என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ayyappan Temple"
- அய்யப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும்
சபரிமலை:
2024-ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள். மறுநாள் (16-ம் தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.
டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்படும்.
நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வரும்போது, இருமுடி தனியாக வைக்கப்பட்டு பயணிகள் மட்டும் விமானத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடப்பு சீசனையொட்டி சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச்செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இந்த சலுகை நடப்பு மண்டல மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே பொருந்தும் எனவும், மாத பூஜை காலங்களில் இந்த சலுகை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.
- ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்கு வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (12-ந்தேதி) நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
கோவில் நடையை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறக்கிறார். நாளை காலை 5.45 மணியிலிருந்து 6.30 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக அச்சன்கோவில் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டுவரப்படுகிறது.
பூஜைக்கு பிறகு பக்தர் களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 10மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
இந்நிலையில் ஆவணி மாத பூஜை வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேி மாலை திறக்கப்பட உள்ளது.
மாதாந்திர பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- ஆவணி மாத தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும்.
- சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயம் சபரிமலை அய்யப்பன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்த வர்களே நடத்தி வரு கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள்.
தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரியாக கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு மகேஷ் மோகனரு ஆகி யோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள். இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளார்.
அவருக்கு பதிலாக புதிய தந்திரியாக அவரது மகனான கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட உள்ளார். ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்க மாதம் (தமிழில் ஆவணி மாதம்) தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ந்தேதி சிங்க மாதம் தொடங்குகிறது.
சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. அன்று சபரிமலை கோவில் தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்கிறார். அன்றைய தினம் மாலை அவரது முன்னிலையிலேயே சபரிமலை அய்யப்பன் கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளார்.
தந்திரி பொறுப்பில் இருந்து விலகினாலும், சபரிமலை விழாக்களில் கண்டரரு ராஜீவரு பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தந்திரியாக பொறுப்பேற்க உள்ள கண்டரரு பிரம்மதத்தன் தனது எட்டாவது வயதில் பூஜைகள் பற்றி படிக்க தொடங்கி இருக்கிறார். சட்டத்துறையில் பணியாற்றி வந்த அவர், சபரிமலை பூஜை பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அந்த பணியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக கடந்த 14-ந் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப் பட்டுள்ளதால், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சபரிமலையில் மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்த படியே காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வைகாசி மாத பூஜை நிறைவையொட்டி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.
- நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.
- பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் நிலையில், மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போதும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடத்தப்படும்.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முடிந்து கடந்தமாதம் (ஜனவரி) 21-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட நிலையில், மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது.
கோவில் தந்திர கண்ட ரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ், கோவில்நடையை திறந்துவைத்து தீபம் ஏற்றுகிறார். பின்பு பதினெட்டாம் படியில் இறங்கி உள்முற்றத்தில் உள்ள ஹோமகுண்டத்தில் தீ மூட்டுவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். நாளை(14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடத்தப்படும். நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். பின்பு அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.
அதுமட்டுமின்றி நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களும் படிபூஜை, அஷ்டாபிஷேகம், உதயாஸ்த மன பூஜை உள்ளிட் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அந்த 5 நாட்களும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தலாம். தினமும் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் நெய்யபிஷேகம் நடைபெறும்.
மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து படிபூஜை மற்றும் புஷ்பாபிஷேகமும், 6.45 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படுகின்றன.
மாசி மாத பூஜை வருகிற 18-ந்தேதி முடிகிறது. அன்றுஇரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக அடுத்தமாதம்(மார்ச்) 13-ந்தேதி மீண்டும் திறக்கப்படும்.
- அனைவரும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் வைத்து மாயமாகியிருக்கின்றனர்.
- மாயமானவர்கள் பற்றி எந்தவித முன்னேற்ற தகவல்களும் கிடைக்கவில்லை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் கடந்த 20-ந்தேதி முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டைப்போன்று, இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு விரதமிருந்து வந்தனர்.
பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், சீசன் காலத்தில் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.
இந்நிலையில் சபரிமலை நடை திறக்கப்பட்ட கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை சபரிமலைக்கு யாத்திரை வந்த பக்தர்களில் 9 பேர் மாயமாகியிருப்பதாகவும், அவர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்களில் 2 பேர் ஆந்திரா மாநிலம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தலா ஒருவர் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் வைத்து மாயமாகியிருக்கின்றனர்.
மாயமானவர்கள் பெயர் விவரம் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சென்னையை சேர்ந்த கருணாநிதி (வயது58), திருவள்ளூரை சேர்ந்த ராஜா (39), திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை (57), பொம்மையாபாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (24) ஆவர்.
இதேபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களின் பெயர் விவரமும் வெளியாகி இருக்கிறது. அவர்கள் மாயமானது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. காணாமல்போனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை பம்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் மாயமானவர்கள் பற்றி எந்தவித முன்னேற்ற தகவல்களும் கிடைக்கவில்லை. இதனால் மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை பத்தினம் திட்டா மாவட்ட காவல் துறை தலைவர் அஜித், ரன்னி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்துள்ளார். அவரது தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர்.
- பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.
மகரவிளக்கு பூஜை நடந்த கடந்த 15-ந்தேதி மாலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. சன்னிதானம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பொன்னம் பலமேட்டில் தெரியும் மகரஜோதி கையாலேயே ஏற்றப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். இந்த முறை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கை குறித்த காவல்துறையின் கணிப்பு சரிதான்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பலர் பதிவு செய்யாமல் வருகின்றனர். மாலை அணிந்து வருபவர்களை தடுக்க முடியாது. வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றவர்களைப்போன்று பதினெட்டாம்படியில் வேகமாக ஏற முடியாது.
