search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுமா?: டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுமா?: டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • வழக்கமாக மே மாத இறுதியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்.
    • இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையை நம்பி பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும், இந்த தண்ணீர் திறப்பு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை மற்றும் நீர் இருப்பை பொறுத்து மாறுபடும். மேட்டூர் அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளாக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலம் முக்கிய பகுதியாக உள்ளது .

    வழக்கமாக மே மாத இறுதியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். அப்போது அங்கிருந்து காவிரியில் வரும் தண்ணீர் கரை புரண்டு ஓடி ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடையும். அணையின் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருக்கும்பட்சத்தில் அணைக்கு நீர்வரத்தும் திருப்தியாக இருந்தால் மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

    ஆனால் நடப்பாண்டில் நேற்று 1,432 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 795 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியில் 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.31 அடியாக உள்ளது.

    இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மழை தொடங்கினாலும் இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காவிரியின் குறுக்கே உள்ள கர்நாடக அணைகள் நிரம்பி பின்னர் தான் மேட்டூர் அணைக்கு வந்தடையும். இதனால் வருகிற 12-ந் தேதிக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுமா, டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? தற்போது விவசாய பணிகளை தொடங்கலாமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    Next Story
    ×