search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by polls"

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறப்போவதில்லை என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தே.மு.தி.மு.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈசநத்தம் மூன்றுரோடு, அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர், சின்னதாராபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொள்கை பிடிப்பில்லாதவர் தான் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிற்கிறார். சுயநலம் கருதி பச்சோந்தியாய் இருப்பவர்களை கண்டறிந்து தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ. இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் தொகுதிக்கு மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

    எனவே தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனுக்கு மக்கள் ஆதரவினை தர வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்த வரையில் ஒரு வாக்குறுதி சொன்னால் சொன்னது தான். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இதனால் மக்களின் எழுச்சியால் தமிழகம்-புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

    2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிற சமயத்தில் மின்தட்டுப்பாடு நிலவியது. அப்போது அதற்கு உரிய தீர்வு காணப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியது. இதனால் தற்போது எங்கும் மின் வினியோகம் அடிக்கடி நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. எங்களது கூட்டணி 2011-ல் அமைந்த கூட்டணி. ஆளும் கட்சி-எதிர்கட்சியாக அமைந்த கூட்டணியாகும்.

    சில துரோகிகளின் செயலால் அன்று கூட்டணி பிரிக்கப்பட்டது. ஆனால் கடவுளின் அருளால் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2011 தேர்தலின் வெற்றி வரலாறு, மீண்டும் 2019-ல் திரும்பி வரப்போகிறது. அப்படி நடக்கும் போது தமிழகம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். பிரதமர் மீண்டும் பதவி யேற்றவுடன், கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து சென்று நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்துவோம்.

    ஸ்டாலின் சொல்கிற எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது. எனவே வாக்கினை இரட்டை இலைக்கு செலுத்துங்கள். இரட்டை இலைக்கு வாக்கு தருவீர்களா? செந்தில்நாதனை வெற்றி பெற வைப்பதோடு எதிர்த்து போட்டியிடுபவதை டெபாசிட் இழக்க செய்வீர்களா? (அப்போது ஆம் என்று மக்கள் கோ‌ஷம் எழுப்பினர்).

    அம்மாவின் (ஜெயலலிதா) ஆன்மாவுக்கு பதில் சொல்லும் வகையில், துரோகம் செய்தவருக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என்று உங்கள் வீட்டு பெண்ணாக, சகோதரியாக அத்தனை பேரையும் பார்த்து கேட்டு கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி வந்தாலே கட்டபஞ்சாயத்து தான் நடக்கும். ஆனால் இன்று தமிழகம் இன்று அமைதி பூங்காவாக இருக்கிறது என்தை எண்ணி பார்த்து கொள்ளுங்கள். டி.டி.வி. தினகரன் சொல்கிற வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை. இன்று அ.தி.மு.க.வில் சிலிப்பர் செல் இருக்காங்க என்று சொல்லி வருகிறார். உண்மையான சிலிப்பர் செல்லே டி.டி.வி.தினகரன் தான். வேறு யாராவது அ.தி.மு.க.வை விட்டு சென்று கட்சி ஆரம்பித்தார்களா?. அவருக்கும் சரியான பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் தாளமுத்துநகர் பகுதியில் கூறியதாவது:-

    இந்த தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் அடிப்படையில் தொகுதி மக்களின் வருங்காலத்தை தீர்மானிக்க போகிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை தடம் புரளாமல் செய்து வரும் ஆட்சியாளர்கள். கிராமம் முதல் நகரம் வரை திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்தியாவிலேயே முதல் வரிசையில் அமரக்கூடிய ஆட்சியாளராக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

    22 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை அனைத்து மக்கள் நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் நலனை பேணி காக்கும் அணி. இல்லாதோர் நிலையை உயர்த்தும் அரசு. தொழிலாளர், விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி. மகளிர், மாணவர்கள், இளைஞர் நலனை காக்கும் ஆட்சி.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் வெறுக்கும் கூட்டணி. நம்முடைய கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமானிய மக்களோடு நெருங்கி பழகி வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகள் தொடர வேண்டும். பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அதிக திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசு இந்தியாவை வளர்ச்சியான பாதையில் அழைத்து செல்லும் அரசாக உள்ளது. அ.தி. மு.க.- பா.ஜனதா வுடன் கூட்டணி வைத்து இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பலகோடி ரூபாய் கிடைத்து உள்ளது என்பதுதான் உண்மை. தமிழக எதிர்க்கட்சி தலைவரை, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்த போது மக்கள் புரிந்து கொண்டார்கள். வடஇந்தியாவில் காங்கிரசின் தோல்வி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதன் அடிப்படையில் அரசியல் தொடங்கி உள்ளது. எனவே நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் மோகனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள் என்று ஈஸ்வரன் பேசியுள்ளார்.
    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்  மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  வேலாயுதம் பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே இலவச மின்சாரத்தை வழங்கி விவசாயத்தையும். அதேபோல் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இதன் மூலம் அதிக பயன் அடைந்தவர்கள் கொங்கு நாட்டு விவசாயிகள் தான். 

