என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BCCI"

    • ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் நினைவு பரிசு வழங்கினார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது.

    ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார்.

    • 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை.

    சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் நவீன கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை விளக்கியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வருவாய் பகிர்வு முறை எப்படி வளைந்துள்ளது என்பதையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 38.5 சதவீத வருவாயை எடுத்துக் கொள்வதாக எடுத்துரைத்துள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த அறிக்கையில், பிசி.சி.ஐ. ஏன் ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வில் அதிக பங்குகளை எடுத்துக் கொள்கிறது என்பது பற்றிய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்த அறிக்கையில் ஐ.சி.சி. வருவாயில் பி.சி.சி.ஐ. பங்களிப்புகள் என்னென்ன என்பது பற்றியும் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இதுதவிர இந்திய சந்தைக்கான ஒளிபரப்பு உரிமம் எவ்வளவு தொகைக்கு விற்பனையாகிறது என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. மேலும், இந்த தொகை காரணமாக ஐ.சி.சி.க்கு கிடைக்கும் நிதி எவ்வளவு என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. இந்திய அணி போட்டிக்காக விளம்பரதாரர்கள் எந்தளவுக்கு வரிசையில் நிற்கின்றனர் என்பது பற்றியும் இந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக ஐ.சி.சி. வருவாயில் பெரும் பங்கு பி.சி.சி.ஐ.க்கு செல்வதும் கிட்டத்தட்ட 50 சதவீத தொகை முதல் மூன்று பெரிய நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. இது தவிர பி.சி.சி.ஐ.-க்கு வழங்கப்படும் 38.5 சதவீத நிதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

    அறிக்கை குறித்து சந்தை வல்லுநர்கள் கூறும் போது, பால் மார்ச் தலைமையிலான ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், ஒட்டுமொத்த விளையாட்டியின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று தெரிவித்தனர்.

    • ‘ஏ’ கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
    • ஹர்லீன் தியோல், மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி உள்ளிட்டோருக்கு இடமில்லை.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

    'ஏ' கிரேடில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அதிரடி பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா 'பி' கிரேடிலும், ஸ்ரேயங்கா பட்டீல், திதாஸ் சாது, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கவுர், உமா சேத்ரி, யாஸ்திகா பாட்டியா, ராதா யாதவ், சினே ராணா, பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் சி பிரிவிலும் உள்ளனர். ஹர்லீன் தியோல், மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி உள்ளிட்டோருக்கு இடமில்லை.

    • இரண்டு அணிகளும் சமமான ஸ்கோரை பெற்றால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.
    • சூப்பர் ஓவரில் வெற்றி பெறும்வரை தொடர்ந்து நடத்தப்படும்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐபிஎல் நிர்வாகம் 10 அணி கேப்டன்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது. அதன்பின் ஐபிஎல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு போட்டியின்போது 2-வது இன்னிங்சில் 10 ஓவருக்குப் பிறகு புதிய பந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகிவிடுதால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவதாக கூறியதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சூப்பர் ஓவர் குறித்து ஐபிஎல் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்திருந்தால் போட்டி டை என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டும். இதில் ஒவ்வொரு அணியின் 3 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய முடியும். 6 பந்துகள் வீசப்படும். இரண்டு விக்கெட் இழந்தால் அணியின் பேட்டிங் முடிவுக்கு வரும்.

    ஒருவேளை சூப்பர் ஓவரின்போது இரண்டு அணிகளும் சமநிலையான ஸ்கோரை பெற்றால், மீண்டும் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இப்படி ஒரு வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் சென்று கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு ஒரு மணி நேரம்தான் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை முறை வேண்டுமென்றால் சூப்பர் ஓவர் விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளது.

    • பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
    • இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

    இதனையொட்டி 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் நடப்பு சீசனில் புதிய விதி ஒன்றும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரவு நேர ஆட்டங்களில் 2-வது இன்னிங்சின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடுகிறது. ஈரமான பந்தை பவுலர்களால் சரியாக பிடித்து துல்லியமாக வீச முடிவதில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்குவித்து விடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த ஐ.பி.எல்.-ல் இரண்டு பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது 2-வது இன்னிங்சில் 10-வது ஓவருக்கு பிறகு பந்து வீசும் அணியின் கேப்டன் பந்து அதிகம் ஈரமாகி விட்டதாக நினைத்தால் நடுவரிடம் புதிய பந்து கேட்கலாம். பனியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நடுவர் ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பந்தை மாற்றுவது குறித்து முடிவு செய்வார். இந்த புதிய விதி நடப்பு சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    • கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. தடை விதித்தது.
    • மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. தடை விதித்தது.

    இந்நிலையில், கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கேப்டன்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்தத் தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.

