search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Check dam"

    • தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் வழங்கப்படவில்லை.

    காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், தமிழ்நாடு நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம், கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் அடங்கிய முழு விவரங்களை அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

    இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    • அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது.
    • தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. அப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி., முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:- அமராவதி ஆறு கேரள மாநிலம் மேற்குதொடர்ச்சி மலை, மூணாறு மலைப்பகுதி மற்றும் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆனைமலைப் பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே அமராவதி நகரில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இது காவிரி ஆற்றின் முக்கிய உபநதிகளில் ஒன்று. அமராவதி ஆறு அமராவதி அணையிலிருந்து 227 கி.மீ., பாய்ந்தோடிய பின் கரூர் மாவட்டத்தை சார்ந்த குளித்தலை வட்டம் மாயனூருக்கு அருகே திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரியோடு இணைகிறது.

    இந்த அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி கிராமம், குமாரசாமி கோட்டை, அணைப்பாளையம், சின்னம்மன் கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் இத்தடுப்ப ணையானது அமராவதி ஆறு சரகம் 104.00 கி.மீ.,ல் கம்பிளியம்பட்டி கிராமம்அருகே அமைக்கப்படவுள்ளது.

    இத்தடுப்பணையானது 170 மீட்டர் நீளத்திலும், 1.50 மீட்டர் உயரத்திலும் சுமார் 3.18மி.கன.அடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்க வசதியாக அமையும். இத்தடுப்பணைஅமைக்கப்படுவதால் 65 கிணறுகள் 542 ஏக்கர் விளை நிலங்கள், மற்றும் 110 ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக பாசன வசதி மேம்படுவதுடன், கம்பிளியம்பட்டி, சின்னம்மன்கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியடையும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன்,மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பொதுப்பணித்துறைசெயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கோபி, உதவிப் செயற்பொறியாளர் .சினீவாசன் மற்றும் இலக்கம நாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், வெள்ளகோவில் தி.மு.க. நகர செயலாளர் சபரி எஸ், முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடி வழியாக பில்லூர் அணைக்கு வருகிறது.
    • சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- திருப்பூர் மாநகர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நான்காவது குடிநீர் திட்டத்திற்காக நிதி 1350 கோடி ரூபாய் ஒதுக்கி தந்து திருப்பூர் மக்களின் தாகம் தீர்த்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி,அதற்காக முழு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் ஆகியோருக்கு திருப்பூர் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதே போல் இந்த மாபெரும் திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுஇரவு, பகல் பாராமல் உழைத்திட்டஅதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாகவும், ஊக்கமும், ஆக்கமும்ஆலோசனையும் வழங்கிய மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கும் மக்களின்சார்பாகவும், அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியினைதெரிவித்துக் கொள்கிறோம்.

    அதே நேரத்தில் இந்த சிறப்பான திட்டத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடிவழியாக பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. இச்சூழலில் பவானிக்குசெல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் நமது திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.

    எனவே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டிவரும் தடுப்பணையை உடனடியாக தடுத்து நிறுத்த மாநகராட்சி மாமன்றத்தில் சிறப்புதீர்மானம் கொண்டுவர வேண்டும். மேலும் மத்திய மாநில அரசு கவனத்திற்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் உடனடியாக தடுத்துநிறுத்த மேயர் மற்றும் ஆணையாளர் அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து நேரில் சென்று மேற்படி இடத்தை ஆய்வுசெய்து தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • தடுப்பணை கட்டுமான பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • முக்காணி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 1,205 ஹெக்டர் ஆயக்கட்டு பாசனபரப்பு பயன்பெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி, சேர்ந்தமங்கலம் மற்றும் புன்னக்காயல் ஆகிய கிராமங்களின் அருகில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கழிமுகப் பகுதியில் ரூ.46.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தடுப்பணை கட்டுமான பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், புதிதாக கட்டப்பட்டுவரும் தடுப்பணையால் அருகில் உள்ள சேர்ந்தமங்கலம், கைலாசப்புரம், ஆத்தூர், புன்னக்காயல், ராமசந்திரபுரம் மற்றும் முக்காணி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 1,205 ஹெக்டர் ஆயக்கட்டு பாசனபரப்பு பயன்பெறுகிறது.

    மேலும், தடுப்பணையில் 138 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதுமட்டும்மல்லாமல், கடல் நீர் உட்புகுதல் தடுக்கப்படுவதால் நிலத்தடி நீரின் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்று கூறினார். ஆய்வின் போது செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநில கோட்டம், நெல்லை) மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து,உதவிபொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சங்கரன்கோவில் அருகே மேல இலந்தைகுளம் பெரியகுளம் ஓடையில் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.
    • அந்த தடுப்பணையை மர்ம நபர்கள் சிலர் சமீபத்தில் உடைத்துவிட்டனர்.

    சங்கரன்கோவில்:

    கடந்த 2019-2020-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் அருகே மேல இலந்தைகுளம் பெரியகுளம் ஓடையில் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.

    இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 15 கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்து காணப்பட்டது. ஆனால் அந்த தடுப்பணையை மர்ம நபர்கள் சிலர் சமீபத்தில் உடைத்துவிட்டனர். மேலும் அந்த இடத்தை பாதையாக மாற்றிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். அந்த பகுதியில் தடுப்பணையை தாண்டி உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக யாரேனும் அதனை இடித்தார்களா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக மேல இலந்தைகுளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

    இந்த மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×