search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணைக்கு தினமும் 8000 கனஅடி திறப்பதால் எந்த பயனும் இல்லை-  டெல்டா விவசாயிகள்
    X

    மேட்டூர் அணைக்கு தினமும் 8000 கனஅடி திறப்பதால் எந்த பயனும் இல்லை- டெல்டா விவசாயிகள்

    • காவிரி நீர் இல்லாததால் பம்புசெட் மூலம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • கர்நாடகா அரசை நம்பி காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடியில் தலா 5 லட்சம் ஏக்கரை விஞ்சிய நிலையில் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 94 ஆயிரத்து 850 ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 3250 ஏக்கருக்கு என மொத்தம் 3.20 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே ஆழ்துளை மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினர். இதுவரை 4 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி எட்டப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடியில் மந்த நிலை ஏற்பட்டு இருக்காது. கடந்த 2 ஆண்டுகளை போல இம்முறையும் இலக்கை விஞ்சி சாகுபடி செய்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது காவிரி நீர் இல்லாததால் பம்புசெட் மூலம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்று நீரை மட்டும் நம்பியிருந்த விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியாததால் வேதனையில் உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சற்று நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் வழக்கம்போல் கர்நாடகா அரசு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட முடியாது. அதற்கு பதிலாக வினாடிக்கு 8000 கனஅடி தண்ணீரை திறந்து விடுவோம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் வெறும் 43.22 அடி மட்டுமே உள்ளது. அப்படி இருக்கையில் 8000 அடி கனஅடி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடும்போது மேட்டூர் அணை நிரம்பவே 20 முதல் 30 நாட்களுக்கும் மேல் ஆகும்.

    அதுவும் தினமும் தண்ணீர் திறந்து விட்டால் தான். மற்றப்படி எங்கள் மாநிலத்தில் போதிய மழை பெய்யவில்லை என கூறி மிக குறைவான கனஅடி தண்ணீரை திறந்து விட்டால் அணை நிரம்ப அதைவிட கூடுதல் நாட்கள் பிடிக்கும். இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைப்போம் என்றும், அத்துடன் காவிரிநீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. தற்போது திறந்து விட்டது உபரிநீர் தான்.

    இதனால் கர்நாடகா அரசை நம்பி காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர். மேட்டூர் அணையில் குறிப்பிட்ட அடி வரை தண்ணீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்காக திறந்து விடப்படும். அதற்கு 40 நாட்களுக்கு மேலேயே ஆகும். அந்த தண்ணீர் அடுத்து சம்பா சாகுபடிக்கு பயன்படுத்த தான் உதவியாக இருக்கும். அதுவும் கர்நாடகா அரசு கூறியப்படி தினமும் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே சாத்தியம். எனவே தற்போது குறுவை சாகுபடிக்கு எந்த பயனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து மேலும் அவர்கள் கூறும்போது, தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும். கோர்ட், காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை கர்நாடகா அரசு மீறுவது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் நமக்குரிய நீரை தான் கேட்கிறோம். அதுவும் தரவில்லை என்றால் எப்படி. தொடர்ந்து உத்தரவுகளை மீறி விதிமுறைகளை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்படுவது கண்டித்தக்கது. நமக்குரிய நீரை பெற்று தர தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு காவிரி நீர் தான் உயிர்நாடி. எனவே உரியநீரை பெற்று தந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

    Next Story
    ×