என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahmotsavam"

    • 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 19-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா வாகன சேவை விவரங்கள் வருமாறு:-

    20-ந்தேதி காலை கொடியேற்றம், இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை முத்து பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமன் வாகன வீதிஉலா, 24 -ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா.

    25-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வாகன வீதிஉலா, 28-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகன வீதிஉலா தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கொரோனா பரவலால் கோவில் உள்ளே நடந்த வாகனச் சேவை, 2 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு மாடவீதிகளில் நடப்பதால் பக்தர்களிடையே அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.

    • திருச்சானூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.
    • பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. நிறைவு நாளில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. அதற்காக நடந்து வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது.

    கூட்டத்துக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    திருச்சானூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவ விழா பாணியில் பிரமாண்டமாக நடத்தப்படும். வாகனச் சேவை நிகழ்ச்சிகள் அனைத்தும் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    பஞ்சமி தீர்த்தத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, இந்த முறை பக்தர்களுக்கு சிறப்பு காம்பார்ட்மெண்டுகள் மற்றும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைத்துத்தரப்படும்.

    கோவிலில் இருந்து திருச்சானூர் செல்லும் வழித்தடங்களில் தேவையான சாலைகளை சீரமைத்துக் கொள்ளலாம். போக்குவரத்துப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராட செல்லும்போது, தள்ளு முள்ளு நடக்கக்கூடாது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பஞ்சமி தீர்த்தம் அன்று 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இணை அதிகாரி வீரபிரம்மன், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, கமிஷனர் அனுபமாஅஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரிவட்டம் கட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது.
    • கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் தாயாருக்கு பட்டு வஸ்திரம், மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசு சார்பாக துணை முதல்-மந்திரி நாராயணசாமி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க பத்மாவதி தாயார் கோவிலுக்கு வந்தார். கோவிலுக்கு வந்த துணை முதல்-மந்திரியை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைபடி வரவேற்றனர்.

    கோவில் வாசலில் துணை முதல்-மந்திரியின் தலையில் பரிவட்டம் கட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரம், மங்கல பொருட்களை வைத்து துணை முதல்-மந்திரியின் தலைமீது வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து மேளதாளம் மற்றும் மங்கல இசை முழங்க ஊர்வலமாகக் கோவிலுக்குச் சென்று மூலவர் பத்மாவதி தாயாரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து, அம்பாளை தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவிலில் இருந்து வெளியே வந்ததும், துணை முதல்-மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பத்மாவதி தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தது தனது கடந்த பிறவிக்குக் கிடைத்த புண்ணியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய திருச்சானூருக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் பசுமையாக இருக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் தாயாரிடம் வேண்டி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது.
    • கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9.45 மணிக்கு மிதுன லக்னத்தில் கங்கணப்பட்டர் மணிகண்ட பட்டர் தலைமையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் தங்கக் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.

    முன்னதாக கோவிலில் காலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம் நடந்தது. அதே சமயம் யாகசாலையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதையொட்டி ரக் ஷாபந்தனம், பிராணப்பிரதிஷ்டை, ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.

    நெய், பால், தயிர், தேன், மஞ்சள்நீர் ஆகியவற்றை பாத்திரங்களில் வைத்து, பரவாசுதேவர், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசா, பத்மநாபன், தாமோதரன் ஆகிய தெய்வங்கள் ஆவாஹனம் செய்யப்பட்டது. சதுர் வேதங்கள் பாராயணம் நடந்தது. தங்கக்கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்த பின் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உற்சவர் பத்மாவதி தாயார் முன்னிலையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் கொடியேற்றப்பட்டது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய வரும் திரளான பக்தர்களுக்கு விரிவான வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை, இரவு வேளையில் நடக்கும் வாகனச் சேவையில் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்யலாம், என்றார்.

    • தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
    • ஊஞ்சல்சேவை நடைபெற்றது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை நடந்த இந்த வீதி உலாவின் போது பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். வாகன வீதி உலாவின் முன்பு பெண்கள் நடனம், கோலாட்டம் மற்றும் பஜனை நிகழ்த்தியபடி சென்றனர்.

