search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank fraud"

    • போலியான ஆவணங்களை கொடுத்து 50 லட்சம் வரை இவர் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.
    • 2 ஆவது மனைவிக்கு தெரியாமல் சேலத்தை விட்டு வெளியேறி, போபாலுக்கு தப்பி சென்றார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நபரை வங்கி மோசடி வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது.

    2002 ஆம் ஆண்டு சலபதி ராவ் என்பவர் எஸ்.பி.ஐ. வங்கியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது பல போலியான ஆவணங்களை கொடுத்து 50 லட்சம் வரை இவர் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ 2004 ஆம் ஆண்டு 2 குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து சலபதி ராவ் தலைமறைவானார்.

    இதனையடுத்து தனது கணவரை காணவில்லை என்று அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு 7 ஆண்டுகளாக காணாமல் போனதால் தனது கணவர் இறந்து விட்டதாக அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கின் முடிவில் சலபதி ராவ் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

    ஆனாலும் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வந்தது. அவர்களின் விசாரணையில், சலபதி ராவ் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சேலத்திற்கு தப்பிச் சென்று தனது பெயரை வினீத் குமார் என்று மாற்றிக்கொண்டு அப்பெயரில் ஆதார் கார்டையும் பெற்றுள்ளார். அதன்பிறகு வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.

    ஆனாலும் சலபதி ராவ் தனது முதல் மனைவியின் மகனுடன் தொடர்பில் இருந்ததை அவரது இரண்டாவது மனைவி மூலம் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு 2 ஆவது மனைவிக்கு தெரியாமல் சேலத்தை விட்டு வெளியேறி, போபாலுக்குச் சென்று, கடன் வசூலிக்கும் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.

    பின்னர் உத்தரகாண்டில் உள்ள ருத்ராபூருக்கு சென்று ஒரு பள்ளியில் பணிபுரிந்துள்ளார். அந்த இடத்தை கண்டுபிடித்து 2016 ஆம் ஆண்டு சிபிஐ அங்கு வந்த போது அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

    இதனையடுத்து அவுரங்காபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்து தனது பெயரை ஸ்வாமி விதிதாத்மானந்த் தீர்த்தா என்று அவர் மாற்றிக் கொண்டு அதன் பெயரில் ஒரு ஆதார் கார்டையும் வாங்கியுள்ளார்.

    ஆனால் 2021 டிசம்பரில் ஆசிரமத்தின் மேனேஜர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மோசடி செய்து விட்டு அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து அவர் ராஜஸ்தானில் உள்ள பரத்பூருக்கு சென்று 2024 ஜூலை 8 வரை அங்கேயே தங்கி இருந்தார். பின்னர் திருநெல்வேலிக்கு வந்தவர் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார்,

    இதனை தெரிந்துகொண்ட சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலி நரசிங்க நல்லூர் கிராமத்தில் இருந்த அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    • மேலாளர், 6 சதவீத வட்டி கிடைக்கும் என அறிவுறுத்தி ஸ்வேதாவை கணக்கு தொடங்க வைத்தார்
    • புது மேலாளர் பதவியேற்றதும் ஸ்வேதாவிற்கு பணம் திருடு போனது தெரிய வந்தது

    கடந்த 2016ல், வெளிநாடு வாழ் இந்தியர்களான ஸ்வேதா சர்மா (Shveta Sharma) என்பவரும் அவர் கணவரும் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளில் இரு தசாப்தங்களுக்கும் மேல் வசித்து விட்டு இந்தியாவிற்கு திரும்பினர்.

    இந்தியாவின் பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) மேலாளர் ஒருவர் அந்த தம்பதியினருக்கு அறிமுகமானார்கள்.

    அந்த மேலாளர், அமெரிக்காவில் அத்தம்பதியினர் ஈட்டிய வருவாயை அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்தால், வட்டி விகிதம் மிக குறைவாக இருக்கும் என்பதால் இந்தியாவில் 6 சதவீதம் வரை வட்டி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறி அவர் வேலை பார்க்கும் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்ய அறிவுறுத்தினார்.

    ஸ்வேதா பெயரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கணக்கு ஒன்றை அந்த வங்கி மேலாளர், டெல்லியின் பழைய குருக்ராம் பகுதியில் உள்ள தான் வேலை பார்க்கும் ஐசிஐசிஐ வங்கியில் தொடங்க உதவி செய்தார்.

    2019 செப்டம்பர் மாதத்திலிருந்து 2023 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஸ்வேதா இந்த புதிய கணக்கிற்கு அமெரிக்காவிலிருந்து தனது சேமிப்புகளை மாற்றினார்.

