாக உள்ளது. இங்கு முருகனை வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    அது மாதிரிதான் நம் உடம்பில் உள்ள மூலாதாரத்தை உசுப்பி விட்டால், அது குண்டலினியின் ஒட்டு மொத்த சக்தியையும் தட்டி உஷார்படுத்தி விடும். முக்கியமாக உயிராற்றல் அதிகரிக்கும்.

    திருப்பரங்குன்றம் தலத்தில்தான் முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்தார். ஆக இத்தலத்தில் நாம் வழிபாடு செய்யும் போது குண்டலினியின் மொத்த சக்தியும் தட்டி எழுப்பப்படுவது போல நம் ஆன்மீக பயணத்தின் மொத்த உணர்வும் இங்கு தட்டி எழுப்பப்பட்டு விழிப்பை பெறும்.

    திருப்பரங்குன்றம் தலத்தில் மூலாதாரத்தை நினைத்து வழிபட்டு பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த உல்லாசம் கிடைக்கும்.

    அடுத்து இரண்டாவது படை வீடாக திகழும் திருச்செந்தூர் பற்றி பார்க்கலாம். நமது உடல் ஆதாரங்களில் இத்தலத்தை சுவாதிஷ்டான சக்கரத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

    இந்த சக்கரத்துக்கு பாலியல் உணர்வு, ஈகோ குணம் ஆகியவற்றை தூண்டி விடும் சக்தி உண்டு. அது மட்டுமின்றி மற்றவர்களின் உணர்ச்சி போக்கை அறியும் சக்தி, ஐம்புலன்களை தாண்டி அறியும் சக்தியும் உண்டு.

    இதை அப்படியே திருச்செந்தூர் தலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள், உண்மை புரியும்.

    சூரனை அழிக்க படையுடன் வந்த முருகப் பெருமான், சூரனின் உணர்ச்சிப் போக்கை அறிந்தான். பிறகு ஐம்புலன்களை தாண்டி அறிந்து சூரனை சம்ஹாரம் செய்து தன்னோடு இணைத்துக் கொண்டார்.

    இத்தலத்தில் முருகப் பெருமான், ஒளிவடிவாக உள்ளார். கடலில் நீராடி முருகனை வழிபட்டால் மனம் தெளிவு பெறும். நோய், பகை நீங்கும்.

    சக்திகளில் ஆதிசக்தியாக இங்கு முருகன் உள்ளார். அவரிடம் நம் மனதை ஒருமைப்படுத்தினால் எல்லா துன்பங்களும் தொலைந்து போகும்.

    சுவாதிஷ்டான சக்கரம் தூண்டப்படும் போது செயல், சிந்தனை, சுயகட்டுப்பாடு மேம்படும் என்பார்கள். இத்தலத்து முருகனும் அப்படித்தானே உள்ளார். எனவே திருச்செந்தூர் முருகனை வழிபடும் போது உங்களது செயல், சிந்தனை எல்லாமே மேம்படுவது உறுதி.

    முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனியை நம் உடம்பில் உள்ள மணிபூரகம் சக்கரத்துடன் ஒப்பிடலாம். இந்த சக்கரத்தில் இருந்துதான் உடல் முழுவதும் சக்தி வினியோகிக்கப்படுகிறது. எனவேதான் பழனி தலத்தில் உள்ள முருகன், ஞானசக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

    மணிபூரகம் தூண்டப்படும் போது கட்டுக்கடங்காத உணர்ச்சி ஏற்படும். இது அப்படியே நம் முருகப் பெருமானின் சிறு வயது இயல்புடன் ஒத்துப் போகிறது.

    உலகை சுற்றி வந்த பிறகும் மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில், கட்டுக் கடங்காத உணர்ச்சிப் பெருக்குடன் முருகன், இந்த பகுதியில் உள்ள மலைக்கு வந்து விட்டான் என்பது வரலாறு. அவனுக்கு காட்சிக் கொடுத்த அம்மையும் அப்பனும் ''பழம் நீ'' என்றதால்தானே பழனி வந்தது.

