என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cabinet Reshuffle"
- காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு
- இலாகாக்களில் பெரும்பாலும் மாற்றங்கள் செய்யப்படும்.
சென்னை:
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் (2011-ம் ஆண்டு) போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அவரது மறைவுக்கு பிறகு டி.டி.வி.தினகரனின் கட்சிக்கு சென்று அதன் பிறகு தி.மு.க.வுக்கு வந்தவர்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் டிரைவர்-கண்டக்டர்கள் நியமனத்துக்கு பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
471 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி மீண்டும் உற்சாகமாகி உள்ளார்.
அவர் நேற்றிரவு நிருபர்களிடம் கூறும்போது, என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர் கொண்டு மீண்டு வருவேன் என்றும் கூறினார். என் மீது நம்பிக்கை பாசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன் என்று கூறி இருந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க இருப்பதால் அதில் செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில்பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மரபு சாரா எரிசக்தி மேம்பாடு துறையை தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதேபோல் மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனித்து வருகிறார்.
செந்தில்பாலாஜி அடுத்தவாரம் அமைச்சராகும் போது இந்த இலாகாக்கள் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆகும் போது கூடுதல் இலாகாக்கள் வழங்கப்பட இருப்பதால் அமைச்சர்கள் பலருடைய இலாகாக்களில் பெரும்பாலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
- அமைச்சரவையை முதலமைச்சர் 4 முறை மாற்றி அமைத்துள்ளார்.
- 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 3 வருடங்கள் நிறைவு பெற்று 4-வது ஆண்டில் சென்று கொண்டிருக்கிறது.
தமிழக அமைச்சரவையை இதுவரை 4 முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்துள்ளார்.
முதலாவதாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் சில மாதங்களில் 2-வது முறையாக மிகப்பெரிய அளவில் இலாகா மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்ட சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டன.
2022-ம் ஆண்டு டிசம்பரில் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டர். இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற்ற சில மாதங்களுக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு மே மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது ஆவடி சா.மு.நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது. இந்த துறையை பார்த்து வந்த மனோ தங்கராஜுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையுடன் நிதித்துறையும் கிடைத்தது.
இந்தநிலையில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி 2024 பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார்.
மீண்டும் இப்போது அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான முடிவில் முதலமைச்சர் உள்ளார். அடுத்த மாதம் செய்யப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப் பட உள்ளது.
அப்போது 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
அந்த வகையில் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும். ஆவடி சா.மு.நாசர் மீண்டும் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளது.
இதுதவிர சேலம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரது பெயர்களும் அமைச்சர் பட்டியலில் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த மாதம் 2-ந்தேதி அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் நல்ல நாளில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அடுத்தடுத்து பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் அவரது வெளிநாட்டு பயணம் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் ஆட்சியிலும், கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், விரைவாக பொருளாதார வளர்ச்சியை எட்டவும், அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகளை அவர் கையில் எடுத்துள்ளார்.
சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதி காரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த நிலையில் நிர்வாக ரீதியாக மேலும் சில மாற்றங்கள் செய்து விட்டு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமனம் செய்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியேற்றி வைக்க உள்ளார்.
அதன் பிறகு ஓரிரு நாளில் அவர் வெளிநாடு செல்வார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. தங்கம் தென்னரசு உள்பட சில மூத்த அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. அவற்றை பிரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் அமைச்சரவையில் புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த புதுமுகங்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார் கள் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது நிதி மற்றும் மின்சாரத் துறையை கவனித்து வருகிறார். இது அவருக்கு அதிக சுமையாக கருதப்படுகிறது. எனவே அவரிடம் உள்ள நிதி இலாகாவை வேறு ஒரு வருக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.
ஏற்கனவே நிதி அமைச்ச ராக இருந்த பழனிவேல் தியாகராஜன் வசம் மீண்டும் நிதி இலாகா ஒப்படைக்கப்படும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தி உள்ளன.
தி.மு.க.வில் உள்ள நடுத்தர வயதுள்ள பல எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர் பார்க்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமைச்சரவையில் சரியாக செயல்படாத சில ரை கட்சிப் பணிக்கு அனுப்பவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தீவிர கட்சி பணிகளிலும், ஆட்சி பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின் போது அவர் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவர் தனி கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் 2 நாட்கள் அவர் செய்த பிரசாரம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கும் பட்சத்தில் கட்சி பணிகளையும் மேம்படுத்த முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 1½ ஆண்டுகளில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் சுமார் 200 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டிப்பிடிக்க இப்போதே அதிரடி மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தை மேலும் எளிமைப்படுத்தி விரைவு படுத்த முடியும் என்றும் கருத்து நிலவுகிறது. எனவே அடுத்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
- அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- அமைச்சரவை மாற்றத்தால் தி.மு.க.வின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது என்று பேசினார்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோரது பிறந்தநாள் விழாவை திராவிட இயக்க எழுச்சி நாளாகவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இளைஞர்கள் எழுச்சி பெருவிழாவாகவும் நடத்தி வருகிறோம்.
அதனைத்தொடர்ந்து இன்றைக்கு 1½ கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 8 கோடி மக்களை பாதுகாத்து வரும் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, வறுமை ஒழிப்பு தினமாகவும், இளைஞர் எழுச்சி திரு விழாவாகவும், ஜெயலலிதா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சோதனை யான காலத்தில் அதனை வென்றெடுத்து சாதனைதான் படைத்துள்ளது. தற்போது தி.மு.க.வின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய அமைச்சரவை மாற்றத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
நாட்டின் நிதி அமைச்சர் இன்றைக்கு முதல்- அமைச்சரின் வீட்டு நிதியை கையாளும் ரகசியத்தை கூறியுள்ளார். இதற்கு உரிய பதிலை சொல்ல வேண்டும். அமைச்சரவை மாற்றம் என்பது கண்துடைப்பு நாடகமாகும்.
அதி.மு.க.வை அழிக்க பல்வேறு சூழ்ச்சிகளை ஸ்டாலின் செய்து பி.டீம், சி.டீம் என்பதை இயக்கினார். அந்த டீம் எல்லாம் அதி.மு.க.வின் துரோகத்தின் டீமாக உள்ளது.
அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலில்தான் நடைபெற்று வரும். ஜல்லிக் கட்டு விழாவிற்கு வாடி வாசல் மூடப்படுமா? என்று மக்கள் இன்றைக்கு அச்ச மடைந்துள்ளனர்.
அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டிற்கு மைதானத்தைக் கட்ட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. பாரம்பரியமாக வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமல், மூடுவிழா கண்டால் மக்களி டம் இருந்து கடும் கொந்த ளிப்பை தி.மு.க. சந்திக்க வேண்டியது வரும். இன்றைக்கு கலைஞர் நூலகம், கலைஞருக்கு பேனா அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்க பணம் இல்லை என்று கூறு கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.22 கோடி வரை சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்