என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Delta farmers"
- மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
- சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கர்நாடக காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசுடன் ரகசியமாக கைகோர்த்து காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கு நீரை முறையே வலியுறுத்திப் பெறாமல், டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே இழைத்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக காவிரியில் போதிய தண்ணீர் திறந்துவிடப்படாததால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்தனர். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யப்படாததால், விவசாயிகள் உரிய நிவாரணமும் பெற இயலவில்லை.
சம்பா தாளடி காலங்களில் ஒருபுறம் நீரின்றி பயிர் கருகியது, மறுபுறம் மழை வெள்ளத்தால் பாதிப்பும் ஏற்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தே திறக்காததால், அறுவடை செய்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் அரசு முழுமையாக வழங்கவில்லை.
நடப்பாண்டில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் காவிரியில் போதியத் தண்ணீரை பெறாததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததாலும், மும்முனை மின்சாரம் வழங்கப்படாததாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
கடந்த ஒரு வார காலமாக இயற்கையின் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு வேறு வழியின்றி உபரி நீரை காவிரியில் திறந்து விடுகிறது. அதன் காரணமாக மேட்டூர் அணை வெகு வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று 100 அடியை தாண்டியுள்ளது. எனவே, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
சம்பா சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால விதை நெல் ரகங்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் இருந்து தெரிய வருகிறது. எனவே, உடனடியாக இருவகை விதை நெல்களையும் தட்டுப்பாடின்றி வேண்டிய அளவு வழங்க வேண்டும். மேலும் தி.மு.க. அரசு சம்பா பாசனத்திற்கு தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்து விட்டதால், பயிர் கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளுக்கு பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு பயிர் கடன் வழங்கப்படமாட்டாது என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
எனவே, இவ்வாண்டு சம்பா சாகுபடிக்கு, சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும். மேலும், காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதிகள் வரை செல்ல ஏதுவாக வாய்க்கால்கள், மதகுகளை பழுது நீக்கி சரி செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காவிரி நீர் இல்லாததால் பம்புசெட் மூலம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகிறது.
- கர்நாடகா அரசை நம்பி காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடியில் தலா 5 லட்சம் ஏக்கரை விஞ்சிய நிலையில் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 94 ஆயிரத்து 850 ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 3250 ஏக்கருக்கு என மொத்தம் 3.20 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஆழ்துளை மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினர். இதுவரை 4 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி எட்டப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடியில் மந்த நிலை ஏற்பட்டு இருக்காது. கடந்த 2 ஆண்டுகளை போல இம்முறையும் இலக்கை விஞ்சி சாகுபடி செய்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது காவிரி நீர் இல்லாததால் பம்புசெட் மூலம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்று நீரை மட்டும் நம்பியிருந்த விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியாததால் வேதனையில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சற்று நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் வழக்கம்போல் கர்நாடகா அரசு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட முடியாது. அதற்கு பதிலாக வினாடிக்கு 8000 கனஅடி தண்ணீரை திறந்து விடுவோம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் வெறும் 43.22 அடி மட்டுமே உள்ளது. அப்படி இருக்கையில் 8000 அடி கனஅடி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடும்போது மேட்டூர் அணை நிரம்பவே 20 முதல் 30 நாட்களுக்கும் மேல் ஆகும்.
அதுவும் தினமும் தண்ணீர் திறந்து விட்டால் தான். மற்றப்படி எங்கள் மாநிலத்தில் போதிய மழை பெய்யவில்லை என கூறி மிக குறைவான கனஅடி தண்ணீரை திறந்து விட்டால் அணை நிரம்ப அதைவிட கூடுதல் நாட்கள் பிடிக்கும். இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைப்போம் என்றும், அத்துடன் காவிரிநீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. தற்போது திறந்து விட்டது உபரிநீர் தான்.