    பழம் வடிவில் உள்ள முருகப்பெருமானின் கட்டுக் கடங்காத உணர்ச்சியை, மணிபூரகம் சக்கரம் தூண்டப்பட்ட நிலையில் ஏற்படுவது போன்ற நிலை காட்டப்படுகிறது.

    மணிபூரகம் தூண்டப்பட்ட பிறகு உடல் உறுதி மேம்படும். இதனால் ஒருவர் எப்போதும் கடும் உழைப்பாளியாகவும், சுறுசுறுப்பானராகவும் இருப்பார்.

    முருகனும் இத்தலத்தில் அப்படித்தானே உள்ளார். துறவு நிலை பூண்டு ஆண்டி கோலத்தில் இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்ததற்கு இடும்பனிடமும், அவ்வையிடமும் காண்பித்த திருவிளையாடல்களை உதாரணமாக சொல்லாம்.

    இங்கு ஞானப்பழமாக இருக்கும் முருகனை வழிபட்டால், ஞானம், ஆரோக்கியம் மேம்படும். சுவாதிஷ்டான சக்கர பலன்களை இங்கு பெறலாம்.

    அடுத்தது சுவாமி மலை. இது முருகப் பெருமானின் 4-வது படை வீடு. இத்தலத்தை நம் உடம்பு சக்கரங்களில் அனாகதம் என்கிறார்கள்.

    அனாகதம் சக்கரம் நம் இதயத்துக்கு நேர்பின்புறம் உள்ளது. அதனால் தானோ என்னவோ இந்த சக்கரம் அன்பு, பாசம், இரக்கம், விசுவாசம், பக்தி போன்ற நல்ல இயல்புகளை உயர்த்தும் சக்தியாக உள்ளது.

    இத்தகைய இயல்புகள் எல்லாம் சுவாமிமலையில் இருப்பதை காணலாம். இத்தலத்தில் முருகன் கிரியா சக்தியாகவும், சொல் வடிவாகவும் உள்ளார்.

    முருகப்பெருமான் தம் பெற்றோரிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்ததால்தான் படைப்பாற்றல் பெற்று இத்தலத்தில் தந்தைக்கு உபதேசம் செய்ய முடிந்தது. அத்தகைய உபதேச சக்தியையும், படைப்பாற்றலையும் நாம் அனாகதம் சக்கரத்தை தூண்டும் போது நிச்சயமாக பெற முடியும்.

    அனாகதம் சக்கரம் விழிப்பு பெற்றால், அருள்நிலை ஆன்மிக வளர்ச்சி உயர் நிலைக்கு உந்தப்படும். இதை ''அக்கினி குண்டலினி'' என்று சொல்வார்கள்.

    அனாகதம் சக்கரம் துடிப்புடன் செயல்படும் போது, சாத்வீக குணங்கள் உண்டாகும். மனம் பக்குவநிலைக்கு வந்து விடும். படைப்பாற்றலின் ரகசியம் நமக்கு தெரியத் தொடங்கும்.

    இந்த நிலையை நீங்கள் சுவாமிமலை தலத்தில் பெற முடியும்.

    அறுபடை வீடுகளில் 5-வது படை வீடான திருத்தணியை நம் உடம்பில் 6 ஆதாரங்களாக திகழும் சக்கரங்களில் விசுத்தி சக்கரமாக கருதுகிறார்கள்.

    விசுத்தி சக்கரம் நம் உடம்பில் மைய கழுத்துக்கு பின்னால் இருக்கிறது. குரல் வளை சக்கரமான இதை தூண்டி விட்டால் நம் புலன்களுக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் அறிந்து, புரிந்து கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.

    திருத்தணியில் இச்சா சக்தியாக திகழும் முருகனின் அருளை பெற்றால் நமக்கும் நம் புலன்களை அடக்கி தொலைவில் உள்ள விஷயங்களை அறியும் ஆற்றல் கிடைக்கும். இந்த ஆற்றல் அவ்வளவு எளிதில் எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு நாம் விசுத்தி சக்கரத்தை முழுமையாக விழிப்படைய செய்தல் வேண்டும்.

