என் மலர்
நீங்கள் தேடியது "dinakaran"

சென்னை:
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியை விட்டு இறங்கியதும் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். 18-ந் தேதி அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக அப்போது 122 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தனர். ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து ஓட்டு போட்டனர்.
அதன்பிறகு பிளவு பட்டிருந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியும்- எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றானது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்ற கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் 18 எம்.எல்.ஏ.க்களும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன்பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், சூலூர் கனகராஜ் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பதவி இழந்த காரணங்களால் 4 தொகுதிகள் காலியானது.
இப்போதை நிலவரப்படி தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் (சபாநாயகர் நீங்கலாக).
தி.மு.க.வுக்கு 88 எம்.எல். ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 எம்.எல்.ஏ.வும் உள்ளனர். டிடிவி தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச் செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் கடந்த ஒரு ஆண்டாக டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி தினகரனுடன் இவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் நம்ப முடியாத நிலை உள்ளதால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் போது அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அ.தி.மு.க. அரசு தற்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
இதற்கு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கொடுக்கும் விளக்கம் திருப்தி இல்லை என்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என பரபரப்பாக பேசப்படுகிறது.
22 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி நீடிக்கும்.
இந்த சூழலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்படும் போது சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 231 ஆகும். அப்போது பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும். இதை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயித்தால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது. #dinakaran #edappadipalanisamy #3mlas

கள்ளக்குறிச்சி:
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரன், அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும், வக்கீலுமான மனோஜ்பாண்டியன் ஆகியோர் மனு ஒன்று கொடுத்தனர்.
அதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் கட்சியை பாதிக்கும் வகையில் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து எங்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளார். நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.
சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான் வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை.
எனவே அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் கிடைத்தவுடன் நாங்கள் சட்டபூர்வமாக அதனை சந்திப்போம். தொடர்ந்து நான் அதிமுக உறுப்பினராகவே உள்ளேன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக தான் செயல்படுகிறேன்.
நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின் படியே செயல்படுவேன். அ.தி.மு.க.வை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் கீழ்தான் செயல்பட்டுகொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவான எம்.எல்.ஏ.வாக நான் இருந்து வருகிறேன். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுதி மக்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தார்கள். அன்று முதல் இன்று வரை அ.தி.மு.க.விற்கும், இந்த அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்.
கடந்த சட்டசபை தொடர் முழுவதும் கலந்து கொண்டுள்ளேன். எந்த காலகட்டத்திலும் தி.மு.க.வுடனோ மற்றவர்களுடனோ எந்தவித தொடர்பும் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் கனவு, 100 ஆண்டுகள் இந்த இயக்கம் தமிழகத்தை ஆளும் என்று சொன்னார்கள். அந்த நல்ல எண்ணத்தில் நானும் ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.வும் அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இணைந்து பேசியிருக்கிறோம்.
ஜெயலலிதாவை பாதுகாத்த சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி என்று இயங்கிய போது கூட நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்து பதிவு செய்துள்ளார்கள். அதிலே நான் உறுப்பினராக கூட இல்லை. அந்த நிகழ்ச்சிகளில் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை, என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக அரசுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறோம். இனியும் செயல்படுவோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கொறடா சபாநாயகரை சந்தித்து ஏதோ ஒரு கடிதம் அனுப்புவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன கடிதம் வருகிறது என்று தெரியவில்லை. வந்ததற்குப் பிறகு அதில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது, என தெரிந்துகொண்டு அதற்கான பதிலை சபாநாயகரை நேரில் சந்தித்து தெரிவிப்பேன்.
அ.தி.மு.க.விற்கு எதிராக நான் செயல்படவில்லை. சசிகலா தலைமையில் அம்மா அணி இயங்கிய போது எடுத்த போட்டோக்கள் அவர்களிடம் இருக்கலாம். அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பேசலாம். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதற்கு தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #kalaiselvanmla #admk #prabhumla
ராமநாதபுரம்:
அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் ஊடகங்கள் தி.மு.க. கூட்டணி தான் அதிக இடத்தை கைப்பற்றும் என போலி கருத்து கணிப்புகள் நடத்தி அந்த கணிப்புகளை திணித்து மக்களை ஏமாற்றி எப்படியாவது ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என ஸ்டாலின் எண்ணினார்.
மக்களின் இதயங்களில் யாருக்கு இடமுண்டு என்பதை கருத்து கணிப்புகளால் கணித்துவிட முடியாது.