இதனால் கர்நாடகா அரசை நம்பி காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர். மேட்டூர் அணையில் குறிப்பிட்ட அடி வரை தண்ணீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்காக திறந்து விடப்படும். அதற்கு 40 நாட்களுக்கு மேலேயே ஆகும். அந்த தண்ணீர் அடுத்து சம்பா சாகுபடிக்கு பயன்படுத்த தான் உதவியாக இருக்கும். அதுவும் கர்நாடகா அரசு கூறியப்படி தினமும் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே சாத்தியம். எனவே தற்போது குறுவை சாகுபடிக்கு எந்த பயனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறும்போது, தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும். கோர்ட், காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை கர்நாடகா அரசு மீறுவது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் நமக்குரிய நீரை தான் கேட்கிறோம். அதுவும் தரவில்லை என்றால் எப்படி. தொடர்ந்து உத்தரவுகளை மீறி விதிமுறைகளை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்படுவது கண்டித்தக்கது. நமக்குரிய நீரை பெற்று தர தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு காவிரி நீர் தான் உயிர்நாடி. எனவே உரியநீரை பெற்று தந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர்.
- வழக்கமாக மே மாத இறுதியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்.
- இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சேலம்:
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையை நம்பி பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும், இந்த தண்ணீர் திறப்பு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை மற்றும் நீர் இருப்பை பொறுத்து மாறுபடும். மேட்டூர் அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளாக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலம் முக்கிய பகுதியாக உள்ளது .
வழக்கமாக மே மாத இறுதியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். அப்போது அங்கிருந்து காவிரியில் வரும் தண்ணீர் கரை புரண்டு ஓடி ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடையும். அணையின் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருக்கும்பட்சத்தில் அணைக்கு நீர்வரத்தும் திருப்தியாக இருந்தால் மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் நடப்பாண்டில் நேற்று 1,432 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 795 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியில் 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.31 அடியாக உள்ளது.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மழை தொடங்கினாலும் இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காவிரியின் குறுக்கே உள்ள கர்நாடக அணைகள் நிரம்பி பின்னர் தான் மேட்டூர் அணைக்கு வந்தடையும். இதனால் வருகிற 12-ந் தேதிக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுமா, டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? தற்போது விவசாய பணிகளை தொடங்கலாமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் இந்த மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணையே பூர்த்தி செய்கிறது. மேட்டூர் அணையை பொறுத்தவரை முழுக்க முழுக்க கர்நாடக அணைகளையே நம்பி உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் மட்டுமே டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்த காலகட்டத்தில் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு தாமதமாக அணை திறக்கப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இன்னும் 21 நாட்களே உள்ளதால் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இந்தாண்டும் 12-ந் தேதி தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மே மாதம் 3-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். அந்த சமயம் கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை பெய்து அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணை நிரம்பி அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.
ஆனால் இந்தாண்டு பருவமழை அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு பிறகு தான் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்த குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 39 கன அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 48 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால் அடுத்த மாதம் கடைசி வரை குடிநீருக்கு மட்டும் தான் இந்த தண்ணீர் போதுமானதாகவும், இதனால் குறித்த காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டும் தாமதமாக ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியாகவும், நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
சென்ற ஆண்டு கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. இந்தாண்டும் அதே போல மேட்டூர் அணை நிரம்புமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அணை கட்டியதில் இருந்து தற்போது வரை உள்ள 86 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்பாகவே 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது தவிர 58 ஆண்டுகள் மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமாக இல்லாததால் குறித்த நாளில் தண்ணீர் திறக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சங்க காலத்தில் இருந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி திகழ்ந்து வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விளை நிலங்களை அழித்து வருகிறது. வேளாண்மை நிலங்களை நாசமாக்கினால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்.
கிராம மக்களும், விவசாயிகளும் வாழையடி வாழையாக வசித்து தாங்களும் வாழ்ந்து மக்களையும் வாழ வைத்து வருகிறார்கள்.
இன்றைய நவீன உலகில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மிகவும் குறைந்து வருகிறது. 2030-ம் ஆண்டு பெட்ரோலிய காரே கிடைக்காது என மோடி அரசு அறிவித்துள்ளது.
இதன் பின்னர் மின்சார கார்கள் தான் 2030-க்குப் பிறகு வர உள்ளது. எனவே இன்னும் 11 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதால் என்ன பயன்? காவிரிப் படுகையை பாதுகாப்பதற்கு தான் இப்பகுதி மக்கள் போராடுகிறார்களே தவிர சொந்த நலனுக்காக அல்ல.
எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் குமுறி எழுவார்கள்.
