என் மலர்
நீங்கள் தேடியது "Ayya Vaigundar"
- வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம் நடைபெறும்.
கல்லிடை:
அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனத்தில் சப்பர பவனி நடைபெறும். விழாவில் 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மமும், இரவில் அன்னதர்மமும் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக 8-ம் நாளான 10-ந் தேதியன்று காலை வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவில் அன்னதர்மமும் நடைபெறும்.
11-ந் தேதி அதிகாலை அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி காலை வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம், சந்தனக்குடம் எடுத்தல், கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சியும் நடைபெறும். 13-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
ஏற்பாடுகளை வாகைக்கு ளம் வாகைப்பதி அய்யாவழி தொண்டர்களும், அன்பு கொடி மக்களும் செய்து வருகின்றனர்.
- 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
- அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 10-ந்தேதி காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிபடி மற்றும் பால்தர்மமும், மாலை 5 மணிக்கு சுவாமிதோப்பில் இருந்து முந்திரி பதம் மற்றும் கடம்பன்குளத்தில் இருந்து திருஏடு எடுத்துவருதல், நம்பியான் விளையில் இருந்து மேளதாளம் முழங்க பதியை வந்தடைந்தது.
இரவு 7 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிக்கு அய்யா வழி அருளிசை வழிபாடு அய்யாவின் அருளிசை புலவர் சிவசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இரவு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 நாட்களும் இரவு 8 மணிக்கு அன்ன தர்மம் நடைபெறும். நிகழ்ச்சிகளை வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதி அன்பு கொடி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
- இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெறவுள்ளது.
- 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "திருச்செந்தூர் கடற்கரை, சந்தோசபுரத்திற்கு தென்புறம் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில், 'வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை பெரியவர்களால்' அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைக்கப்பட்டது.
இந்த அவதார பதியில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 19-ம் தேதி இரவு அய்யாவழி மக்கள், அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில் ஒன்றுகூடி, மாசி 20 அன்று அதிகாலை சூரிய உதயத்தில் பதமிட்டு அய்யா வைகுண்டர் அவதாரக் காட்சியை கண்டு அருள் பெறுவார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள், அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார நிகழ்ச்சியிலும், பிறகு சாமிதோப்பு தலைமைபதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அய்யா வைகுண்டர் அருள் பெறுவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை அறிவித்தார்கள்.
கடந்த 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.
இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெறவுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார பதியில், அய்யா வைகுண்டர் அவதார நிகழ்வில் கலந்துகொண்டு பிறகு, கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கும் சென்று அய்யா அவர்களது திருவருளைப் பெறுவதற்கு இந்தியா முழுவதிலுமிருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அய்யா வைகுண்டர் அவர்களது திருஆசியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- உலகத்தில் உள்ள அத்தனையையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு
- அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது.
அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.
அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.
அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனையையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.
அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார்.
இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர். 1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர்.
3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.
- வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை “தவ வாசல்” என்றும் அழைப்பார்.
- திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு.
அய்யா வைகுண்ட பரம்பொருள் 6 வருடம் தவம் இருந்த புண்ணிய இடம் வடக்கு வாசல்....
தலைமைப்பதியாக திகழும் சாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றில் பதமிட்டு வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலுக்கு வருவார்கள். வந்ததும் அய்யாவை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார்.

சாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார்.
அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.
அடுத்த 2 ஆண்டுகள் தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார்.
மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.
இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன.
தலைமைபதியாம் சாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார். அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர்.
வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தூண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் அய்யா நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

நிலை கண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.
இந்த திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிக மகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.
பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது.
" நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார்.
பக்தர்களின் வாழ்வில் மேன்மையும், புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.
உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்கு வாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்கு வாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்.
- ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று போதிக்கிறது.
- மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ ரகசிய நூல்.
