search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali Festival"

    • 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
    • ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது வழக்கமாகும்.

    இதேபோல் மது பிரியர் கள் பண்டிகை காலங்கள் என்றாலே விதவிதமான மதுபானங்களை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மதுகுடித்து கொண்டாடு வார்கள்.

    புதுச்சேரி என்றாலே மதுவுக்கு பெயர் பெற்றதாகும். பிரெஞ்சு கலாசாரம் இங்கு காணப்படுவதால் பலவிதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் தொடர் விடுமுறை நாட்களில் புதுவைக்கு வந்து நண்பர்களோடு மது குடித்து கும்மாளம் போடுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான கடந்த 30-ந் தேதி முதல் நேற்று 3-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதுபோல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறையை கொண்டாட வெளி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகளவில் புதுவையில் குவிந்தனர். இதன்காரணமாக மது விற்பனையும் படுஜோராக நடந்தது.

    புதுவை, காரைக்காலில், வழக்கமான நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.4½ கோடிக்கு மது விற்பனை நடைபெறும். வார இறுதி நாட்களில் இது சற்று உயரும்.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் கடந்த 5 நாட்களில் புதுவை மற்றும் காரைக்காலில் மது விற்பனை 3 மடங்குக்கு மேல் உயர்ந்தது. ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    • தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர்.

    அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (அக்.31) 75,000-க்கும் அதிகமான பக்தர்கள் கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.

    மேலும், சுற்றுவட்டார பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.

    கன்னியாகுமரி:

    தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்றும் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி 3 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.

    அதனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

    வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.

    133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, மருந்துவாழ் மலை, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை "திடீர்" என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஹமிர்பூர்:

    இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

    ஆனால் இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணின் சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத வினோதம் இருந்து வருகிறது.

    இமாசல பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் சம்மூ என்ற கிராமம் உள்ளது. பல நூற்றாண்டு களுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த திருமண மான பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர் தீபாவளி கொண்டாடு வதற்காக தன் தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அப்போது மன்னனின் அரசவையில் சிப்பாயாக பணிபுரிந்து வந்த அவரது கணவர் திடீரென இறந்து விட்டார். இந்த செய்தி தீபாவளி கொண்டாட வந்த அவரது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு பேரதிர்ச்சியடைந்த அந்த பெண் அழுது புரண்டார். துக்கம் தாங்காமல் இருந்த அந்த பெண் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது அவர் அந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று சபித்ததாக புராண கதைகள் கூறுகிறது.

    அன்றிலிருந்து இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. பக்கத்து கிராமங்களில் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு சத்தம் கேட்கும் நேரத்தில் இங்கு மயான அமைதி நிலவுகிறது.

    தீபாவளி பண்டிகையின் போது இந்த கிராமத்தில் வீடுகளில் தீபம் ஏற்றுவதில்லை. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்காது. அதனையும் மீறி தீபாவளி கொண்டாடினால் கிராம மக்களுக்கு துரதிஷ்ட மும், பேரழிவும் ஏற்படும். மற்றும் மரணத்தை வரவழைக்கும் அபாயமும் ஏற்படும் என்று இளைய சமூகத்தினரை பெரியவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதனால் இந்த கிராம மக்கள் யாரும் அந்த பெண்ணின் சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடுவதில்லை. பல நூற்றாண்டுகளாக இன்று வரை அது தொடர்கிறது.

    இதுகுறித்து திருமணமாகி அந்த கிராமத்திற்கு வந்த பஞ்சாயத்து நிர்வாகியான பூஜாதேவி என்ற பெண் ஒருவர் கூறியிருப்பதாவது:-

    நான் திருமணமாகி இந்த கிராமத்திற்கு வந்ததில் இருந்து தீபாவளி கொண்டாடுவதை பார்த்த தில்லை. இந்த கிராம மக்கள் வெளியூரில் குடியேறினாலும் அந்த பெண்ணின் சாபம் அவர்களை விட்டு விலகவில்லை.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு கிராமத்தில் குடியேறினார். அங்கு அவர் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பலகாரம் செய்த போது அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. அந்த பெண்ணின் சாபத்தால்தான் இது நடந்ததாக கிராம மக்கள் நம்பு கின்றனர்.