    திருத்தணியில் முருகப்பெருமான் தன் கோபம் முழுவதையும் விட்டொழித்தார். மலைகளில் விளையாடி, வள்ளியை மணந்து சல்லாப தன்மைக்கு வந்தார். எனவே திருத்தணிகை நாதனை வழிபடும் போது நமது மனதில் இருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.

    கோபம் நீங்கும் போது மனம் சரணாகதி தத்துவத்துக்கு செல்லும். இதன் மூலம் விசுத்தியான திருத்தணி நம் ஆத்ம சக்தியின் பரிமாணத்தை திறக்க செய்யம்.

    விசுத்தி தட்டி எழுப்பப்பட எழுப்பப்பட, புனிதத்துவம் வளரும். நம் உடலுக்குள் விஷத்தன்மை எந்த வடிவிலும் நுழைய முடியாத தன்மை உண்டாகும்.

    தீய உணர்வு, தீய எண்ணம் வரவே வராது. விசுத்தி மூலம் திருத்தணிநாதன் அதை நமக்குத் தருவார்.

    விசுத்தி சக்கரம் ஒருவரிடம் முழுமையாக மலர்ந்து விட்டால் அவருக்கு எதிலும் விருப்பு வெறுப்பு வராது. பற்றற்ற நிலைக்கு அடித்தளம் போடப்பட்டு விடும்.

    மனதில் அகந்தை என்பதே இருக்காது. திருத்தணி முருகனை வழிபடும் போது இந்த நிலையை பெற முடியும்.

    ஆனால் அதற்கு நாம் நமது விசுத்தி சக்கரத்தை தூண்டி விட்டு, மலரச் செய்யும் சூட்சமத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த ரகசியம் புரிந்து விட்டால் திருத்தணி முருகன் அருளால் நீங்களும் பற்றற்ற நிலைக்கு உயர்ந்து விடலாம்.

    இறுதியாக நம் உடம்பில் ஆதாரமாக இருப்பது ஆக்ஞை. இதை முருகனின் படை வீடுகளில் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையுடன் நம் முன்னோர்கள் ஒப்பிட்டு பலன்களை கூறியுள்ளனர்.

    நமது இரு கண் புருவ மத்தியில் இருக்கும் இந்த சக்கரத்துக்கு நெற்றிக் கண் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கரம் தூண்டப்படும் போது அறிவு சங்கல்பம் உண்டாகும்.

    பழமுதிர்ச்சோலையில் மர வடிவிலும், குடிலா சக்தியுடனும் இருக்கும் முருகன் நமக்கு அறிவு சங்கல்பத்தை தருபவராக உள்ளார். இத்தலத்தில் வழிபடும் போது வருமானம் பெருகி, பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இவை லௌகீக வாழ்க்கைக்கு உதவும்.

    ஆனால் ஆக்ஞை முழுமையாக மலரும் போது, அது ஆன்மீகக் கண்ணை திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அதோடு சமூக வாழ்க்கையில் இருந்து விலகும் நிலை வரும் என்கிறார்கள்.

    இதைத்தான் நெற்றிக் கண் திறப்பதாக நம்முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். பழமுதிர்ச்சோலை வழிபாடு இந்த ஆன்மீக கண் திறக்கும் நிலையை மேம்படுத்தும்.

    வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்து கொள்ளும் உயரிய நிலை ஆக்ஞையால் வரும். பழமுதிர்ச்சோலை இந்த ஞான முதிர்ச்சியைத் தரும்.

    இப்படி திருப்பரங்குன்றத்தில் தொடங்கி பழமுதிர்ச்சோலை தலம் வரை நாம் படிப்படியாக நம் ஆத்மா நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். அதாவது ஆன்மீக வாழ்வில் நம்நிலை படிப்படியாக உயரும்.

    இறுதியில் பிறவாமை நிலையைப் பெற முடியும். வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று விட்டு, இறுதியில் முருகன் திருவடிகளில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொள்ளும் உயர் மன நிலை பக்குவம் உண்டாகும். அறுபடை வீடுகளின் வழிபாட்டில் உள்ள அரிய ரகசியமே இதுதான்.

    • ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது.
    • முருகனின் 3-ம் படைவீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.

    முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆறுபடை வீடுகளை கொண்ட முருகப்பெருமானுக்கு அதன் ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    முதல்படை வீடு

    ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகன், சூரபத்மனை போரில் வென்ற பின்னர் இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைக்கிறார். இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மலைவடிவில் சிவபெருமான் அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.

    இரண்டாம் படைவீடு

    முருகனின் 2-ம் படைவீடான திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால் திருச்சீலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை அழித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. குரு தலமாகவும் விளங்குகிறது.

    மூன்றாம் படைவீடு

    முருகனின் 3-ம் படைவீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஞானப்பழம் அடைய வேண்டிய போட்டியில், தமையன் பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழநியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவரின் தோற்றம் உலக உண்மைகளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் பிரசாதமாக சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்.

    நான்காம் படைவீடு

    தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் அப்படி தான் போலும். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க பிள்ளையை குருவாக ஏற்று, தான் சீடனாக அமர்ந்து குருவின் விளக்கத்தை கேட்ட இடம் சுவாமிமலை.அதனால் இந்த சுவாமிமலை முருகன் 'சிவகுருநாதன்' என்ற பெயரால் வணங்கப்பட்டு வருகின்றார்.

    ஐந்தாவது படைவீடு

    திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தை தணித்துக் கொண்டு சாந்தமானதால், தணிகை என்று இந்த ஊருக்கு பெயர் வந்தது. மேலும், வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை, அண்ணன் கணேசனின் உதவியுடன் காதல் திருமணம் செய்து கொண்ட இடம் திருத்தணி ஆகும். இந்த கோவில் அருணகிரிநாதர், முத்துச்சாமி தீட்சிதர் உள்ளிட்டோரால் பாடல் பெற்ற தலம்.

    ஆறாவது படைவீடு

    அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு அழகர் மலை மீது இருக்கக்கூடிய சோலைமலையாகும். இங்கு ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்ட முருகனின் ஞானத்தை பார்த்து நீ சாதாரண மானிடராக இருக்க முடியாது என தெரிந்து கொண்டார். இந்த தலத்தில் உலக வாழ்கைக்கு தேவை கல்வி அறிவு மட்டும் போதாது இறையருள் என்ற மெய் அறிவை உணர வேண்டும் என்பதை தன் திருவிளையாடலால் உணர்த்திய இடம்.

    முருகனின் அறுபடை வீடுகளில் எந்த திருத்தலத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்

    திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்

    பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்

    சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்

    திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்

    பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.

    இதுதவிர திருத்தணி முருகனிடம் காதல் திருமணம் நடக்கவும், திருப்பரங்குன்ற முருகனை டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும், பழமுதிர்சோலை முருகனை கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம். 
    அன்றைய தினம் முருகப்பெருமான் வீற்றிருக்கும் அனைத்து தலங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
    நெருப்புப் பிழம்பான ஈசனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். அவர் அவதரித்தது, வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் முருகப்பெருமான் வீற்றிருக்கும் அனைத்து தலங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அவைகளை இங்கே பார்ப்போம்.

    திருப்பரங்குன்றம்

    அறுபடை வீடுகளில் முதலும் மூலாதாரமுமான திருத்தலம் இது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்தபின், இந்திரனின் மகள் தெய்வானையை கைப்பற்றிய சிறப்புமிகு தலம் திருப்பரங்குன்றம். அழகில் சிறந்த முருகன் தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

    முருகனின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதால், இங்கு ஞானத்தின் அடையாளமாக விளங்கும் பார்வதி தேவி முருகப் பெருமானுக்கு அளித்த வேலுக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு சரவணப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. தெய்வத்திருமணங்களில் புகழ்பெற்ற முருகன்- தெய்வானை திருக்கல்யாணம் தேவர்கள் சூழ நடைபெற்ற தலம் என்பதால், திரு மணத் தடை இருப்பவர்கள் இங்கு திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்யலாம். இதனால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    இவை மட்டுமின்றி, ஈசனையே எதிர்த்து வாதம் புரிந்ததுடன் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற நக்கீரர் வாழ்ந்த புண்ணிய பூமி இது. பவுர்ணமியன்று இம்மலையை கிரிவலம் வருவதும் நன்மை அளிக்கும். மலையின் தென்புறம் உள்ள சமணர்காலத்திய குடைவரைக் கோவில்களும், மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலும், வற்றாத சுனையும், மச்சமுனி எனும் சித்தரின் சமாதியும் இத்தலத்தின் சிறப்புகளாகும்.