    இந்த நிதி பரிமாற்றங்கள் அனைத்திற்கும் மேலாளர் வங்கி ரசீதுகள் வழங்கி மின்னஞ்சல்களையும் அனுப்பி வந்தார். இவை தவிர முறையாக உறையிட்ட கோப்புகளையும் அனுப்பி வந்தார்.

    2024 ஜனவரி மாதம் புது மேலாளர் அந்த வங்கியில் பதவியேற்றார். அவருடன் புதிய வங்கி சேமிப்பு திட்டங்கள் குறித்து பேசும் போது ஸ்வேதாவின் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஸ்வேதா இழந்துள்ள தொகை அசல் மட்டும் ரூ. 15,74,92,140.00 ($1.9 மில்லியன்) என தெரிய வந்துள்ளது. இதற்கான வட்டியுடன் கணக்கிட்டால் இது மேலும் பல லட்சங்கள் அதிகரிக்கும்.

    ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர் (autoimmune disorder) நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்வேதா, இந்த மோசடியினால் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தனியார் வங்கி நடத்திய ஆய்வில் மோசடி நடந்திருப்பது உண்மை என்றும், ஸ்வேதாவிற்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என்றும் அவரது பணம் மொத்தமும் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "நான் செய்யாத தவறுக்கு பழி வாங்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. எனக்கு உறக்கமே வரவில்லை" என வேதனையுடன் தெரிவித்தார் ஸ்வேதா.

    அந்த வங்கி மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு துறை மற்றும் வங்கி இணைந்து வழக்கை விசாரித்து வருகிறது.

    • இங்கிலாந்து அரச குடும்பத்தினர் இவர்களின் வாடிக்கையாளர்கள்
    • 20 நிமிடங்களில் கணக்கிலிருந்து ரூ. 16,18,31,197.92 காணாமல் போனது

    ஒப்பனை சாதனங்களில் உயர்ரக தலை வாரும் சீப்புகள் மற்றும் பிரஷ் போன்ற 250க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல இங்கிலாந்து நிறுவனம், கென்ட் பிரஷஸ் (Kent Brushes). 1777ல் தொடங்கபட்ட இந்நிறுவனம், இத்தொழிலில் 245 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவர் ஸ்டீவ் ரைட் (Steve Wright).

    இவர்களின் வாடிக்கையாளர்களில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் வங்கி கணக்கை பார்க்லே வங்கி கையாண்டு வந்தது.

    கடந்த ஜூலை மாதம், அந்நிறுவன நிதி நிர்வாக அதிகாரிக்கு, வங்கியிலிருந்து அழைப்பதாக தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கி பணம் களவாடப்படும் சூழல் இருப்பதாகவும் அதனை தடுக்க சில தரவுகள் தேவை எனவும் அந்த அழைப்பில் கேட்கப்பட்டது. அதை நம்பிய அவர், கேட்கப்பட்ட விவரங்களை தொலைபேசியிலேயே வழங்கினார். கடவுச்சொல் உட்பட முக்கிய தகவல்கள் கேட்கப்பட்டதால் அதனையும் தெரிவித்தார்.

    இதையடுத்த 20 நிமிடங்களில் அந்நிறுவன வங்கி கணக்கிலிருந்து ரூ.16,18,31,197.92 (1.6 மில்லியன் பவுண்ட்) தொகை காணாமல் போனது.

    அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி ஸ்டீவ் ரைட்டிற்கு தகவல் தர, அவர்கள் வங்கியை தொடர்பு கொண்டு அங்குள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

    இது குறித்து ஸ்டீவ் ரைட் கூறியதாவது:

    பார்க்லே வங்கி எங்கள் பணத்தை மீண்டும் வழங்கி விடும் என நம்பினோம். ஆனால், இதுவரை வங்கி எங்கள் இழப்பிற்கு ஈடு எதுவும் தரவில்லை; காவல்துறையும் எவரையும் கைது செய்யவில்லை. இதுவரை இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மிக பெரும் குற்றத்தை துப்புதுலக்க இது வழிமுறை அல்ல. புகார் அளித்த ஒரு மாதம் கடந்து "வழக்கு முடிந்து விட்டது" (case closed) என வங்கியிலிருந்து ஒரு கடிதம் வந்தது; அவ்வளவுதான். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான குற்றங்கள் தரப்பட வேண்டும்.

    இவ்வாறு ஸ்டீவ் தெரிவித்தார்.

