என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coimbatore"
- கோவை கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.
- நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.
இந்த உணவு திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
இதற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் உணவு திருவிழாவில் திரண்டுள்ளனர். ஆனால் ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் ஒவ்வொரு உணவையும் வாங்க மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூட்டத்தை கையாள முடியாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த மக்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றதே இந்தக் குழப்பங்களுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர்.
₹850 வாங்கிட்டு ஒழுங்கா சாப்பாடு போட முடியல" -கொங்கு உணவுத் திருவிழாவில் குளறுபடி!இதில் 400-க்கும் அதிகமான விதவிதமான உணவு வகைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மக்கள் கூட்டத்தை கையாள முடியாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. pic.twitter.com/aHyxltizVY
— Bigg Boss Tamil 8 ~RB (@RBSatez) December 1, 2024
- வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.
- கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.
கோவை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி லண்டன் சென்றார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அரசியல் மேற்படிப்பு படித்தார். படிப்புக்கு மத்தியில் லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
அரசியல் மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்றதை தொடர்ந்து தமிழக பா.ஜ.கவில் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு முக்கிய முடிவுகளையும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவினரே எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.
தமிழகம் வந்த சில நாட்களிலேயே அண்ணாமலை கோவைக்கு வருகை தர உள்ளார்.
அடுத்த மாதம் 1-ந்தேதி கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.
இதற்காக 1-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அண்ணாமலை கோவைக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் கொடிசியாவுக்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
அதனை தொடர்ந்து அவர் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை கோவை வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
லண்டன் சென்று விட்டு 3 மாதம் கழித்து முதல்முறையாக அண்ணாமலை கோவைக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கோவை மாவட்ட பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக வருகிற 30-ந் தேதி, கொடிசியாவில் நடைபெறும் இதே நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகனும் பங்கேற்றக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் கட்சியினர் வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகம் காணப்படுகிறது.
- சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
- மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி கனமழை பெய்கிறது. மேலும் அங்கு மேகமூட்டத்துடன் கடும்குளிரும் நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி , பர்லியார், கரும்பாலம், சின்னவண்டிச்சோலை, கேத்தி, காட்டேரி, சேலாஸ், வண்டிச்சோலை, எடப்பள்ளி, கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை விட்டுவிட்டு மழை பெய்தது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது.
மேலும் குன்னூர் நூலக கட்டிட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் அங்குள்ள மின்கம்பம் சேதம் அடைந்ததுடன் மண்திட்டுகள் மழைநீரில் கரைந்து பஸ் நிலையத்திற்கு அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சேறும் சகதியுமாக படிந்து பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கிடையே குன்னூர் மார்க்கெட் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
ஓட்டுபட்டறை முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடுப்புசுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல காந்திபுரம் பகுதியில் ருக்மணி என்பவரின் வீட்டில் முன்புற தடுப்புசுவர் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் தொடர்மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குறும்பாடி அருகே நள்ளிரவு ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி மரத்தை அகற்றினர்.
குன்னூர் தாலுகாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சப்-கலெக்டர் மேற்பார்வையில் தாசில்தார் தலைமையில் 10 பேர் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
குன்னூரில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அதிகாரிகள் குழுவினர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு சென்று, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிவாரணக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்து வருகின்றனர்.
குன்னூர் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தொடர்மழை, சிறிதுநேரம் வெயில், பின்னர் நீர்ப்பனி என காலநிலை அவ்வப்போது மாறி வருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மலைப்பாதைகளில் செல்லும் வாகனஓட்டிகள் மரங்கள் மற்றும் மண் திட்டுகளுக்கு இடையே வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. மேலும் ஒருசில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்ததால் கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே.நகர் பிரதான சாலையில் இருந்த மே பிளவர் மரம் காற்றில் சாய்ந்து அருகில் சென்ற மின்கம்பியின் மீது விழுந்ததில் அந்த மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. மேலும் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும் உடைந்து விழுந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
- மு.க.ஸ்டாலினின் அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
- கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
கோவை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.
நேற்று 2-வது நாளாக கள ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை காந்திபுரம் அடுத்த அனுப்பர் பாளையத்தில் சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியை வெகுவாக பாராட்டி பேசினார்.
செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். அவருக்கு இடையில் சில தடைகள் வந்தன.
அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது மீண்டும் கோவைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் அதே உத்வேகத்துடன் கோவை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் தன்னை பாராட்டிய பேசிய அந்த வீடியோவையும் அந்த பதிவுக்கு கீழே பகிர்ந்துள்ளார்.
- போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.
கோவை.
2 நாள் பயணமாக கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மக்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை பரிசீலிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான். மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.
முன்னதாக, எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை என்று கோவையில் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.
- கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.
கள ஆய்வுப்பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (5-ந்தேதி) கோவையில் இருந்து தொடங்க உள்ளார். நாளையும், நாளை மறுநாளும் கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வு செய்கிறார்.
