என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Government"

    • மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கின்றனர்.
    • இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்.

    வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

    இந்த முடிவை விமர்சித்து மு.க,.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.

    அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

    இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

    ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

    இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • வேதனையான விலை உயர்வு + கட்டுப்பாடற்ற கொள்ளை = மிரட்டி பணம் பறிப்பதற்கான பாஜகவின் மந்திரம்!
    • மோடி அரசு ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது.

    மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

    ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

    இந்த முடிவை விமரிசித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசால் நமது வங்கிகள் 'கலெக்ஷன் ஏஜெண்டுகளாக' மாற்றப்பட்டுள்ளன!

    ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணம் அதிகமாக உள்ளது. 2018 மற்றும் 2024 க்கு இடையில் சேமிப்புக் கணக்குகள் மற்றும் ஜன் தன் கணக்குகளில் இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால், மோடி அரசு குறைந்தது ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது.

    மக்களை கொள்ளையடிப்பதற்கான பிற வங்கி கட்டணங்கள் :

    (வங்கிக்கணக்கு) செயலற்ற கட்டணம், ஒவ்வொரு ஆண்டும் ரூ.100-200 ஆகும். வங்கிக்கணக்கு ஸ்டேட்மென்ட் கட்டணம் ரூ.50-100.

    SMS எச்சரிக்கைகளுக்கு காலாண்டிற்கு ₹20-25 வசூலிக்கப்படுகிறது. வங்கிகள் கடன் செயலாக்கக் கட்டணமாக 1-3% வசூலிக்கின்றன.

    கடன் சரியான நேரத்தில் செலுத்தப்பட்டால், முன்கூட்டிய கடன் அடைப்புக் கட்டணங்கள் விதிக்கப்படும். NEFT, டிமாண்ட் டிராஃப்ட் கட்டணங்கள் கூடுதல் சுமையாகும். கையொப்ப மாற்றங்கள் போன்ற KYC அப்டேட்களுக்கும் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.

    முன்னதாக, மத்திய அரசு இந்தக் கட்டணங்களால் வசூலிக்கப்படும் தொகையின் தரவை பாராளுமன்றத்தில் வழங்கியது. ஆனால் இப்போது "ரிசர்வ் வங்கி அத்தகைய தரவைப் பராமரிக்கவில்லை" என்று சாக்கு கூறி இந்த நடைமுறையும் அரசு நிறுத்தி உள்ளது.

    வேதனையான விலை உயர்வு + கட்டுப்பாடற்ற கொள்ளை = மிரட்டி பணம் பறிப்பதற்கான பாஜகவின் மந்திரம்! என்று பதிவிட்டுள்ளார். 

    • மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1,170 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ராமநாதபுரம் முதுகுளத்தூரில் காலி தட்டுகளை ஏந்தி பெண்கள், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை வழங்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1,170 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோரை திரட்டி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் முதுகுளத்தூரில் காலி தட்டுகளை ஏந்தி பெண்கள், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் மற்றும் பெண்கள் கோஷமிட்டனர். மத்திய அரசு நிலுவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    • 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார்.
    • அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

    புதுடெல்லி:

    மக்களவையில் நேற்று பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி துர்காதாஸ் உய்கி பதிலளித்தார். அப்போது தொடக்கப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் குறைந்திருப்பதாக கூறினார்.

    குறிப்பாக 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் ஒப்பீட்டளவில் அனைத்து சமூக மாணவர்களும் தொடக்கப்பள்ளிகளில் சேரும் விகிதம் 100.13 சதவீதத்தில் (2021-22) இருந்து 91.7 (2023-24) ஆக குறைந்திருக்கிறது.

    உயர்நிலைப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 ஆகவும், அனைத்து பிரிவினரின் விகிதம் 79.56-ல் இருந்து 77.4 ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர் சேர்க்கை விகிதம் 52-ல் இருந்து 48.7 ஆகவும், அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

    முன்னதாக பள்ளிகளில் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மக்களவையில் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக மோடி அரசை குறை கூறியிருந்த அவர், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது.
    • வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. அரசின் இந்த முடிவால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது.

    இந்த நிலையில் ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது. எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை ஏப்ரல் 1-ந் தேதி முதல் திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது

    • விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிறுவப்பட்டு சந்திரயான்-3 திட்டம் முழுமை பெற்றது.
    • இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன

    சந்திரனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டப்பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றதற்காக நேற்று நடைபெற்ற வாழ்த்து நிகழ்ச்சியில் பேசிய நாராயணன், 25 கிலோ எடையுள்ள 'பிரயாக்யான்' ரோவரைச் சுமந்து சென்ற சந்திரயான்-3 மிஷன் போலல்லாமல், சந்திரயான்-5 மிஷன் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள ரோவரை எடுத்துச் செல்லும்.

