என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CMDA"
- அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு.
- அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
சிஎம்டிஏ அலுவலகத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சிஎம்டிஏ அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.
அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
அவர், அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.
அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுத்தியதாகக் கூறி, வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.
- இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும்.
சென்னை:
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் மற்றும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு, வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.
இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். திட்ட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமே பெறப்பட்டு கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்தபின், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் இணையவழி ஒப்புதல் வழங்கியது 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உயரமான கட்டடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதி பொறுத்தவரையில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 65 விண்ணப்பங்கள் பெறப்படும். இணையவழி திட்ட அனுமதி மென்பொருள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 100-க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது.
- இந்த நகரம் விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில் உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது.
விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் சி.எம்.டி.ஏ. ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பல போக்குவரத்து முனையங்களின் தரம் மிகவும் விமர்சனத்துக்குரியது
- பயணிகளுக்கு அனைத்துவிதமான அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் இங்கு உருவாக்கப்படும்
சென்னை மாநகர போக்குவரத்து கழகமும் (MTC), சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (CMDA) சென்னைவாசிகளுக்கு, குறிப்பாக மாநகர பேருந்து போக்குவரத்தை சார்ந்திருக்கும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அளித்திருக்கின்றன.
சென்னையிலுள்ள பல போக்குவரத்து முனையங்களின் தரம் மிகவும் விமர்சனத்துக்குரியது.
பாளம் பாளமாக உடைந்திருக்கும் தரை மற்றும் மேற்கூரைகள், பெயர்ந்து வரும் டைல்ஸ்கள், குறைவான வெளிச்சம், மோசமான கழிப்பிட வசதி, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மற்றும் இருந்தாலும் செயல்படாத நிலை, பயணிகள் அல்லாத சிலர் சகஜமாக உலா வருவது, பெண்களுக்கு போதிய பாதுகாப்பின்மை உட்பட பல கட்டமைப்பு குறைபாடுகளை நீண்டகாலமாக சகித்து கொண்டுதான் மக்கள் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குறைகளை களையும் விதமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பேருந்து முனையங்களை சகலவித வசதிகளுடன் தரமாக மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர இருக்கிறது போக்குவரத்து கழகம்.
திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய 6 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ள இந்த மேம்பாட்டு திட்டம் பிற முனையங்களிலும் எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம்.
தரமான மேற்கூரைகள், சூரிய ஒளி தகடுகள், மிகவும் தூய்மையான கழிப்பிட வசதி, அமர்ந்திருக்கும் வசதியுடன் காத்திருக்கும் அறைகள், சுத்தமான குடிநீர் வசதி, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகள் உட்பட பல்வேறு வசதிகள் இந்த மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.
திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் முனையங்களுக்கான ஒப்பந்த புள்ளிகள் ஏற்கெனவே கோரப்பட்டுள்ளது. இதற்காக வளர்ச்சி குழுமத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடக்கலை வடிவமைப்பாளர்கள் தங்கள் வரைபட பணிகளை செய்து முடித்துள்ளனர்.
முதல் கட்டமாக இந்த இரு முனையங்களும் 2024-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
வட சென்னையின் வளர்ச்சிக்கான பல திட்டங்களில் ஒன்றாக இந்த பேருந்து முனையங்களை சீர்படுத்துதலும் அடங்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
- பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை 2022-ல் அரசாணை வெளியிட்டது.
- ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பான்மை பகுதிகள், குடியிருப்பு பகுதிகளாக விரிவடைந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இத்தகைய வளர்ச்சியை முறைப்படுத்தி ஒழுங்கமைக்க, டி.டி.சி.பி. எனும் உள்ளூர் திட்டக் குழும நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 ஊராட்சிகளை, சி.எம்.டி.ஏ. எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நகர்ப்புற மையங்களை உருவாக்கி அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை துணை நகரங்களாக மேம்படுத்த சி.எம்.டி.ஏ. முடிவு செய்தது.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை 2022-ல் அரசாணை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு புதிய நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், திருக்கழுக் குன்றம் ஊராட்சி ஒன்றி யத்தில் 8 ஊராட்சிகளும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளும் என 30 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
- காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 98.92 சதுர கி.மீ. பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
- கலந்தாலோசகரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ. எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின், சென்னை பெருநகர எல்லையானது ஏற்கெனவே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள பகுதிகள் என 5,904 சதுர கி.மீ. அளவுக்கு சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு, புதிய நகர் வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
அடுத்த கட்டமாக, காஞ்சிபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை புதுப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 98.92 சதுர கி.மீ. பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரிய தொழில்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க, கலந்தாலோசகரை நியமிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. அதற்கான கலந்தாலோசகரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.