இவ்வாறு நெடுமாறன் தெரிவித்தார். பேட்டியின் போது விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உடன் இருந்தார்.
கஜா புயல் கடந்த 16-ந் தேதி 110 கிலோ மீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த காற்றினாலும், மழையினாலும் பாதிப்புக்குள்ளாகின. இதில் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஏராளமானோர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. வாழை, நெல், கரும்பு, வெற்றிலை கொடிகள், தென்னை போன்ற அனைத்தையும் கஜா புயல் சூறையாடி சென்றது.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் அந்த பகுதிகளில் குடிதண்ணீருக்கு வழியில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் காலி குடங்களை எடுத்து கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் புயல் கரையை கடந்து 7 நாட்கள் ஆகியும் முகாம்களிலேயே உள்ளனர்.
தற்போது தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று மின்சாரம், குடிநீர் ஆகியவை ஆகும். இதனால் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி வருகின்றனர்.
மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இதற்காக அதிகாரிகளை முற்றுகையிட்டும், சாலைமறியல் செய்தும் தங்கள் எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீட்டு தொகை மாநில அரசு அறிவித்துள்ளது. நெல் பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும். கரும்பு, வாழை, காய்கறிகள், மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும். இந்த பயிர்களை மறு சாகுபடி செய்ய செலவில் 40 முதல் 50 வரை மானியம் வழங்கப்படும்.
முந்திரி பயிர்களுக்கு ரூ.18 ஆயிரமும், தென்னை ஹெக்டேருக்கு ரூ.2.64 லட்சமும், படகு வலைகளுக்கு ரூ.85 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மட்டும் கஜா புயலால் 2 கோடி தென்னை மரங்கள் சேதமாகி உள்ளன. இதில் 60 லட்சம் தென்னைகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் தென்னையை நம்பி வாழ்ந்த விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். தென்னை விவசாயிகளின் வாழ்க்கை தற்போது 15 ஆண்டுகளுக்கு பின்னுக்கு சென்று விட்டது.
தங்களது வாழ்வாதாரமே போய் விட்டதே என்று கண்ணீரில் விட்டு கதறி வருகின்றனர்.
இதுகுறித்து பட்டுக் கோட்டை அடுத்த பழவேரிக்காடு சிவிக்காடு பகுதியை சேர்ந்த வைராம்பாள் கூறியதாவது:-
நான் 7 ஏக்கரில் 500 தென்னை மரங்களை பிள்ளை போல் வளர்ந்து வந்தேன். எனக்கு 65 வயதான நிலையில் கால்கள் நடக்க முடியாத நிலையில் தென்னைகளுக்கு உரமிட்டு தண்ணீர் பாய்ச்சு வளர்ந்தேன். தென்னை மட்டை கீற்றுகளை பின்னியும் தேங்காய்களை விற்றும் பிழைத்து வந்தேன். ஆனால் கஜா புயலால் எனது வாழ்க்கை அடியோடு போய் விட்டது. தென்னைகளை இழந்து நிர்கதியாய் தவித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கணேசன் கூறியதாவது:-
தஞ்சையில் நான் வசித்து வந்தாலும் எனது சொந்த கிராமமான ஆவிக்கோட்டையில் 16 ஏக்கர் நிலத்தில் 1200 தென்னை மரங்களுடன் தோப்பை பராமரித்து வருகிறேன். விவசாயம் மீது கொண்ட பற்றால் தென்னந்தோப்பை கவனித்து வந்தேன்.
கஜா புயலால் இன்று அனைத்தையும் இழந்து விட்டேன். எனது வாழ்க்கை கனவுகள் சிதைந்து விட்டது, கானல்நீராக போய் விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் கூறியதாவது:-
இந்த பகுதியில் 20 ஏக்கர் நிலத்தில் 1500 தென்னை மரங்கள், 300 தேக்கு மரங்கள், 2000 வாழைகள், 25 மாமரம் ஆகியவை வளர்ந்து வந்தேன்.
ஒரே நாள் இரவில் வீசிய புயலால் நிலைகுலைந்து போய் விட்டோம். இப்போது நானும் எனது குடும்பமும் தவித்து வருகிறோம். அரசு சார்பில் நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு மேட்டூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருகிற 19-ந் தேதி திறக்கப்படும் என்று நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகத்தில் பெய்த தொடர் மழையால் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டு அகண்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை ஏரி, குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். குடிமராமத்து பணிகள் 25 சதவீதம் தான் முடிந்துள்ளது.