    "எந்த வாடிக்கையாளரிடமும் கடவு சொல் உட்பட முக்கிய விவரங்களை எந்த வங்கியும் கேட்பதில்லை. இது போன்ற மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்பது மட்டுமே பார்க்லே வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் அதிக அளவில் இத்தகைய மோசடிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது இங்கிலாந்திலும் போலி தொலைபேசி அழைப்பு மூலம் இது போன்ற மோசடிகள் நடைபெறுவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

    • வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சி யில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை அட்டையை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 71 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப் பங்கள் அனைத்தும், அரசி டம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிகளைப் பூர்த்தி செய்த மகளிர் பய னாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.

    அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப் பங்களில் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18 முதல் அனுப்பப்படும்.

    இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சி யருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

    தற்போது தொலைபேசி வாயிலாக போலியான நபர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாகவும், ஓ.டி.பி. குறுஞ்செய்தி குறித்தும் பொது மக்களி டையே கேட்கப்பட்டு மோசடி நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இவரது வங்கிக்கடன் 2016 ஜூலை மற்றும் 2019 இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
    • பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.2,468.51 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி போன்றவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பவர், குஜராத் மாநிலம், சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கப்பல் கட்டும் தள நிறுவனமான 'ஏ.பி.ஜி. ஷிப் யார்டு' தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் ஆவார்.

    இவர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 842 கோடி கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.

    பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.2,468.51 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது. இதுதான் நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடி என கருதப்படுகிறது.

    'எர்ணஸ்ட் அண்ட் யெங்' நிறுவனம் நடத்திய தடயவியல் ஆய்வில், 2012 முதல் 2017 காலகட்டத்தில், ரிஷி கமலேஷ் அகர்வாலும் அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, அரசு பதவிகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை அரங்கேற்றி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    வங்கிக்கடனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக பெற்றுக்கொண்டு, அதற்கு செலவிடாமல் பிற வழிகளில் செலவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது இவரது வங்கிக்கடன் 2016 ஜூலை மற்றும் 2019 இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரிஷி கமலேஷ் அகர்வால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது.

    போலி ஆவணம் கொடுத்து வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான சகோதர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் செந்தில்(வயது 58). இவருடைய தம்பி ரவிச்சந்திரன்(56). இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை மாவட்டம் காரமடையில் பாலித்தீன் சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்கள்.

    இந்த நிறுவனத்தின் தேவைக்காக இருவரும் திருப்பூர் கொங்குநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 கோடி கடன் கேட்டனர்.

    இதற்காக ஈரோட்டில் தங்கள் பெயரில் உள்ள 1¼ ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் ஆவணங்களை வங்கியில் அடமானமாக வைத்து கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றனர். அதன்பிறகு கடனுக்கான தவணைத்தொகையை உரிய முறையில் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் கடன் தொகையை செலுத்தாததால் அவர்களுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வங்கி அதிகாரிகள் பார்த்தபோது, அந்த ஆவணங்களில் குறிப்பிட்டபடி அங்கு நிலம் எதுவும் இல்லை. இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். செந்தில், ரவிச்சந்திரன் இருவரும் வங்கியில் அடமானம் வைத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதும், இருவரும் திட்டமிட்டே போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வங்கியின் உதவி பொது மேலாளர் ஜெகத்ரட்சகன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில், அவருடைய தம்பி ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டலை கைது செய்த இந்தோனேசியா போலீசார் இந்தியாவிற்கு அவரை நாடு கடத்தினர். #Indonesia #VinayMittal #BankFraud
    புதுடெல்லி:

    கார்ப்பரேசன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் மொத்தம் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டல். அந்த வங்கிகளின் கோரிக்கையை ஏற்று, அவர் மீது 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், சி.பி.ஐ. 7 வழக்குகளை பதிவு செய்தது. டெல்லி மற்றும் காசியாபாத் கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்தது.

    இதையடுத்து, வினய் மிட்டல், நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தலைமறைவானதாக கோர்ட்டு அறிவித்தது. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அவர் இந்தோனேசியா நாட்டின் பாலியில் குடும்பத்துடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அடிப்படையில், அவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தோனேசியா போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அதிபர் சமீபத்தில்தான் ஒப்புதல் அளித்தார்.



    அதன்படி, இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வினய் மிட்டல் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #Indonesia #VinayMittal #BankFraud 
    வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான ரூ.637 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NiravModi
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையை தலைமை இடமாக கொண்டு நகை கடைகள் நடத்தி வந்தார்.

    நகை வடிவமைப்பு மற்றும் வைர வியாபாரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் அவர் முதன்மை பெற்று இருந்தார்.

    வைர வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக அவர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் கடன் வாங்கினார். பிறகு அந்த தொகை அதிகரித்தது. மேலும் சில வங்கிகளிலும் கடன் பெற்றார்.