மக்களின் இதயங்களில் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை வீழ்த்த எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு போலி கருத்து கணிப்புகள் நடத்தினாலும் அம்மாவின் அன்பு பிள்ளைகளாக திகழும் 1½ கோடி தொண்டர்கள் இருக்கும் வரை கணிப்புக்கும், திணிப்புக்கும் இங்கு வேலையில்லை.
முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து களப்பணி ஆற்றி அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தனர்.
டி.டி.வி.தினகரனும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் கூட்டு சேர்த்துக் கொண்டு போலி கருத்து கணிப்புகளை நடத்த சில ஊடகங்களை விலை பேசியுள்ளனர். இவர்கள் நடத்தும் நாடகங்களை மக்கள் நம்ப தயாராகவில்லை. மே 23-ந்தேதி கருத்து திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ராமநாதபுரம் பாராளுமன்ற கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும், பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கும் வாக்களித்த மக்களுக்கும், என்னுடன் இரவு பகல் பாராமல் கண்விழித்து களப்பணியாற்றிய அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ministermanikandan #mkstalin #dinakaran
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அ.ம. மு.க.வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் படி தான் நான் அ.ம.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்காக மறு பரிசீலனை மனுதாக்கல் செய்ய உள்ளார். எனவே அவரால் இந்த கட்சியை தொடங்க முடியாது. எனவே நான் கட்சியை தொடங்கியுள்ளேன்.
சசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். அ.ம.மு.க. துணைத் தலைவராக நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளை பின்னர் அறிவிப்போம்.

அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவார். சட்டபோராட்டத்தில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றினால் அ.ம.மு.க.வுடன் அ.தி.மு.க.வை இணைப்போம்.
அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாண பத்திரம் பெற்றுள்ளோம். அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக வருகிற 22-ந்தேதி மனு அளிக்க உள்ளோம்.
4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னத்தை கேட்டுள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றதால் தொண்டர்கள் தொடர்ந்து குக்கர் சின்னத்தை விரும்புகிறார்கள்.
அ.ம.மு.க. சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 22-ந் தேதி வெளியிடப்படும். அ.தி.மு.க.வில் 95 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. கட்சியே காணாமல் போகப்போகிறது. அமைச்சர்கள் மட்டும் கட்டில் பிடித்து அழுகிற காலம் வரப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDhinakaran #Sasikala


திருவண்ணாமலை:
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர்களையும், துரோகம் செய்பவர்களையும் அழித்துவிடும் அக்னியாக உள்ள இந்த தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை அக்னியாக இருந்து அழிக்க வேண்டும். அ.தி.மு.க. மெகா கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
மதச்சார்பற்ற கூட்டணி என்று தி.மு.க. சார்பில் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களை புறம்தள்ளி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களையே பாதுகாத்தவர்கள் இவர்கள். இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்து விடுவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
8 வழி சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலையிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறும் போது முதல் - அமைச்சர் வாய்மூடி கொண்டு அமர்ந்துள்ளார். இந்த 8 வழி சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை. மத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழி சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் இந்த பகுதி விவசாயத்தையும், பசுமையையும் அழித்து விடுவார்கள். இந்த 8 வழி சாலை வருவதால் தொழில் வளர்ச்சி பெறும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 8 வழி சாலை திட்டத்தை வரவேற்பதன் மூலம் தி.மு.க., பா.ஜ.க. உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 8 வழி சாலையை எதிர்த்து அ.ம.மு.க. பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளது. நீதிமன்றமே தடைவிதித்த அந்த 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது.
ஏற்கனவே ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான நமக்குத்தான் அந்த மக்கள் வெற்றியை தந்தார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari
முதுகுளத்தூர்:
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
மத்திய பா.ஜனதா அரசின் சொல் பேச்சை கிளி பிள்ளையாக கேட்கும் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயலலிதா மரணத்தில் உரிய நீதி வேண்டும் என்று அரசுக்கு எதிராக போராடிய ஓ.பி.எஸ். சுய நலமாக செயல்படுகிறார்.
அ.தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருவதால், அக்கட்சி டெபாசிட் இழக்க வாக்காளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அ.ம.மு.க. வினருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதை அ.தி.மு.க.வால் ஜீரணிக்க முடிய வில்லை.
மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போய் விடுவார்கள்.
ஆர்.கே.நகர் போன்று தற்போதைய தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்டி, டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லாமல், அவரை மறந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் நம் பக்கம் வந்து விடுவார்கள்.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சியினர், நம்மை பார்த்து சுயேட்சை என்கின்றனர். ஆர்.கே.நகரில் இந்த சுயேச்சையிடம் தான் தி.மு.க. டெபாசிட் இழந்தது என்பது மறந்து போய் விட்டதா?