    அதேபோல் இந்த தேர்தலிலும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாகவும். நிலமற்ற ஏழைத்தொழிலாளர்கள் வாங்கியுள்ள 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடனையும் தள்ளுபடி செய்வதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிக்கு தான் விளை வித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இடைத் தரகர்கள் பயன் பெறும் நிலை இருந்தது. அதை மாற்றுவதற்காக கருணாநிதி உழவர் சந்தை கொண்டு வந்தார். அவை மீண்டும் சரியாக செயல்பட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். 

    இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்திய தி.மு.க., கொங்கு நாட்டில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை இனி மாற்றிக் காட்டுவோம். செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

    ஏழை மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய், சிலிண்டர் விலை மற்றும் கேபிள் கட்டணம் குறைப்பு,  கடன் தள்ளுபடி என்று தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள  திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை ஒரு குடும்பம் பயன்பெற உள்ளது. எனவேரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட்டு விடுவோம் என்கிற மனநிலையை மக்கள் மாற்றி விட்டு, சமூக அக்கறையுள்ள நல்ல கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரவக்குறிச்சியில் சீமான் பேசியுள்ளார். #seeman

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈசநத்தம் மற்றும் அரவக்குறிச்சி பள்ளி வாசல் அருகே உரூஸ் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்குவது தான் அரசின் கடமை. ஆனால் அது தனியார் முதலாளிகளின் வியாபார மையமாக மாற்றப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இதனால் 890 அரசு பள்ளிகளை மூடும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம் கிராமப்பகுதியில் 815 மதுக்கடைகளை திறக்க போகின்றனர். இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். சிலபள்ளிகளுக்கு 10 பேர் மட்டும் வருவதால் இத்தகைய நடவடிக்கை என அமைச்சர் கூறுகிறார். ஒரு 5 ஆண்டு எங்களிடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள். அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளுக்கு படிப்பதற்காக வர வைப்போம். உலக தரத்திற்கு தமிழக கல்வியை மாற்றுவோம்.

    ஒரு தனியார் முதலாளி தரமான கல்வியை கொடுக்க முடிகிற வேளையில், 8 கோடி மக்களால் நிறுவபெற்ற அரசால் தரமான கல்வியை கொடுக்க முடியாதா? 14 ஆயிரம் பள்ளிகளை திறந்து படிக்காத குழந்தைகளை எல்லாம் படிக்க வைத்தார் காமராஜர். ஆனால் மதுக்கடைகளை திறந்து குடிக்க வைக்கும் தற்போதைய நிலையை எண்ணி பார்க்க வேண்டும்.

    பொள்ளாச்சி பாலியல் விசாரணையில் என்ன நீதி கிடைத்திருக்கிறது. பெரம்பலூரில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணை காணொளி எடுத்து வைத்து மிரட்டுகின்றனர். அதை எங்கள் கட்சி வக்கீல் உதவிக்கரம் நீட்டினார். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல், எங்களது வக்கீலை கைது செய்து விட்டனர். எனவே இது போன்ற நிலையை மாற்ற வேண்டும் எனில், ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட்டு விடுவோம் என்கிற மனநிலையை மக்கள் மாற்றி விட்டு, சமூக அக்கறையுள்ள நல்ல கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

    நாங்கள் வாரிசு அரசியலை முன்னிலைப்படுத்தி வர வில்லை. தினக்கூலிகள், அன்றாடம் காட்சிகளின் வாரிசுகளாக அரசியலுக்கு வந்திருக்கிறோம். மக்களின் பசி, கண்ணீர், துன்பம் அறிந்த எங்களுக்கு தான் அதனை துடைக்க வழிதெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #seeman 

    சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி வேலூர் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். #acshanmugam #admk #parliamentelection

    வேலூர்:

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. ஆனால் இன்று நடக்க இருந்த வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் மட்டும் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது அவமானம்தான். மக்கள் ஓட்டுப்போடாமல் போனது துரதிஷ்டவசமானது.

