என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswamy"

    • அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார்.
    • சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    தனது பரப்புரை வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.

    மயங்கிய மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனை அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா கைத்தாங்கலாக எழுப்பி பேருந்திற்குள் அனுப்பி வைத்தார். சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.

    சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த சிறுணியம், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீர வாள் பரிசளித்தார். மணியம் மயங்கி விழுந்ததும், பழனிச்சாமி பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

    • நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரகசியம் தெரியும் என்றார்கள் ரத்து செய்தார்களா? ரகசியத்தை சொன்னாரா?
    • சட்டமன்றக் கூட்டத்தில் எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக இபிஎஸ் எழுச்சியுரையாற்றினார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களை வணங்குகிறேன். இந்த எழுச்சிப் பயணத்தில் 178 தொகுதிகளிலும் மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது.

    இங்கு நான் அதிக அளவிலான மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். அடுத்தாண்டு தேர்தலில் திருத்தணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான வெற்றி விழா பொதுக்கூட்டம் போல் காட்சியளிக்கிறது. நான் வருகின்ற வழியில் மக்கள் வெள்ளம் அலைகடலென வந்தார்கள். நம் வெற்றியை உங்கள் எழுச்சியில் பார்க்க முடிகிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

    சென்னை முதல் திருத்தணி செல்லும் ரெயிலில் ரீல்ஸ் எடுத்தபடி 4 சிறுவர்கள் துன்பப்படுத்துகிறார்கள். கொடூரமாகத் தாக்குகிறார்கள். சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. திமுக-காரர்கள்தான் போதை விற்பனைக்கு துணை நிற்பதாக பேசப்படுகிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்த பலமுறை சொன்னேன், கண்டுகொள்ளவில்லை. பெற்றோர்களே சிந்தியுங்கள், நம் குழந்தைகளை நாம்தான் பார்த்து வளர்க்க வேண்டும். இந்த ஆட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை.

    நெல்லையில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிகள் சரக்கு அடிக்கிறார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். பணம், நகை திருடுவது போல உடம்பில் உள்ள கிட்னி திருடுகிறார்கள். வறுமையில் வாடும் நபர்களை தேர்வு செய்து பணத்தாசை காட்டி கிட்னி எடுக்கிறார்கள். அதுவும் திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் நடக்கிறது. இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரகசியம் தெரியும் என்றார்கள் ரத்து செய்தார்களா? ரகசியத்தை சொன்னாரா? சட்டமன்றக் கூட்டத்தில் எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின். இதுதான் அந்த ரகசியம். இதைத்தான் அதிமுகவும் சொன்னது. ஆனால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று அந்தர்பல்டி அடித்துவிட்டது திமுக.

    2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்தார். நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. அத்தனையும் பச்சைப்பொய். முதல்வரும் அமைச்சர்களும் 95% நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள், எல்லாம் பொய்.

    100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார்கள், உயர்த்தவில்லை. அதிமுக தான் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது, அதனால்தான் 125 நாளாக உயர்த்தினார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் இத்திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் தகவலை சொல்லி வருகிறார்.

    ஸ்டாலின் அவர்களே உங்களால் உயர்த்த முடியவில்லை ஆனால் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் நிறைவேற்றிக் காட்டினோம். 100% இத்திட்டம் தொடரும். 125 நாட்கள் என்பது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 150 நாளாக உயர்த்தப்படும்.

    எப்போது பார்த்தாலும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார் ஸ்டாலின். உங்கள் வீட்டுப் பணத்தையா கொடுத்தீர்கள்? அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துதான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது 17 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி கொடுக்கிறார்கள், ஏன் அப்போதே நிபந்தனையைத் தளர்த்தியிருக்கலாமே?

    மக்கள் செல்வாக்கு இழந்ததால் இப்போது கொடுக்கிறார், இன்னும் 5 மாதம்தான் கொடுக்க முடியும். 2021 தேர்தல் அறிக்கையில் அதிமுக சார்பில் மாதம் 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம், ஆனால் திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று, ஏமாற்றிவிட்டது.