    சித்தூர் மாவட்டம் நிம்மனப்பள்ளியை சேர்ந்த வெங்கடரமண பஜனை குழுவினர் கிராமிய பாரம்பரிய பில்லனகுரோவி பஜனைகளை நடத்தினர்கள். இதேபோல் ராஜமுந்திரியை சேர்ந்த சிவகேசவ கோலாட்ட பஜனை மண்டலி கலைஞர்களின் பாரம்பரிய நடனம், திருப்பதியை சேர்ந்த சதானந்த நிலையவாச பஜனை கலைஞர்கள், திருப்பதியை சேர்ந்த வைபவ வெங்கடேஸ்வரா கோலாட்ட குழுவினர்களின் கோலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை கிருஷ்ணசுவாமி மண்டபத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல்சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    • தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
    • இன்று பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியில் இருந்து 1.30 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் அனுமன் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    • இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று தங்கத்தேரோட்டம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட காளைகள், குதிரைகள், யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டம், நடனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    வாகனச் சேவையில் பங்கேற்று சோர்வடைந்த உற்சவர் பத்மாவதி தாயாருக்கு நிவாரணம் வழங்க நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. நான்கு மாட வீதிகளில் உற்சவர் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலாவில் பங்கேற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தனநீரை தெளித்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    • இன்று இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
    • 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று தங்க யானை வாகன வீதிஉலா நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    நேற்றும், இன்றும் வாகனங்களில் எழுந்தருளும் உற்சவர் பத்மாவதி தாயாருக்கும், மூலவருக்கும் அலங்காரம் செய்வதற்காக, திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை பலத்த பாதுகாப்போடு திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது. காசு மாலைைய திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு பெட்டியில் வைத்து வழியனுப்பி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் நிறைவுநாளான 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    தாயாருக்கு விருப்பமான கஜ வாகனச் சேவைக்காக திருமலையில் சிறப்புப்பூஜைகள் செய்து தங்கக் காசு மாலையை திருமலையில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து திருச்சானூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருமலையில் நடந்த நிகழ்ச்சியில் பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, பேஷ்கார் ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

    திருச்சானூரை அடைந்த காசு மாலை அங்குள்ள மஞ்சள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தங்க காசுமாலையை இணை அதிகாரி வீரபிரம்மனிடம் வழங்கினார்.

    அங்கு தங்கக் காசு மாலைக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மூலவர் பத்மாவதி தாயாருக்கும், தங்க யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    • இன்று சூரிய பிரபை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை 'வெண்ணெய் ஸ்ரீகிருஷ்ணர்' அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். மதியம் 12 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து மாலை 4.20 மணியில் இருந்து மாலை 5.20 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் குழுமியிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள் பாலித்தார். இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
    • இன்று இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.10 மணியில் இருந்து காலை 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து ரத மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பாலாடைக்கட்டி, பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    • குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
    • நாளை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 19-ந் தேதி அங்குரார்பணமும், 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    இதையடுத்து தினமும் காலை, மாலை என இருவேளையில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். நேற்று காலை ரத உற்சவமும், மாலை அம்ச வாகன ஊர்வலம் நடந்தது.

    பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனை கண்டுகளிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சானூரில் குவிந்தனர்.

    காலை 7 மணிக்கு பல்லக்கு உற்சவமும், 11.20 மணி முதல் 11.50 மணி வரை பஞ்சமி தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    முன்னதாக அச்சர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து தீர்த்தவாரி குளத்திற்கு கொண்டு வந்தனர். குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

    குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் புனித நீராடினர்.

    இதையடுத்து மாலை குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இரவு 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கொடி இறக்கம் நடைபெறுகிறது. நாளை மாலை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

    • இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
    • 16-ந்தேதி திருவூடல் உற்சவம் நடக்கிறது.

    சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலத்தை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், தட்சிணாயண புண்ணியகால பிரம்மோற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 6.15 மணி அளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். நேற்று முதல் தொடர்ந்து 10 நாட்களும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதி உலா நடைபெறுகிறது. 10-ம் நாளான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 16-ந்தேதி (திங்கட்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    ×