நெரிசல் ஏற்படும் போது போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பது இயல்பான ஒன்று தான். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் கூறுவதை தேவசம்போர்டு ஏற்க வேண்டும். அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது சரியல்ல. சபரிமலைக்கு எதிரான பொய் பிரசாரத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது.
அதேபோல் தேவசம் போர்டு பணத்தை அரசு எடுக்கிறது என்ற பிரசாரம் உண்மைக்கு புறம்பானது. தேவசம்போர்டு வருமானம் கோவில்களின் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது. பழங்குடியின தலைவர்களால் மகரஜோதி ஏற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
- பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம்
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு மகர ஜோதியை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி பதினெட்டாம் படி திறக்கப்பட்டது. இதையடுத்து விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
வருகிற 15-ந்தேதி பொங்கல் அன்று மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
மகர ஜோதி காலத்தில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
- ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
சர்வதேச ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் , கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடியாமல் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. அதேபோல் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 40 பேர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் வந்த குழுவில் பலர் இடமாறி சென்றுவிட்டனர். பலமணிநேரம் கழித்து ஒருவரையொருவர் தேடிபிடித்து கண்டுபிடித்த நிலையில் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்யவில்லை என தெரியவந்தது. மீண்டும் வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி புண்ணிய தலமாக விளங்குவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி பின்னர் தங்கள் யாத்திரையை தொடங்குவது வழக்கம். சுருளி மலைப்பகுதியில் ஐயப்பன்கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சபரிமலையில் செய்யப்படும் கலசபூஜை, படிபூஜை, புஷ்பாபிஷேகம், மண்டலஅபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.
இதனை அறிந்து சென்னையில் இருந்து சாமி தரிசனம் செய்யமுடியாமல் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் சுருளியில் உள்ள ஐயப்பன்கோவிலில் நெய்தேங்காயை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷகேம் செய்து வழிபாடு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் சபரிமலைக்கு யாத்திரை வருகிறோம். ஆனால் இந்த ஆண்டுபோல எப்போதும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியதே கிடையாது. எங்களை போன்றே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்யமுடியவில்லை.
இதனால் ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டள்ளது. போலீசாரின் கெடுபிடியால் 18-ம் படியை கூட தொட முடியவில்லை. ஆன்லைன் முன்பதிவு என்ற பெயரில் பக்தர்கள் தடுக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தது போலவே சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும். 2 நாள் தங்கிஇருந்துகூட ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் முடிவுசெய்வார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
- ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை.
- நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறையவில்லை. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னிதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
பல மணிநேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றுமுன்தினம் மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்தது.
இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை நாளை (27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.
அதன் பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். ஐயப்பன் நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு இன்று 64 ஆயிரமாக குறைக்கப் பட்டிருந்தது. மண்டல பூஜை நடைபெறக்கூடிய நாளைய (27-ந்தேதி) 70 ஆயிரம் பேருக்கே முன்பதிவு செய்யப்படும்.
மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னி தானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
- பம்பை, நீலிமலை மலைப்பாதை, சபரிபீடம், சன்னிதானம் என அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது.
இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னி தானத்துக்கு அனுப்பப்படுகின்றனர். பல மணி நேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க தேவசம்போர்டு சார்பில் குடிநீர், பிஸ்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தில் முதன்முதலாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். நேற்று மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் இதுவே அதிகமாகும். இதன் காரணமாக நேற்று சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
பம்பை, நீலிமலை மலைப்பாதை, சபரிபீடம், சன்னிதானம் என அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நீலிமலை, அப்பாச்சிமேடு உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் மலையேற்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கு பக்தர்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
சபரிமலையில் மண்டல பூஜை நாளைமறுநாள்(27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஆன்லைன் முன்பதிவு நாளை(26-ந்தேதி) 64 ஆயிரமாகவும், நாளை மறுநாள்(27-ந்தேதி) 70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அய்யப்பனுக்கு அணி விக்கப்படும் தங்க அங்கி, நாளை மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் சரங்குத்தி செல்லும் தங்க அங்கி ஊர்வலம், மாலை 6 மணியளவில் சன்னி தானத்தை சென்றடைகிறது.
அதன்பிறகு அய்யப்ப னுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். நாளை மறுநாள் மண்டல பூஜை முடிந்து, இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
- சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
- குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன நேரம் அதிகரிப்பு, வரிசை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. இருந்த போதிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வெகுநேரம் காத்திருப்பது தொடர் கதையாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கும் கேரள ஐகோர்ட்டு, சபரிமலையில் ஏற்படும் நெரிசல் குறித்து ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய சட்டக்குழுவை நியமிக்க பரிசீலித்து வருகிறது. மேலும் பக்தர்களின் குறைகளை ஆய்வு செய்யவும், பக்தர்களுக்கான வசதிகளை மதிப்பீடு செய்யவும் சட்டக்குழு நியமிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் கட்டுக் கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலையேற வேண்டிய நிலை நிலவியது. மலைப்பாதை எங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
கோவிலில் நடைப்பந்தல், சன்னிதான பகுதி என அனைத்து பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பதினெட்டாம் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 85 பேர் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.
கோவில் நடை திறக்கப்பட்ட 25 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தினமும் 90ஆயிரம் பக்தர்கள் மெய்நிகர் வரிசை வழியாக வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அந்த எண்ணிக்கையை நீதிமன்றம் 80 ஆயிரமாக குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் உடனடி முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதன்காரணமாகவே பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்