ஏற்கனவே டெல்டா மாவட்டங்கள் ஆறுகள், நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். முறைப்பாசனம் இன்றி காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், ஆறுகளில் பிரித்து அனுப்பி நீர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.
கடலில் ஒருசொட்டு நீர் கூட கலந்து வீணாக்காமல் அனைத்து நீரையும் விவசாயத்திற்கே பயன்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் கூறியதாவது:-
டெல்டா மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுவரை திறக்கப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடைமடை பகுதி வரை சென்றது இல்லை.
கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். அப்போது தான் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகளும் இதில் பயன்பெற முடியும்.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தங்குதடையின்றி செல்ல ஏரி, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான நெற்கதிர், உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க வேண்டும்.
தற்போது தமிழக முதல்-அமைச்சர் 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்திருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார். #DeltaFarmers #MetturDam
தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொது செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பா.ஜனதா தேர்தல் அறிக்கையிலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் 2022-ம் ஆண்டுகளுக்கு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் நெல்லுக்கான விலை குறித்த மத்திய அரசின் அறிவிப்பினை பார்த்தால் 2032 ஆனாலும் விவசாயிகளின் வருமானம் கேள்விக்குறியாகவே இருக்கும்.
கோதுமையை அறுவடை செய்து நேரடியாக பயன்படுத்தலாம். ஆனால் நெல்லின் நிலை அதுவல்ல. டெல்டா பகுதியில் நெல் மட்டுமே முக்கிய பயிராக உள்ளது. எனவே மத்திய அரசு நெல்லுக்கு சிறப்பு விலை வழங்க வேண்டும். இதன்படி, நெல்லுக்கான அடிப்படை விலை அறிவிப்பினை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயிக்க வேண்டும். இது நடக்காவிட்டால் விவசாயிகள் நிலை நிச்சயம் கேள்விக்குறியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவனியாபுரம்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-
அந்தியோதயா ரெயில் திருநெல்வேலியில் இருந்து விருதுநகர் வரை இடை நில்லாமல் செல்கிறது. அதை பயணிகள் வசதிக்காக கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
3-வது நீதிபதியை உடனடியாக நியமித்து உரிய காலத்தில் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும்.
முக்கிய வழக்குகளில் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் எப்போது, எவ்வளவு கால அவகாசம் என்பதை இறுதி செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
காவிரி விவகாரங்களில் கர்நாடகத்தில் மழை பெய்து தண்ணீர் திறப்பது போல் இயல்பாக மாதந்தோறும் நீர் திறக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
காவிரி நீர் விவகாரத்தில் உரிய காலத்தில் நீர் வராததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு மற்றும் விவசாய அமைச்சகத்திடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #DeltaFarmers #GKVasan
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குவது டெல்டா மாவட்டங்கள் ஆகும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி ஆகிய 3 போக சாகுபடி நடைபெறும்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் சம்பா சாகுபடி மட்டுமே அதிக ஏக்கரில் நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடி குறைந்த அளவிலேயே நடந்து வருகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர்திறக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் 50 ஆண்டுகளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு தற்போது காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காவிரி ஆணையம் முழுமையாக செயல்பட தொடங்காத நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது.
பம்புசெட் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபினி அணை கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இன்று இரவு கபினி அணை தண்ணீர் மேட்டூர் அணையை வந்து சேரும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்டம் 39.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கபினி அணை நீர் அதிக அளவில் வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது ஜீலை முதல் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமி மலை விமலநாதன்:-
மேட்டூர் அணையில் 80 அடியை தண்ணீர் தொட்டால் மட்டுமே திறக்க வேண்டும். தற்போது 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை வைத்து கொண்டு மேட்டூர் அணையை திறக்க முடியாது. 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஏற்கனவே ஆறுகளில் மணல் அள்ளி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடகாவில் திறக்கப்படும் தண்ணீர் ஆறுகளில் வந்து சேர்ந்து அங்கேயே தேங்கி நிற்பதால் பாசன வாய்கால்களுக்கும், தலைப்பு வாய்கால்களுக்கும் தண்ணீர் வராது. மேலும் தண்ணீர் வீணாகி கடலில் சேர்ந்து விடும்.