''ஒப்பரொருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பாநாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டம் மானையிதே''
அய்யா வைகுண்டசாமியின் தனது 5-வது சீடராகிய சகாதேவன் சீடர் என்றழைக்கப்படும் அரிகோபால சீடர் மூலமாக அருளப்பட்டது தான் அய்யா வழி மக்களால் தங்களுடைய வேத ஆகமம் என்று போற்றப்படும் அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.
இதற்கு முந்தைய 6 யுகங்களில் நடந்தது என்ன? தற்போதைய கலியுகத்தில் என்னென்ன நடக்கும்? அடுத்து வருகின்ற தர்மயுகத்தில் நல்வாழ்வு எப்படி இருக்கும் என்று 3 காலங்களையும் கூறுவதால் உலக ஜாதகம் என்றும் போற்றப்படுகிறது.
அகிலத்திரட்டு அம்மானையானது சமயங்களையும், மொழிகளையும், இனங்களையும், கலாச்சாரங்களையும் கடந்து உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று மனுதர்மத்தை போதிக்கின்றது.
நீ பெரிது, நான் பெரிது என்று தலைகணம் பிடித்து ஆடுகின்ற உலகிலே உனக்கும் மேலே பெரியவன் நான் (இறைசக்தி) இருக்கிறேன் என்று கூறுவது மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ (தெய்வ) ரகசிய நூலாக கருதப்படுகிறது.
படித்தால் வாசிக்க கேட்டால், மனிதனுடைய பூர்வஜென்ம கர்மவினைகளையும் தீர்க்கக்கூடிய இம்மையிலும், மறுமையிலும் எண்ணங்களற்ற (கவலையற்ற) நல்வாழ்வு அருளக்கூடிய புனித நூலாக கருதப்படுகிறது.
கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை மாதம் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு தென்தாமரைக்குளத்தில் அரிக்கோபாலன் சீடர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அய்யா வைகுண்டர் அவர் அருகிலே சென்று எழுப்பி (பெரியபுராணத்தை எழுதுவதற்கு சேக்கிழாருக்கு சிவபெருமான் அடியெடுத்து கொடுத்தது போல) ஏரனியும் என்கின்ற முதல் வார்த்தையை அடியெடுத்து கொடுத்து, அகிலத்திரட்டம்மானை எழுத அருள்பாலித்தார்.
எழுத படிக்க தெரியாத அகிகோபால சீடரால் பின்னை கட்டி ஓலைச்சுவடியில் 14 நாட்களுக்குள் எழுதி முடிக்கப்பட்டது. தினமும் இரவு தென்தாமரைக்குளத்தில் அரிகோபால சீடரால் எழுதப்படும் ஏடு, மறுநாள் மாலை பொழுதில் சாமிதோப்பு திருத்தலத்தின் (தற்போது வடக்கு வாசல் எனப்படும்) தவத்தலத்தில் அய்யாவின் முன்பு அரிக்கோபால சீடரால் வாசிக்கப்பட்டது.
இவ்வாறாக தினமும் வாசிக்கப்பட்டபோது, ஒருநாள் அரிக்கோல சீடரால் வாசிக்க இயலாமல் தேம்பி அழ ஆரம்பித்தார். இதனை பார்த்த மற்ற சீடர்கள் அரிகோபால சீடர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தார்கள்.
அப்போது அரிகோபாலன் சீடர் அய்யா நம்மை விட்டு வைகுண்டம் சென்று விடுவாராம் என்று கூறினார். அதை கேட்ட மற்ற சீடர்கள் அய்யாவிடம் என்னய்யா இது நீங்கள் எங்களை விட்டுவிட்டு வைகுண்டம் செல்வீர்களா? என்று வேதனையுடன் கேட்டார்கள்.
அப்போது அய்யா அரிக்கோபாலனை பார்த்து கோபமுற்று பிரம்பால் அடித்து உன்னை ஏட்டினை வாசிக்கத்தானே சொன்னேன். உன்னை யார் பொருள் கூற கொன்னது என்றார்.