    மதுரை- திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள இத்தலத்தில் முருகனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்பட்டாலும், வைகாசிப்பெருவிழா முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

    திருச்செந்தூர்

    முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில், இரண்டாவது தலம். கடற்கரையோரம் எழிலாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், சூரபதுமனை முருகப்பெருமான் அழித்த இடம். இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள் கிறார் முருகப்பெருமான்.

    பிறப்பால் ஊமையான குமர குருபர சுவாமிகள், தனது ஐந்தாவது வயதில் இத்தலம் வந்து பேசும் திறனைப் பெற்ற அதிசய தலம் திருச்செந்தூர். முருகன் தன் கைகளில் ருத்ராட்ச மாலையும் தாமரை மலரும் கொண்டு பூஜிக்கும் அருட் கோலத்தில் இங்கு காட்சி தருகிறார்.

    இங்குள்ள நாழிக் கிணறு மற்றும் கடல் தீர்த்தங்கள் இங்கு வரும் பக்தர்களின் அனைத்து நோய்களையும் போக்கும் ஆற்றல் கொண்டது.

    இந்த ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரம் மிகவும் பெரியது. மூலவரான சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகம் தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர். கருவறையின் வடக்குப்பகுதியில் உள்ள சிறிய வாசலில் நுழைந்து சென்றால், முருகப்பெருமான் வழிபட்ட பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம்.

    ஐப்பசியில் இங்கு நடைபெறும் கந்தசஷ்டிப் பெருவிழா வெகு பிரசித்தம். சூரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் அந் நாளில் நிகழும் சூரசம்ஹாரத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கூடுவது தனிச்சிறப்பு.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்குச் செல்ல ெரயில் வசதிகளும், பேருந்து வசதிகளும் உண்டு.

    திருவாவினன்குடி (பழநி)


    கந்தனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது தலம் இது. பழநி மலையடிவாரத்தில் சற்று மேல்புறத்தில் அமைந்துள்ளது திருவாவினன்குடி ஆலயம். திருமகளும், அலைமகளும், காமதேனுவும் பூஜித்த தலம். மலை உச்சியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. இதனைச் செய்தவர் சித்தர்களில் ஒருவரான போகர்.

    சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் நவபாஷாண சிலையை, இங்கு போகர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. எனவே அக்னி நட்சத்திர நாட்கள் இங்கு விசேஷமாக உள்ளது. ஆண்டி கோலத்தில் மேற்கு நோக்கி அருளும் இத்தல இறைவன், இங்கு பாலகனாக வீற்றிருக்கிறார்.

    இங்கு இறைவனின் நவபாஷாண சிலையின் மீது சாத்தப்பட்ட சந்தனம், மிகவும் புனிதமான பிணி தீர்க்கும் மருந்தாக மாறுகிறது. இங்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தமும், விபூதியும் கூட நம்பினோரின் நோய்களை நீக்கி நன்மை செய்கிறது. இந்த ஆலயத்திற்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

    போகர் முனிவருடன் அருணகிரிநாதர், நந்தியடிகள், தேவராய சுவாமிகள், நக்கீரர் போன்ற எண்ணற்ற முனிவர்கள், சித்தர்கள் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு செல்ல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து வசதி உள்ளது.