இதை வைத்து கொண்டு தற்போது குறுவைக்கு மேட்டூர் அணை தண்ணீரை திறக்க முடியாது. எனவே தற்போது வரும் தண்ணீரை சேமித்து வைத்து சம்பாவிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
விவசாயிகள் சங்க கூட்டு இயக்க துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன்:-
மேட்டூரில் இனி தண்ணீர் திறந்தால் குறுவைக்கு நாற்று நட முடியாது. கடந்த 3 வருடங்களாக தாமதமாக தண்ணீர் திறப்பதால் கடை மடைக்கு தண்ணீர் போகவில்லை. இந்த வருடமும் தண்ணீர் தட்டுப்பாடு நீடிப்பதால் சுமார் 26 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படும்.
தற்போதைய மழையினால் பம்பு செட் விவசாயிகளுக்கு தான் சவுகரியமாக உள்ளது. ஆகவே தற்போது வருகின்ற உபரி நீரை வைத்து கொண்டு மேட்டூர் அணையை திறக்க கூடாது.
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்:-
மாநில அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தவே இல்லை. மத்திய அரசு தற்காலிகமாக ஆணையத்திற்கு ஒரு தலைவரை நியமித்து விட்டு ஒதுங்கி நிற்கிறது.
கர்நாடகாவில் 9 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். இதில் 5 பேரை மத்திய அரசும் மீதம் உள்ள 4 பேர் அந்தந்த மாநிலத்தில் இருந்தும் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் தற்போது மேலாண்மை ஆணையத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் மேட்டூர் அணை நீரை குறுவை சாகுபடிக்கு திறக்கக்கூடாது.
மேலாண்மை ஆணையத்திற்கான பணிகள் உடனே தொடங்கப்பட வேண்டும். மேலும் தற்போது திறந்து விடப்படும் உபரி நீர் மட்டும் போதாது. தற்போது மேட்டூர் அணையில் தண்ணீரை சேமித்து வைத்தால் அடுத்த சம்பாவிற்காவது தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Metturdam #sambacultivation
காவிரி பாசன பகுதியில் வழக்கமாக சாகுபடி பணிகள் மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று (12-ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணைக்கு 16-ம் தேதி வந்து சேர்ந்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும்.
இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றின் துணை ஆறுகள், கிளை வாய்க்கால் வழியாக 2லட்சத்து 6 ஆயிரத்து 267 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். வெண்ணாறு பாசன பகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 422 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
கல்லணை கால்வாய் பகுதியில் 87 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும். கடந்த 6 ஆண்டுகளாக குறித்த தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது. இதனால் காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் பாசன பகுதியிலில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாயினர். 1934-ல் மேட்டூர் அணை கட்டப்பட்டு முறையாக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் விட தொடங்கியதில் இருந்து ஜூன் 12-ம் தேதி 15 முறைதான் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் 12-க்கு முன்னராக 11 முறை திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுப்பணித்துறை பதிவுகள் இப்படி இருந்த போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் ஜூன் 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு முறையாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால் அணைகளை இந்த ஆணையம் தன் வசம் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் பெற்றுத் தரும் என்று விவசாயிகள் நம்பினார்கள். தற்போதய சூழலில் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு வெறும் 38 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு நிலை குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலையாளர்கள் தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி தலைப்பில் மழை பெய்து கர்நாடகாவின் அணைகளை தாண்டி இன்னமும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
காவிரி பாசன பகுதிகளில் இந்த ஆண்டும் தொடர்ந்து 7-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டும் அல்லாமவ் விவசாய தொழிலாளர்களும் வேலை இல்லாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆணையம் வந்துவிட்டது. விடிவு காலம் பிறந்துவிட்டது என்று எண்ணிய விவசாயிகள் மீண்டும் இயற்கையிடம் சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை என்று கூறுகின்றனர்.
மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பி காவிரி பாசன விவசாயம் வசப்படும். இனி வருண பகவான் கருணை இருந்தால் மட்டுமே பிழைக்கலாம் என்று கருதுகின்றனர். #metturdam #deltafarmers
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்