search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edapdi Palaniswami"

    • எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
    • காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி முதல் பாராளுமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு உள்ளார்.

    முதல் நாளில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுநாளில் இருந்து தினமும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து தோல்விக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராய்ந்தார்.

    நேற்று ராமநாதபுரம் நெல்லை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி யுள்ளன.

    ராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகம் இருப்பதால் அவர்களது வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை கட்சியினர் முன் வைத்திருக்கிறார்கள்.

    எனவே சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சி யில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். அவர்களை கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்கிற பேச்சு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது எனவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வற்புறுத்தி கூறியுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் முக்குலத்தோர் சமுதாய மக்களிடமிருந்து அ.தி.மு.க. விலகியே நிற்பதாகவும் வெளியில் பேசப்படுகிறது என்றும் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் இந்த கருத்தை பொறுமையுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிட்டீர்கள். அவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது பற்றி தனியாக குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதன்மூலம் சசிகலா-ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.வின் தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்திருப்பதாகவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி நாளை மற்றும் நாளை மறுநாளும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    வருகிற 19-ந்தேதியுடன் இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைகிறது. இதன் பின்னர் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க. மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

    ×