என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central govt"

    • ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார்.
    • நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம் அருகே கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி , தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தி வருகின்றார். நிதி மந்திரி, விவசாய துறை மந்திரியை நானும், தமிழக நிதித்துறை அமைச்சரும் நேரில் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினோம். ஓரிரு வாரங்களில் நிதி வரும் என்றார்கள். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    இதையடுத்து தமிழக முதலமைச்சர் இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்படி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும்போது ரூ.4034 கோடி தர வேண்டிய பணத்தை 5 மாதங்களாக தரவில்லை என்று கேட்டோம். ஆனால் அதற்கும் பதில் இல்லை.

    இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாங்கள் போராடியதைக் கண்டு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டன. இதனால் பாராளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

    போராட்டத்தை கை விடுங்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் பலமுறை இதுபோன்று உறுதியளித்து தரவில்லை என்றபோது எப்படி இவர்கள் கூறுவதை நம்ப முடியும்.

    எனவே தான் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.பி.க்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி, தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் தவறான, பொய்யான தகவலை கூறுகிறார்.

    தி.மு.க., காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சாதாரண மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்தனர். மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று கூறி ரூ.2 ஆயிரம் கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சி தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி.

    நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர். கல்வி மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி ஆட்சிக்கு மனம் வரவில்லை. 2024-25 மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதியைத்தான் ஒதுக்கீடு செய்தார்கள்.

    ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த போது இதில் ரூ.10 ஆயிரம் கோடி துண்டு விழுவது குறித்து கேள்வி எழுப்பினோம். தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்வோம் என்று ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இந்த நிலையில் தான் பா.ஜ.க. அரசின் பட்ஜெட் உள்ளது. அதனால் தான் பொறுத்தது போதும் என்று மக்களுடன் களத்தில் தி.மு.க. இறங்கி போராடி வருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி தரும் வரை பாராளுமன்றத்திலும், மக்களோடு இணைந்து களத்திலும் தி.மு.க. போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • MGNREGA நிதி ரூ.4034 கோடி தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
    • 100 நாள் வேலை வாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற "தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் "திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, "தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும்" என்றும்; அத்துடன் 'ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காதது' குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    தலைவர் அறிவுரைக்கிணங்க, "ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காதது குறித்து நேற்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை காலை அனைத்து திமுக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலை வாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    மாவட்ட திமுக நிர்வாகிகள் - திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், திமுக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள்- நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு துரைமுரகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை- கேரளமாநில எம்.பி.
    • 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால் வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்- கனிமொழி எம்.பி.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற எழை மக்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. மக்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்குகிறது. ஆனால், ஊதியத்தை விடுவிக்காமல் பல மாதங்கள் நிலுவையில் வைத்துள்ளதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

    இன்று கேரள மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அவர் பேசும்போது "இத்திட்டம் தேவையை அடிப்படையாக கொண்டது. 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால், தொழிலாளர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

    காங்கிரஸ் எம்.பி. ஆதூர் பிரகாஷ் பேசுகையில் "ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை. இந்த திட்டத்தின் கீழ் 811 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. பாராளுமன்ற நிலைக்குழு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க பரிந்துரை செய்துள்ளது. நிலுவையில் உள்ள தொகையை அரசாங்கம் தாமதமின்றி விடுவிக்குமா?" என்றார்.

    இதற்கு மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அஅச்சர் சந்திர சேகர் பெம்மாசானி பதில் அளித்து கூறியதாவது:-

    கடந்த வருடம் கேரளா இத்திட்டத்தில் 3500 கோடி ரூபாய் பெற்றுள்ளது. பணத்தை விடுவிப்பதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலுவையில் இருக்கும் நிதி இன்னும் சில வாரங்களில் விடுவிக்கப்படும்.

    சட்டத்தின் அடிப்படையில், நிதி விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், மாநில அரசு முதலில் ஊதியம் வழங்கும். பின்னர் மத்திய அரசு நிதியை விடுவிக்கும். தமிழ்நாடு ஏற்கனவே 7300 கோடி ரூபாய் பெற்றுள்ளது. 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடும்போது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு 10 கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிறது. பாரபட்சம் என்பதற்கு இடமில்லை" என்றார்.

    • இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வருகிறது.
    • சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    வெளிநாடுகளை சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில இணையதளங்கள் ஜிஎஸ்டியை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து வருகின்றன. அத்தகைய இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது. இதன் மூலம் ரூ.126 கோடி முடக்கப்பட்டுள்ளது.

    மேற்கூறிய தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • திமுகவினரின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
    • தமிழக எம்.பி.க்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து மக்களவையில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் மக்களவையில் இந்த தீர்மான நோட்டீஸை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்க மறுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில், தொகதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி இன்றும் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதனால் அவை கூடியதும் தி.மு.க. எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

    திமுகவினரின் இந்த கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருவதால் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தமிழக எம்.பி.க்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அரசு ஊழியர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.
    • தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது.