    கியாஸ் மானியம் 100 ரூபாய் கொடுத்தார்களா? கல்விக்கடன் தள்ளுபடி செய்தார்களா? கூடுதலாக சர்க்கரை ஒரு கிலோ கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுத்தார்களா? எதுவுமே நிறைவேற்றவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல், உள்ளாட்சியில் பணியாணை வழங்குவதில் ஊழல். இ.டி கண்டுபிடித்து எஃப்.ஐ.ஆர் போடச்சொன்னது, அதிமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போடப்படும், தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

    மின்கட்டணம், விலைவாசி உயர்வு, வீட்டுவரி, கடை வரி உயர்வு, கடன் தலைக்கு மேல் இருக்கிறது. 5 ஆண்டு முடியும்போது 5.5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். அத்தனை பேரையும் கடனாளியாக்கிவிட்டார். வருவாய் அதிகம், திட்டங்கள் இல்லை. அதிமுக ஆட்சியில் 400 கோடியில் திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம், இது சாதனை. இப்படி ஒரு சாதனை சொல்ல முடியுமா?

    திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் முருகனின் ஐந்தாம் படை விடு என்ற பெருமை பெற்றது. இங்கு உள்ளூர் மக்கள் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வழிபாடு செய்ய சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அந்த அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

    அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோதுதான் தைப்பூசத்துக்கு விடுமுறை விட்டோம்.

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள். இந்தக் கூட்டம் சீரோடு சிறப்போடு நடைபெற இருந்த அனைவருக்கும் நன்றி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் பெயிலியர் மாடல் அரசு, பைபை ஸ்டாலின்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய்.
    • ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை.

    அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார்.

    ஆறாவது கட்டமாக இன்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் அமைந்திருக்கும் இஜ்திமா திடலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இபிஎஸ் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுக-வை தீய சக்தி என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னார், அந்த திமுகவை அகற்றவே அதிமுகவை தோற்றுவித்தார். அந்த லட்சியத்தைக் கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களின் லட்சியமும் திமுகவை அகற்றுவதுதான்.

    கள்ளக்குறிச்சி அரசு விழாவில் இந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால் விட்டார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகிறது. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு இன்னும் 3 அமாவாசைகள் தான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் 5% பணிகள்தான் நிறைவேற்றப்பட்டதாம்.

    ஸ்டாலின் பேசிய கள்ளக்குறிச்சியே அதிமுக ஆட்சியில்தான் உதயமானது. காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை புதிய மாவட்டமாக உருவாக்கியது அதிமுக. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டுத்தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம், அதிமுக ஆட்சியில் 5% அல்ல, 95% வாக்குறுதிகள் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததில் 5% மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

    கள்ளக்குறிச்சி மக்கள் கோரிக்கையை ஏற்று மாவட்டம் தொடங்கி புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். செங்கல்பட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டினோம். விவசாயிகளுக்கு ஏராளமான திட்டம் கொடுத்தோம்.

    தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய். இன்று மத்திய அரசு அதிமுக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 125 நாளாக உயர்த்தியிருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை. 100 நாள் வேலையும் கொடுக்காத அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 125 நாள் என்பது 150 நாளாக உயர்த்தியும், சம்பளமும் உயர்த்தி வழங்கப்படும், தடையில்லாமல் வேலை வழங்கப்படும். இதுதான் அதிமுகவின் லட்சியம்.

    100 நாள் வேலைத்திட்டம் குறித்து ஸ்டாலின் தவறான அவதூறைப் பரப்புகிறார், திட்டம் ரத்து செய்யப்படுவதாக பச்சைப்பொய் சொல்கிறார்.

    125 நாளாக உயர்த்தியதை 150 நாளாக உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றுவோம். அதிமுக ஆட்சி அமைந்ததும். ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு.
    • அவர் இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம் என்றார் ஓபிஎஸ்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கத்தில் அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ள அ.தி.மு.க.வில் இணைவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது. அப்போது தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

    தொண்டர்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கியது அ.தி.மு.க. ஆனால், அது இப்போது அவ்வாறு இல்லை. தை பிறந்தால் வழி பிறக்கும்.

    எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம் என்ற வைத்திலிங்கம் கருத்தை வழிமொழிகிறேன். எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு.

    இன்றைக்கு கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கடந்த மக்களவை தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை அ.தி.மு.க. இழந்திருக்கிறது. 7 மக்களவை தொகுதிகள் என்றால் 42 சட்டமன்ற தொகுதிகள் வருகிறது.

    பொதுச்செயலாளராக பொறுப்பேற்று சந்தித்த 11 தேர்தல்களில் படுதோல்வி அடைந்து அ.தி.மு.க.வை பாதாளத்திற்குத் தள்ளிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரின் பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது.

