search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dayanidhi maran"

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
    • வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம் சாட்டினார்.

    இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என ஆட்சேபம் தெரிவித்து, தயாநிதி மாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனும் பி.என்.எஸ்.எஸ். அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டு விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    • எவ்ளோ பெரியார் வந்தாலும்.. இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க.
    • நாம் தமிழ்நாட்டை கஷ்டப்பட்டு முன்னேற்றினாலும் மூட நம்பிக்கையால் நம்மை பின்னுக்கு தள்ளுகிறார்கள்.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய மகாவிஷ்ணு குறித்து எம்.பி. தயாநிதிமாறன் பேசியுள்ளார்

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பேசிய எம்.பி. தயாநிதிமாறன், "இப்போது கஷ்டப்படுவதற்குப் போன ஜென்மத்தில் செய்த நீ பாவம் என்று பள்ளிக்கூடத்தில் ஒருவர் பேசுகிறார். அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

    நம் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் நாம் படிக்க வைப்பதே அவர்கள் படித்து முன்னேறி அறிவியல் பூர்வமாக சிந்தித்து அடுத்த தலைமுறையை முன்னேற்றுவார்கள் என்பதற்கு தான்.

    எவ்ளோ பெரியார் வந்தாலும்.. இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க.

    நாம் தமிழ்நாட்டை கஷ்டப்பட்டு முன்னேற்றினாலும் மூட நம்பிக்கையால் நம்மை பின்னுக்கு தள்ளுகிறார்கள்.

    கர்நாடகாவில் படிக்காத சாமியார்கள் பிறந்த பெண் குழந்தைகளை நரபலி கொடுத்தார்கள். மூத்த ஆண் குழந்தையை நரபலி கொடுத்தார்கள். அதனால் அம்மாநிலத்தில் மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
    • ஈபிஎஸ்-ன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக உள்ள தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத நிதியை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஈபிஎஸ்-க்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்காக வருகிறது.

    அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்காக ஆஜராகிறார்.

    • கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதி மாறன் எம்.பி. தலைமை தாங்கினார்.
    • தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே? வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ ரெயில் நிதி ஒதுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மத்திய அரசின் செயலை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தை நடத்தினர். அனைத்து மாவட்ட செயலாளர்களும் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் தி.மு.க.வின் பிற அணி நிர்வாகிகள் தீவிரமாக கலந்து கொண்டு மத்திய அரசின் போக்கை கண்டித்து கோஷமிட்டனர்.

    சென்னையில் கலெக்டர் அலுவலகம், சைதாப்பேட்டை சின்னமலை, தாம்பரம், ஆவடி ஆகிய 4 இடங்களில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதி மாறன் எம்.பி. தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி. எம்.எல்.ஏக்கள், ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், மண்டல தலைவர் நேதாஜி, கணேசன், இலக்கிய அணி செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க பாரபட்சம் காட்டாதே, ஒன்றிய அரசே தமிழ்நாட்டை புறக்கணிக்காதே! தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே? வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ ரெயில் நிதி ஒதுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சைதாப்பேட்டை சின்னமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமை தாங்கினார். இதில் தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள், மயிலை த.வேலு, எழிலரசன், காரப்பாக்கம் கணபதி மற்றும் பூச்சி முருகன், அன்பகம் கலை, காசிமுத்து மாணிக்கம், தனசேகரன், கண்ணன், தி.நகர் பி.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தலைமை தீர்மான குழு செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம், மாவட்ட ஒன்றிய குழு தலைவர் படப்பை மனோகரன், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ஏ.கே.கருணாகரன், செம்பாக்கம் இரா.சுரேஷ், இ.எஸ்.பெர்னாட், கவுன்சிலர்கள் பெருங்களத்தூர் சேகர், சிட்லபாக்கம் சுரேஷ், ஜோதி குமார், புகழேந்தி, நரேஷ் கண்ணா, பெரியநாயகம், நிர்வாகிகள் ரஞ்சன், இரா.செல்வகுமார், எஸ்.ஜி.கருணாகரன், வேல்மணி பி.ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஆவடி மாநகராட்சி அருகில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., ஆவடி மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் சண் பிரகாஷ் உள்பட ஏராள மானவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னை:

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேயர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரையில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஐ.லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக பங்கேற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இவ்வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

    • பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்து இந்த குழுவில் பிரதிநிதித்துவம் பெறுகின்றனா்.
    • ஐந்துக்கு மேற்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட கட்சி பிரதிநிதித்துவம் பெறலாம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் அன்றாட அலுவல்களை தீர்மானிக்கும் அலுவல் ஆய்வுக் குழுவுக்கு 8 கட்சிகளைச் சோ்ந்த 14 உறுப்பினா்களை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிா்லா பரிந்துரைத்துள்ளாா். இதில் பாஜக கூட்டணி கட்சியைச் சோ்ந்த 8 உறுப்பினா்களும் 'இந்தியா' கூட்டணி கட்சியை சோ்ந்த 6 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனா்.

    பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்து இந்த குழுவில் பிரதிநிதித்துவம் பெறுகின்றனா். அதன்படி பாராளுமன்றத்தில் 240 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க. சாா்பாக பி.பி.சவுத்ரி, நிஷிகாந்த் துபே, டாக்டா் சஞ்சய் ஜெய்ஸ்வால், பா்த்ரு ஹரி மகதாப், பைஜயந்த் ஜெய் பாண்டா, அனுராக் சிங் தாக்குா் உள்ளிட்ட 6 உறுப்பினா்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கு தேசக் கட்சியை சோ்ந்த பிரதிநிதியாக லவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலுவும், 12 உறுப்பினா்களைக் கொண்ட ஜக்கிய ஜனதா தளக் கட்சியைச் சோ்ந்த திலேஷ்வா் கமைத் என ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு 8 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

    பாராளுமன்றத்தில் 98 உறுப்பினா்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கவுரவ் கோகோய், கொடிக்குன்னில் கே.சுரேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். சமாஜ்வாடி கட்சி (மொத்தம் 37 உறுப்பினா்கள்), திரிணாமுல் காங்கிரஸ் (29 உறுப்பினர்கள்), தி.மு.க. (22 உறுப்பினா்கள்), சிவசேனா-(உத்தவ்தாக்கரே பிரிவு 9 உறுப்பினா்கள்) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு முறையே லால்ஜி வா்மா, சுதீப் பந்தோபாத் யாய், தயாநிதிமாறன், அரவிந்த் கண்பத் சாவந்த் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இதன் மூலம் 'இந்தியா' கூட்டணிக்கு 6 உறுப்பினா்கள் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

    ஐந்துக்கு மேற்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட கட்சி பிரதிநிதித்துவம் பெறலாம். அப்படி பெறாதபட்சத்தில் சபாநாயகர் அந்த கட்சிகளைச் சோ்ந்தவர்களை கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்க அழைக்கலாம். இந்த குழுவில் தேசியவாதக் காங்கிரஸ் (8 உறுப்பினா்கள்), சிவசேனா-ஏக்நாத் (7 உறுப்பினா்கள்) ஆகிய கட்சிகளுக்கு பிரதி நிதித்துவம் கிடைக்கவில்லை.

    பாராளுமன்றத்தில் விவாதங்களுக்கான நேரத்தை ஒதுக்குதல், அரசின் மசோதாக்களை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட பிற அலுவல்களின் நிகழ்வுகளை அலுவல் ஆய்வுக் குழு பரிந்துரைக்கும். பொதுவாக குழுவால் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் ஒருமனதாக இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்த குழு மாற்றியமைக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
    • வழக்கின் விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக உள்ள தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத நிதியை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார். 

    இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஆதாரங்களும் இல்லாமல் என் மீது அவதூறு பரப்பி உள்ளார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

    மன்னிப்பு கேட்காததால் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு தர்மபிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முதல் விசாரணை என்பதால் எடப்பாடி பழனிசாமி இன்று கோர்ட்டில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் ஐ.எஸ். இன்பதுரை ஆஜரானார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், காஞ்சிபுரம் தொகுதி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடி இருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூன்) 27-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக வக்கீல் இன்பதுரை அளித்த பேட்டி வருமாறு:-

    மத்திய சென்னை தொகுதியின் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    • வெளிநாட்டிலிருந்து ஊடுருவி வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
    • மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்.

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையத்திடம் 3 கேள்விகள் கேட்கிறேன்.

    1. வெளிநாட்டிலிருந்து ஊடுருவி இந்தியாவுக்குள் வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

    2. மன்மோகன் சிங் சொன்னதை திரித்து, மதத்தின் பேரில் மக்களை பிரிக்கும் மோடியின் மீது என்ன நடவடிக்கை பாயும்?

    3. ஒரு சமூகத்தின் மீது துவேஷத்தைக் கொட்டி இன்னொரு சமூகத்தின் மனங்களில் நச்சை விதைக்கும் மோடி மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை?

    10 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லாததால், பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கூட பழைய வகுப்புவாத அஜெண்டாவை நாடியுள்ளார். மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.
    • பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது என்றார் தயாநிதி.

    புதுடெல்லி:

    இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பா.ஜ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அரசு. ஆனால், வரலாறு காணாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சூறையாடிவிட்டது.

    10 ஆண்டுகளாக வாயில் வடை மட்டும்தானே சுட்டீர்கள். அதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?

    சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை ஒன்றிய அரசு.

    பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

    ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.

    இடைநிலை நிதிநிலை அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு நல்லது வரவில்லை, நாமம் தான் வந்தது. ஏழைகளுக்கு பயனில்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

    மொழியை வைத்து மக்கள் வாழ்வை சீரழித்திடும் மோடி அரசை வரும் தேர்தலில் வெளியேற்ற சபதமேற்போம் என காட்டமாக விமர்சித்தார்.

    • அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
    • இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

    சென்னை:

    மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பயணிகள் அடையும் சிரமத்தை நேற்றைய தினம் சமூகவலைதளங்களில் பயணி ஒருவர் பதிவிட்டு இருப்பதை கண்ட பிறகாவது ரெயில்வே நிர்வாகம் விழித்துக்கொண்டு உடனடியாக அவற்றை சரிசெய்வதோடு, அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதுகுறித்து பலமுறை மண்டல கூட்டத்திலும், பலமுறை கடிதம் வாயிலாகவும் ரெயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன் என கூறியுள்ளார்.

    • ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளாத நிலையிலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
    • குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனும் அவரது மனைவியும் சேர்ந்து கோபாலபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்கள். கடந்த 8-ந் தேதி அவரது மனைவிக்கு வங்கியில் இருந்து பேசுவது போல் போன் அழைப்பு சென்று உள்ளது. அந்த இணைப்பை துண்டித்ததும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.99,999 திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளாத நிலையிலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் 2018-ம் ஆண்டிலேயே ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? என்று காட்டமாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் கண்டறியப்பட்டு வங்கிக்கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.

    மேலும் குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார், குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள்.

    ×