    நெல்லை:

    தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு கூட்டத்திற்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற குழு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் சேர்ந்து கருப்பு கொடி ஏந்தியும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பை தெரிவித்தார்.

    அப்போது நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், நிர்வாகி கார்த்திகேயன் உள்பட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. பலவீனமாக உள்ளதால் தேவையில்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறது. டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்தனர். மத்திய அரசு அதனை நேரடியாக கையில் எடுத்து நல்ல முடிவை தந்தது. நமக்கு தண்ணீர் தராத கேரள முதல்-மந்திரி, கர்நாடக துணை முதல்-மந்திரி ஆகியோரை அழைத்து தி.மு.க. அரசு கூட்டம் நடத்துகிறது. மொழி கொள்கை பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    ஏதாவது ஒரு மொழி படிக்கலாம் என்பதை தான் மத்திய அரசு மொழி கொள்கையில் சொல்கிறது. மும்மொழி கொள்கைக்கு 95 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். பா.ஜ.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தானாக முன்வந்து கையெழுத்துபோட்டு வருகின்றனர்.

    இந்தி இல்லாவிட்டாலும் தென்னிந்திய மொழி கூட கற்கலாம். தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புடனேயே நிற்கிறது. அதனால் தான் மத்திய அரசை ஏதாவது ஒரு கதையை வைத்து குறை கூறுகின்றனர்.

    மக்களை திசை திருப்பவே தி.மு.க. இது போன்ற செயலில் ஈடுபடுகிறது.

    டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு படிப்படியாக கடையை உயர்த்தும் நிலையில் உள்ளது. அரசு ஊழியர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.

    மின்கட்டணம், தொழில்வரி, சொத்துவரி உயர்வால் தொழில் முனைவோர் திணறும் நிலைக்கு ஆளாகின்றனர்.

    எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.விற்கு பாதகமான நிலை உண்டாகும். தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
    • கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.

    இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

    அப்போது, பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கைவிலங்கிடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    மேலும், " பெண்கள், சிறார்கள் விலங்கிடப்படுவதில்லை என்றாலும், நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.

    கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.

    அமெரிக்காவில் இருந்து இதுவரை மொத்தம் 388 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது.
    • 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வெளியிடுமாறு மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு மத்திய வெளியுறவு இணை மந்திரி பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார். அதன்படி இந்த 3 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு சுமார் ரூ.258 கோடி என அவர் தெரிவித்தார்.

    இதில் முக்கியமாக, 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கான செலவு ரூ.22.89 கோடி என கூறப்பட்டு இருந்தது. அதேநேரம் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது.

    முன்னதாக 2023-ல் ஜப்பான் பயணத்துக்கு ரூ.17.19 கோடியும், 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.

    • ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.
    • தேசிய கவுன்சிலின் ஊழியர் தரப்பிலிருந்து முறையான திட்டம் எதுவும் பெறப்படவில்லை.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என மக்களவையில் கேள்வி எழுப்பட்டது.

    இதற்கு மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:

    ஊழியர்களின் ஓய்வு காரணமாக ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கு அரசாங்கத்திடம் எந்தக் கொள்கையும் இல்லை.

    அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.

    தேசிய கவுன்சிலின் ஊழியர் தரப்பிலிருந்து முறையான திட்டம் எதுவும் பெறப்படவில்லை.

    மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறித்த விஷயம் மாநிலப் பட்டியலில் வருவதால், அத்தகைய தரவு எதுவும் அரசாங்கத்தில் மையமாகப் பராமரிக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

    • பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
    • ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

    இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22-ந்தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக்குழுவினர் 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    • மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
    • தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தெற்கு ரெயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

    1000 கி.மீ.க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.

    மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.

    எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரெயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.



    • தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும்.
    • தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தொடர்வண்டித்துறை தேர்வெழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும்.

    தென்னக தொடர்வண்டித்துறையில் காலியாகவுள்ள 493 லோகோ பைலட் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு வருகின்ற 19.03.25 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்களை ஒதுக்கி, நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    முதற்கட்டத் தேர்வுக்கு அருகாமையிலேயே தேர்வு மையங்களை அமைத்துக்கொடுத்த தேர்வாணையம் இரண்டாம் கட்ட தேர்விற்கு 1000 கி.மீ.க்கு அப்பால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது.

    தேர்வு மையம் குறித்து நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்ற நிலையில், வேறு மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினை தமிழகத் தேர்வர்கள் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இது தமிழகத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, உளவியலாக அவர்களைச் சிதைத்துத் தோல்வியுறச் செய்வதற்கும், தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும். இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்?

    கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறையின் முதல்நிலை தேர்விலும் இதேபோன்று வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து அறிவிப்பு வெளியானபோதும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் உடனடியாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அது குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு மற்றும் தற்போதும் தேர்வு மையங்கள் வேற்று மாநிலத்தில் அமைக்கப்படுவதை வாய்மூடி வேடிக்கைப்பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.

    ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர தொடர்வண்டித்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை தொடர்வண்டித்துறை இரண்டாம் கட்டத் தேர்வினை தள்ளிவைக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    ×