    இதனால் கிராம மக்கள் தீபாவளியன்று அந்த பெண்ணை வணங்கி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் என்று அந்த பெண் கூறினார்.

    மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த 70 தீபாவளிகளை கண்ட பெரியவர் ஒருவர் கூறியிருப்பதாவது:-

    இந்த கிராமத்தில் யாராவது ஒருவர் தீபாவளியை கொண்டாடும் போதெல்லாம் ஏதோ ஒரு துரதிஷ்டம் அல்லது இழப்பு ஏற்படுகிறது என்றார்.

    மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும் போது, பல நூற்றாண்டுகளாக இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.

    தீபாவளி நாளில் ஒரு குடும்பம் தவறுதலாக பட்டாசுகளை வெடித்து வீட்டில் பலகாரம் செய்தால் பேரழிவு நிச்சயம் என்று கூறியுள்ளார்.

    இளைய தலைமுறையினர் இந்த நம்பிக்கையில் இருந்து விடுபட விரும்பினாலும் கடந்த காலத்தில் நடந்த விபரீதங்கள் அவர்களை தீபாவளி கொண்டாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது. 

    • 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
    • மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பண்டிகை காலங்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பனியன் நிறுவனங்கள் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக பனியன் நிறுவன தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் மாநகரம் தற்போது அதிக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


    குறிப்பாக ஆடை விற்பனைக்கு பெயர் போன இடமான காதர்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக மூடப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் குமரன் ரோடு, பல்லடம் ரோடு பி.என்.ரோடு போன்ற முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் பெருமளவில் குறைந்து ள்ளது.

    அதேபோல் சொந்த ஊருக்கு செல்லும் தொழி லாளர்கள் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு ஊருக்கு செல்வது வழக்கம்.

    தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற தொழி லாளர்கள் தங்கள் வாகனங்களை வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.


    இதன்காரணமாக வாகன நிறுத்தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிகிறது. பண்டிகை முடிந்து தொழிலாளர்கள் திரும்பும்போதுதான் வாகன நிறுத்தங்களில் இருந்து வாகனங்கள் எண்ணிக்கை குறையும்.

    திருப்பூரில் இருந்து சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் 1.50 லட்சம் பேர் இன்னும் 10 நாட்களுக்கு பிறகே திருப்பூர் திரும்புவார்கள். அதன்பிறகே திருப்பூர் மாநகரம் மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
    • பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள்

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் 3-ந் தேதி சென்னைக்கு புறப்படுவார்கள்.

    தென் மாவட்டங்கள் மற்றும் இதர பகுதியில் இருந்து புறப்பட்டு வரும் அரசு, தனியார் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து 2 நாட்களில் 4 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது தவிர அரசு பஸ்களிலும் லட்சக் கணக்கானவர்கள் சென்று இருப்பதால் 4-ந் தேதி அதிகாலையில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்புவதால் காட்டாங்கொளத்தூர்-தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

    4.30 மணி, 5 மணி, 5.45 மணி 6.20 மணிக்கு காட்டாங்கொளத் தூரில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் மின்சார ரெயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் இருந்து மின்சார ரெயில் நின்று செல்லும்... அதே போல தாம்பரத்தில் அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு இரண்டு சிறப்பு மின்சார ரெயில் காட்டாங்கொளத்தூருக்கு இயக்கப்பட உள்ளது.

    • பறவைகள் கூட்டம் கூட்டமாக கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும்.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    சென்னிமலை:

    தீபாவளி பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டத்தை தொடங்கி விடுவர். ஆங்காங்கே, பட்டாசு ஒலிகளும் தீபாவளிக்கு முன்பே கேட்கும்.

    இப்படி தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் மக்களும், ஊர்களும் இருக்கும் நிலையில், தீபாவளிப் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடாத வித்தியாசமான பல கிராமங்களும் இருக்கின்றன.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீபாவளி பண்டிகை பண்டிகையை 20 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் சென்னிமலை அருகே வெள்ளோட்டில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான்.

    ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே 'வெள்ளோடு பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன.

    கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்பி பாயிண்ட் என அமைக்கப்பட்டு சரணாலயமே எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.

    பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன.

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதால், அச்சமயம் சீசன் தொடங்குகிறது.

    பறவைகள் இனப்பெருக்க காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி வருகின்றன.

    மேலும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கால உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வெள்ளோடு சரணாலயத்திற்கு வருகின்றன.

    இப்பறவைகள் அனைத்தும் இங்குள்ள குளத்தில் குளித்து கும்மாளமிடுவதோடு, அதிலுள்ள மீன்களை உணவாக உண்டு தங்களின் பசியைத் தணிக்கின்றன.

    இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன.

    இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் இந்த பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை அளிக்கின்றது.

    இந்த பறவைகளின் கூட்டத்தைக் காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வருவதுண்டு.

    இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலுள்ள கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

    இதன் ஒருபகுதியாக, இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    அதன் அடிப்படையில், இந்த வருடமும் தொடர்ந்து 20-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடினர்.

    இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, சக்கரம் புஷ்பானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்து வருகின்றனர்.

    • மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    தயாரிப்பு குறைந்த நிலையில் கூட கடந்தாண்டை விட, நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

    • பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை இன்று (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை கொண்டாட கடந்த சில நாட்களாகவே அனைவரும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கி வைத்துக்கொண்டு தயார் நிலையில் இருந்தனர்.

    இன்று காலை முதலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிக்க தொடங்கி விட்டனர்.. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகை அன்று அனைத்து பகுதிகளிலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு கொண்டேதான் இருக்கும்.

    இதுபோன்ற நேரங்களில் தீ விபத்து ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் சில இடங்களில் தீ விபத்து ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே, இந்த ஆண்டு தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் முதலே பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, தங்களுக்கான இடங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 800 தீயணைப்பு வீரர்களும், கூடுதலாக வெளி மாவட்டங்களில் இருந்து 21 தீயணைப்பு வண்டிகளில் 300 பேரும் என 1,100 தீயணைப்பு வீரர்கள் தீபாவளி தீ விபத்தை தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் சென்னையில் முக்கியமானதாக கருதப்படும் 64 பகுதிகளில் தயார்நிலையில் உள்ளனர். அதில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 21 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் முக்கிய பஸ் நிலையம், பூங்கா, மண்டபம் போன்ற பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 5 மணி முதலே தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அதற்கு அடுத்த நாளும் தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு வரும் 2-ந்தேதி வரையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தை தடுக்க பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும், தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறையினர் வினியோகித்துள்ளார்கள். அதன்படி, பாதுகாப்பான முறையில் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீபாவிள வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி. செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும்.

    தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.
    • பட்டாசுகளில் பெரும்பாலானவை அதிக ரசாயனம் கொண்டவையாக உள்ளன.

    தீபாவளி பண்டிகையை சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் நாளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில் பட்டாசுகளை மிகவும் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


    பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:-

    பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருமே பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். சமீபகாலமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பெரும்பாலானவை அதிக ரசாயனம் கொண்டவையாக உள்ளன.

    அந்த பட்டாசுகள் வெடிக்கும்போது தங்கம், வெள்ளியை உருக்கத் தேவைப்படும் அளவுக்கு அதிக வெப்பம் வெளியேறுகிறது.

    பொதுவாகவே பட்டாசு விபத்துகள் நேரிடும்போது கைகளில் தான் அதிகம் காயம் ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக கண்களில் பட்டாசு துகள்கள் பட்டு காயம் ஏற்படுகிறது.

    இந்த பட்டாசு துகள்கள் கண்ணின் இமைப் பகுதிகள், விழிப்படலம், கண் நரம்புகளை பாதிக்கின்றன. அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் பார்வை இழப்பு, பார்வை திறன் குறைபாடு, விழித்திரை பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.


    எனவே கண்களில் தீப்பொறியோ அல்லது பட்டாசு சிதறல்களோ படும் பட்சத்தில் கண்களை அழுத்தி தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. காயம் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும் கூடாது.