    திருவேரகம் (சுவாமிமலை)

    முருகப்பெருமான், தன் தந்தையான ஈசனுக்கே உப தேசம் செய்த தலமான சுவாமிமலை. இது அறுபடை வீடுகளில் நான்காவதாக குறிப்பிடப்படுகிறது. சுவாமி என்பது இங்கு எல்லோருக்கும் பெரியவனாகிய சிவபெருமானையேக் குறிக்கிறது. இருப்பினும் மகனுக்கு சீடனாக இருந்து ஈஸ்வரன் உபதேசம் பெற்றதால், குருவாகிய முருகனுக்கு மேலே உயரத்தில் சன்னிதியும், கீழே சிவனுக்கு சன்னிதியும் அமைந்துள்ளது. இங்கு உள்ள 64 படிகளில் 60 படிகள் 60 ஆண்டுகளையும், 4 படிகள் 4 யுகங்களையும் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

    ஆலயத்தின் நுழைவு வாசலில் சிவனின் இடது தோளில், குழந்தையாக வடிவேலன் அமர்ந்து உபதேசம் செய்யும்காட்சி சுதை சிற்பமாக உள்ளது. பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற பல யோகிகள் பாமாலை பாடி இங்குள்ள முருகனை துதித்துள்ளனர்.

    இங்கு வழிபடும் பக்தர் களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும். குரு மூர்த்த சன்னிதி என்பதால், இங்கு உபநயனம் எனப்படும் பூணூல் விழாக்கள் நடத்துவது பிரசித்தமாகும்.

    கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள இத்தலத்திற்குச் செல்ல வசதியாக பேருந்துகள் இயங்குகின்றன.

    பழமுதிர்சோலை (அழகர்மலை)

    அறுபடைவீடுகளில் முருக பக்தர்களின் மனம்கவரும் வகையில் அமைந்த தலம் இது. பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். அழகர்கோவிலுக்கு மேலே சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    தொடக்கத்தில் முருகனின் அம்சமாக வேல் வைத்து வழிபாடு நடைபெற்று வந்தது. தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கும் முறை உள்ளது.

    தமிழ்க் கடவுளான முருகன் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி அவ்வையிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இது. ‘பழம் உதிர் சோலை’ என்பதே ‘பழமுதிர்சோலை’ என்றானது.

    இதன் அருகே உள்ள நூபுரகங்கை எனும் தீர்த்தம் மிக பிரசித்தி பெற்றது. இதன் உற்பத்தி ஸ்தானத்தை இன்னும் கண்டறிய முடியாததே இதன் சிறப்பு. இங்குள்ள தீர்த்தங் களுக்கு காவல் தெய்வமாக ராக்காயி அம்மன் உள்ளார். இவருக்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    பழமுதிர்சோலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது என்பதால் இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.

    திருத்தணி

    சூரபதுமனையும், அவனது சகோதரர்களான சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரையும் முருகப்பெருமான் வதம் செய்தார். அவர்களின் அழிவு வழி போர்க் கோலத்துடன் ஆவேசமாக இருந்த முருகப்பெருமான், தன்னுடைய கோபம் தணிய வந்து அமர்ந்த தலம் திருத்தணி. ‘செரு’ என்றால் கோபம் என்றும், ‘தணி’ என்றால் ‘குறைதல்’ என்றும் பொருள். முன்காலத்தில் ‘செருத்தணி’ என்று அழைக்கப்பட்டு வந்த ஊரே தற்போது ‘திருத்தணி’ என்று வழங்கப்படுவதாக கூறுகிறார்கள்.

    முருகப்பெருமானின் ஐந்தாவது வீடு இது. முருகப்பெருமான், குறத்திப் பெண்ணான வள்ளியை மணம் புரிந்து கொண்டதும் இந்தத் தலத்தில்தான். சுமார் 400 அடி உயரமுள்ள சிறிய மலைமீது பக்தர்கள் செல்ல வசதியாக 365 படிகள் உள்ளன. வருடத்தின் நாட்களை இப்படிகள் குறிப்பதாக சொல்லப்படுகிறது.

    தணிகைநாதன், தணிகேசர், தணிகைவள்ளல் என்றெல்லாம் புகழப்படும் இந்த தல நாயகனுக்கு ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம். வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் தொடங்கி வைத்த திருப்படி பூஜையும் இங்க நடைபெறுகிறது.

    அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சிதர், ராமலிங்க வள்ளலார், கச்சியப்ப தேசிகர் போன்ற மகான்கள் இங்கு வந்து தணிகைநாதனின் அருட்பார்வை பெற்றுள்ளனர்.

    வேலூர் மாவட்டம் அருகே உள்ள இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. 
    ×