என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Champions Trophy cricket"

    • 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • 2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன.

    மேலும் இந்திய அணி மோதும் போட்டி மட்டும் வேறு ஒரு இடங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணி விளையாடும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடரை மறந்து விடுங்கள் எனவும் பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம்.
    • நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

    ஐசிசி 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்த தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுகிறது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

    ஆனால் அந்தத் தொடரில் நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா கூறிவருகிறது. ஏனெனில் 2008-க்குப்பின் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. இருப்பினும் ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் பொதுவான இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் வாரியம் ஒருவேளை வரவில்லையெனில் இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை நடத்தத் தயாராகியுள்ளது.

    இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவில் தங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதையும் தாண்டி இந்தியாவில் 2016 டி20 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாக சாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடினமான நேரங்களிலும் நாங்கள் இந்தியாவுக்கு பலமுறை சென்றுள்ளோம். இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம். நாங்கள் அவர்களுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

    எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதும் பாகிஸ்தான் வாரியமும் அரசும் இந்தியா செல்வதற்கான வழியை துவங்கின. அதே போல இந்தியா விரும்பினால் வரலாம். ஆனால் விரும்பவில்லையெனில் பாதுகாப்பு என்பதை அவர்கள் சாக்காக பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு சாகித் அபிரிடி கூறினார்.

    • பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
    • பாகிஸ்தான் சென்று விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது கேள்வி குறியாகவே இருந்து வந்தது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடுவதற்காக ஹைப்ரிட் முறை பின்பற்றப்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து பி.சி.சி.ஐ. வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது, "இது தான் எங்கள் முடிவு, அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எங்களது அனைத்து போட்டிகளையும் துபாய்க்கு மாற்ற அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்," என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் நவம்பர் 11-ல் இருந்து சாம்பியன் டிராபி தொடங்க 100 நாள் உள்ளது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த ஐசிசி திட்டமிருந்தது. இந்தியா தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் அதனை தற்போது ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் இந்த நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது.
    • இந்திய அணி விளையாடாவிட்டால் அதன் பிறகு வருங்காலங்களில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. தொடர்களுக்கு நாங்களும் அங்கு செல்லமாட்டோம்.

    துபாய்:

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.

    ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது யோசனையை தெரிவிப்பார்கள்.

    ஐ.சி.சி.யை பொறுத்தவரை இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டில் நடத்துவதற்கு சம்மதிக்கும்படி பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிகிறது. 10 ஆட்டங்களை பாகிஸ்தானிலும், 5 ஆட்டங்களை வேறு நாட்டிலும் நடத்தலாம் என்ற பரிந்துரையை ஐ.சி.சி. முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால் சிக்கல் தீரும். ஆனால் அவர்கள் எதுக்கும் பிடிகொடுக்காவிட்டால், போட்டி முழுமையாக வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம்.

    பாகிஸ்தானில் அரசியல் போராட்டத்தில் வெடித்த வன்முறை எதிரொலியாக, இலங்கை 'ஏ' அணி அங்கு மேலும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் பாதியிலேயே தொடரை ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், 'இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டிற்கு மாற்றும் திட்டத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதை ஐ.சி.சி.யிடம் சில மணி நேரத்திற்கு முன்பாக தெரிவித்து விட்டோம்.

    இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டால் அதன் பிறகு வருங்காலங்களில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. தொடர்களுக்கு நாங்களும் அங்கு செல்லமாட்டோம். அதற்கு பதிலாக பாகிஸ்தான் அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்கவேண்டிய சூழல் வரும். ஐ.சி.சி. விதிப்படி, தங்கள் நாட்டு அரசாங்கம் குறிப்பிட்ட நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று எந்த அணி கூறினாலும், என்ன காரணம் என்றாலும் சரி அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வமான உத்தரவை சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய உத்தரவை இதுவரை நாங்கள் பார்க்கவில்லை' என்றார்.

    • எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது.
    • தற்போது அந்த முடிவில் இருந்து பாகிஸ்தான் பின் வாங்கி உள்ளது.

    துபாய்:

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.

    இந்திய அணி இந்த முறையும் பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

    ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.

    எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது நிலையில் தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது.

    • சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.
    • சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி 19-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் ஐந்து டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 22-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை இங்கிலாந்துக்கு எதிரான தொடர் நடக்கிறது.

    அதை தொடர்ந்து இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் 'டிராபி' போட்டியில் பங்கேற்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடை பெறும்.

    இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

    15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் (12-ந்தேதி) அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. அணியில் மாற்றம் செய்ய பிப்ரவரி 13-ந் தேதி வரை ஐ.சி.சி. அனுமதி அளித்து உள்ளது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. வீரர்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) முறையிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி 19-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக போட்டி தொடங்குவதற்கு 1 மாதத்துக்கு முன்பு அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

    • சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட அணியில் சேர்க்கப்படவில்லை.
    • ஒரு வித்தியாசத்திற்காவது ஒரு லெக் ஸ்பின்னரையும் சேர்த்திருக்கலாம்.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது சமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

    இந்நிலையில் 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையிலேயே, நான் சஞ்சு சாம்சனுக்காக வருத்தப்படுகிறேன். ஏனெனில் அவர் ரன்கள் எடுக்கும் போதெல்லாம், அவர் எப்போதும் முதலில் அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை.