    சந்திரயான் என்பது சந்திர மேற்பரப்பை ஆய்வு செய்யும் திட்டம். 2008 ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-1, சந்திரனின் வேதியியல், கனிமவியல் மற்றும் புகைப்பட-புவியியல் வரைபடத்தை எடுத்தது.

    2019 இல் ஏவப்பட்ட சந்திரயான்-2, 98 சதவீத வெற்றியைப் பெற்றது. ஆனால் இறுதி கட்டங்களில் இரண்டு சதவீத பணியை மட்டும் முடிக்க முடியவில்லை. இன்னும் சந்திரயான்-2 இல் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நூற்றுக்கணக்கான படங்களை அனுப்பி வருகிறது.

    சந்திரயான்-3 மிஷன் என்பது சந்திரயான்-2 இன் தொடர்ச்சியான பயணமாகும். ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிறுவப்பட்டு சந்திரயான்-3 திட்டம் முழுமை பெற்றது. 2027-ல் தொடங்கப்படும் சந்திரயான்-4 திட்டம் நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே மூன்று நாட்களுக்கு முன்புதான் சந்திரயான்-5 திட்டத்திற்கான ஒப்புதல் எங்களுக்குக் கிடைத்தது. ஜப்பானுடன் இணைந்து நாங்கள் அதைச் செய்வோம் என்று நாராயணன் கூறினார்.

     

    மேலும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசிய நாராயணன், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம்.
    • நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

    தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசுக்கு திமுக தாரை வார்க்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

    மக்கள் அனுபவிக்கும் எண்ணற்ற கொடுமைகளை பற்றி விவாதிக்க தயாரா ? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டார். தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார்..? நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா ?

    எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம். நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

    திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் அமைச்சர் ரகுபதி. முறைவாசல் செய்பவர்களுக்கொல்லாம் நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    சட்டத்துறை அமைச்சராக உள்ள ரகுபதி அதிமுகவில் அடையாளம் காணப்பட்டவர். அமைச்சர் ரகுபதிக்கு மானம், ரோஷம் இருக்கிறதா ?

    கோபாலபுரத்தின் கொத்தடிமையான ரகுபதியிடம் நாங்கள் பேச முடியாது. முதல்வரை விவாதத்திற்கு அழைத்தால் ரகுபதி வருகிறார். ஆட்டை அழைத்தால் குட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்ததுடன், அவருக்கு எதிராக போராட்டமும் வலுத்ததால் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

    புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் சிங் தேர்வானார். இதனால் சர்ச்சை தொடர்ந்தது. அத்துடன் புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிந்த சில நாட்களில் 15 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரிஜ் பூஷனின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடத்தப்படும் என்று புதிய நிர்வாகிகள் அறிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட 3 நாளிலேயே இந்திய மல்யுத்த சம்மேளனத்தை, மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க பூபிந்தர் சிங் பாஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

    இந்த நிலையில் 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது. இதனால் மல்யுத்த சம்மேளனம், தேசிய விளையாட்டு சம்மேளனத்துக்கான அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளது. விளையாட்டு மற்றும் வீரர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம், புதிய நிர்வாகிகள் இடையே அதிகார சமநிலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.

    'மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுவதில் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • குறுவை பருவத்தில் பெய்யும் மழையின் அளவை கொண்டு நெல்லின் ஈரப்பத சதவீதத்தை கணக்கிடலாம்.
    • மழை பெய்தபோது ஈரப்பத தளர்வு அறிவிக்காமல் அறுவடை முடியும் நேரத்தில் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காலம் கடந்த செயல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட குறவை நெல்மணிகள் தொடர் மழையால் ஈரப்பதமாகியது. காய வைத்தும் ஈரப்பதம் குறையவில்லை.

    இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவுப்படி மத்திய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.