    ஆனால் கடன் தொகையை அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தவில்லை. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை அவர் வங்கிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டி இருந்தது. அவர் கடனை திருப்பி தராததால் வங்கிகள் அவர் மீது புகார் கூறின.

    இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நிரவ் மோடி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் பணப்பரிமாற்ற மோசடிக்குறித்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் நிரவ் மோடி கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் ஆங்காங்கில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. கடந்த ஜூன் மாதம் அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிய வந்தது.

    தொழில் அதிபர் நிரவ் மோடி வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வேறு எந்த முயற்சியும் எடுக்காததால் அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டது. முதலில் குஜராத்தில் உள்ள அவரது 4 மில்கள் முடக்கப்பட்டன.

    பிறகு மும்பையில் அவருக்கு சொந்தமான ரூ.900 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிரவ் மோடியின் 523 கோடி ரூபாய் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களும் முடக்கப்பட்டன.



    இந்த நிலையில் தற்போது நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான ரூ.637 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக இன்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நிரவ் மோடிக்கு சொந்தமாக 2 அசையா சொத்துக்கள் உள்ளன. ரூ.216 கோடி மதிப்புள்ள அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    வெளிநாட்டு வங்கிகளில் 5 கணக்குகளை நிரவ் மோடி வைத்துள்ளார். அந்த கணக்குகளில் ரூ.278 கோடி முதலீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பணம் முடக்கப்பட்டுள்ளது. அது போல ஆங்காங்கில் உள்ள வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.22.69 கோடி மதிப்புள்ள தங்க-வைர நகைகள் முடக்கப்பட்டுள்ளன.

    நிரவ் மோடியை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியுள்ளது. அவரது சொத்துக்களில் 90 சதவீதம் முடக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi
    வங்கியில் கடன் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஊரை விட்டு சென்ற குஜராத் தொழில் அதிபர் பற்றி சித்தார்த் கருத்து தெரிவித்திருக்கிறார். #Siddharth
    இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு ஓடினார். சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும் பஞ்சாப் வங்கியில் பெற்ற ரூ.12 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். மெகுல் சோக்சியும் வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளார்.

    இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் சந்தேசராவும் இப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருக்கிறார். இவர் பல்வேறு வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். வங்கி கடன் பெறுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும் பினாமி பெயரில் உள்ள நிறுவனங்களையும் பயன்படுத்தி உள்ளார்.

    இவர் நைஜீரியாவுக்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடியை நடிகர் சித்தார்த் கண்டித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர், ‘‘இன்னொரு குஜராத்தி சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். நீங்கள் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதாகத்தானே சொன்னீர்கள். ஆனால் இப்போது அதற்கு எதிர்மறையாக நடந்து வருகிறது. இங்கு சாதாரண இந்திய குடிமகனின் பண மதிப்பு நீக்கம் செய்யப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். 

    நிரவ் மோடியும் குஜராத்காரர் என்பதால் சித்தார்த் இன்னொரு குஜராத்தி என்று நிதின் சந்தேசராவை டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.
    5000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய குஜராத் தொழிலதிபர் துபாயில் இருந்து நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. #GujaratPharma #BankFraud #NitinSandesara
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 



    மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐயும் அவரைத் தேடி வருகிறது.

    இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் நிதின் சந்தேசரா தற்போது துபாயில் இல்லை என்றும், அவர் தன்  குடும்பத்தினருடன் நைஜீரியா நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவுடன் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தமோ பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தமோ இல்லாததால் அங்கிருந்து நிதினை இந்தியாவுக்கு கொண்டு வருவது கடினம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே துபாயில் நிதின் சந்தேசரா கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும், இந்த தகவல் வெளியாவதற்கு முன்பாகவே அவர் நைஜீரியாவுக்கு சென்றுவிட்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். #GujaratPharma #BankFraud #NitinSandesara
    நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான விஜய் மல்லையா “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

    இந்நிலையில், விஜய் மல்லையா கூற்று தொடர்பாக அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், பாராளுமன்றத்தில் அவரை சந்தித்ததுண்டு. 

    பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு பாராளுமன்ற வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார். 

    இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    வங்கி மோசடி விவகாரத்தில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. #VijayMallaya
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை லண்டன் கோர்ட் நீதிபதி கேட்டதன் பேரில், இந்தியா தாக்கல் செய்தது.

    இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறினார்.

    “என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், கோர்ட் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” எனவும் மல்லையா குறிப்பிட்டார்.

    முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, “சிபிஐ கொடுத்த நிர்பந்தம் காரணமாகவே மல்லையா மீது வங்கிகள் புகார் அளித்தது” என மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.  

    வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாடு கடத்தக்கோரும் வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். 
    ×