    அதேபோன்று, பட்டாசு காரணமாக ஏற்படும் காயங்களுக்கு வலி நிவாரண மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை பாதிப்பை அதிகரிக்கக் கூடும்.

    தூய்மையான நீரில் கண்களை திறந்த நிலையில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அந்த நிலையிலேயே மென்மையாக கழுவ வேண்டும். அதைத்தொடர்ந்து தாமதிக்காமல் டாக்டர்களை அணுக வேண்டும்.

    டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் சுயமாக மருந்துகளோ, களிம்புகளோ தடவக் கூடாது. பட்டாசு காயங்களில் பார்வை இழப்பு ஏற்படுவதற்கு 50 சதவீதம் அலட்சியமே காரணமாக அமைகிறது. எனவே உரிய விழிப்புணர்வுடன் செயல்பட்டால், அத்தகைய பாதிப்புகளை தவிர்க்கலாம்.


    பார்வை திறனுக்காக கண்களில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்தி இருப்பவர்கள், அதனை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கும்போது 2 மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தொடர்ந்து வெப்பமான சூழலில் கான்டாக்ட் லென்ஸ் இருக்கும் பட்சத்தில் அது கண்களுக்கு பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

    எனவே பட்டாசு வெடிக்கும் போது கண்டிப்பாக கான்டாக்ட் லென்ஸ்களை கழற்றிவிட வேண்டும்.

    மேலும் பட்டாசுகளை வெடிக்கும்போது கண்களை முழுமையாக மறைக்கும் வகையிலான கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    இதனால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும். மேலும் 5 மீட்டர் தொலைவில் இருந்துதான் பட்டாசு வெடிக்க வேண்டும்.

    • குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும்.
    • தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் செல்வம் செழித்தோங்க குபேர பூஜை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். பணம் உள்ளிட்ட செல்வம் செழிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி, வீட்டில் தீமைகள் விலகி நன்மைகள் பெருகி மகிழ்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக இந்த பூஜை செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. பொதுவாக குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும். குபேரரை தனியாக மட்டுமின்றி லட்சுமியுடன் சேர்த்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானது ஆகும்.


    குபேர பூஜையை பொதுவாக அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி மாலை 4.29 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது.

    அமாவாசை திதியானது நவம்பர் 1-ந்தேதி மாலை 6.25 மணி வரை உள்ளது. நவம்பர் 1-ந்தேதி கவுரி விரதமும் வருகிறது. தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.

    தீபாவளி நாளில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு அசைவம் சாப்பிடுபவர்கள் அடுத்த நாள் குபேர பூஜை செய்வது நல்லது. ஏனென்றால் அடுத்த நாள் மாலை வரை அமாவாசை திதி இருப்பதால் அன்றைய தினம் செய்யலாம். ஆனாலும், தீபாவளி நாளிலே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது ஆகும்.

    குங்குமம், மகாலட்சுமி படம், குபேரர் படம், 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் ஒரே மாதிரியான 9 அல்லது 108 நாணயங்கள், மலர்கள் (தாமரை இருந்தால் சிறப்பு), துளசி, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, அட்சதை ஆகியவை பூஜைக்கு தேவையான பொருட்கள் ஆகும்.


    குபேரருக்கு உரிய வட திசையில் சிறிய மனை வைக்க வேண்டும். அதில் குபேரர் சிலை வைக்க வேண்டும். குபேரர் படம் அல்லது சிலையை வடக்கு நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.

    மனைப்பலகையின் ஒரு ஓரத்தில் குபேர யந்திரம் வரையப்பட்டிருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து இருக்க வேண்டும்.

    பின்னர் குல தெய்வத்தை வழிபட்டு விட்டு குபேர மற்றும் லட்சுமியை வணங்கி மகாலட்சுமியின் 108 போற்றிகளையும் கூறி குங்குமம், மலர்கள் அல்லது அட்சதை தூவி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    லட்சுமி குபேர பூஜையின் பிரசாதத்தை மட்டும் நாம் சாப்பிட வேண்டும். மறுநாள் பூஜையில் பயன்படுத்திய நாணயங்களை எடுத்து ஒரு துணியில் கட்டி உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பீரோ ஆகிய இடத்தில் வைக்க வேண்டும்.

    ×