எனக்கு தெரிந்து நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து, ப.சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை. பல தடவை மத்திய மந்திரியாக இருந்த அவர், சிவகங்கை தொகுதிக்கு எந்த வளர்ச்சியும் கொடுக்க வில்லை.
தி.மு.க. கூட்டணி மத சார்பற்ற கூட்டணி என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கி.வீரமணி, கிருஷ்ணரை பற்றி விமர்சிக்கிறார். தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.
மோடியிடம் தலை வணங்காத ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தான். இரட்டை இலை சின்னம் துரோகம் செய்தவர்கள் கையில் சிக்கி இருப்பதால், எம்.ஜி.ஆர். தொகுதியில் கூட இரட்டை இலையை தோற்கடிக்கும் நிலை வந்துள்ளது.
நாம் அனைவருக்கும் காவலராகவும், தோழராகவும் இருப்போம். பொது நல அமைப்பாக செயல்படுவோம். யாரோடும் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அ.ம. மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து நாகர்கோவிலில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் மாநில துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்க இருக்கிறது. அதனுடன் தமிழகத்தில் ஒரு மினி சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. 18 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடியும், மோடியை டாடி என சொல்கின்ற இந்த தமிழகத்தின் அடிமைகளான ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கம்பெனியும் கூட்டணி வைத்துள்ளார்கள். அதேபோல மற்றொரு கூட்டணி, அது மதசார்பற்ற கூட்டணி. அந்த கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தி.மு.க. வகிக்கிறது. ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.
தமிழகத்தை புறக்கணித்த மோடி சார்ந்த பா.ஜனதாவுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என்று அ.ம.மு.க. அறிவித்திருக்கிறது. இதைப்போல ஸ்டாலின் அறிவிக்கத்தயாரா? என்று இந்த குமரி மாவட்டத்தில் இருந்து கேட்கிறேன். பா.ஜனதாவுடன் எந்த காலத்திலும் ஒட்டோ, உறவோ கிடையாது, எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டேன் என அவர் சொல்வாரா?. சொல்லமாட்டார். வாய்ப்பு கிடைத்தால், பா.ஜனதாவில் மந்திரி பதவி கிடைத்தால் அங்கும் அவர் சென்று விடுவார். ஆட்சி, அதிகாரத்தை நம்பித்தான் அவர்கள் செல்கிறார்கள். அதனால்தான் தி.மு.க. கூட்டணியை, குறிப்பாக தேசிய கட்சிகளை நம்பி ஏமாறவேண்டாம்.
இந்த முறையாவது தமிழக மக்களின் உரிமைகளுக்காக, தமிழர்கள் தலைநிமிர்வதற்காக, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக, தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்கள், எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சி, பாதுகாப்பான இயக்கம் அ.ம.மு.க. என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சாதி, மதத்தை கடந்து மக்களின் நலனில் அக்கறை எடுத்து உண்மையாக உழைக்கக்கூடியவர்கள் யார்? தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யார்? அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும் கட்சி எது? 37 தொகுதிகளிலும் வெற்றிபெறபோகும் கட்சி எது? என்பதை எண்ணி நீங்கள் முடிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற அ.ம.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். உங்களை சிலர் குழப்புவார்கள். நீங்கள் குழப்பம் அடையாமல், தேசிய கட்சிகளைக் கண்டு ஏமாறாமல் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுக்கு குக்கர் சின்னம் கொடுக்கவிடாமல் மோடி அரசுதான் இடைஞ்சல் கொடுத்தது. அதன் பிறகு நீதிமன்றம் மூலம் பரிசு பெட்டகம் சின்னம் பெற்றோம். நாங்கள் சமரசம் செய்து கொண்டால் எத்தனையோ நன்மைகள் கிடைத்திருக்கும். அம்மாவிற்கும், மக்களுக்கும் தான் தலைவணங்குவோம். வேறு எந்த சக்திக்கும் தலைவணங்க மாட்டோம்.
2 கோடி பேருக்கு வேலை, ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னதை செய்தார்களா? நீட் தேர்வு, விவசாயிகளை, தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அம்மா அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கஜா, ஒகி புயல் சமயத்தில் மக்களை சந்திக்காத மோடி இன்று ஓடி, ஓடி வருகிறார். அம்மா மருத்துவமனையில் இருந்தபோதும் மோடி வரவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் என்னிடம் உள்ளார்கள்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.