- தொழில்துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
- 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் விஷன் 2030 என்ற தலைப்பில் ரியல் எஸ்டேட் தொடர்பான கண்காட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. வருகிற 19-ந் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அனைத்துத் துறையையும் உள்ளடக்கியிருக்கக்கூடிய திராவிட மாடல் வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டு வருகிறது. நம்முடைய இலக்கு பெரிதாக இருப்பதால், நம்முடைய முயற்சிகளும் பெரிதாக அமைந்து உள்ளன.
அந்த வகையில் அனைத்துத்துறைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்க இந்தியாவிலேயே முதன் முறையாக குடிசைவாழ் மக்களின் வீட்டுவசதிக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவர் அமைத்து தந்த பாதையில் தான் இன்று நம் மாநிலம் பெருமிதத்தோடு வளர்ந்து வருகிறது. அந்த நோக்கத்துடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது இந்த அரசு.
தமிழ்நாட்டில், 1991-இல் 1 கோடியே 90 இலட்சமாக இருந்த நகர மக்கள் தொகை, 2011-ல் 3 மூன்று கோடியே 49 இலட்சமாக அதிகரித்து, 2031-இல் 5 கோடியே 34 இலட்சம் அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் 832 நகரங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 விழுக்காடு மக்கள் நகர்ப் புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலை யில், நகரமயமாதலில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
வீட்டு வசதித் துறையில், 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பான, வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளித்தல், குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல், நகர மயமாதலை மேம்படுத்துதல், நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களை வைத்து உள்ளோம்.
தொழில்துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விண்ணப்பங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டி ருக்கிறது.
புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். வெளிவட்டச் சாலையின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் வரும் ஆண்டு களில் ரியல் எஸ்டேட் துறையில் மகத்தான வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறேன்.
டி.டி.சி.பி. மற்றும் சி.எம்.டி.ஏ. பகுதிகளில் உள்ள உயரமான கட்டடம் மற்றும் உயரம் குறைந்த கட்டடத்திற்கு ஆன்லைன் மூலமாக திட்ட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டி.டி.சி.பி.யால் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள மனைப்பிரிவு ஒப்புதலுக்கான ஆன்லைன் முறை, விரைவில் சி.எம்.டி.ஏ.விலும் நடைமுறைப் படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு என்றென்றும் உறு துணையாக இருக்கக் கூடிய நீங்கள், தொடர்ந்து உங்கள் ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
+2
- கோயம்பேடு மார்க்கெட்டில் ஊழியர்கள் தங்க இட வசதி, கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
- மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் வியாபாரி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பூ மார்க்கெட் வளாகத்தில் முதலில் ஆய்வு மேற்கொண்ட சேகர்பாபு பூ வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மளிகை மார்க்கெட் தானிய கிடங்கு மற்றும் "ஏ" சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியையும் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் (சி.எம்.டி.ஏ.) பொங்கல் சிறப்பு சந்தை கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் "ஏ" சாலையில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
கோயம்பேடு வணிக வளாகத்தை தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடி நிதியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், ஓ.எஸ்.ஆர் எனப்படும் திறந்தவெளி நில பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மியாவாகி காடுகளை மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் ஆய்வு செய்தோம்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஊழியர்கள் தங்க இட வசதி, கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், இடைதரகர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், கோயம்பேடு அங்காடிக்கு மட்டும் தனி போலீஸ் நிலையம் அமைக்க முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் வியாபாரி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். திருமழிசை மொத்த சந்தை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கோயம்பேட்டில் உள்ள கடைகளை அங்கு இடமாற்றம் செய்வது குறித்து, வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து முதல்வரின் கருத்துகளை கேட்டு, வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது அதிகாரிகள் அபூர்வா, அன்ஷூல் மிஸ்ரா, லட்சுமி, அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாநகர பஸ்களும், வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கோயம்பேடு பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் (சி.எம்.டி.ஏ.) நிர்வகித்து வருகிறது.
தனியார் ஆம்னி பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள இடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அலுவலகங்களும் அங்கு செயல்பட்டு வருகின்றன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய அடுக்குமாடி நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சில பஸ்கள் கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் நெருக்கடி குறைந்துள்ளது.
இதற்கிடையே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ்களை இயக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு போக்குவரத்து கழகத்துக்கு சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதி உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் ஜவகர்லால் நேரு சாலை- காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் இடத்தில் 360 பஸ்கள் மட்டுமே நிறுத்த வசதி உள்ளது. ஆனால் 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு நெரிசலை குறைக்க தனியார் பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறும் போது, கோயம்பேட்டில் இருந்து நீண்ட நேரம் செல்லும் பஸ்கள் மாதவரம் மற்றும் கே.கே.நகர் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 30 இடங்கள் காலியாக உள்ளன.
இதனால் தனியார் பஸ்களுக்கு கோயம்பேட்டில் இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. காலி இடங்கள் ஏலம் விடப்படுகிறதா அல்லது ஆம்னி பஸ்கள் இயக்க கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதா என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார். #Koyambedubusstand
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்