இதற்காக நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கர் பரப்பளில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழிநுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வுப்பணியின் ஒரு அங்கமாக முதல்-அமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்க உள்ளார்.
மாலை 4 மணிக்கு சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தங்க நகை தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிகிறார்.
தொடர்ந்து போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடி 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். பின்னர் இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் (6-ந் தேதி) காலை 9.30 மணிக்கு கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
தொடர்ந்து திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் மதியம் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முதலமைச்சர் வருகையை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. உள்ளூர் போலீசார் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் சேர்ந்தவர்களுக்கு முகாம்.
- 5 மணிக்கு முகாம் என்பதால் நேற்று இரவு முதல் வரத்தொடங்கி சாலையோரம் ஓய்வெடுத்தனர்.
இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதையொட்டி ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி (பி.ஆர்.எஸ்.) மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.
இன்று காலை 5 மணிக்கு தெலுங்கானா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும் முகாம் நடக்கிறது.
இன்று தொடங்கும் முகாமில் பங்கேற்க தெலுங்கானா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் கோவைக்கு வந்தனர். காலை 5 மணிக்கு முகாம் தொடங்குவதால் அதற்கு முன்னதாக வர வேண்டும். எனவே வெளிமாநில வாலிபர்கள் நேற்றிரவவே கோவைக்கு வந்தனர். மேலும் நள்ளிரவில் வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்குவதற்கு வசதி ஏதும் இல்லாததால் சாலையோரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் அதிகாலையில் வரும் இளைஞர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் படுத்து தூங்கி ஓய்வெடுத்தார். இதனால் அவர்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், நாளை மறுநாள் (6-ந்தேதி) ராஜஸ்தான், மராட்டியம் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடக்கிறது.
7-ந்தேதி தமிழகத்தில் உள்ள அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ண கிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்ப லூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடைபெறுகிறது.
8-ந்தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களுக்கும், 9-ந் தேதி கேரள மாநிலம் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முகாம் நடத்தப்படுகிறது.
10-ந் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், வயநாடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் முகாம் நடைபெறுகிறது.
11-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதில் ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
- மாணவர் பிரபு சூப்பர் ஹீரோ, சூப்பர் பவர் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.
- கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பிரபு (19) என்ற மாணவர் கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை திடீரென கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
மாணவர்கள் விடுதியின் 4வது மாடியில் இருந்து பிரபு கீழே குதிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சூப்பர் பவர் உள்ளதாக நினைத்து 4வது மாடியில் இருந்து குதித்த மாணவர்.. இவர் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் பார்ப்பார் என கூறப்படுகிறது#Coimbatore #College #Student #Death pic.twitter.com/Fw9XXy0fUD
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) October 30, 2024
மாணவர் பிரபு சூப்பர் ஹீரோ, சூப்பர் பவர் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்ததுடன் அதுபோன்ற பவர் தனக்கு இருப்பதாகவும் நண்பர்களிடம் கூறியுள்ளார். தனக்கு யாரோ ஒருவர் சூனியம் வைத்ததாகவும், கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.
தனக்கு சூப்பர் ஹீரோக்கள் போன்ற சூப்பர் பவர் இருப்பதாகவும், அதனால் எந்த கட்டிடத்தில் இருந்தும் தன்னால் குதிக்க முடியும் என்றும் பிரபு நம்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
- மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.
கோவை:
விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெறும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
நடிகர் விஜய்க்கு கொங்கு மண்டலமான கோவையில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், துடியலூர் போன்ற இடங்களில் இருந்து வாகனங்கள் மாநாட்டுக்கு புறப்பட உள்ளன.
கட்சிக் கொடி ஏந்தி, தாரை-தப்பட்டை முழங்க மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.
இதற்கிடையே மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கோவையில் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் நகர் முழுக்க சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டிகளில் மாநாடு தொடர்பாக பரபரப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
கோவை ரெயில்நிலையம் முன்பு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களை கவரும் வகையில் உள்ளன.
அதில் மீண்டும் எம்.ஜி.ஆர் வருகிறார், மக்களாட்சி தருகிறார் என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது. சுவரொட்டியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். படமும், விஜய் படமும் இடம்பெற்றுள்ளது.
எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். சாட்டையை சுற்றுவது போல் தோன்றும் காட்சியும், அதேபோல் விஜய் சாட்டையை சுற்றுவது போன்று படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சுவரொட்டியில் தமிழகத்தின் எதிர்காலமே, நல்லாட்சியை எதிர்நோக்கும் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமே என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே மாநாடு நடைபெறும் மைதான முகப்பில் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் கட்-அவுட்டுகள் இடம்பெற்றுள்ள நிலையில் கோவையில் எம்.ஜி.ஆர். படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தகராறு.
- 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.