இதனால் மிகவும் மனது நொந்த அரிக்கோபாலன் சீடர் உள்ளதை சொன்னால் ஊருக்கு ஆகாது என்று புலம்பியபடி எங்கே செல்வது என்று தெரியாமல் அய்யாவால் அவருடைய தாயார் என்று அடையாளம் காட்டப்பட்ட ஸப்த மாதர்களில் ஒருவரான அரிமடவை பிறந்த ஊராகிய பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ள கச்சேரி தளவாய்புரத்துக்கு கால்நடையாகவே வந்து சேர்ந்து ஒரு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்தார்.
அதிகாலை பொழுதிலே காட்டுக்கு வெளிப்புறம் செல்வதற்காக சென்ற 2 பேர் இவரை பார்த்து யாரப்பா இங்கே முக்காடு போட்டு அமர்ந்திருப்பது? என்று வினவினார்.
இவருடைய முகத்தை பார்த்ததும் அளவற்ற ஆனந்தம் கொண்டு சாமிதோப்பிலே இருந்து சீடர் அய்யா வந்திருக்கிறார்கள் என்று அவரை உபசரித்து தற்போது கச்சேரி தளவாய்புரம் பாஞ்சாலங்குறிச்சி பதி அமைந்திருக்கின்ற இடத்திலே அந்த காலத்தில் மாட்டு தொழுவம் இருந்தது.
அதற்கு அருகிலே சீடர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் அவ்வூர் மக்கள். அங்கே இருந்த போது அரிகோபாலன் சீடர் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார்.
அவ்வாறு எழுதியதை பாஞ்சாலங்குறிச்சி அரசவையில் கச்சேரி செய்பவர்களிடம் வாசித்து காண்பித்தார். அவர்கள் ஒன்றுமே புரியவில்லை என்றதால் அய்யாவின் அருளால் மீண்டும் ஓலைச்சுவடியில் முதலில் இருந்து அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார்.
(இதில் திரேதாயுகம், கிரேதாயும் யுகம், பத்திரமாகாளி சான்றோர்களை வளர்ப்பது ஆகியவை விரிவாக கூறப்பட்டுள்ளது.) இதன் பிரதியே சாமிதோப்பில் 1965-ம்ஆண்டு பூஜிதகுரு சென்திசை வென்ற பெருமாளால் வெளியிடப்பட்டது.
இதன் பிரதியே 2010-ம்ஆண்டு கொட்டங்காடு ஏடு என்று வெளியிடப்பட்டது. இவ்வாறாக அய்யா தந்த ஏடு இரண்டு, ஒன்று தென்தாமரைகுளம் ஏடு இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சி ஏடு ஆகும்.
- கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும்.
- கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும்
அகிலத்திரட்டில் 16-வது நாள் திரு ஏடு வாசிப்பில், பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் கலி அழிவது எப்போது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதன்படி, கலியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன், சிவனிடம் கேட்டான். "ஈஸ்வரரே, இந்த கலியன் இத்தனை வரம் பெற்று செல்கிறானே, எப்போது இவன் முடிவாகுவான்" என்று, அதற்கு சிவன் அளித்த பதிலை, மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதி அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.
அதில், கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும், சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது, கொலை, களவு , கோள்கள் மிகுந்திருக்கும், தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர், நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும், போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார்.
அதாவது நிதானம் இருக்காது, கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும், மழை மறையும், காற்றானது நோய் காற்றாக வீசும், கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம் கொண்டவர்களை வேலை கொள்வர், மனு நீதம் குன்றும், நியம் தப்பி நாட்டை அரசாள்வார்கள், பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள். அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று.
- ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.
இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.
ஊர்வலத்திற்கு ராஜ வேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாம் மணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் கிருஷ்ண ராஜ், பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் செல்லா, விஸ்வநாத் பையன், பால. கிருஷ், வைபவ், யுகஜன நேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள்.
அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.
ஊர்வலத்தில் ராபர்ட்புரூஸ் எம்.பி. மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமிதோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் அய்யாவிற்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சுருளாக வைத்தனர்.
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தையொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதியை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.
இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் நிறுத்தி சென்று இருந்தனர்.