    தனது ஆதரவாளர்களை கூட்டி வைத்துக் கொண்டு போலியான பொதுக்குழுவை உருவாக்கி, ஒற்றை தலைமைதான் வேண்டும், பழனிசாமி சிறப்பாக கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார், பழனிசாமி சிறப்பாக முதல்வராக இருக்கிறார். அவர் வந்தால் அனைத்து தேர்தல்களிலும் நாம் மாபெரும் வெற்றி அடைவோம் என்று சொல்லி தான், ஒரு மிகப்பெரிய மாயையை உருவாக்கினார்.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    • மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பெயரில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப் பயணம்
    • ஞாயிற்றுக்கிழமை திருப்போரூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்கிறார்

    அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக `புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்' என்ற தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக, 28.12.2025 முதல் 30.12.2025 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    28.12.2025 – ஞாயிறு- திருப்போரூர், சோழிங்கநல்லூர்

    29.12.2025 – திங்கள்- திருத்தணி, திருவள்ளூர்

    30.12.2025 – செவ்வாய்- கும்மிடிபூண்டி

    புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின்' போது, சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள்

    மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமியை 'தற்குறி' என்று அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • புதிய பாஜக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

    2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.

    கூட்டணி முறிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    அந்த சமயத்தில் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயியின் மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட தன்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று அண்ணாமலை பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உருவபொம்மை எரிப்பு என அதி.மு.க.-வினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதோடு, அதிமுக தலைவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அண்ணாமலை தலைமையிலான பாஜகவும் தனித்தனியாக கூட்டணி அமைத்து 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

    இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டால் பாஜகவும் கூட்டணி அமைப்பதாக எடப்பாடி தரப்பு அமித் ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியான நிலையில், புதிய பாஜக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

    பின்னர் உடனடியாக அமித் ஷாவின் நேரடி தலையீட்டால், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது. தினமும் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான கருத்துக்களை கூறி வந்த அண்ணாமலை அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தவுடன் சைலன்ட் மோடுக்கு சென்றார்.

    இந்நிலையில், மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "இபிஎஸ் வரட்டும், புரட்சி வரட்டும். முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப்போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026ல் மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக அண்மையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்குவது பாஜகவின் கடமை" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உடைந்துவிட கூடாது என்பதில் இருகட்சிகளும் உறுதியாக உள்ளதை தான் எடப்பாடி - அண்ணாமலையின் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
    • நாங்களும் அவரை அணுகவில்லை.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.முக. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "திருப்பி திருப்பி நாங்கள் கூறிவிட்டோம். அ.தி.மு.க. மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்களாகவே கற்பனையில் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்லும் அவர்களை, கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை. பா.ம.க.-வுக்கு, ராஜ்யசபா சீட் கேட்கப்படுகிறதா என கேட்கிறீர்கள். இன்னும் ராஜ்ய சபா தேர்தல் பற்றி அறிவிக்கப்படவில்லை.

    நீங்களே கற்பனையாக கேள்வி கேட்கிறீர்கள். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் தெரிவிப்போம். த.வா.க. வேல்முருகன் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரை அணுகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான், கூட்டணி பற்றி பேசுவோம்.

    கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பது. வாக்குகள் சிதறாமல் அதிக வாக்குகளை பெற வியூகம் அமைப்பது வழக்கம் தான். கூட்டணி என்றும் நிலையானது இல்லை.

    முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார்," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
    • நாங்கள் பாஜக அணியில் இருந்தபோதுகூட பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என்றார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள 10 சதவீத பணிகளை 3 ஆண்டாக தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் இருந்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது.

    தமிழ் தமிழ் என மூச்சுக்கு 300 முறை ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் கருணாநிதி நினைவு நாணயத்தில் இந்தி வார்த்தை இருக்கிறது. ஸ்டாலின் குடும்பத்துக்கு என்று வந்தால் இந்தி பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்.

    கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு அரசு சார்பில் முதலமைச்சர் பங்கேற்றது வேடிக்கையாக உள்ளது.

    கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிக்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்பதாக அறிவித்ததும் தி.மு.க. நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதன் மூலம் தி.மு.க-பா.ஜ.க. உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்?

    டெல்லி தி.மு.க. தேநீர் விருந்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். ஆனால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை.

    நாங்கள் பா.ஜ.க. அணியில் இருந்தபோதுகூட, பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என தெரிவித்தார்.

    • இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான்.
    • இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம்.

    இன்று திமுக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு திமுக எம்.பி. ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?

    கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.

    எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பா.ஜ.க தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?

    உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

    ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் தி.மு.கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அ.தி.மு.க.வையே அழித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள். அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் 'காந்தாரி' போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த்-க்கு இன்று 72-வது பிறந்தநாள்.
    • விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் பொது மக்கள் மரியாதை செலுத்தினர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த கேப்டன் விஜயகாந்த்-க்கு இன்று 72-வது பிறந்தநாள்.

    இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார்.

    அதில், ""இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

     


    இதோபோன்று நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், "நீங்காத நினைவுகளுடன், என்றும் ரசிக பெருமக்களின் இதயங்களில் வாழும், அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த இனிய தருணங்களை எண்ணி நெகிழ்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.

    • அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.
    • எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு. இந்த சம்பவம் காரணமாக கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே அண்ணாமலையின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதோடு எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.

     


    முன்னதாக தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    அண்ணாமலையின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்தது. அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை கண்டித்து அதிமுக சார்பில் எச்சரிகை வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து தான் அதிமுக தொண்டர்கள் சிலர் அவரது உருவபொம்மையை எரித்து போராடியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.
    • பாஜக கட்சி கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.

    பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழக பாஜக-வில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறின. கூடவே ஏராளமான சர்ச்சைகளும் உருவாகின.

    மிகக் குறுகிய காலக்கட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பேற்ற காரணத்தால் உட்கட்சியிலேயே அண்ணாமலை சில சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது, தற்போது இது ஓரளவுக்கு குறைந்தும் இருக்கிறது.

    2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.

     


    இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கட்சி சார்ந்த வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையிடையே கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க தேவை என கருதி சில கருத்துக்களையும், அண்ணாமலை தொடர்ச்சியாக கூறி வந்தார்.

    தமிழக அரசியலில் பிரதான எதிர்கட்சியாக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சிகளில் பாஜக தீவிரம் காட்டியது. இதோடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும் அறிவித்தது.

    இதன் விளைவாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை உருவாக்கிய அண்ணாமலை தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணி உருவாகவும் காரணமாக இருந்தார். இதே தேர்தலில் பாஜக போட்டியிட்ட பல தொகுதிகளில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்த நிலையில், இருகட்சியை சேர்ந்தவர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தன. இது ஒருக்கட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான நேரடி மோதலாக மாறத் துவங்கியது.

     


    அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் அண்ணாமலை, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயியின் மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட தன்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உருவபொம்மை எரிப்பு என அதி.மு.க.-வினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதோடு, அதிமுக தலைவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் மற்றும் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது; ஆனால் கடும் சொற்கள் கூடாது," என்று தெரிவித்தார்.

    கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தார். அரசியல் களத்தில் தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் சாதாரண விஷயம் தான், ஆனால் தனிநபர் விமர்சனங்கள் வீண் பதற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.

    சிலர், பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் விமர்சகர்களில் சிலர் இதுபோன்ற கருத்துக்கள் அரசியல் களத்தில் பாஜக - அதிமுக மோதல் போக்கை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும், எதிர்காலங்களில் இருகட்சிகளின் தேர்தல் கூட்டணிக்கு உதவும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

     


    தமிழக பாஜக-வின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்புக் குரல் ஆகியோவை திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கூட்டணி உருவாகி வருவதை உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், திமுக மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரு கட்சிகளின் அரசியல் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர்.

    இதனிடையே பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசிய விவகாரம், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் களம் வரை எதிரொலிக்கும் என்று தெரிகிறது. சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்ததை போன்று, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை தவிர்த்து பாஜக தலைமையிலான கூட்டணியை வலுப்பெற வழி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழக அரசியல் களத்தில் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதிரடி முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்து வரும் அண்ணாமலை, 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - பாஜக நேரடி மோதலை உருவாக்கும் வகையில் தான் மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

    அரசியல் ஆதாயம் கருதி, தனிநபர் எதிர்ப்பு கருத்து வீண் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு தேவையற்ற குழப்பங்களை மட்டுமே உருவாக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    எதிர்கட்சி தலைவரை கடும் சொற்களால் வசைபாடிய அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்தாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனித்து, ஆளும்கட்சிக்கு எதிரான சண்டை தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×