    மத்திய அரசின் அறிவிப்பு குறித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்:

    மத்திய அரசு அறிவித்துள்ள 19 சதவீத ஈரப்பத அளவு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்த பிறகு காலம் கடந்த ஏமாற்றம் தரும் அறிவிப்பாகும். இந்த ஈரப்பத உயர்வு அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அதுவும் 22 சதவீதம் கேட்டதற்கு பெயரளவிற்கு 19 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம். குறுவைக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு பலமுறை தொடர்ந்து கோரியும், மத்திய மாநில அரசுகள் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதனால் பயிர் காப்பீடும் செய்யப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார்:

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய 15 நாட்களுக்கு பிறகு தான் மத்திய குழு ஆய்வு நடத்தியது. அந்த மத்திய குழுவும் அறிக்கை தாக்கல் செய்த 10 நாட்களுக்கு பிறகு தான் 19 சதவீதம் நெல் ஈரப்பதம் தளர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இப்படி அனைத்துமே கால தாமதம் தான். ஏற்கனவே விவசாயிகள் கஷ்டப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதுவும் 22 சதவீதம் என கேட்டதற்கு 19 சதவீதத்திற்கு தான் அனுமதி கொடுத்துள்ளது. உரிய நேரத்தில் செய்யும் உதவி தான் சால சிறந்தது. அதனை மத்திய அரசு செய்யவில்லை.

    எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் குறுவை பருவத்தில் 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று நிலையான அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போது தான் விவசாயிகள் பலன் அடைவர். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார்:

    ஒவ்வொரு குறுவை பருவத்திலும் ஈரப்பத தளர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுப்பதும், பின்னர் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாமல் பெயரளவிற்கு தளர்வு அளிப்பதும் வாடிக்கையாகி விட்டது. விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்க வேண்டும்.

    குறுவை பருவத்தில் பெய்யும் மழையின் அளவை கொண்டு நெல்லின் ஈரப்பத சதவீதத்தை கணக்கிடலாம். மேலும் ஈரப்பத தளர்வு குறித்து மாநில அரசு முடிவு எடுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும்.

    தற்போது அறிவித்துள்ள 19 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பே கால தாமதம் தான். அறுவடை பணிகள் கிட்டதட்ட முடியும் நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ஏற்று கொள்ள முடியாது.

    தஞ்சை விவசாயி ரவிச்சந்திரன்:

    மழை பெய்தபோது ஈரப்பத தளர்வு அறிவிக்காமல் அறுவடை முடியும் நேரத்தில் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காலம் கடந்த செயல். அதுவும் விவசாயிகள் கோரிக்கையை முழுமையாக ஏற்காமல் ஈரப்பத தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் 19 சதவீதம் என்பது போதாது. எனவே உடனடியாக 22 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். சம்பா நெல் கொள்முதலுக்கு 23 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தரமாக உலர் எந்திரங்களை அமைக்க வேண்டும்.

    • உத்தரபிரதேசத்தில் ‘சி’ பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
    • 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    புதுடெல்லி

    நாட்டின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு மத்திய பா.ஜ.க. அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சாடி வருகிறது.

    அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேச மாநிலத்தில 'சி' பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லாத இளைஞர்களின் வேதனைக்குரலை அரசு காது கொடுத்து கேட்கிறதா?

    நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளோம். எங்களுக்கு வேறு வழியில்லை.

    கடந்த 8 ஆண்டு கால மத்திய அரசின் பாரம்பரியமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 8 சதவீதமாம். இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்திற்கான மத்திய நிதி அமைச்சக ஆய்வு அறிக்கை, வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் சிறுதானியங்கள் விளம்பரப்படுத்தப்படும்.
    • பல்பொருள் அங்காடிகளை அடையாளம் கண்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் சிறுதானியங்கள் மற்றும் அவற்றால் செய்யப்படும் மதிப்பு கூட்டு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய வர்த்தக அமைச்சகம் ஒரு செயல் திட்டத்தை வகுத்துள்ளது.

    இதன்படி, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் சிறுதானியங்கள் விளம்பரப்படுத்தப்படும். பல்பொருள் அங்காடிகளை அடையாளம் கண்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும். விற்பவர்-வாங்குபவர் சந்திப்புகள் நடத்தி, விற்பனைக்கு வழிவகுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • டிசம்பர் 29-ந் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது. விடுமுறைகள் தவிர்த்து, மொத்தம் 17 அமர்வுகள் நடக்கிறது.

    இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டிய மசோதாக்களை மத்திய அரசு இறுதி செய்து வருகிறது. அதே சமயத்தில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டி உள்ளது.

    இதை கருத்தில்கொண்டு மத்திய அரசு டிசம்பர் 6-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் அன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடக்கிறது.

    இதையொட்டி பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவைகளில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் சபை தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள், விவாதிக்கப்பட உள்ள முக்கிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை தலைவர்களின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.

    அதற்கு தங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு அவைகளும் சுமுகமாக நடைபெற தங்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×