    இந்த நடைமுறை நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே அமலுக்கு வருகிறது என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

    இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • வீரர்கள் தங்களின் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது.
    • வீரர்களுடன் குடும்பத்தினரை அனுமதிப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் வெளிநாட்டு தொடர்களின் போது, வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்தார். 'போட்டி முடிந்த பிறகு அறைக்கு சென்று தனியாக சோகத்தில் இருக்க விரும்பவில்லை. களத்தில் சரியாக செயல்படாத சூழலில், குடும்ப உறுப்பினர்கள் உடன் இருக்கும் போது அத்தகைய ஏமாற்றத்தில் இருந்து சீக்கிரம் வெளிவர முடியும். குடும்பத்தினருடன் இருக்கும் முக்கியத்துவத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை' என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கோலியின் ஆட்சேபனை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா பதில் அளிக்கையில் 'வீரர்களுடன் குடும்பத்தினரை அனுமதிப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. இது இந்திய அணிக்கும், நமது கிரிக்கெட் வாரியத்திற்கும் மிகவும் முக்கியமானது. வீரர்கள் தங்களின் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது. அவர்களுக்கு சில மனக்கசப்புகள் அல்லது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் இந்த விதிமுறை அணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த விதிமுறை ஒரே நாள் இரவில் உருவாக்கப்பட்டது அல்ல. இத்தகைய நடைமுறை பல ஆண்டுகளாகவே உள்ளது. அவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    இதற்கிடையே, ஐ.பி.எல். 10 அணிகளின் கேப்டன்களுடன் கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. பந்தை பளபளப்பாக்க அதன் மீது எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து கேப்டன்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப முடிவு செய்யப்பட உள்ளது.

    • தொடர் தோல்வியையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
    • இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பத்தை அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முக்கியமான ஒன்றாக வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பம் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று கூறியது.

    இதனைப் போலவே தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் துபாய் பயணம் செய்த இந்திய அணி, வீரர்களின் குடும்பங்கள் அவர்களோடு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்கவில்லை என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி அந்த விதியில் தனக்கு உடன்பாடு இல்லை என சில முக்கிய விஷயங்களை கூறினார்.

    அதில், எந்த வீரையாவது உங்களின் குடும்பம் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்டால் அவர்கள் ஆமாம் என்று தான் கூறுவார்கள். போட்டி முடிந்த பிறகு நான் என் ரூமுக்கு சென்ற தனியா சோகமாய் இருக்க விரும்பல. நான் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் வகையில் பிசிசிஐ விதிகளை தளர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நீண்ட நாட்கள் குடும்பத்தினர் வீரர்களுடன் இருக்க விரும்பினால் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • 1967 மற்றும் 1975-க்கு இடையில் 29 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
    • சையத் அபித் அலி இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1018 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இந்தியாவின் மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகளில் ஆல்ரவுண்டராக முக்கிய பங்கு வகித்திருந்தார்.

    அவரது காலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அபித் அலி, 1967 மற்றும் 1975-க்கு இடையில் 29 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். குறிப்பாக, 1971இல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் இந்தியாவின் வரலாற்று வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

    83 வயதான சையத் அபித் அலி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.

    சையத் அபித் அலி இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1018 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் 1941 செப்டம்பர் 9-ம் தேதி ஐதராபாத்தில் பிறந்த அபித் அலி, 1967-68 -ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அடிலெய்டில் நடந்த தனது முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 33 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    தொடர்ந்து சிட்னியில் நடந்த ஒரு மறக்க முடியாத போட்டியிலும் அவர் சிறந்த பங்களிப்பைத் தந்தார். 1975-ம் ஆண்டு நடைபெற்ற தொடக்க ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். மான்செஸ்டரில் நியூசிலாந்திற்கு எதிரான ஒரு சிறப்பான ஆட்டத்தில், அவர் 98 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினார்.

    அவர் இன்னும் நவீன யுகத்தில் விளையாடியிருந்தால், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்திருப்பார் என அவர் காலத்தைய ஜாம்பவான்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்.
    • பாலின பாகுபாட்டைகளையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில்,

    இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ. 6 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டைகளையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்" என்றார்.

    • இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கை.
    • ஜெய்ஷா அறிவிப்புக்கு முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா வரவேற்பு.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    பாலியல் பாகுபாட்டை சரி செய்யும் வகையில் பிசிசிஐ முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம். இந்திய மகளிர் அணிக்கு, ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்புக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் புத்திசாலித்தனமான முன்னற்ற நடவடிக்கையாக இது கருதப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


    இதேபோல் பிசிசிஐயின் அறிவிப்புக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கும் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல,உலகெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ அறிவிப்புக்கு விராட்கோலியும் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

    ×