    தேர்தல் நடத்துவது குறித்து எங்கள் வக்கீல் குழுவினருடன் ஆலோசனை நடத்தி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்தல் கமி‌ஷனுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள். வரும் மே மாதம் 19-ந் தேதி தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலுடன் நிறுத்தப்பட்ட இந்த பாராளுமன்ற தொகுதி தேர்தலையும் நடத்த வேண்டும்.

    ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து அங்கேயும் இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தேவையில்லாமல் வருமான வரித்துறையினருடன் உரசல் ஏற்படும். வருமான வரித்துறை இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் விரைவில் நடக்கும். தி.மு.க. வேட்பாளர் செய்த தவறால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் கமி‌ஷன் தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடியது. அவர்களின் முடிவுக்கு பிரதமர் மோடியை குறை கூறுவது தவறு. இந்த தேர்தலை ரத்து செய்தது ஒரு வகையில் தி.மு.க.வுக்கு சாதகமானதுதான்.

    பெரிய தோல்வியில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே தாமதம் செய்யாமல் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று காலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி ஆரணி கொசப்பாளையத்தில் ஏ.சி.சண்முகம் ஓட்டு போட்டார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் பேச முடியாமல் கண்கலங்கினார். பின்னர் நிறுத்தபட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலை 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி நடத்த வேண்டும் என்றார். #acshanmugam #admk #parliamentelection

    தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். #mkstalin #parliamentelection #edappadipalanisamy

    சங்கரன்கோவில்:

    தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தற்போது நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் தான். அதே நேரத்தில் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தபோது சூலூர் தவிர மீதமுள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தேர்தல் கமி‌ஷனிடம் முறையிட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

    ஆனால் இடைத்தேர்தலை நடத்த விடாமல் அ.தி.மு.க. அரசு சூழ்ச்சி செய்தது. ஏனென்றால் தி.மு.க. அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டால் தமிழகத்தில் நமது ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் கருதினர். இதனால் திட்டமிட்டு மத்திய அரசின் உதவியுடன் தேர்தல் கமி‌ஷனின் ஒத்துழைப்புடன் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. ஆனால் நாம் அதை விடவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தேர்தல் நடத்த உத்தரவு பெற்று உள்ளோம். தற்போது சூலூரையும் சேர்த்து 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இது நமக்கு கிடைத்த வெற்றி.

    இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி வீட்டுக்கு சென்று விடுவார். அடுத்த நொடி தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் வீட்டுக்கு சென்று விடும். ஏனென்றால், தமிழகத்தில் தற்போது நமது அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நடைபெற உள்ள 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றால் நமது எண்ணிக்கை 119 ஆக உயரும்.

    தமிழகத்தில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 234. அதில் மெஜாரிட்டிக்கு தேவையானது 117 எம்.எல்.ஏ.க்கள் தான். நம்மிடம் 119 எம்.எல்.ஏ.க்கள் வந்ததும் நமது ஆட்சி அமையும். இந்த கணக்கு வந்து விடக்கூடாது என்று தான் அவர்கள் கருதுகிறார்கள். 40க்கு 40 முடிவாகும்போது 22க்கு 22ம் நாம்தான் வெற்றி பெறுகிறோம். ஆகவே நாம் தயாராக வேண்டும். ஆட்சியில் இருந்து போவதற்கு அவர்களும் தயாராக இருக்க வேண்டும்.

    இந்தியாவின் பிரதமராக இளம் தலைவர் ராகுல்காந்தி வர இருக்கிறார். மோடி நான் ஏழைத்தாயின் மகன் என்று தற்போது கூறி வருகிறார். ஏழைத்தாயின் மகன் பணக்காரர்களுக்கு மட்டுமே ஆட்சி நடத்தி உள்ளார். சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை என அனைத்து விலைவாசியையும் உயர்த்தி விட்டார்.


    தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் என விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக ஆட்சி நடத்தினார். ஆனால் எப்படியெல்லாம் ஆட்சி நடக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக தற்போதைய ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் ஆட்சி தான் நடக்கிறது.