கோவை:
தேனி மாவட்டம், பங்களா மேடு, பழைய டி.வி.எஸ். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராகுல் (வயது 18). இவர் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கோவை சவுரி பாளையம் ரோட்டில் அண்ணா நகர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வருகிறார்.
இந்த நிலையில் ராகுலுக்கும், அதே கல்லூரியில் பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படிக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி என்பவருக்கும் சீனியர்-ஜூனியர் பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கல்லூரியில் கடந்த 19-ந் தேதி தனியார் டி.வி. நிகழ்ச்சி அங்கு உள்ள ஆடிட்டோரியத்தில் நடந்தது. அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படடது. சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
நேற்று முன்தினம் ராகுல் அங்கு உள்ள டீக்கடை அருகில் நின்ற போது மீண்டும் ராகுல்காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ராகுலுடன் தங்கி படிக்கும் மாணவர் கதிர் என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் நண்பர்கள் அவரது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் ஜிபிஎஸ் கருவி வசதி இருந்ததால் அதன் மூலம் மோட்டார் சைக்கிள் ராம நாதபுரம் ஒலம்பஸ், பாரதி நகரில் இருப்பதை கண்டு பிடித்து நேற்று மாலை கதிர் மற்றும் நண்பர்கள் மீண்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தனர்.
நேற்று மாலை ராகுல் காந்தி, தனது நண்பர்கள் சிலருடன் ராகுல் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த ராகுல் மற்றும் கதிர் அவரது நண்பர்களை அடித்து உதைத்து கத்தியால் குத்தினர்.
இதில் ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ் பாண்டியன், ரோஷன் ராஜா ஆகியோருக்கு தலை, கை, மார்பு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது.
அதோடு நிற்காமல் ராகுல் காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவர்கள் தங்கியிருந்த அறையையும் அடித்து நொறுக்கினர். அதன் பிறகு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதை பார்த்த மற்ற மாண வர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். காயம் அடைந்த மாண வர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகி ச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ராகுல் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி, கெவின் சதீஷ் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
- 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கோவை:
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது.
6 மணிக்கு தொடங்கிய மழையானது இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த இந்த மழையால் கோவையில் உள்ள முக்கிய சாலைகளான திருச்சி சாலை, சத்தி சாலை, அவினாசி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போன்று கொட்டியது. அதில் வாகன ஓட்டிகள் நனைந்தவாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.
பணிமுடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்ததால் ஏராளமானோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு செல்ல முடியாமல் தவித்தனர். மழையில் இருந்து தப்பிக்க பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
குறிப்பாக அவினாசி சாலையில் சென்றவர்கள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு அடியில் மழைக்கு ஒதுங்கினர். எல்.ஐ.சி சந்திப்பு பகுதியில் ஏராளமானார் தங்களது மோட்டார் சைக்கிளுடன் ஒதுங்கியதாலும், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.
இதுதவிர லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம், சிவானந்தா காலனி ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றினர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இந்த பகுதிகளில் போக்குவரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் பாலத்தின் கீழ் வழியாக செல்வதை காண முடிந்தது.
புறநகர் பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பாலமலை பகுதியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக மலையில் இருந்து உற்பத்தியாகி பெரிய நாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், கோட்டைப்பிரிவு வழியாக செல்லும் ஏழு எருமைப் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மத்தப்பாளையத்தில் இருந்து ஒன்னிப்பாளையம் வழியாக செல்லும் இந்த சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
மழையால் இந்த பாலத்தில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் தண்ணீர் செல்வது தெரியவில்லை. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களில் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டன.
இதனால் அதிர்ச்சியான காரில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர். 2 கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இன்று காலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள்.
தொண்டாமுத்தூர் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழைக்கு புதுப்பாளையம் என்ற இடத்தில் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கி தீ பிடித்து எரிந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வாகனங்களில் சாலையில் ஊர்ந்தபடியே சென்றன. பல இடங்களில் வெள்ளநீருடன் சாக்கடை நீரும் கலந்தது. மழையால் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. போக்குவரத்து மட்டும் பாதிக்கப்பட்டது.
அதேபோல் ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கோவையில் பெய்த கனமழையால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு விமான நிலையம் பகுதியில் 8 செ.மீ மழையும், கோவை தெற்கு தாலுகாவில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-
விமான நிலையம்-87.60, வால்பாறை பி.ஏ.பி-74, சோலையார்-72, வால்பாறை தாலுகா-71, கோவை தெற்கு-70, பெரியநாயக்கன் பாளையம்-58, வேளாண் பல்கலைக்கழகம்-47, மேட்டுப்பாளையம-31, மாக்கினாம்பட்டி-39.
- கோவை சாய்பாபா காலனி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது.
- பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதலாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், நேற்று கோவை சாய்பாபா காலனி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கோவையில் நேற்று தனியார் பேருந்து மூழ்கிய அதே இடத்தில் இன்று மழைநீரில் அரசுப்பேருந்து சிக்கியுள்ளது. பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்