    நீங்கள் 15 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் ஒருநாள் போட்டி வடிவம் அவரது பேட்டிங்கிற்கு ஏற்றது. மேலும் அவரிடம் 55-56 சராசரி உள்ளது. அப்படி இருக்கும் நிலையிலும் அவர் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட சேர்க்கப்படவில்லை. இப்படியான ஒருவீரரை நீங்கள் அணியில் சேர்க்க விரும்பினால், நீங்கள் அணியில் அதற்கான ஒரு இடத்தை உருவாக்கலாம்.

    மேலும் நீங்கள் 4 ஸ்பின்னர்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதில் இரண்டு வீரர்கள் இடது கை ஸ்பின்னர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் ஒரு வித்தியாசத்திற்காவது ஒரு லெக் ஸ்பின்னரையும் சேர்த்திருக்கலாம். அந்தவகையில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். இந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்காத அளவிற்கு அவர் என்ன தப்பு செய்தார் என்பது எனக்கு தெரியவில்லை.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    • துபாயில் உள்ள மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
    • அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவர் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரராக இருப்பார். இந்திய அணி, துபாயில் உள்ள மைதானங்களில் மட்டும்தான் விளையாட இருக்கிறது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே இதில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீப காலமாக காயத்தால் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த குல்தீப் யாதவ், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த போட்டி இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் 6 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். எஸ்.ஏ.லீக் 20 ஓவர் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. அது முடிந்ததும் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்க அணியுடன் இணைவார்கள்.

    முத்தரப்பு தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக்கில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மல்லுக்கட்டுகின்றன. உள்ளூர் அணியான பாகிஸ்தானில் கேப்டன் முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பஹர் ஜமான், சல்மான் ஆஹா, கம்ரான் குலாம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில் கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், வில் யங், டேரில் மிட்செல் என திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கும் அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 61-ல் பாகிஸ்தானும், 51-ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' யில் முடிந்தது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
    • முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் கடைசியாக 2023-ம் ஆண்டு அக்டோபரில் மோதின. அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதில் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    வங்காளதேசத்துக்கு எதிராக சுப்மன் கில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இதேபோல முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ராகுல் வங்காளதேசத்துக்கு எதிராக சிறப்பாக ஆடினார். இதனால் ரிஷப் பண்ட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றி விடப்படுவார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

    முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். ஏனென்றால் பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.

    அந்த அணியில் கேப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், சல்மான் அகா, குஷ்தில் ஷா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்க கடுமையாக போராடும்.

    இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அது மாதிரியே சாம்பியன்ஸ் டிராபி போட்டியையும் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல் தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரிஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ் தீப் சிங், வருண் சக்கர வர்த்தி

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், பகர் ஜாமன், சல்மான் அகா, தையூப் தாகீர், குஷ்தில் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது, இமாம், உல்-ஹக், உஸ்மான் கான், பஹீம் அஸ்ரப் முகமது ஹஸ்னைன்.

    • ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை.
    • ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தால் விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

    இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்

    இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி . அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, முகமது ஷமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஷமி விரதம் இருக்காமல் இருக்க இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது.
    • நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளது. நியூசிலாந்து அணி எப்போதுமே இந்தியாவுக்கு ஐசிசி தொடரில் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இது அணிகளும் இதுவரை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இந்திய ஆறுமுறையும் நியூசிலாந்து அணியும், ஆறுமுறையும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

    இந்த சூழலில் இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கணித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுக்கும் எந்த மாதிரியான ஆடுகளம் கிடைக்கப்போகிறது என்பது குறித்து நன்றாக தெரியும். குறிப்பாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக துபாய் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் இந்தியாவுக்கு இது நிச்சயமாக சுலபமாக இருக்காது.

    ஆனால் இந்த தொடரை வெல்லும் அணியாக இந்தியா தான் நிச்சயம் இருக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்காது. இந்தியா 70% மற்றும் நியூசிலாந்து 30 சதவீதம் என்று கூட சொல்ல முடியாது. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து அணியும் பலமாக இருக்கிறது.

    இதேபோன்று நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார். அவரிடம் ஒரு நம்பிக்கையும் அமைதியும் இருக்கிறது. வில்லியம்சன் போல் அவரும் களத்தில் பதற்றமில்லாமல் இருக்கின்றார். அவருடைய இந்த இயல்பு நிச்சயம் அணிக்கு ஒரு பலமாக இருக்கும். களத்தில் அமைதியாக இருப்பதற்கும் சோம்பேறியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நியூசிலாந்து வீரர்கள் எல்லாம் அமைதியான வகையை சார்ந்தவர்கள்.

    என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

    ×