    தென்காசி தொகுதியில் ஜி.எஸ்.டி.யால் பீடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பீடி கம்பெனிகள் 1,000 பீடிகள் சுற்றுவதற்கு 800 பீடிக்கான மூலப்பொருட்களையே கொடுக்கிறது. இதனால் பீடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பீடி மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும். எனவே தி.மு.க. வேட்பாளர் தனுஷ் குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  #mkstalin #parliamentelection #edappadipalanisamy

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #CPI #Mutharasan #TNByPoll
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் ஆண்டுக் கணக்கில் காலியாக உள்ளன. அண்மையில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் இறந்ததின் காரணமாக அத்தொகுதியும் காலியாக உள்ளது. மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    உச்சநீதிமன்றத்தில், நியாயமான கால அவகாசத்தில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்களவைக்கான பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் நிலையில், பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவதற்குள்ளாக 4 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல்களையும் நடத்துவதே சாலப் பொருத்தமானது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #CPI #Mutharasan #TNByPoll
    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். #TNByPoll #SathyaPrathaSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய தேர்தல் கமி‌ஷன் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்தால் தேர்தலை நடத்துவோம்.

    அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு இன்னும் முடிவுக்கு வராததால் அதில் தற்போது தேர்தல் நடத்த இயலாது. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து விட்டது. அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி உள்ளோம்.

    தேர்தல் வேட்புமனு பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அவர்களது பேச்சில் ஏதாவது விதிமீறல் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.



    தேர்தல் விதிமீறல் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன. அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரிக்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ரூ.1500 பணம் கிடைக்கும் என்று பேசியதாக தி.மு.க. கொடுத்த புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அவரது அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தில் இதுவரை ரூ. 30 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4.45 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNByPoll #SathyaPrathaSahoo
    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 21 உறுப்பினர்கள் பதவிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. #Bypolls #TNassemblyBypolls
    புதுடெல்லி:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஓ.பிஎஸ், தினகரன் அணியாக பிரிந்து பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி, தினகரன் எதிர் அணி என்று மாறியது. கட்சியும் சின்னமும் ஈபிஎஸ், ஓபிஎஸ் வசமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நிறுவினார் தினகரன். அவரது அணியை ஆதரித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ப்படுவதாக தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

    இதனால், சென்னை பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர்,விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை உள்ளிட்ட 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    திருவாரூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உள்ளிட்டோர் உயிரிழந்ததால் இந்த தொகுதிகளும் காலியாக உள்ளன.

    மேலும், ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டது. இதனால், தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அன்றைய தினத்தில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் 26-ம் தேதி. வேட்புமனு பரிசீலனை 27-ம் தேதி நடைபெறும். #Bypolls #TNassemblyBypolls 
    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதாவுக்கு ரூ.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AnithaKumaraswamy #Assets
    பெங்களூர்:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.



    சட்டசபை தேர்தலில் குமாரசாமி 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார். இதில் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதை தொடர்ந்து ராமநகர்  மற்றும் ஜாம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா விபத்தில் இறந்ததால் ஜாம்கண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் ராமநகர் தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.

    அனிதா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பு குறிப்பிட்டு இருந்தது. 55 வயதான அனிதாவுக்கு ரூ.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.7.88 கோடி மதிப்புள்ள சொத்து கணவருக்கு சொந்தமானது.

    காங்கிரஸ் ஆதரவுடன் அனிதா களத்தில் நிற்கிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

    அனிதா 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுசிரி தொகுதியில் போடியிட்டு வெற்றிபெற்றார். 2012-ல் சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnithaKumaraswamy #Assets
    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோற்றால் அ.ம.மு.க.வுடன் இணைய தயாரா? என்று தங்க தமிழ்செல்வன் சவால் விடுத்துள்ளார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வருகிற 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட டி.டி. வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது குட்கா விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் குற்றத்திற்கு ஆளான அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் பதவி விலகி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்து அதன் பின்னர் மீண்டும் பதவியில் அமர வேண்டும்.


    ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையானதே. எங்கள்மீது பழி சுமத்தவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் இதுவரை ஓ.பி.எஸ்.ஐ. அழைத்து விசாரணை செய்யாதது ஏன்? இந்த ஆணையத்தால் உண்மை வெளிவராது.

    குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் உண்மையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மறைத்து விட்டனர். அப்போதே உண்மை தெரிந்திருந்தால் பதவியிலிருந்து அவர்களை தூக்கி இருப்பார்.

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார். இதேபோல் நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுடன் அ.தி.மு.க. வர தயாரா என்று சவால் விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
    ×